நாங்கள் போட்ட நாடகங்கள் – பகுதி 2

சகுனி வேடம் போட்ட நான் வஞ்சமாகச் சிரிக்கும்போதெல்லாம் மூக்கிற்குள் ஒட்டு மீசை போக… அதை நான் தாயம் போடுவதற்கு வைத்திருந்த சிறுகட்டையால் சமாளித்தேன். (சகுனி தாயக் கட்டையோடு இருக்கக் காரணம் இதுதான்)
துரியோதனன் அடிக்கடி என்னிடம் வந்து…. ‘மாமா நான் என்ன செய்யட்டும் மாமா…. என்ன செய்யட்டும்’ என்று புலம்புவார். நாடகத்தைப் பார்த்த பலர் உருகிப் போனார்கள். எனக்குத்தான் உண்மை தெரியும். அவர் வசனத்தை மறந்த போதெல்லாம் பேசுகிற ஒரே வசனம் ‘மாமா… நான் என்ன செய்யட்டும் மாமா… என்ன செய்யட்டும்’ என்பதுதான்.
பாஞ்சாலி துயிலை உரியும் ‘சீனுக்காக’ மாணவர்கள் ஆவலாகக் காத்திருக்க நாங்கள் அதைப் புதுமுறையில் திரைபோட்டு மறைத்துக் காண்பித்தோம். கோபத்தில் மாணவர்கள் பெஞ்சுகளை உடைக்க,
கடைசியில் சபதக் காட்சி…
அதில் அர்ச்சனனாக வந்த மாணவர் (சிவராசன்) கோபத்தின் உச்சக்கட்டத்திற்கே போய்…
‘தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்’ என்றபடி கோபித்துக் கத்த அவர் அப்போது ஆடிய ஆடலில் கண் தெரியாத திருதராட்டினன் ‘குபீர்’ என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் சிரிக்கக் கௌரவர்கள் அனைவரும் சிரிக்க ஒரு வழியாக நாடகம் முடிந்தது. நாடகம் முடிந்ததும்தான் தெரிந்தது அர்ச்சுனனுக்கு வில் கிடைக்காததால் அவர் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ‘கவட்டை வில்லைத் தோளில் மாட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்துப் பல பேராசிரியர்கள் திகைத்துப் போன விசயம். நாங்கள் யாரும் அது பற்றிக் கவலைப்படவில்லை.
இப்போது பக்கத்து ஊர்களில் எல்லாம் எங்கள் புகழ் பரவியது. அம்மையநாயக்கனூர் நண்பர்களுக்காகத் ‘தேடினேன் வந்தது’ என்றொரு நாடகம் போட்டோம். இப்போது நாடகம் எங்களுக்கு எளிமையாக வந்தது. இருந்தாலும் இதிலும் ஒரு சம்பவம்.
அந்த நாடகத்தில் கடைசிக் காட்சியில் அனைவரையும் வில்லன் துப்பாக்கியால் மிரட்டிப் பணிய வைக்க வேண்டும். ஒத்திகையின்போது (ஏறத்தாழ ஒரு மாதம்) வில்லன் துப்பாக்கி இல்லாததால் வெறும் கையைத் துப்பாக்கி மாதிரி வைத்துக்கொண்டு (ஆட்காட்டி விரலை நீட்டி கட்டைவிரலை நிமிர்த்தி) எங்களைப் பயமுறுத்துவான்… நாங்களும் நடுங்குவோம்!
நாடகத்தன்று… நாடகம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்க அந்தக் கடைசிக் கட்டம் நெருங்கியது. வில்லன் நடிகர்; ஓடி வந்தார். நீண்ட கோட், கறுப்புக் கண்ணாடி, கையில் சூட்கேஸ், தலையில் தொப்பி அவர் உள்ளே நுழைந்ததும் கை தட்டல் பயங்கரமாக இருந்தது. அவர் வசனம் பேசி முடித்துவிட்டு,
ம்… எல்லோரும் கையைத் தூக்குங்கள் இல்லாவிட்டால் சுட்டுப் பொசுக்கி விடுவேன்! என்று கர்ஜித்தார்.
யாரும் கையைத் தூக்கவில்லை. கீழே சிரிக்க ஆரம்பித்தார்கள். காரணம் அவர் வழக்கப்படி வெறும் கையை நீட்டித் துப்பாக்கி மாதிரி வைத்தபடி மிரட்டிக் கொண்டிருந்தார். இடுப்பில் துப்பாக்கி இருந்தது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
நான் உடனே சமாளிப்பதற்காக…
‘நீ வெறும் கையை நீட்டினால் நாங்கள் பயந்து விடுவோமா?’ என்று அவருக்கு ஞாபகப்படுத்தினேன்.
அதற்கு அவரோ ‘போடா முட்டாள் இது வெடித்தால் தெரியும்’ என்று கத்த…
‘டேய் முட்டாள் அது வெடிக்காது’ என்று கீழே ஒருவன் கத்த அதற்குள் வில்லன் மேல் பலர் பாய்ந்து சண்டை போடுவதுபோல் நடித்து அந்தக் காட்சியை முடித்தோம்.
அதேஊரில் அடுத்த நாடகம் போடத் திட்டமிட்டோம். இந்தமுறை ஏதாவது வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று நினைத்தோம்.
அந்த நாடகம் சினிமா நடிகை, தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர் அவர்களைப் பற்றி எழுதப்பட்டது.
அதில் நடிகை (ஆண்தான்) நாய் வளர்ப்பாள், அதனால் தயாரிப்பாளர் (நாக மூர்த்தி) ஏதாவது வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அந்த நேரத்தில் எங்கேயோ தப்பி வந்த ‘சிங்க முகக் குரங்குக் குட்டி’ நண்பர் நாகமூர்த்தி தோப்பில் வந்து தங்க அதனையே அவர் நாடகத்தில் வளர்ப்பதாக முடிவு செய்தோம். நாடக டைரக்டர் (திரு.கருப்பையா) கட்டாயம் இந்தக் குரங்கு…. நாடகத்திற்கு வேண்டும் எனச் சொன்னார்.
நாடக ஒத்திகை தொடங்கியது. குரங்கும் மகிழ்ச்சியாக திரு.நாகமூர்த்தியோடு இருந்து உற்சாகமாகச் சாப்பிட்டு வளர்ந்தது. எல்லாம் ரெடி.
நாடகத்தில் குரங்கு ஒன்று நடிக்கப் போவதாக ஊரெங்கும் பேச்சு. பலர் அந்தப் புதுமுகக் குரங்கைத் தேடி வந்தார்கள்.
நாளைக்கு நாடகம். முதல்நாள் காலை எங்கள் வீட்டிற்கு நாகமூர்த்தி, கருப்பையா, ஜுனியர் கருப்பையா, ஆவுடையப்பன் எனப் பலர் ஓடி வந்தார்கள்.
‘போச்சு போச்சு எல்லாம் போச்சு குரங்கு செத்துப் போச்சு’ என்றார்கள் மொத்தமாக. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எப்படிச் செத்தது?’ என்றேன்.
ஒருவேளை வசனம் பேசமுடியாமல் மாரடைப்பால் இறந்ததோ… ச்சீசீ அதற்குத்தான் வசனமே இல்லையே. குரங்கை நாய் கடித்ததாகவும் அதனால் மரணம் சம்பவித்தது என்றும் கூறினார்கள்.
உடனே அவசரமாக எல்லோரும் கூடினோம். ‘என்ன செய்வது உடனே ஏதாவது வளர்க்க வேண்டும்’.
நாடகத்தை மாற்ற முடியாதே. ‘பேசாமல் தயாரிப்பாளர் பன்னி வளர்க்கட்டும்’ என்று கோபால் யோசனை சொல்ல நாங்கள் யோசிக்க, பலர், ‘பன்னி கடிக்கும்’ என்றார்கள். என்ன செய்வது விடிந்தால் நாடகம் எங்கும் இதே பேச்சு.
அப்போது திரு.தங்கப்பாண்டியன் அவர்கள் ‘பேசாமல் ஒரு கழுதைக்குட்டி பாருங்களேன்’ என்று சொல்ல எல்லோருக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது.
மிகச் சிறிய கழுதைக் குட்டியைத் தேடி நாலாபக்கமும் நண்பர்கள் சைக்கிளில் பறந்தார்கள்.
ஒருவழியாக 5 மைலுக்கு அப்பால் ஒரு கழுதைக்குட்டி இருப்பதாக அறிந்தோம்.
அதன் சொந்தக்காரர்…
‘தம்பி குட்டி வரணும்னா, தாய் வரணும், தாய் வரணும்னா நான் வரணும். ஆகக் குட்டிக்கு 5ரூபா தாய்க்கு 10ரூபா எனக்கு 15ரூபா என்ன சொல்றீங்க?’ என்று கேட்க அந்தத் தொகையோடு கழுதை வந்து சேர்ந்தபோது மணி 5. ஒன்பது மணிக்கு நாடகம்.
பிறகு வசனங்களைக் கழுதைக்குட்டிக்கு ஏற்றபடி மாற்றி அதற்குப் பவுடர் போட்டு செண்ட் அடித்துக் கூலிங்கிளாஸ் மாட்டி கழுத்தில் ஒரு சங்கிலியும் தொங்கவிட்டு… எங்கள் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது.
தயாரிப்பாளராக வந்த நாகமூர்த்தி அந்தக் குட்டியோடு மூன்று மணிநேரம் பழகி அதற்கு நடிப்புச் சொல்லிக் கொடுத்தார். இருந்தாலும் அந்தத் தாய்க் கழுதையும் சந்தேகத்தோடு பின்னாடியே வர, அதன் சொந்தக்காரரும் விடாமல் வந்தார்.
மைக்கில் விளம்பரம் ஆரம்பமாயிற்று. அதற்குள் இன்னொரு புதிய யோசனையும் செய்தோம். நாடகத்தில் சினிமா நடிகையின் நாய் ஒன்று காணாமல் போய்விடுகிறது. உடனே இந்தச் சேதி தலைமை ரசிகர் மன்றத்திற்குத் தெரிய தமிழ்நாடு எங்கும் இந்தச் சேதி பரவி ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகையின் அன்பைப் பெற அவளின் நாயைத் தேடுகிறார்கள். கடைசியில் ஒவ்வொருவரும் வந்து நடிகையிடம் ‘இந்த நாயா பாருங்கள்’ என்று ஒவ்வொரு நாயாகக் காட்ட வேண்டும் என்பது கதை.
இதற்காக ஒரே நாயைத் திரும்ப திரும்பக் காட்டினால் நன்றாக இருக்காது என்று நினைத்து அந்த ஊரில் நாய் வைத்திருப்பவர்களை எல்லாம் அணுகி மேடையில் ஒரு காட்சியில் தோன்ற வேண்டும் ‘இந்த நாயா பாருங்கள்’ என்று வசனமும் பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். ‘அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி, மேடையில் தோன்றப் போகிறோம், வசனம் பேசப்போகிறோம். அபிமான நாயுடன் நடிக்கப் போகிறோம்’ என்று.
இந்தச் சேதியைக் கேள்விப்பட்ட நாயில்லாத பலர், தெருவில் திரிந்த சொறிநாய்களைக் கயிற்றில் கட்டி நடிக்கத் தயாராகி விட்டார்கள். எங்களுக்கு இந்தச் செய்தி தெரியாது.
மைக்கில் பயங்கர மிருகங்கள் நடிக்கும் ‘காத்திருந்தால் வருவேன்!’ நாடகம் காணத்தவறாதீர் என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள்.
நாடகம் தொடங்கியது. சினிமா நடிகையாக (திரு.ரமேஷ்) அழகாகத் தோன்றி நாயுடன் நடிக்க அதிரடியாகத் தயாரிப்பாளர் (நாகமூர்த்தி) கழுதைக்குட்டியோடு மேடைக்கு வர, பார்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் ஆச்சரியத்தால் ஆரவாரம் செய்தார்கள்.
மேடைக்குச் சற்று ஓரத்தில் நின்று கொண்டிருந்த தாய்க்கழுதை தன் குட்டியைப் பார்த்து அந்தச் சந்தோசத்தில் கத்த, குட்டியும் சுமாராகக் கத்த உடனே அதனோடு வந்த நாகமூர்த்தி ஏதோ அதன் காதில் சொல்ல அது பேசாமல் இருந்தது.
அதைக் கண்ட மக்கள் பயங்கரமாகக் கைதட்டினார்கள்.
நாடகம் களைகட்டத் தொடங்கியது. நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்தக் காட்சி வந்தது. எல்லோரும் நாயோடு தோன்றும் காட்சி. நான் கொட்டகைக்குப் பின்புறம் பார்த்து நடுங்கிப் போனேன். ஏறத்தாழ 30பேர் நாயோடு நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் மேக்கப்.
காட்சி தொடங்கியது. நடிகை நாயைக் காணாமல் கதறி அழுகிறாள். உடனே வரிசையாக ஒவ்வொருவரும் நாயோடு மேடைக்கு வரத் தொடங்கினார்கள்.
‘இந்த நாயா பாருங்கள்’ என்று ஒருவர் கேட்டுவிட்டுப் போனபிறகு மற்றவர் வரவேண்டும் என்பது ஏற்பாடு. இதில் நாங்கள் ஒரு விஷயத்தை மறந்துபோனோம். ரெண்டு நாய்கள் நேருக்கு நேர் சந்தித்தால் எவ்வளவு கலவரம் வரும் என்று எங்களுக்குத் தெரியாமல் போயிற்று.
ரெண்டுபேர் மேடையில் போய் நாயைக் காட்டிவிட்டு இறங்குமுன் இன்னும் இரண்டுபேர் நாயோடு மேடை ஏற நான்கு நாய்களும் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து பிடுங்க… நாய்காரர்கள் நான் எழுதாத வசனத்தையெல்லாம் மைக்கில் பேச நடிகர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் ஓட… கீழே இருந்த ஜனங்கள் அது நாடகத்தின் உண்மையான காட்சி என்று ஊரே அதிரும்படி கைதட்டிச் சிரிக்க, கழுதைக்குட்டி இந்தக் கலவரத்தில் இறங்கித் தெருவிற்குள் ஓட, அதைக்கண்ட தாய்க்கழுதை கூட்டத்திற்குள் பாய்ந்து பின்தொடரக் கழுதைக்காரர் பலபேரை மிதித்துக்கொண்டு பாய அரைமணிநேரம் ஒரே புழுதி மயம்.
எல்லாம் அடங்கிய பிறகு மீண்டும் நாடகத்தை நடத்த ஊரே சிரித்து மகிழ்ந்தது.
மறுநாள் எங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்கள்… ‘அடேயப்பா அந்தக் கழுதைக் குட்டிய எங்க புடிச்சீங்க?’
‘இத்தனை நாயை எப்படிப் பழக்கினீங்க?’
‘அந்தக் குட்டிக் கழுதை அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு’
‘அந்த நாய்ச்சண்டை மிகப் பிரமாதம். நாடகத்தில் உயிரைக் கொடுத்து நடித்தது நாங்கள், பெயர் வாங்கியதோ கழுதைக் குட்டியும், நாய்களும்தான். இருந்தாலும் அந்தக் குரங்கையும் மறக்கமுடியவில்லை. அதற்குப்பிறகு ஒரு சில நாடகங்கள் போட்டாலும் அந்த நாடகத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.
இப்படியான நாடக முயற்சி பலபேருடைய வாழ்க்கையில் இருந்திருக்கலாம். நாடகங்களும் போட்டிருக்கலாம். அதில் ஜெயித்தவர்கள் திரையுலகிலும் மின்னிக் கொண்டிருக்கலாம். மின்னாமலும் போயிருக்கலாம். ஆனால் நான் தொடர்ந்து ஓடி தரையிலிருந்து திரைக்கும் வந்து விட்டேன். வாழ்க்கையே ஒரு நாடகம்தானே!
ஆடுவதோ நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேடமென்னவோ
எனும் கண்ணதாசனின் பாடலை மனம் சிந்தித்துப் பார்க்கிறது.
இந்தத் தலைமுறையில் இவ்வளவு சிரமங்கள் இல்லை. தொலைக்காட்சி மேடைகள், இப்படி ஆர்வமுள்ள கலைஞர்களைத் திரைக்கு விரைந்து கூட்டி வருகிறது.
அனைவருக்கும் வாழ்த்துகள்!