உலகச் சிறுகதை மன்னர் ஆன்டன் செக்கோவ்

ரஷ்ய எழுத்தாளர்களுள் மிகவும் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன்டன் செக்கோவ். சிறுகதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற அளவிற்கு இவருடைய கதைகளின் வடிவம் ரஷ்யர்களை மட்டுமல்லாமல் மொழிபெயர்க்கப்பட்ட அத்தனை நாட்டு மக்களையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக சிறுநாடகங்கள் மற்றும் சிறுகதைகள் ரஷ்யாவின் அதிகாரவர்க்கத்தை நையாண்டி செய்ததோடு எளியமக்களின் மனநிலையை, ஆளும் வர்க்கத்தார் உணர்ந்து கொள்ளுமாறு செய்த பெருமையும் இவர் கதைகளுக்கே உண்டு.
சான்றாக, ‘பச்சோந்தி’ என்ற சிறுகதை இது நாடக வடிவிலும் உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு எல்லா நாட்டு அதிகாரவர்க்கத்தையும் ஒரு அசைப்பு அசைத்துப் பார்த்தது. அந்தக் கதை இப்படி ஆரம்பிக்கும்.
சந்தைக்கு வந்த ஏழை விவசாயி ஒருவனை ஒரு நாய் கடித்துவிடும். உடனே அவன் காவல்நிலையத்திற்குச் சென்று அந்த நாய் வைத்திருப்பவனைத் தண்டிக்குமாறு வேண்டுவான். அப்போது அந்த காவலர்களுக்குள் நடக்கும் உரையாடல்தான் இந்த நாடகத்தின் உயிர்நாடி.
முதல் காவலன்: ‘இந்த நாயை வைத்திருந்தவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’.
மற்றொரு காவலன்: சார் இது நமது ஊரின் காவல்துறையின் உயர்அதிகாரியின் வீட்டு நாய்போல் இருக்கிறது’ என்ற சந்தேகத்தைக் கிளப்புவான்.
உடனே முதல் காவலன் பயந்துபோய் ‘அப்படியென்றால் அதற்கு மனிதர்களைக் காயப்படுத்தும் வழக்கம் இருக்காது. நீ என்ன தப்பு செய்தாய்?’ என்று அந்த ஏழை விவசாயியைப் பார்த்துக் கேட்பான்.
‘நான் ஒன்றும் செய்யவில்லை ஐயா, வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தேன் என்னை நாய் கடித்துவிட்டது’ என்பான் விவசாயி.
இதற்குள் இரண்டாவது காவலன் ‘ஒருவேளை இது அவர்வீட்டு நாயாக இல்லாமல் இருந்தால்’ என்று கேட்க,
‘அப்படியென்றால் அந்த நாய்க்காரனை ஜெயிலில்போட வேண்டும்’ என்று கோபத்தோடு சொல்லுவான் முதல் காவலன்.
இவ்வாறு மாறி மாறிப் பேசப்பட்டு முடிவில் அந்த நாய் அந்த நாட்டின் மிக உயரிய அதிகாரியின் வீட்டு நாய் என்பதைத் தெரிந்துகொண்டு கடித்த நாயைப் பத்திரமாக அனுப்பிவைத்துவிட்டுக் கடிபட்ட விவசாயியை ஜெயிலில் அடைப்பார்கள்.
‘அரசாங்கக் கோழிமுட்டை விவசாயி வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும்’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கும்.
இதேபோல, நகைச்சுவை நாடகம் ஒன்று ஒரு அரங்கத்தில் நடந்துகொண்டிருக்கும். காவல்துறை சிப்பாய்கள் எல்லோரும் அதை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போது திடீரென்று இந்த நாடக அரங்கிற்குள் ஃசீப் கமாண்டரும், நாடகம் பார்க்க வந்து முன் வரிசையில் அமருவார். அவரும் இரசித்துக் கொண்டிருப்பார்.
ஒரு காட்சியில் நாடக அரங்கமே விழுந்து விழுந்து சிரிக்க இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த சிப்பாய் சிரிப்பை அடக்கமாட்டாமல் முதல் வரிசையில் இருந்தது யாரென்று தெரியாமல் அவர் முதுகில் தட்டிச் சிரித்து விடுவார். அவர் திரும்பிப் பார்த்தவுடன் இவன் பயந்துபோய் எழுந்து நின்று சல்யூட் அடிப்பான். அவர் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிடுவார்.
பிறகு அந்தச் சிப்பாய் அந்தநாடகத்தை முழுவதும் இரசிக்காமல் தனக்கு என்னாகுமோ எனப் பயந்து அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருப்பான். அவர் கோபத்தில் எழுந்துபோய் விடுவார். அன்றிரவு அவர் வீட்டுவாசலிலே சென்று அந்தச் சிப்பாய் மன்னிப்புக் கேட்பான்.
மறுநாள் காலை வரை அங்கேயே நின்றிருப்பான். இரண்டுநாட்களில் அவன் பயத்தில் இறந்தே போய்விடுவான். இந்த நாடகம் ரஷ்ய அதிகாரத்தை முகத்தில் அறைந்ததுபோல் உலகத்திற்கு எடுத்துச் சொல்லியது. இந்தக் கதை எல்லாநாட்டு அதிகார வர்க்கத்திற்கும் பொருந்தி வந்தது. இதனால் ரஷ்ய சட்டங்களில் மாற்றங்கள் வந்தன என்பார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அப்படி மாற்றங்களைக் கொண்டுவரக் காரணமாயிருந்த ஆன்டன் செக்கோவ் குறித்து மேலும் சில செய்திகளைக் காண்போம்….
ஆன்டன் செக்கோவ் ஒரு உருசிய நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை இலக்கிய உலகில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். இவர் 1860ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி தெற்கு ரஷ்யாவின்; ஆழாவ் (Azov) கடல் துறைமுகமான டாகன்ராக்கில் (Taganrog) பிறந்தார்.
ஆன்டன் செக்கோவ்வின் எழுத்துக்கள் அன்றாட ரஷ்ய வாழ்க்கையின் தினசரி நடவடிக்கைகளைக் குறுகிய, நகைச்சுவையான காட்சிகளை விளக்கும் காட்சிகளாக அமைந்திருந்தன. அவற்றில் பலவற்றை ‘அன்டோஷா செக்கோன்ட்’ மற்றும் மண்ணீரலற்ற மனிதன் போன்ற புனைபெயர்களிலேயே எழுதி வந்தார். அவரது அந்த குறிப்பிடத்தக்க எழுத்துகள் அவருக்குப் படிப்படியாக நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன. ரஷ்ய தெரு வாழ்க்கையை வஞ்சகப் புகழ்ச்சியுடன் எழுதக்கூடியவர் என அடையாளப்படுத்தப்பட்டார்.
நாடகஆசிரியராக இருந்து இவர் படைத்த கடற்புறா, அங்கிள் வான்யா, மூன்று சகோதரிகள், செர்ரிப் பழத்தோட்டம் ஆகிய நான்கு செவ்வியல் நாடகங்கள் மற்றும் இவரது சிறந்த சிறுகதைகளும் ஏனைய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இவருக்குத் தனி மரியாதையை ஏற்படுத்தின.
ஆன்டன் செக்கோவ் தனது இலக்கியப் பயணத்தினுடன் கூடவே மருத்துவர் பணியையும் செவ்வனே மேற்கொண்டு வந்தார். ‘மருத்துவம் என் சட்டப்பூர்வமான மனைவி’ என்றும், ‘இலக்கியம் எனது துணைவி’ என்றும் கூறியுள்ளார்.
1896ஆம் ஆண்டு இவரது முதல் நாடகமான கடற்புறா படுதோல்வியடைந்தபோது, செக்கோவ் நாடகம் எழுதுவதைக் கைவிட்டார். ‘த சீகல்’ என்ற நாடகத்தின் வரவேற்புக்குப்பின், மீளவும் 1898இல் கான்சிட்டாண்டின் தாலின் சிலாவிசிக்கியின் மாஸ்கோ கலை அரங்கில் அரங்கேறியபோது இது பெரும் புகழ்பெற்றது. அதன் பின்னரே மூன்று சகோதரிகள் மற்றும் செர்ரி பழத்தோட்டம் ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. இவை நாடகக் குழுமத்தினருக்கும், பார்வையாளர்களுக்கும் சவாலாக இருந்தன. மேலும், செகாவின் இந்நாடகங்கள் மரபுவழி நடிப்புக்குப் பதிலாகப் பார்வையாளர்களுக்கு ‘மனநிலை சார்ந்த அரங்கியல்’ என்னும் நுட்பத்தையும் ‘நாடகத்தின் உரைகளுக்குள் ஆழ்ந்துபோகும் நிலையையும்’ கொடுத்தன.
1887ஆம் ஆண்டில் அதிக வேலைப்பளு மற்றும் மோசமான உடல்நிலையிலிருந்து விடுபட எண்ணி, செக்கோவ் உக்ரைனுக்குப் பயணப்பட்டார். அப்போது அங்கிருந்த அழகான புல்வெளி அவரை வெகுவாக ஈர்த்தது. அவர் தாயகம் திரும்பியவுடன், ‘புல்வெளி’ (The Steppe) என்னும் நீளமான சிறுகதை ஒன்றை எழுதத் தொடங்கினார். இதனை அவர் ‘சிறிது முரணானதும், மிகவும் உண்மையானதும்’ என்று குறிப்பிட்டார். இது கதைமாந்தர்களின் சிந்தனைச் செயல்பாடுகளோடு கலந்த ஒரு கதையாகும்.
செக்கோவ் இக்கதையின் வாயிலாக, வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட ஓர்; இளம் சிறுவனின் பார்வை வழியாகவும், அவனுடைய தோழர்கள், ஒரு மதபோதகர் மற்றும் வணிகர் மூலமாகவும் ஓர் ஒற்றைக்குதிரை, இருசக்கர வாகனப் பயணத்தைத் தூண்டுகிறார். மேலும் இது செக்காவின் கவித்துவமிக்க படைப்புகளின் அகராதி என்று பரவலாக அறியப்படுகிறது. இக்கதை ஆன்டன் செக்காவிற்குப் புகழையும், அவரது முதிர்ந்த கற்பனையின் தரத்தையும் மிக அதிகமாக வெளிப்படுத்தியது. தவிர, இதனை ஒரு இலக்கிய இதழில் வெளியிடப்படக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
செக்கோவ் தான் முதலில் எழுதிய கதைளைப் பணத்துக்காகவே எழுதினார். ஆனால் அவரது கலைப்படைப்பு ஈர்ப்பு அதிகரித்தபோது, தற்காலச் சிறுகதை வளர்ச்சியில் பின்னர் செல்வாக்கு ஏற்படுத்திய பல புதுமைகளை அவர் தனது கதைகளில் அன்று புகுத்தினார்.
இவருடைய கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஆன்டன் செக்கோவ் மருத்துவராக இருந்தபோதிலும் வாழ்நாள் முழுவதும் நோயாலும் துன்பப்பட்டு வந்தார். ஆனாலும் அவரின் எழுத்துக்கள் உலகத்தாருக்கு மருந்தாகப் பயன்பட்டன என்பதுதான் உண்மை.