டிஸ்கோ…1982…

உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது. அடுத்தது முடிவெட்டுவது, அதாவது வெட்டிக்கொள்வது. குறிப்பாக முடிவெட்டிக்கொள்வதென்றால் மரண பயம்தான். இதற்குக் காரணம் சொல்ல வேண்டுமென்றால் சில பூர்வ புண்ணியக் கதைகளை நீங்கள் தெரிந்துதான் ஆகவேண்டும்.

சிறுவயதில் நான் முடிவெட்டிக் கொள்ளத் தனியாகச் செல்லக்கூடாது. உலகமே மாறினாலும் என் அப்பா கம்பீரமாக உடன் வந்தே தீருவார்.  எங்களுக்கு முடிவெட்ட ஒரு ஆஸ்தான முடித்திருத்தாளர் இருந்தார். அவரைத் தவிர யாரிடமும் நான் முடிவெட்டக்கூடாது. பெரும்பாலும் அவர் எங்கள் வீட்டிற்கே வந்துவிடுவார்.

‘சாமி கிராப் வெட்டி விடட்டுமா?’ என்று அன்பாகக் கேட்டபடி எனக்கு முடிவெட்டத் தொடங்குவார், என் அப்பாவின் முன்னால். அந்த முறையை நினைத்தால் உடம்பே நடுங்கும். எல்லா முடிகளையும் ஒன்றாக்கி ஒரு கையில் கொத்தாகப் பிடித்து மறுகையில் கத்தரியால் வெட்டிச் சாய்ப்பார். பின் மண்டையில் மி~ன் ஒன்றால் ஒரு தேய்… தேய்ப்பார். முடிந்தது, அப்போது பார்த்தால் அநேகமாக ஏதாவது ஒரு ஆதினத்தின் இளைய சந்நிதானம் போல இருப்பேன். ஒரே கோபமும், அழுகையுமாய் வரும், ஒன்றும் சொல்ல முடியாது.

தான் வெட்டிச் சாய்த்த தலைகளை வீரமாகச் சுற்றிவரும் வீரனைப்போல, என்னை ஒரு தடவை சுற்றிப் பார்ப்பார். இந்த ‘ரவுண்ட்’ முடிய மூன்று நிமிடம் ஆகும். அவர் சரி சொன்னால்தான், முடிவெட்டி முடிந்ததாக அர்த்தம். அவருக்குத் திருப்தி இல்லாவிட்டால் ‘செகண்ட்ஷிப்ட்’ தொடங்கும். இப்படியே பலகாலம் நடந்தபின், உலக அனுபவம் பெறவேண்டி நான் தனியே முடிவெட்டிக்கொள்ளச்… சிலசமயம் செல்வேன். வைகை ஆற்றங்கரையின் ஓரம் ஜில்லென்ற தென்னந்தோப்பில் ஒரு மண்குடிசையில் முடிவெட்டத்தொடங்குவார்’ அவர், அந்தநேரத்தில் நான் அநேகமாக தூங்கிவிடுவேன். ஏனென்றால் அவர்  பெரும் அரசியல் செய்திகளைத்தான் விடாமல் சொல்லிக் கொண்டிருப்பார். 

நான் வெளியே சென்று முடிவெட்டிக்கொள்வது அப்பாவிற்குப் பிடிக்காது என்பதை வந்தவுடன் வாசலில் மறித்து என் தலையைப் பார்த்தபடியே அவர் கேட்கும் கேள்விகளில் அறியலாம்.

               ‘எப்ப பரீட்சை!’

               ‘தெரியலை’

               ‘இது தெரியாம எதுக்கு காலேஜ் போறே’

               …………

               ‘குளிச்சியா?’

               ‘இனிமேத்தான்’

               ‘போய்த் தொலை’

எல்லாம் வாசலில் தான். சிலநாட்களில் சரியாகி விடும். இப்படியாக நான் இருந்து வரும் காலத்து ஒருமுறை உடல்நலம் குன்றியதால் வெகுநாட்கள்; கழித்து ஒருநாள் முடிவெட்ட யோசித்தபோது, எங்கள் ஊரில் புகழ்பெற்ற சலூன் பெயரைப் பல நண்பர்கள் சிபாரிசு செய்ய அங்கே சென்றேன். நான் வாசலில் நுழைந்ததுமே அந்தச் சலூன்காரன் ஏதோ உயிர் நண்பனைப்போல ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடிக்காத குறையாக அழைத்துச் சென்றான். அவனுக்கும் என் வயதுதான் இருக்கும்.

(சிறு குறிப்பு: இவன் எங்கள் ஆஸ்தான முடித்திருத்தாளரின் மகன் என்பதையும் ஆற்றைவிட்டு சலூனுக்கு மாற்றிக்கொண்டது இந்தியாவின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்பதையும் அறிவீர்களாக)

சிறிய அறையில் நடுநாயகமாக இரு சுழல் நாற்காலிகள், முன்னே ஒரு கண்ணாடி, பின்னே ஒரு கண்ணாடி இரண்டும் நேரே நேரே சந்திப்பதால் பல பல கண்ணாடிகள். சுவர் முழுவதும் காலண்டர் பெண்கள். அநேகமாக எல்லோரும் குளித்துக்கொண்டே இருந்தார்கள். ஒருபெண் குளித்துவிட்டுக் கரை ஏறிவிட்டாள். பவுடர், சுனோ, சுண்ணாம்பு, டெட்டால், சோப்பு எல்லாம் கலந்த கதம்ப வாசனை. இரண்டு ஃபேன்கள், டேப்ரிகார்டரில் ஏக் துஜே ஹேலியே’.

என்னை ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னான். இரண்டுபுறமும் தெரிந்த கண்ணாடிகளில் நானே நானைப் பார்த்தேன். ஞானிகளும் அறியமுடியாத ‘நான்’ அங்கே விதவிதமாகத் தெரிந்தது. சுற்றிலும் பத்திரிக்கை மயம்.

‘சார் எந்த மாடல் வெட்டலாம்’ அவன் வெற்றிலைச் சாறு வெளியே சிந்தாமல் கேள்வி கேட்டான். அநேகமாக என்னைக் காட்டிலும் சிறந்த ஆடை அணிபவன். சினிமா தியேட்டரில் நான் 2-40க்குப் போய் திரும்பிப் பார்த்தால் அவன் 4ரூபாய் வரிசையில் புன்னகையுடன் படம் பார்க்கும் பரமாத்மா. சைக்கோ வாட்ச்தான் கட்டுவான்.

‘சார் உங்களுக்கு ஸ்டெப் கட்டிங் வேண்டாம்.’

‘சரி வேண்டாம்’

‘டிஸ்கோ’ வெட்டுவோம்.

நான் இப்போதுதான் என் உலக அறிவின் குறையை உணர்ந்தேன். ‘டிஸ்கோன்னா என்ன?’ நான் கேட்க,

‘என்ன சார்’ B.A.B.L. படிக்கிறீங்க இது தெரியலை.

‘நான் B.L. இல்ல,  M.Phil’

‘எல்லாம் ஒன்னுதான். அது சரி கொஞ்சம் செலவாகும். ஆனா உங்களைக் கமலஹாசன் மாதிரி ஆக்கப் போறேன்’  என்றான்.

எனக்கு சந்தோசந் தாங்கவில்லை. ஏதோ டார்வின் தியரி படித்த மாதிரி, இருந்தது.

நிஜமாத்தான் சார், முதல்ல பத்து ரூபா குடுங்க கிளீனா வெட்டுவோம். பிறகு சொல்றேன் பாருங்க. அவன் ஏனோ வெட்டுவோம் வெட்டுவோம் என்று பன்மையிலே சொன்னான்.

ஒரு வெள்ளைத் துணியை எடுத்தான். ஏதோ அநாதைப் பிணத்தை மூடுவதுபோல முகம்வரை கொண்டு வந்து கழுத்தைச் சுற்றி இறுக்கினான் (செத்தேன்) ஒரு டிரைவர் மாதிரி ஒரு கைப்பிடி மிஷினை பிளக்கில் சொருகி, என் தலையில் டிராக்டர் ஓட்டினான்.

‘என்ன செய்யிற’… அநேகமாக எனக்கு பேச்சே வரவில்லை.

அவன் டேப்பைப் பெரிதாக்கிவிட்டுச் சிரித்துக்கொண்டே வந்து மீண்டும் உழுதான். பிறகு கத்தரியும் சீப்பையும் எடுத்து எண்ணி எண்ணி வெட்டினான்.

“இப்ப எப்படி இருக்கு”?

“தொண்டை ரொம்ப இறுக்கமாக இருக்கு”

“அதில்ல – தலையைப் பார்த்தீங்களா?”

எனக்கு ஒரு மாறுதலும் தெரியவில்லை. சுற்றி ஏதோ கரையான் அரித்த மாதிரிச் செய்திருந்தான். ‘நேரா வீட்டுக்;குப் போய்க் குளிக்கணும். தலையில் ஒரு அழுக்கு இருக்கக்கூடாது. சரியா அரைமணியில் வாங்க’ என்றான்.

நானும் மந்திரவாதிகளுக்குப் பயந்து நடுங்கும் சிறுவன்போல வீட்டிற்குப் போய் அங்கிருந்த எல்லா சோப்பையும் தலையில் போட்டு ஃபேனில் உலர்த்திவிட்டுப் பஞ்சுபோல போனேன்.

‘வாங்க வாங்க ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்’ என்றான் அவன்.

‘அப்ப நாளைக்கு வரட்டுமா’ ‘அட அதில்லை சார் உங்களுக்கு இப்ப நான் ‘டிஸ்கோ’ பண்ண ரெண்டு மணி நேரமாகும். சாப்பாடு ஆச்சு இல்ல.

‘ஆமாம்’ என்றேன் சோகத்துடன்.

‘அப்ப இதில உட்காருங்க’. பலர் வந்து போனார்கள். முடிவாக நான் சேரில் ஏற்றப்பட்டேன். அவனுடன் ஒரு உதவியாளனும் இருந்தான்.

ஒரு பெட்டியை எடுத்து வந்தான். ஒரு திரவ பாட்டிலை எடுத்தான். அந்த பாட்டிலில் ஒரு பெண் தலைவிரி கோலமாகச் செத்த மாதிரிக் கிடந்தாள். மற்றொரு டப்பாவில் இருந்து பல பிளாஸ்டிக் கிளிப்பை கீழே கொட்டினான். 30ரப்பர் வளையத்தை எடுத்து வந்தான் உதவியாளன். இன்னும் பெயர் தெரியா பொருள்கள் பல. அந்த உதவியாளன் அடிக்கடி தானே சிரித்துக்கொண்டான்.

‘எல்லாம் ரெடியா?’

 ‘ரெடிண்ணே!’

கடவுளே என்ன செய்யப் போகிறார்கள். ஏதோ ஆப்பரேசன் தியேட்டர் போலவும், நான் உயிருக்கு மன்றாடும் நோயாளி போலவும், அந்த டாக்டர்கள் நினைத்தார்கள்.

               ‘சாரை ஆடாம பிடிச்சுக்கோ’

               ‘இல்லை நான் ஓடமாட்டேன்’

               ‘ஓடாம இல்ல, ஆடாமப்பிடிடா’

உதவியாளன் சிரித்தபடி வந்து இரும்புப்பிடி பிடித்தான். அவன் திரவ பாட்டிலைத் திறக்க…. அதிலிருந்து ஆவி போனது. எனக்கும்தான்.

 அதை ஒரு பஞ்சில் தேய்த்து என் மண்டையில் வைத்தான். சுரீர் என்று மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சல்பியூரிக் ஆசிடையும், வேப்பெண்ணெயையும் கலந்தது போல இருந்தது வாசனை. இப்படிப் பல இடங்களில் தடவிய பின் பிளாஸ்டிக் கிளிப்பை எடுத்தான்….

 ‘சார், தலையைப் பூராம் சுருள் முடியாக்க 100கிளிப் போடணும் ஆனா உங்களுக்கு 30தான் போடப்போறேன்’ என்றவன் அந்த திரவம் தேய்த்த இடத்தில் இருந்து பத்து முடியை எடுத்தான். நேராகப் பிடித்தான் பிளாஸ்டிக் கிளிப்பின் வாயைப் பிளந்து முடியைத் திணித்து ஒரு காகிதத்தைச் சுற்றி ரப்பர்பேண்ட் போட்ட பல சுருட்டாகச் சுருட்டி மடக்கி, நான் கத்த…

‘ஒண்ணு போட்டாச்சு’ சார் என்றான். இதேமுறையில் முப்பது போட்டான். தலைமுழுவதும் பிளாஸ்டிக் கிளிப், எரிச்சல் திரவம், ரப்பர் பேண்ட், ஏதோ கோமாளி மாதிரி கழுத்தைச் சுற்றித்துணி, பிடித்துக்கொள்ள ஒருவன். நான் இப்படிக் காட்சியைக் கனவிலும் கண்டதில்லை. ஒருவழியாக முடிந்தது. சார் ரெண்டு மணிநேரம் இப்படியே இருக்கணும் என்று கட்டளை இட்டவன் ‘டேய்… சாருக்குப் படிக்க புத்தகம் கொடு’ என்றபடி வெளியே போய்விட்டான். உதவியாளன் சிரித்தபடி ஒரு பத்திரிக்கை கொடுத்தான். பயங்கர விசயங்கள். ஏதோ ஒரு நேசன்.

               ‘மேனகா டைரக்டருடன் ஓட்டம்’.

  ‘சினிமா – அல்ல – உண்மை’ என்பது போன்ற அதிமுக்கியச் செய்திகளைப் படித்தபடி முப்பது கிளிப்பையும் தலையில் தாங்கி இருந்தேன். உதவியாளும் காணாமல் போனான். அந்தச் சலூனில் இப்போது நானும் காலண்டர் பெண்களுமே பாக்கி.

 ரெண்டுபேர் உள்ளே வந்து என்னை விநோதமாகப் பார்த்தார்கள். பின்னர் அவர்களுக்குள் நடந்த உரையாடல்….

               “இதென்ன இவன் மண்டையில்”

               “பொடுகா இருக்கும் அதான் இப்படி போட்டு இருக்காங்க”

               “பேசாம ஆஸ்பத்திரிக்கே போயிருக்கலாம்”

‘சரி வா போவோம்’. எனக்கு அழுகை வராத குறைதான். அவர்கள் போய்விட்டார்கள். நண்பன் வந்தான். முடி திருத்தும் நண்பன்தான்.

  ‘சார் இதப்படிச்சு, அர்த்தம் சொல்லுங்க என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தான். அதில்தான் திரவம் தடவும் முறையும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற முறைகளும் இருந்தன. எல்லாம் ஆங்கிலத்தில்.

               ‘இதுல ஒண்ணும் உனக்குத் தெரியாதா?’

               ‘சத்தியமாத் தெரியாது’

               ‘அப்புறம் எப்படி எனக்குத் தடவின?’

               ‘சும்மா ஒரு உத்தேசந்தான். சொல்லுங்க என்னா போட்டு இருக்கு’.

சத்தியமாக எனக்கும் புரியவில்லை. அதில் 15, 20, 30 என்று ஏதோ போட்டிருக்கு. நான் அதை நிமிஷம் என்று மொழி பெயர்த்தேன். அவனும் புரிந்துகொண்டு அடுத்து வருபவனுக்கு அதன்படி செய்யப்போவதாகச் சொன்னான். வாழ்க அவன் தொண்டு.

 ஒருவழியாக இரண்டு மணிநேரம் ஆக, மீண்டும் இருவரும் சேர்ந்து ஏதேதோ செய்து பிடுங்கி, இழுத்து, அத்து எடுத்த பின்…

               ‘சார் இப்ப பாருங்க’

               பார்த்தேன்… ‘ஒன்றும் தெரியவில்லை’

               ‘பூராம் சுருட்டை முடி. இனி நீங்க கவலைப்பட வேண்டாம்’.

               ‘சரி, கவலைப்படவில்லை’

               ‘ஒரு எட்டு ரூபாய் எடுங்க’

               ‘எதுக்கு’

            ‘எதுக்கா?…. இந்த வேலைக்கு முப்பது ரூபா ஆகும். உங்களுக்காகத்தான் இவ்வளவு குறைத்தேன்.

               ‘முதல்ல அஞ்சு ரூபாய் கொடுத்தேனே’.

               ‘அது முடி வெட்ட’

               ‘இது?’

               ‘இதான் டிஸ்கோ…. டேய் பவுடர் எடு’

               நான் ‘தலை’ முடியை நொந்தபடி பணம் கொடுக்க அவர்கள் பல பாட்டில்களில் இருந்து எண்ணெயும் டப்பாக்களில் இருந்து பவுடரும் எடுத்துப் பூசி என்னைப் புது ஆளாக மாற்றினார்கள்.

               ‘சார் இனிமேதான் நீங்க கவனமாக இருக்கணும். என்ன செய்யணும் தெரியுமா?

               ‘இங்க வரக்கூடாது’ என்றேன்.

               ‘அதில்லை, தினம் ஷாம்பு போடணும், ஒருவாரம் கழிச்சு தினம் எண்ணை போட்டாத்தான் முடி கரு கருன்னு வளரும்’ என்றான்.

               உபதேசம் முடிந்தபிறகு எல்லோரும் தூங்குகிற நேரத்தில் வீட்டிற்குப் போனேன். என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார் என் அப்பா.

               இன்னிக்கு முடி வெட்டிக்கப் போறேன்னு சொன்னியே வெட்டிக்கலை?

               இதற்கு நான் யாரை நொந்து கொள்வது?

               ‘ரெண்டு ரூபாய் தர்றேன் போய் வெட்டிக்கோ’

               ‘சரி’

முடிந்தது.

நண்பர்களே! நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த அனுபவத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். தற்போது உள்ள அழகு நிலையங்களின்அனுபவங்களை விதவிதமாக எழுதலாம்.

நான் ஆஸ்திரேலியா போயிருந்தபோது அங்கு முடிதிருத்தும் கடைக்குள் சென்றேன். பெரும்பாலும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து சிகை திருத்திக்கொண்டிருந்தார்கள். ‘முடிவெட்டுவதற்கு எவ்வளவு’ என்று கேட்டேன். ‘மூவாயிரம் ரூபாய்’ என்றார்கள். அப்போது என் கூட வந்த நண்பர், ‘மூவாயிரம் ரூபாய்க்கு நம்ம ஊர்ல ஆளையே வெட்டுவார்களே’ என்று அப்பாவியாகக் கேட்டார். நாங்கள் பார்த்துவிட்டு ஜாக்கிரதையாக வெளியே வந்துவிட்டோம்.

இப்போதெல்லாம் குழந்தைகள் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டியிருக்கிறது. எல்லாம் தலை முடி, சாரி தலை விதி.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.