நம்பிக்கையே நலம் தரும்…

சின்ன வயசில எதைப் பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கும். பகல்ல நாய் பயம். இரவுல பேய் பயம்.
தமிழ்சினிமாப் பேய்கள் பாட்டுப்பாடி, ரொம்பச் சுத்தமாப் புடவைகட்டி, ஷாம்பு போட்டுக் குளிச்சு வரும்.
டி.வி- யில வர்ற பேய்கள் அப்பிடி இல்ல. அதப் பார்;த்தாலே பயமா இருக்கு.
இப்ப இருக்கிற சின்னக்குழந்தைகள் பகல் நேரத்துலகூட, பயத்தில லைட்டைப் போட்டுகிட்டுத்தான் பாத்ரூம் போறாங்க.
இந்த பயத்தைப் போக்க என்ன வழி?
முதல்ல தன்னம்பிக்கை, அடுத்தது கடவுள் நம்பிக்கை, தேவையில்லாதது மூடநம்பிக்கை.
தன்னம்பிக்கைக்கும், ஆணவத்துக்கும் என்ன வேறுபாடு?
‘படகோட்டின்னு’ பழைய எம்.ஜி.ஆர்;. படம் ஒண்ணு பார்த்திருப்பீங்க. அதுல ஒரு காட்சி…
மீனவராக வரக்கூடிய எம்.ஜி.ஆர்., தங்களோட எதிரிக் கூட்டத்தோடு சமாதானம் பேசப் போவார். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவங்க, இவரைக் கேலி பேசிட்டு இரும்புக் கடப்பாரையால அடிக்க வருவாங்க. எம்.ஜி.ஆர், அவங்களைத் தடுத்து, அந்தக் கடப்பாரையைக் கையில வாங்கிட்டுச் சொல்வார்.
‘எல்லோருக்கும் நல்லது செய்ய, சமாதானம் பேச வந்த என்னைக் கோழைன்னு நெனச்சிட்டீங்க. இப்பப் பாருங்க’னு சொல்லிவிட்டு, அந்தக் கடப்பாரையைத் தன் கழுத்தில் வைத்து, அதை வளைத்துக் காட்டிவிட்டு, வீரமாக நடந்து செல்வார்.
வில்லன்கள் செய்தது ஆணவம்.
கதாநாயகன் செய்தது தன்னம்பிக்கை.
கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
மூடநம்பிக்கை என்றால் என்ன?
யார் எதைச் சொன்னாலும் நம்பி ஏமாறுவது.
ராஜாராம் மோகன்ராய் என்பவரைப் பற்றி எல்லோரும் படித்திருப்போம்.
இவர்தான், கணவன் இறந்தால் மனைவியையும் கொல்லும் வழக்கமான ‘சதி’ என்னும் பழக்கத்தை ஒழித்துப் பெண்ணினத்தைக் காத்த பெருமகனார்.
ஒருமுறை இவரும், இவர் நண்பரும் கல்கத்தா நகரத்தின் வீதியில் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு கூட்டம் கும்பலாக நின்று கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவில் ஒருவன், தன் கையில் ஒரு கரடியைச் சங்கிலியால் கட்டித் தன் கைகளில் அந்தச் சங்கிலியைப் பிடித்திருந்தான்.
‘இதோ பாருங்கள் பொதுமக்களே… இந்தக் கரடியின் உடம்பிலிருந்து இதோ, இந்த முடியைப் பிடுங்குகிறேன். இது ராசியான கரடி முடி. இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாகச் செய்து போட்டாலோ செல்வம் கொழிக்கும். நீங்கள் குபேரனாவீர்கள்… ஒரு முடி வாங்குங்கள், நீங்களே உலகப் பணக்காரனாகலாம் என்று ‘கரடி’ விட்டுக் கொண்டிருந்தான். பலர் போட்டிபோட்டு வாங்கினார்கள்.
‘நானும் ஒரு முடி வாங்கிக்கொண்டு வருகிறேன்’ என்று கிளம்பினார் நண்பர்.
‘எத்தனை முடி வாங்கினால், நீ கோடீஸ்வரனாவாய்?’ என்று கேட்டார் ராம்மோகன்.
‘ஒரு முடி போதும்…’ கண்களில் ஆசை பொங்கக் கூறினார் நண்பர்.
‘நண்பனே, நன்றாக யோசித்துப்பார். ஒரு முடிக்கு உனக்குப் பல லட்சம் கிடைப்பது உண்மையானால், அந்தக் கரடிக்குச் சொந்தக்காரன் அந்தக் கரடியையே வைத்திருக்கிறான். எத்தனை ஆயிரம் முடிகள் அவனிடம்! ஆனால், அவனோ தெருமுனையில் பிச்சைக்காரனைப்போல கூவிக் கொண்டிருக்கிறான். நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் திரும்பவும் யோசி…’ என்றார் ராம்மோகன்.
நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். இப்படி மூடநம்பிக்கை கொண்டிருந்தால், எப்படி உலகை வெல்ல முடியும்.
ஒரு மாணவர் கேட்டார். ‘நீங்க சொல்றது எல்லாம் சரிதான் சார். ஆனா, நாம தன்னம்பிக்கையோட ஒரு காரியத்தைச் செய்யப்போனா, உன்னால் முடியாது. நீ சின்னப் பையன், பொறுப்பில்லாதவன், அப்பிடி, இப்பிடின்னு பேசி நம்மைச் சிலர் அவமதிக்கிறார்களே அப்போது என்ன செய்வது?
பல ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டில் நடந்த சம்பவம் இது. வடநாட்டில் மதன்மோகன் மாளவியா என்றொரு வழக்கறிஞர் இருந்தார். சிறந்த அறிவாளி. காசி மாநகரத்தில் ஓர் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவ நினைத்தார். அதற்கானப் பணத்தைச் செல்வந்தர்களாகிய அரசர்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள் ஆகியோரிடம் கல்விக்கொடையாகப் பெற்று வந்தார்.
ஒருமுறை, ஹைதராபாத் நகரை அப்போது ஆண்டுகொண்டிருந்த அரசர் ஒருவரின் அரண்மனைக்குச் சென்றார். சபை நடுவே சென்று அரசனை வணங்கினார். பின்னர், தான் உருவாக்க இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு நிதி உதவி வேண்டும் எனக் கேட்டார்.
‘பணம் தரமுடியாது’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த ஆணவம் பிடித்த அரசன் தன் காலில் கிடந்த செருப்பைக் கழற்றி, உதவிகேட்டு வந்த மதன்மோகன் மாளவியா மீது எறிந்தான்.
‘போ… இதுதான் உனக்கு நிதி’ என்றான். சபையே திடுக்கிட்டுப் போனது. பலர் அரசனின் செய்கையால் தலைகுனிந்து, மனம் வருந்தி இருந்தார்கள்.
பொதுக் காரியத்துக்காகச் சென்றவருக்குக் கிடைத்த சன்மானம்…. அவமானம்தான். ஆனால், மதன்மோகன் மாளவியா சற்றும் கவலையோ, வருத்தமோ, கோபமோ அடையாமல் அந்தச் செருப்பைக் கையில் எடுத்து, முகமலர்ச்சியோடு ‘மிகுந்த நன்றி மன்னர் மன்னா’ என்று சொல்லிவிட்டு, அரண்மனைக்கு வெளியே வந்தார்.
அரண்மனைக்கு அருகிலிருந்த மேடை ஒன்றின்மீது ஏறினார். பொதுமக்களைப் பார்த்துச் சத்தமாகப் பேசத் தொடங்கினார்.
‘பொதுமக்களே! இதோ ஒரு அரிய பொருளை ஏலம் விடப்போகிறேன். நம் மன்னர் பெருமானின் கால்செருப்பு ஒன்று எனக்குக் கிடைத்துள்ளது. கலைப் பொக்கி~ம், ஒரு பணம், ஒரு தடவை…’ என்று கூறினார்.
கூட்டம் வெகுவேகமாகக் கூடியது. பலர் ஏலம் கேட்கத் தொடங்கினார்கள்.
‘ஒரு பணம்…’
‘ரெண்டு பணம்…’
‘பத்து பணம்…’
ஏலம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதற்குள் அரண்மனை வாசலில் நின்றிருந்த உயர் அதிகாரி கவலையோடு அரசவைக்கு ஓடினார்.
‘அரசே! தங்களது ஒற்றைச் செருப்பு ஒரு பணத்திற்கும், அரைப் பணத்திற்கும் ஏலம் போடப்படுகிறது. ஹைதராபாத் அரசரின் செருப்பு இப்படி ஏலம் போனால், அது வரலாற்றில் பதிவாகிவிடும்’ என்று பதறினார்.
உடனே மன்னன், ‘சரி… நீர் உடனடியாகச் சென்று என்ன விலையானாலும் சரி… நமது செருப்பை ஏலம் எடுத்து வாரும்…’ என்று பதற்றத்தோடு ஆணையிட்டான்.
அதிகாரியும் வெளியே ஓடி, கூட்டத்தோடு நின்று போட்டி போட்டு, ஏலம் கேட்டு, ஒரு இலட்சம் ரூபாய்க்கு அரசனின் ஒற்றைச் செருப்பை வாங்கிவந்து மன்னரிடம் கொடுத்தார்.
கதை இத்தோடு முடியவில்லை. மன்னனின் செருப்பு மூலம் ஒரு லட்சம் பெற்ற மதன்மோகன் மாளவியா திரும்பவும் அரசவைக்குள் வந்தார். மன்னரை வணங்கினார்.
‘மன்னா! தங்களது ஒரு செருப்பை என்மீது எறிந்ததால் நான் கட்டப்போகும் கல்விச் சாலைக்கு ஒரு லட்சம் பணம் கிடைத்தது. மிகுந்த நன்றி. தாங்கள் தங்களது இரண்டாவது செருப்பையும் என்மீது எறிந்தால் நலமாக இருக்கும்’ என்று பணிவோடு கூறினார். மன்னன் வெட்கத்தால் தலைகுனிந்து ஒன்றும் பேசமுடியாமல் மௌனமாக இருந்தான்.
இப்போது யோசியுங்கள். மதன்மோகன் மாளவியா அரசனிடம் கேட்டுச் சென்றதோ கல்விக்கான சன்மானம். ஆனால், கிடைத்ததோ சபை நடுவே அவமானம். அந்த அவமானத்தையும் தனக்கு ஆதாயமாக மாற்றி, தன் புகழை விமான அளவுக்கு உயர்த்திக்கொண்டதுதான் அவரது பகுமானம்.
அவமானங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். விண்ணுக்குச் செல்லும் விமானம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நம்பிக்கை வையுங்கள்; நலத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.