வெற்றிப் படிக்கட்டுகள்…

வகுப்பறை…. அறிவுக்கான இடம் மட்டுமில்லை. கேலி, கிண்டல், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்த இடமும் வகுப்பறைதான்.

‘நாளைக்குப் பரீட்சை’ என்றேன் மாணவர்களிடம்.

‘முக்கியமான கேள்விகளையெல்லாம் சொல்லுங்க சார்’ ஒரு பையன் எழுந்து துணிவாகக் கேட்டான்.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

‘முக்கியமான கேள்விகளைச் சொல்லவா? கேள்வித்தாளை அவுட் பண்ண நினைக்கிறியா? உட்கார்’.

இன்னொரு பையன் எழுந்தான். ‘அவன் கிடக்கிறான் சார். நீங்க முக்கியமில்லாத கேள்வியைச் சொல்லுங்க’ என்றான்.

இரண்டுபேர் கேட்டதும் ஒன்றுதான். ஆசிரியரை ஏமாற்ற மாணவர்கள் செய்யும் வித்தைகள் இவையெல்லாம். சிலர், ஆசிரியர் சொன்னா எதையும் கேட்கக் கூடாதுங்கிறதுக்காகவே பள்ளிக்கூடம் வர்றது வழக்கம். நல்லது சொன்னாக் கேட்டுக்கணும். கெட்டது சொன்னா விட்டுடணும்.

காந்தியடிகள் ஒருமுறை ஆசிரியர் சொன்னதைச் செய்யவில்லை தெரியுமா உங்களுக்கு?

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி… பள்ளிக்கூடத்துல அப்படி ஒண்ணும் முதல் மாணவன் கிடையாது. சுமார் அல்லது ரொம்ப சுமார்.

ஒருநாள் அவங்க பள்ளிக்கூடத்துக்குக் கல்வி அதிகாரி (டி.ஈ.ஓ) வரப்போறதாச் சொல்லி ஒரே பரபரப்பு. வாத்தியார்கள் எல்லாம் எல்லாப் பையன்களையும் தயார்ப் படுத்துறாங்க. நாளைக்கு அவர் வரப்போறார்.

காந்தியடிகளின் வகுப்பு வாத்தியார், வகுப்பில் பல மாற்றங்களைச் செய்தார்.

அதிகாரி கேள்வி கேட்டா, பதில் சொல்லச் சிலரை ரெடி பண்ணியாச்சு.

அதிகாரி உள்ளே வந்து மாணவர்கள் அனைவரையும் பார்த்துக் ‘கெட்டில்’ எனும் ஆங்கில வார்த்தையைப் பார்க்காமல் எழுதுமாறு கூறினார்.

எல்லா மாணவர்களும் எழுதத் தொடங்க, காந்தி அந்த வார்த்தையை யோசித்து, யோசித்துத் தவறாக எழுதினார்.

உடனே காந்தியின் பக்கத்தில் இருந்த வகுப்பு ஆசிரியர் அவரின் கால்களை லேசாக மிதித்து எதிரில் இருக்கும் பையனைப் பார்த்து எழுதுமாறு தூண்டினார்.

ஆனால் காந்தியோ, தன் ஆசிரியர் சொன்னதைக் கேட்கவில்லை. தவறாக இருந்தாலும் பரவாயில்லை என்று தனக்குத் தெரிந்ததை எழுதினார். பிற்காலத்தில் தனது சுயசரிதையில் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடும் காந்தியடிகள், ‘நான் அன்றைக்கு என் ஆசிரியர் கூறியபடி நடக்கவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் பிறரைப் பார்த்து எழுதக்கூடாது என்று அதிகாரி சொல்லும்போது, பார்த்து எழுதுதல் தவறு என்று தெரிந்துகொண்டே அதனைச் செய்ய என் மனது ஒத்துக்கொள்ளவில்லை. அப்படிச் செய்து, நான் யாரையாவது பார்த்து எழுதியிருந்தால், அதிகாரியின் பாராட்டைப் பெற்றிருப்பேன் என்பது உண்மைதான், ஆனால் என் மனசாட்சி அந்தப் போலியான வெற்றியை ஏற்காது. மனசாட்சியே சிறந்த நீதிமான்’ என எழுதுகிறார்.

யார் சொன்னாலும் தவறு என்றால் தவறுதான் என நினைத்தவர்கள்தான் உலகை ஜெயித்தவர்கள் ஆகிறார்கள். நீங்கள் உலகை ஜெயிக்க வேண்டுமா? முதலில் உங்கள் மனசாட்சியை ஏமாற்றாமல் இருந்தால் அதுவே உயர்வுதரும்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

    உள்ளத்துள் எல்லாம் உளன்”

இந்தத் திருக்குறளுக்குக் காந்தியடிகள் கதைதான் சரியான விளக்கம்.

‘சார் சுருக்கமாகச் சொல்லுங்க. நல்லவனா இருந்தாப் போதுமா? வல்லவனாகவும் இருக்கணுமா?’ ஒரு மாணவர் என்னிடம் கேட்டார்.

‘நல்லவனா இருக்கிறது ரொம்ப முக்கியம். முக்கியமானவனா இருக்கிறது ரொம்ப நல்லது. வல்லவனாக இருக்க முதலில் மனஉறுதி வேண்டும் தெரியுமா?’ என்றேன் நான்.

‘மன உறுதி என்ன?’ எல்லோரும் கேட்டார்கள். ‘நீங்க எல்லோரும் பிரான்சு நாட்டின் பேரரசன் நெப்போலியன் போனபார்ட் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா?’

‘ஐயோ திரும்பவும் சரித்திரமா?’

‘இது சரித்திரம் இல்ல தம்பி வெற்றியின் வரலாறு’

‘ரெண்டும் ஒண்ணுதான்….ஹும்… சொல்லுங்க’ என்றார்கள் எல்லோரும்.

நெப்போலியன் அரச வம்சத்தில் தோன்றியவர் இல்லை. ஏழைக்குடும்பம். படிப்பதற்குக்கூட வசதியில்லை. இளமையில் தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் உணவுக்கடை வைத்திருந்த பாட்டி ஒருத்தியிடம் கடன் வாங்கி சாப்பிட்டவர்தான் நம் நெப்போலியன். பிற்காலத்தில் பேரரசர் ஆனபின்பும், மறக்காமல் அந்தப் பாட்டியைச் சந்தித்து, அந்தப் பழைய நிகழ்ச்சியைச் சொல்லிப் பொற்காசுகளைக் கொடுத்து நன்றியையும் தெரிவித்தார்.

அவர் வாழ்க்கையில் ஒரு சம்பவம் சொல்கிறேன். கேளுங்க… ஒருமுறை படைத்தலைமையேற்று, நெப்போலியன் தன் குதிரையில் ஏறி முன்னாடி சென்றுகொண்டு இருக்கார். படைவீரர்கள் பின்னாடி வந்தார்கள். போகிற வழியில் திடீர்னு ஒரு ஆறு குறுக்கே வர,. படைத்தளபதியைக் கூப்பிட்டார் நெப்போலியன்.

‘அந்த ஆறு எவ்வளவு அகலம்னு பாருங்க. குதிரையில் இருந்தபடி அதைத் தாண்டமுடியுமா? பாருங்கள்’ என்று கட்டளை இட்டார்.

அதைப் பார்த்து வந்த தளபதிகள், ‘மன்னரே ஆற்றின் அகலம் 15அடி, ஆழம் அதிகம். குதிரை எவ்வளவு வேகமாக வந்தாலும் 10அடிதான் தாண்டும். எனவே நாம் திரும்பிப்போக வேண்டியதுதான். முன்னே செல்ல முடியாது’ என்றனர்.

இதைக் கேட்ட நெப்போலியனுக்குக் கோபம் வந்தது. ‘முடியாது’ என்பது நெப்போலியன் அகராதியில் கிடையாது. ‘திரும்பிப் போவது என்பது என் வரலாற்றிலேயே கிடையாது’ என்று கர்ஜனை செய்துவிட்டுத் தன் குதிரையை மிக விரைவாக ஓட்டிக்கொண்டு சென்று, குதிரைமேல் இருந்தபடி, குதிரையை ஆற்றைத் தாண்டச் செய்தார். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது. அதிகாரிகளும், தளபதிகளும் சொல்லியபடி குதிரை ஆற்றில் 10அடி தூரம்தான் தாண்டியது. ஆனால், நெப்போலியனோ, மின்னல் வேகத்தில் குதிரைமேல் இருந்து இன்னும் ஐந்து அடி தூரம் தாண்டித் தரையில் குதித்தார்.

பார்த்துக் கொண்டிருந்த படைவீரர்கள் உற்சாகத்தில் பெரிய ஆரவாரம் செய்தார்கள். இத்தகைய ‘உள்ள வலிமைதான்’ ஏழைக்குடும்பத்தில் பிறந்து, பிரான்சுப் படையில் சாதாரணப் போர் வீரனாக நுழைந்து, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக அவரை மாற்றியது. இப்போது சொல்லுங்கள். எத்தகைய உள்ள உறுதியும், வல்லமையும், நெப்போலியனிடம் இருந்திருக்க வேண்டும்! நீங்கள் நினைத்தால் உங்களை உயர்த்திக் கொள்ளலாம். உயர்வும் தாழ்வும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஒரு அப்பாவும், அவரது 10வயதுப் பையனும், ஒரு கிராமத்தின் வழியாக நடந்து போய்க்கொண்டு இருந்தார்கள். அப்ப அவங்க போகிற வழியில் ஒரு குளம் இருந்ததைப் பார்த்தார்கள். குளம் நிறைய அருமையான குளிர்ச்சியான தண்ணீர். அதில் நிறையத் தாமரைப் பூக்கள் பூத்திருந்தன.

அப்பா தன் பையனிடம் கேட்டார். ‘டேய் தம்பி, இந்தக் குளத்தையும் தாமரைப் பூக்களையும் பார்த்தியா!’

‘நல்லாப் பார்த்தேன். அந்தத் தாமரைப்பூ மேலே அருமையான வண்டுகள் இருக்கிறதையும் பார்த்தேன், ரசித்தேன்’.

‘இந்தத் தாமரைப்பூவைத் தாங்கி இருக்கிறதே அதனுடைய தண்டு அதாவது ‘ஸ்டெம்’ அது எவ்வளவு உயரம்னு சொல்லமுடியுமா உன்னால?’

‘ஏன் முடியாது. ரெண்டு அடி… இல்ல… இல்ல… மூணு அடி இருங்கப்பா சரியாகச் சொல்றேன் 5 அடி.

‘நீ சொன்ன எல்லாமே சரியாகவும் இருக்கலாம். தப்பாகவும் இருக்கலாம். அது மட்டுமில்ல தப்பெல்லாம் தப்பில்லை! ரைட்டெல்லாம் ரைட்டில்லை!’

‘என்னப்பா இந்தத் தப்பு தப்புறீங்க.’

‘கேளுடா… தாமரைத் தண்டின் உயரம் இந்தக் குளத்தின் தண்ணீர்; உயரத்தைப் பொருத்துதான். தண்ணீர் 2 அடியா? சரி. தண்டும் 2 அடிதான். தண்ணீர் 20அடியா? தண்டும் 20அடிக்கு மேலே வளர்ந்து பூப்பூக்கும் தெரியுமா?’

‘ஆமாப்பா நீங்க சொல்றது சரிதான் நான் இத யோசிக்கலையே…’

நானும் யோசிக்கலை. நம்ம திருவள்ளுவர் சொன்னதைத்தான் சொன்னேன்.

‘திருவள்ளுவர் இதப்பத்தியெல்லாம் சொல்லியிருக்காரா?’

‘ஆமாடா, ஆமா. அவரு உலகத்தில எல்லாச் செய்திகளைப் பத்தியும் சொல்லியிருக்காரு. இன்னும் கேளு. குளம், தண்ணீர், தாமரைப்பூ இவையெல்லாம் உதாரணம்தான். குளத்துத் தண்ணீர்தான் உன் மனசு. நீ நினைக்கிற எண்ணம் எல்லாம். குளத்துத் தாரைப்பூதான் உன்னுடைய வளர்ச்சி. உனது உயர்வு.

உன் மனசாகிய நல்ல எண்ணமாகிய, தண்ணீர் உயர உயர உன் உயர்வும், வளர்;ச்சியும் தாமரைப்பூ போல உலகத்தார் கண்ணில் படும். பெருமையும் கிடைக்கும். இதைத்தான்,

”வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

    உள்ளத்து அனையது உயர்வு’

அப்படின்னு திருக்குறள்ல சொல்லியிருக்கார் என்றார் அப்பா.

‘அட, எங்க பாடத்தில் இந்தத் திருக்குறள் இருக்கே. நான் மனப்பாடம் பண்ணி எழுதியிருக்கேனே… எங்க வாத்தியார் இப்படிச் சொல்லலையே?’

‘சொல்லியிருப்பாரு. நீதான் எங்கயாவது பார்த்துட்டு உட்கார்ந்திருப்பே’.

உள்ளத்தால் உண்மைவழி நடந்த காந்தியடிகளும், உள்ள உறுதியால் உலகை வெல்லப் புறப்பட்ட நெப்போலியன் போனபார்ட்டும் உங்களுக்குள் இருப்பவர்கள்தான். முயன்றால் முடியாததில்லை. அதனால் வகுப்பில் நீங்களும் கேள்வி கேட்கணும். வாத்தியார் கேட்கிற கேள்விக்குப் பதிலும் சொல்லணும்.

இப்படித்தான் ஒரு வாத்தியார் ஒரு பையனைப் பார்த்துக் கேட்டாராம். ‘சொல்லுடா அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யார்?’

‘நான் இல்லை சார்’

‘சரி சைக்கிளைக் கண்டுபிடிச்சது யார்?’

‘அதுவும் நான் இல்லை சார்’ கோபப்பட்ட ஆசிரியர் அவனைத் திட்டிவிட்டு அவங்க அப்பாவைப் போய்ப் பார்த்து, ‘உங்க பையன் இப்படிச் சொல்றானே’ எனக் கேட்டார்.

அதற்கு அவரோ, ‘சார் போனவாரம் வீட்ல பணம் காணாமப் போச்சு. எடுத்தது யார்னு என் பையனிடம் கேட்டேன். இதேமாதிரிதான் தெரியாது’ நான் இல்லைன்னு சொன்னான். பெல்ட்டால நாலு வாங்கு வாங்கினேன். உடனே ஒப்புக்கிட்டான். நீங்களும் அவனை பெல்ட்டால அடிச்சா அமெரிக்காவையும், சைக்கிளையும் கண்டுபிடிச்சது அவன்தான் ஒத்துக்குவான். நல்ல பையன் சார்’ என்றார்  அப்பா.

ஆகவே நண்பர்களே, வெற்றிப்படிக்கட்டுகள் உங்கள் கண்முன்னே இருக்கின்றன. தலைமை தாங்கும் சிம்மாசனமும் உங்களுக்காகக் காத்திருக்கிறது. முயற்சியும் பயிற்சியும் உங்களின் சிறகுகளாகட்டும். எல்லா உயரங்களையும் சிகரங்களையும் நீங்கள் தொட்டுக்காட்டுங்கள். வெற்றி உங்களுக்குத்தான்…

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.