பம்மல் முதல் கோமல் வரை

தமிழ்த் திரையுலகில், இலக்கிய உலகில், எழுத்துலகில் என்று சுடர்விட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்;. அவர்களில் ஒருவர்தான் திரு.கோமல் சுவாமிநாதன். ஒரு திரைப்படம் ஒரு சிறுகதை, ஒரு மேடைப்பேச்சு, ஒரு கவிதை, ஒரு நாவல் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏற்படுத்தும்.

சான்றாகத், தண்ணீர் தண்ணீர்’ என்ற படம் நாடக எழுத்தாளர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்களால் எழுதப்பட்டுப் பன்முறை மேடைநாடகமாக வெற்றிபெற்ற பெருமையை உடையது. அந்த நாடகத்தை அப்படியே வாங்கி, திரைக்கதை மட்டும் எழுதி, வசனத்தைக் கோமல் அவர்களை எழுதவைத்துத் தேசிய விருது பெறும் படமாக மாற்றிக் காட்டினார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள்.

இந்தப் படத்தில் ஒரு ஊரே தேர்தலில் வாக்களிக்க மறுத்தால் அரசாங்கமே அவர்களை நோக்கி வரும் என்பதைப் படத்தில் மிகச் சிறப்பான காட்சியாக வைத்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லாத் தேவைகளுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்காமல் நமக்கு நாமே என்பதை மனதில்கொண்டு ஊர் கூடித் தேர் இழுத்தால் தண்ணீர் ஏரியே ஊருக்குள் வரும் என்பதை இந்தப் படம்தான் சுட்டிக்காட்டியது.

இதற்குப் பிறகு நடந்த தேர்தல்கள் பலவற்றில் மக்கள் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கினார்கள். இதற்குமேலாகவும் தங்கள் ரேசன்கார்டுகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஊருக்கு வெளியே செல்லத் தொடங்க, அரசாங்கம் அவர்களது கோரிக்கையை அவசரச் சிகிச்சைபோல் கவனித்து நிறைவேற்றி வருவதை நாம் இன்றும் பார்க்கிறோம். இதற்கெல்லாம் விதை போட்டவர் கோமல் சுவாமிநாதன் அவர்கள்.

எப்படி நாடக உலகின் தந்தையாகிய பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் நீதித்துறையில் பணியாற்றிக்கொண்டே சுகுண விலாச சபை’ நாடகங்கள் மூலம் சமுதாயத்திலும் திரையுலகிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரக் காரணமாக இருந்தாரோ, அவரைப்போலவே திரு.கோமல் சுவாமிநாதன் அவர்களின் பணியும் அமைந்தது. எவ்வாறு என்றால்? எழுத்துலகில் சுபமங்களாவாகவும், நாடக உலகில் ‘ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்’ என்ற குழுவாகவும்,  திரையுலகில் இயக்குநராகவும் இவர் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் தண்ணீர், யுத்த காண்டம், அனல் காற்று, ஓர் இந்தியக் கனவு போன்ற படங்களும் இவரது இயக்கத்தில் (தண்ணீர் தண்ணீர் தவிர) வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சாதனைகளைப் பல்வேறு துறைகளில் சாதித்துக் காட்டிய திரு. கோமல் சுவாமிநாதன் அவர்களைக் குறித்த மேலும் சில செய்திகளைக் காண்போம்….

கோமல் சுவாமிநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், மேடை நாடகப் படைப்பாளி, சினிமா கதாசிரியர், இதழாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். தமிழில் முக்கியமான முற்போக்கு நாடக, ஆசிரியராகக் கருதப்படுபவர்.

இவர் 1935ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி  காரைககுடியில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் ஆடுதுறைக்கு அருகே ‘கோமல்’ என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். இவர் மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். 1950ஆம் ஆண்டுகளின் தொடக்க ஆண்டுகளில் காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைகளில் பேசத் தொடங்கிய இவர், தன்னுடைய பேச்சாற்றலால் கோடையிடிக் கோமல்’ என்ற பட்டம் பெற்றார்.

1957இல் நாடக ஆசையால் பெற்றோருடனேயே ஊரைவிட்டு வந்து சென்னையில் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் நாடகக்குழுவில் சேர்ந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்குழுவில் நடித்த கோமல் சுவாமிநாதன் அவர்கள் 1960ஆம் ஆண்டு அவர்களுக்காகப் புதிய பாதை’ என்ற முதல் நாடகத்தையும், பின்னர் மின்னல் கோலம்’ ‘தில்லை நாயகம்’ போன்ற நாடகங்களையும் எழுதினார்.

திரைத்துறையில் நுழைந்த கோமல் 1963இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் வசன உதவியாளராகப் பணியாற்றினார். திரையில் அவருக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் வரவில்லை. கோமல் சுவாமிநாதன் அவர்களின் சிலநாடகங்கள் படமானாலும் பெரிதாக கவனிக்கப்படவில்லை.

பின்னர் 1971ஆம் ஆண்டு திரையுலகில் இருந்து விலகி, ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்’ என்ற பெயரில் சொந்தமாக நாடகக்குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்காக மொத்தம் 33 நாடகங்கள் எழுதி மேடையேற்றினார். அவற்றில் பதினைந்து நாடகங்கள் நூறு தடவைக்கும் மேல் மேடையேறின.  இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ‘ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸின் முதல் நாடகம் சன்னிதித் தெரு’ என்ற நாடகம் ஜனவரி மாதம் 23ஆம் தேதி முதன்முதலாக மேடையேறியது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நகைச்சுவை மற்றும் குடும்ப நாடகங்களைக் கோமல் எழுதினார். ‘நவாப் நாற்காலி’, ‘ஜீஸஸ் வருவார்’, ‘பெருமாளே சாட்சி’, ‘கோடு இல்லாக் கோலங்கள்’, ‘மந்திரி குமாரி’, ‘பட்டணம் பறிபோகிறது’, ‘வாழ்வின் வாசல்’, ‘யுத்த காண்டம்’ எனப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார் கோமல்.

 கோமலின் நாடகங்கள் தொடர்ந்து வேற்றுமொழிகளுக்குச் சென்றன. திரைப்படங்களாகவும் உருப்பெற்று மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. அவற்றில் ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற நாடகம் முக்கியமான ஒன்று. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. 1981இல் இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது பலநாடகங்கள் படமாக எடுக்கப்பட்டன.

தன்னுடைய வாழ்க்கையில் நோயால் அவதியுற்றபோது தன் நாடகக் குழுவைக் கலைத்துவிட்டு இதழியிலில் ஈடுபட்டார். அவருக்கு இலக்கியத்திலும் ஆர்வம் இருந்தது. சி.சு.செல்லப்பாவின் நண்பராக எழுத்து இதழில் பங்கு பெற்றிருந்தார். ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சுபமங்களா இதழை எடுத்து இலக்கிய இதழாக நடத்தினார்.

பம்மல் (சம்பந்த முதலியார்) தொடங்கி கோமல் (சுவாமிநாதன்) வரை எழுத்துப்பணியும், நாடகப்பணியும், திரைப்பணியும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.