பள்ளிப்பருவத்திலே…

அன்று உலகமே சந்தோசத்தில் ஆழ்ந்திருக்கச், சூரியன் கிழக்கே உதிக்க, எங்கள் வீட்டில் எல்லோரும் அவசரமாகக் காரியங்களில் ஈடுபட, நான் காலையில் எழுப்பப்பட்டேன், குளுப்பாட்டப்பட்டேன். வெளுத்த உடைகள் எனக்கு அணிவிக்கப்பட்டன. கழுத்தில் மாலை போடாத ஆடுமாதிரி நான் முழிக்க என்னைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள். அநேகமாக இழுத்துச் சென்றார்கள்.
பள்ளிக்கூட வாசலில் ஒரு சிறுவனை யாரோ அடிக்க அவன் ‘குய்யோ முறையோ’ என்று அலறிக்கொண்டிருந்தான். எனக்கு அப்போதே காய்ச்சல் வந்தது. அது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் எனக்கு உயிரே போய்விட்டது.
யாரோ ஒழுங்காகப் பள்ளிக்கு வராத பையன் என்று நினைத்தேன். என்கூட வந்த ஒருவனும் அதை ஆமோதித்தான். அப்போது எனக்கு வயது ஆறு.
என் அப்பா என்னை விட்டுவிட்டு ‘ஒழுங்கா இரு, பள்ளிக்கூடம் விட்டதும்தான் வரணும்’ என்று மிரட்டி விட்டுப் போனார்.
அந்த இடத்தில் எனக்கு யாரைப் பார்த்தாலும் பயமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அழுகை வந்தது. என் பக்கத்தில் இருந்த ஒரு பெண் மண்டையில் முடியே இல்லை. அருகே வந்து,
“ஒன்னைய ஒண்ணுக்கு விடவும் கொல்றேன் பாரு” என்று மிரட்டிவிட்டுப்போக, எனக்கு அப்போதே உடம்பு ஈரமானது. உடனே யோசித்தேன். உயிர் பெரிதா, கல்வி பெரிதா, தவிர பள்ளிக்கூடத்திற்கு வந்த அன்றைக்கே நான் சாக விரும்பவில்லை. பையை அங்கேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டம், வீட்டில் போய் பயங்கர அழுகை, யார் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அம்மா ஒரு ஆறுதலான வார்த்தை சொல்ல அமைதியானேன்.
“நீ நாளைக்குப் பள்ளிக்கூடம் போக வேண்டாம்” என்ற வார்த்தை அது. இரவில் கனவில் அந்த மொட்டைப் பெண் பல தடவை வந்தது…
பிறகு ஒரு வாரம் தெருவில் தட்டான் பிடித்தேன். சாக்கடையில் கப்பல் விட்டேன். திரும்ப ஒரு நாள் பள்ளிக்கூட அழைப்பு…
நான் ‘வரமாட்டேன்’ தீர்மானமாகச் சொன்னேன். ‘எங்க இன்னொருக்காச் சொல்லு’ என்றார் அப்பா.
‘இனிமே நான் வரமாட்’… பளார், நடுரோட்டில் அடிவாங்கி பள்ளிக்கூடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன். வாத்தியாரிடம் என்னை வெளியே விட்டுவிடாமல் இருக்கும்படி சொல்ல, அவர்கள் நான் எங்கே போனாலும் கூட வந்து உயிரை வாங்க, வேறு வழியில்லாமல் பள்ளிக்கூடத்திற்குப் போய்த் தொலைந்தேன்.
அந்த வருடம் ஏனோ எல்லோரையும் பாசாக்கினார்கள். நான் அ, ஆன்னாத் தெரியாமல் ரெண்டாவது போனேன். அந்த டீச்சர் பேரு ‘தொவையல் தின்னி’ இதுதான் போனவுடன் ஒரு பையன் சொன்ன கிசுகிசு. அதாவது தொவையலை நிறைய அரைத்து எப்போதும் தின்னும் ஒருவகைப் பிராணி. அந்த டீச்சருக்கு அடிக்கடி மகா கோபம் வரும், வந்தால் அன்று எல்லோரும் செத்தோம். அது கணக்கு டீச்சர் ஆனதால் எல்லோருக்கும் சராசரியாக ரெண்டு அறை கொடுக்கும்.
ஒருநாள் என்னிடம் வந்து….
“ஏய் பன்ணென்ட ரெண்டால உடனே வகு, இல்லாட்டி உன்னை நான் வகுந்திடுவேன்” என்று சொல்லி என் காதை ரேடியோவைத் திருகுவதுபோலத் திருகியது. எனக்கு அப்போதுதான் ‘வகுத்தல்’ என்றால் என்ன என்று புரிந்தது. அந்த வகுப்பு மூலையில் எப்போதும் இருப்பான் ஒருவன், அவன் பெயர் ‘மண்ணுத் தின்னி’ அவன் மண்ணைத் தின்னும் முறை வினோதமாக இருக்கும், முதலில் தன் நாக்கால் நன்றாக எச்சில் துப்பி வைத்துக்கொண்டு அதை அப்படியே தரையில் தேய்த்து ஐஸ்கிரீம்போல ஒவ்வொரு விரலாகச் சுவையாகச் சுவைப்பான். வயிறு பானைபோல இருக்கும். நான் சரியாக கணக்குப் போடாததால் என்னை அந்த மண்ணாந்தையுடன் உட்கார வைத்தார்கள்.
நான் போன புதிதில் அவன் ஏதோ எனக்குக் கொடுக்காமல் தின்பதாக நினைத்துக் கேட்டேன். அவன் தன்னுடைய சுலபமான முறையைச் செய்கையால் விவரித்து என்னையும் தின்னச் சொன்னான். அந்த வயதிலேயே ‘மண்ணாசை’ பிடித்து அலைந்தவன் அவன் ஒருவனாகத்தான் இருந்திருப்பான். அவன் பள்ளிக்கூடத் தரையெல்லாம் சுத்தப்படுத்தி முடிந்தால் சுவரில் உள்ள அழுக்கைச் சாப்பிடத் தொடங்குவான்.
ஒரு மகிழ்ச்சியான செய்தி. அந்த வகுப்பு ‘கோ எஜிகேசன்’ காலேஜ் மாதிரி பாகுபாடெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் எங்கும் உட்காரலாம். சில தண்டனை மாணவர்கள் பின்னாடி இருப்பார்கள். இப்படி நான் ஏதோ படித்து நான்காம் வகுப்பு வரை வந்தேன். அந்த வகுப்பு வேளையில் ஒருநாள் ஒரு கிழவி தன்னுடன் ஒரு பையனை அழைத்துக்கொண்டு வந்து சேர்த்துவிட்டாள். அவன் பெயர் ‘தேவதாஸ்’. அவன் எல்லோரையும் விட உயரமாகப் பயப்படும்படியாக இருப்பான்.
அவன் பாட்டி அவனிடம் பள்ளிக்கூடமே அலறும்படி ‘ஓ’வென்று கத்தினாள். ‘அடே தேவடு எவனாச்சும், எவளாச்சும் உன்னைய அடிச்சாங்கண்ணா, உடனே சொல்லு அவங்க கைய முறிச்சு அடுப்புல வச்சுப்புடுறேன்” என்றாள். அது அநேகமாக கிளாஸ் வாத்தியாரையும் உட்படுத்தித்தான் என்பது பின்னால் போகப்போகத் தெரிந்தது.
அவன் வந்த மூன்றாம் நாள் என்னிடம் வந்து, ஒரு உடைந்த பிளேடைக் காட்டி, “உன் சிலேட்டுக்குச்சி எல்லாம் குடு. இல்லாட்டி இதக் கொண்டு கீறுவேன்’ என்றான். எனக்கு உடம்பு நடுங்கத் தொடங்க அவ்வளவு குச்சியையும் குடுத்தேன். அவன் வகுப்பில் எல்லோரிடமும் இப்படியே பல மிரட்டல்களைப் பயன்படுத்தி ஒரு பயங்கரப் பிராணியானான்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ஒரு அதி அற்புத பயங்கரக் கண்கொள்ளாக் காட்சி ஒன்று ஒரு நாள் நடந்தது. விளையாட்டு வாத்தியார், பெயர் காமதேனு. பார்ப்பதற்கு மெலிந்த பீடி போல இருப்பார். பெரும்பாலும் அவர் இருமத்தொடங்கும்போது நாங்கள் கிரவுண்டில் ஓடத் தொடங்குவோம் ஓட்டம் முடிந்தாலும் இருமல் தொடரும்…. அவர் ஒருநாள் தேவதாஸ் சரியாக ஓடவில்லை என்று அவனை அடித்தார்.
மறுநாள் அந்தப் பள்ளிக்கூடமே அதிர்ந்தது. தேவதாஸின் பாட்டி தன் பேரனை ‘அடித்தவனைத்’ தேடி வந்தாள். அடித்த ஆசிரியர், பாட்டியைப் பார்த்து பயந்து ஓட, பாட்டியும் விரட்ட, இரண்டாவது ரவுண்டில் ஆசிரியர் பிடிபட்டார். இதற்குமேல் அந்தப் பரிதாபத்தைச் சொல்ல முடியாது. தேவதாஸின் கை ஓங்கியது. நாங்கள் கொத்தடிமைகளாய்ப் படித்தோம். பயந்தோம்.
ஒருநாள் எங்கள் அப்பாவுக்கு ‘டிரான்ஸ்பர்’வர நாங்கள் குடும்பத்துடன் குடிபெயர்ந்தோம். புதிய நகரப் பள்ளிக்கூடம், புதிய மக்கள், புதிய வாழ்க்கை. இப்போது கிராமத்தில் அந்தப் பள்ளிக்கூடத்தை இடித்து நல்ல ‘மகசூலுக்காக’ ஆங்கிலப் பள்ளியாக்கி விட்டார்களாம்.
பழைய ஆசிரியர்கள் யாருமே இல்லை. ஆனால் ஆச்சரியம் தேவதாஸ் அங்கே வாட்ச்மேனாக மணியடித்துக் கொண்டிருந்தான். அவன் மீசையைப் பார்த்து இப்போதும் எனக்கு பயம் வந்தது. மண்ணாந்தையை விசாரித்தேன். ‘அவன் அஞ்சாங் கிளாஸ்ப் படிக்கிறப்ப செத்துப் போயிட்டான்’ என்றான் தேவதாஸ். அந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை.
இப்படிப்பட்ட நினைவுகளையெல்லாம் இப்போது பகிர்ந்து கொள்ளக்கூட ஆட்கள் இல்லையோ என்ற கவலை எனக்கு வரத் தொடங்கியிருக்கிறது. ஏனென்றால் பள்ளிகளின் அமைப்பும் பாடத்திட்டங்களும் கற்கும் கற்பிக்கும் முறைகளும்கூட மாறிவிட்டன.
எல்லோரும் ஆன்லைனுக்கு வந்தபிறகு, நான் ஆப்லைனில் என் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எந்த வயதுக்காரரும் படித்து ரசிக்கலாம். அப்படிப்பட்ட பருவம் பள்ளிப்பருவம்தான்.