கலிகாலக் கம்பர்… மீனாட்சி சுந்தரம்பிள்ளை

திரிசரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ‘கலிகாலக் கம்பர்’ என அழைக்கப்படுகின்ற கவிச்சக்கரவர்த்தி ஆவார். இவரது கற்பனையில் உதித்த தலபுராணங்களும், தனிப்பாடல்களும் கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ், தூது எனும் சிற்றிலக்கிய வகைகளும் இவரது கவிஆற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன இவர்; பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் படைத்துள்ளார் என இவரது மாணவராகிய தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் குறிப்பிடுகிறார்.
இவர் திருவாவடுதுறையின் ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் மற்றும் சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் ஆதரிக்கப்பெற்று அவ்ஆதீனத்தின் அவைக்களப்புலவராகவும் விளங்கினார். இவர் எழுதிய வாட்போக்கிக் கலம்பகம் மற்றும் சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருநாகைக்காரோணப் புராணம் போன்ற நூல்கள் இவரின் தமிழ்ப்பணிக்குப் பெருமை சேர்த்து வருவன.
அந்தக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருந்த சூழலில் அரிய நூல்களை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே இவர் தன் வீட்டிலேயே (மாயவரத்தில்) பாடங்களை நடத்தி வந்தார். அதில் தங்கிப்படிக்கும் மாணவர்களுக்கு உண்ண உணவும், இருக்க இருப்பிடமும் தந்து இலவசமாகக் கல்வியும் கற்பித்து வந்தார். இவற்றையெல்லாம் இவர் தன் சொந்தப் பணத்தில்தான் செய்து வந்தார். அதற்கான வருமானத்தை ஆங்காங்கு இருந்த திருத்தலங்களுக்குச் சென்று தலபுராணங்களைப் பாடி, அதன்மூலம் கிடைக்கும் வருவாயின் மூலமாகத் தன் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, ஏழை மாணவர்களைப் படிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் இவரிடத்திலே ஆறாண்டுகள் முழுமையுமாக கல்வி பயின்றார். அக்காலத்தில் இவர் இல்லத்தில் தங்கி, இவரோடு எல்லாநேரமும் இருந்து அவர் சொல்லச்சொல்லப் பாடல்களை எழுதி, படியெடுத்துத் தமிழைக் கற்றுக்கொண்டார். தாம் இவரைச் சந்தித்ததைப் பற்றிக் கூறும்போது தந்தையாரோடு சென்றிருந்தாராம் சாமிநாத ஐயர். சாமிநாத ஐயரின் தந்தையார் தன்மகனுக்குத் தாங்கள் தான் பாடம் கற்பிக்க வேண்டும் என்று மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் வேண்டிக்கொண்டபோது அவர் சற்று வருத்தத்துடன் ‘கற்பிக்கலாம், ஆனால் வருகிறவர்கள் யாரும் முழுமையாக தமிழைக் கற்று முடிப்பதில்லை, இடைஇடையே போய்விடுகிறார்கள் பிறகு பார்க்கலாம்’ என்று கூறினாராம்.
அப்படி இருக்கும்போது தினசரி அவரது அலுவல்களை கவனித்து வந்த இளம் பையனாக இருந்த சாமிநாத ஐயர், ஒரு காட்சியை மனதில் பதிய வைத்துக்கொண்டார். அதாவது மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் அதிகாலையில் எழுந்தவுடன், தன் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்குச் சென்று அங்கு புத்தம்புதிதாய் மலர்ந்திருக்கும் மலர்களையும், மொட்டுக்களையும் தளிர்களையும் பார்த்து மகிழ்வாராம்.
இதைத் தெரிந்து வைத்துக்கொண்ட சாமிநாத ஐயர் அவர்கள், தம் ஆசிரியர் எழுவதற்கு முன் எழுந்து, அந்தச் செடிகளுக்கு அருகிலே நின்று அவர் வரும்போது, ‘இதோ இங்கிருக்கிறது ஒரு மொட்டு, இந்த இடத்தில் மலர் பூத்திருக்கிறது இதோ இந்தத் தளிர் புதிதாக வந்திருக்கிறது’ என்று சுட்டிக்காட்டுவாராம். இதைப் பார்த்து மகிழ்ந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் ‘நீர் யார்?’ என்று கேட்க, ‘சிலநாட்களுக்கு முன்பு என் தந்தையாரோடு தங்களிடம் பாடம் கேட்க வந்தேன். நீங்கள் பிறகு பார்க்கலாம் என்று சொன்னீர்கள்’ என்று தயக்கத்துடன் சொன்னாராம்.
அதைக்கேட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ‘சரி நீர் மிகுந்த ஆர்வமுடையவராய் இருக்கிறீர், இன்றுமுதல் என்னுடைய இல்லத்தில் தங்கிப் பாடம் கேட்கலாம்’ என்று அனுமதி அளித்தாராம். இதை சாமிநாத ஐயர் அவர்கள் குறிப்பிடும்போது தான் அச்சான்றோராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயில்வதற்குக் காரணமாயிருந்தவை இந்தத் தளிர்கள்தான் என்பதைத் ‘தளிரால் விளைந்த தயை’ என்று தலைப்பிட்டுச் சுட்டிக் காட்டுவார்.
தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஒன்றையே கற்றல், மாணவர்களுக்குக் கற்பித்தல் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுடைய பிறந்த ஆண்டு வந்து இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும்கூட அவரைப்போன்ற கற்பனைத் திறமும், பாடல் இயற்றும் திறனும் கொண்டவர்கள் இதுவரை பிறக்கவில்லை என்றே சொல்லலாம்.
ஒரு சிறு சான்று, அவர் பாடல்களைச் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், ஒருநாள் மற்ற சகமாணவர்களிடத்திலே வருத்தப்பட்டாராம். ‘நான் எழுதுகிற வேகத்திற்கு ஐயா அவர்களால் பாடல்களைச் சொல்லமுடியவில்லையே’ என்று கூறியிருக்கிறார்.
இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் அம்மாணவரை அழைத்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், ‘எழுதத்தொடங்கலாமா?’ என்று கேட்டுவிட்டுப், பாடல்களைச் சொல்லத் தொடங்கினாராம்.
காலை தொடங்கி அவர் சொல்லிக்கொண்டு வர, பிற்பகல் முடிந்து மாலை ஆகி, இரவு விளக்கும் கொண்டு வந்து அருகில் வைத்தபிறகும், தம் கற்பனை ஊற்றால், கவிதைகளை விடாமல் சொல்லிக்கொண்டு வந்தாராம். இடையில் உண்ணவில்லை ஓய்வெடுக்கவில்லை. தொடர்ந்து நிறுத்தஎழுதிக்கொண்டிருந்த மாணவர் கண்களில் நீர் வழிய, மகாவித்வானுடைய காலில் விழுந்து ‘ஐயா நான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் கலைமகளின் அவதாரம்’ என்று சொல்லித் தேம்பி தேம்பி அழுதாராம். அதற்கு மகாவித்வான் அவர்கள், ‘ஏனப்பா முடியவில்லை என்றால் சொல்லியிருக்கலாமே, வேறுயாரையாவது விட்டு எழுதச் சொல்லியிருப்பேனே’ என்றாராம். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவ, ஊர்மக்கள் அவரைத் தெய்வமாகப் போற்றத் தொடங்கினர்.
ஏறத்தாழ பன்னிரெண்டு மணிநேரம் தொடர்ந்து கவிதைகளைச் சொன்ன கற்பனைக் களஞ்சியம் நம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். அவரது நூல்கள் பல பதிப்பிக்கப்படாமல் போய்விட்டன என்று வருத்தத்துடன் சொல்லுவார் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். அவர் இருந்தகாலம் வரை தம் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் கிடைத்த நூல்களைப் பதிப்பித்ததோடு அவரது வாழ்க்கை வரலாற்றையும் இரண்டு பாகங்களாக எழுதி அச்சிட்டுள்ளார் சாமிநாத ஐயர் அவர்கள். மேலும் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றிய சில செய்திகளைக் காண்போம்…
மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிறந்த தமிழறிஞர் ஆவார். பிற்காலக் கம்பர் என்று போற்றப்பட்டவரும், தமிழ் அறிஞருமான மீனாட்சி சுந்தரம்பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் பிறந்தார். தமிழ்ப்புலவரான தம் தந்தையிடமே தமிழ் கற்றார். பாடல்களைப் படித்தவேகத்தில் மனதில் பதியவைத்துக்கொண்டு விடும் அளவிற்கு அபார நினைவாற்றல் கொண்டவர். சிறுவயதிலேயே பாடல் புனையும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
சென்னை சென்று சபாபதி முதலியார் அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமை பெற்றார். காப்பியங்கள், அறநூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். பின் அமரத்துவம் வாய்ந்த பல இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கினார் இவர்.
சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்ட இவருடைய காலத்தில் திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார்;. இவரது புலமையை அறிந்து நாடிவந்த பலருக்கும் தமிழ் கற்பித்தார். இவரிடம் பயின்றவர்களில் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர், சோடசாவதானம், தி.க.சுப்பராய செட்டியார், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர், வல்லூர் தேவரசாப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர்மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
மயிலாடுதுறையில் பலகாலம் தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார்.
19ஆம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றிவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ்நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். இவர் பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்றும் புகழப்பட்டார்.
பெரியபுராணத்தைப் பிரசங்கம் செய்வதில் வல்லவர் இவர். இவருடைய படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் 2லட்சம் பாடல்களை இவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியவற்றில் ‘குசேலாபாக்கியானம்’ என்ற காப்பியமும், ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்தமும், ‘ஆதி குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாறும் பிரதானமானவை.
1851ஆம் ஆண்டு திரிசரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய ‘செவ்வந்திப்புராணம்’ என்னும் நூலைப் பதிப்பித்தார். இதன்மூலம் பதிப்பாசிரியருக்கும் இலக்கணமானார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள்.
‘தாயைவிட என்மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் பலவற்றை ‘ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை பிரபந்தத் திரட்டு’ என்னும் பெயரில் உ.வே.சா. வெளியிட்டுள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம் என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. எழுதியுள்ளார்.
தமிழ்மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் 1876ஆம் ஆண்டு தமது 61ஆவது வயதில் மறைந்தார்.
கம்பருக்குப் பிறகு கவிஞர்கள் இல்லையோ என்ற குறையைப் போக்கிய கவிச்சக்கரவர்த்திதான் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். அவர் கலைமகளின் அவதாரம் என்பது உண்மை. தமிழ் அவரால் பெருமைபெற்றது, தமிழால் அவர் உயர்வு பெற்றார்.