எலி வேட்டை

          ‘யானைக்கொரு காலம் வந்தால்

               பூனைக் கொரு காலம் வரும்”

இது பழமொழி. புதுமொழி சொல்ல வேண்டுமென்றால்,

               புலிக்குப் பயந்த காலம் போய்

                எலிக்குப் பயந்த காலமாகி விட்டது’ எனக் கூறலாம்.

               அப்படி என்ன எலிகளுக்குப் பலம் வந்து விட்டது என நினைக்கிறீர்களா? எலியால் விளைந்த துயரையும், அதனால் விளைந்த பலனையும் உங்களுக்குக் கூறட்டுமா?

               அப்போது நாங்கள் கிராமத்தில் இருந்தோம். மிகப்பெரிய பழைய வீடு. பெரும்பாலும் பகலில்கூட, கீழே படுத்திருப்பவரை மிதித்துக் கொண்டு போகும்படியான வெளிச்சம் உள்ள வீடு.

               அருகிலுள்ள சாக்கடையின் நறுமணம் தென்றலோடு கலந்து நாசியில் வீசும். இரவு நேரங்களில் திடீர், திடீர் என்று மின்சாரம் காணாமல் போகும். மழை வந்தால் நனையாமல் இருக்க வெளியேதான் வரவேண்டும். இந்த வீட்டில் அதிகமாக இருந்தவை எலிகள் மற்றும் அவற்றின் வகைகள்.

               நீங்கள் நினைப்பது போல் எலி என்றால் எல்லாம் எலி ஆகிவிடுமா? சாதாரண எலி, சுண்டெலி, பெருச்சாளி, மூஞ்சுறு எனப் பல்வேறு பட்ட சாதிகள் இவற்றில் உள்ளன. இதில் பெருச்சாளிகள் சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்தவை. எல்லா எலிகளுக்கும் இக்குணம் இருந்தாலும் இவையே முதலாளி வர்க்கம். அடுத்தது மூஞ்சுறு, சுண்டெலி போன்றவை வர்க்கக் கோட்டிற்குக் கீழே வாழும் சாதி. எனக்குத் தெரிந்து சாதாரண எலிதான் நடுத்தர வர்க்கம். நிற்க. இனி, நாம் சில அபூர்வமான செய்திகளைக் காணப்போகிறோம்.

               எலிகளில் கூட ஹிப்பி எலிகள் உண்டு. ஒருநாள் இரவு 11மணிக்கு எங்கேயோ போய்விட்டு வீட்டிற்குள் பாட்டுப்பாடியபடி வந்தேன். காரணம், பயத்தைப் போக்கத்தான் பாட்டு.

               கதவை திறந்து லைட்டைப் போடுகிறேன் பாருங்கள். ஒரு சிறிய உருவம். அப்போதுதான் சாக்கடையில் ஸ்நானம் பண்ணிவிட்டுச் சுத்தபத்தமாக ஹாலில் நின்று கொண்டிருந்தது. அது ஒரு ஹிப்பி பெருச்சாளி.

               நீங்கள் நினைப்பீர்கள், உடனே நான் ஒரு கட்டையை எடுத்து அதை ஒரே அடியில் கொன்றேன் என்று. இங்குதான் நீங்கள் மிகப்பெரிய தவறு செய்கிறீர்;கள். வீட்டில் எல்லோரும் உறங்க, மிக நெருங்கிய தூரத்தில் நிராயுதபாணியாக நிற்கும் நானும், அதுவும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, அது மெதுவாக என்னை நோக்கி வர, ஒரு கணம் எனக்கு உயிரே போய்விட்டது. நான் புறமுதுகு காட்ட விருப்பமில்லாமல் அப்படியே பின்வாங்க, அது ‘போடா போ’ என்பது போல் பார்த்துவிட்டு வாசல்படி வழியே விசில் அடித்துக்கொண்டு சென்றது.

               நல்லவேளை என் முன்னோர்கள் செய்த புண்ணியம் என்னை அது கடிக்கவில்லை. கடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சொன்னால்தான் புரியும்.

               ஒருமுறை எங்கள் வீட்டுச் சமையல் அறைச் சுவரில் சுரண்டல் சத்தம் அதிகமானது. வீட்டில் உள்ளே எல்லோரும் சுவரையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சப்தம் அதிகமாக இருந்தது. பட்டாணிக் கடலையோடு கொஞ்சம் மணலைப் போட்டு மென்றால் எப்படிச் சத்தம் வருமோ அந்த மாதிரிச் சத்தம். இப்போது சுவரில் சிறிய ஓட்டை விழுந்தது. நான் உடனே அதை அடைக்க வேண்டும் என்று நினைத்து ஒரு காகிதத்தைச் சுருட்டி அதில் வைத்தேனோ இல்லையோ…

               ‘வெடுக்’ என்று ஒரு கடி

               எனக்குப் பெருவிரலில் இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. நான் போட்ட கத்தலில் அந்தத் தெருவே பயந்து, பதறி அடித்து ஓடி வந்தது. ஒரு கிழவிக்கு உடனே சாமி வந்து விட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு வைத்தியம் சொன்னார்கள். சிலர் எலி கடித்தால் பைத்தியம் பிடிக்கும் என்றார்கள். ஒருவர் சொன்னார் மூன்று வருடம் கழித்து வலிப்பு வரும் என்று. கடைசியில் ஒருவர் வந்து எனக்கு மந்திரித்தார். அது எப்படி தெரியுமா? ஒரு கொப்பு வேப்பிலையைக் கொண்டு வந்து, என் முன்னே நின்று நறநறவென்று பற்களைக் கடித்து, என்னைப் பார்த்துப் பயங்கரமாகச் சிரித்து, அந்த வேப்பிலையால் அடித்த அடி. போதும் எலிக்கடியே தேவலை.

               அடுத்தது பத்தியம். 3நாளைக்கு 3வேளை குளிக்கணும். மூணு மிளகு தின்று தண்ணீர் குடித்து கிழக்குப் பார்த்து துப்பவேண்டும். இப்படிப் பலப்பல….

               இதற்கிடையில் துக்கம் விசாரிக்கத் தினசரி விருந்தாட்கள் வந்தபடியே இருந்தார்கள். இதற்கு வெறிநாய் கடித்திருந்தால்கூடத் தேவலை.

               அதேநேரம் எலி கடித்துச் செத்தவர்கள், பக்கவாதம் வந்தவர்கள், தனியாகச் சிரித்து பாயைப் பிராண்டியவர்கள் ஆகிய உத்தம புருஷர்களின் வீர வரலாறுகள் எனக்கு நாள் தவறாமல் சொல்லப்பட்டன.

               ஒரு கிழவி நாள் தவறாமல் வந்து ‘இப்ப எப்படி இருக்கு, கண்ணு எரியுதா? கண்ணு கலங்குதா? என்று கேட்டபடியே இருக்கும். அந்தக் கிழத்தைப் பொறுத்தவரை எங்கே எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் போய்விடுமோ? என்ற கவலை நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது. போனவருஷம் கூட அந்தக் கிழவி என்னைக் கேட்ட கேள்வி ‘இப்ப எப்படி இருக்கு ஒன்னும் ஆகலியே’ என்பதுதான். நான் ‘இல்லை’, நன்றாக இருக்கிறேன், என்றதும் ஏமாற்றத்தில் அதன் முகம் தொங்கிப் போனது.

               ஆகவே பெரியோர்களே! அதற்குப் பிறகு எனக்கு எலி பற்றிய பாடம் வந்தால் கூட அதை நான் படிப்பதில்லை. அப்படி இருக்க ஒரு குண்டுப் பெருச்சாளியை ஒரு அடி தூரத்தில் பார்த்த என் கதியைச் சற்றே நினைவு கூர்வீர்.

               இனி எங்கள் வீட்டில் எலித்தொல்லையை ஒழிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டோம். அதில் அடுத்த வீட்டுக்காரார் சொன்ன யோசனை, எலிப் பா~hணம் வாங்கி அதை எலிக்குப் பிடித்த உணவில் வைத்துப் பல இடங்களில் வீட்டில் வைப்பது.

               அதன்படி நாங்கள் செய்யப் போக வந்தது விபரீதம். பல இடங்களில் எலி செத்து விழ அதைத் தெருக்கோழி ஒன்று தின்று விட்டு உண்ட மயக்கத்தாலோ வேறு எதனாலோ சாக அந்தக் கோழிக்காரி ஓடி வந்து ‘மொழிக்கு முதலாக வரும் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டையும் முதலாகக் கொண்ட கெட்ட வார்த்தைகளால் சுமார் 8 மணிநேர மில் தொழிலாளி போல நின்று எங்களை வைது தீர்த்தாள்.

               ஆனால் எங்களின் இந்த முயற்சியால் எலிகள் குறையவில்லை. பதிலாக எங்களுக்கும் அவைகளுக்கும் இடையே ஜென்மப் பகை மூண்டது.

               இந்நிலையில் இதுபற்றிப் பலரிடம் வினா நிரல் கொடுத்துப் பேட்டி கண்டபோது பலரும் கூறிய கருத்து ‘ஒரு பூனை வளருங்கள்’.

               இதற்காக நான் பூனைக்குட்டி தேடி வீடு வீடாகப் போனேன். அது அவ்வளவு சுலபமாகக் கிடைக்கவில்லை. பலவீடுகளில் பூனை கர்ப்பமாக இருப்பதாகவும், குட்டி போட்டதும் முதல் குட்டி தருகிறோம் என்றும் சத்திய வாக்களித்தார்கள். கடைசியில் ஒரு வீட்டில் ஒரு பூனைக்குட்டி கிடைத்தது. அதைப் பார்த்ததும் நான் திடுக்கிட்டேன். காரணம் அது ஒரு மூஞ்சுறுக்குட்டி அளவுதான்  இருந்தது.

                அதை ஒரு பையில் போட்டுத் தெரியாமல் கொண்டு போகுமாறு கொடுக்க, நான் தெருவில் எடுத்துவர, அதுகத்திய கத்தலில் பல சொறிநாய்கள் என்னை விரட்ட ஆரம்பித்தன. முடிவாக வீடு வந்து அடைந்தேன்.

               இதுவரை, ‘பூனை வளர்ப்பது எப்படி?’ என்று யாராவது புத்தகம் எழுதாதது எவ்வளவு பெரிய தவறு பாருங்கள். ஒன்றும் புரியவில்லை.அந்தப் பூனைக்குட்டிக்குப் பால் ஊற்றி வைத்தால் அது பேசாமலே இருந்து திடீரென்று அந்தக் கிண்ணத்தில் ஏறி நிற்கும். கத்துகிற கத்தல் கேட்கவே வேண்டாம். இதில் எனக்குள்ள பயம் இந்தப் பூனைக்குட்டியை எலிகள் தூக்கிப் போகாமல் இருக்க வேண்டுமே என்பதுதான்.

               பூனை வந்தபிறகு எலிகளின் அலட்சியம் மிக அதிகமாகி விட்டது. எங்களை அவை மதிப்பதே இல்லை. பகலில்கூட சில எலிகள் வந்து எதையோ தேடிக்கொண்டிருக்கும். எங்களுக்கு எவ்வளவோ கோபம் வந்தாலும் பொறுத்திருந்தோம்.

               தருமத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வும்

                தருமம் மறுபடியும் வெல்லும்…” எனக்

                கட்டுண்டோம், பொறுத்திருந்தோம்.

இதற்கிடையில் அவ்வப்போது எலிப்பொறிகள் மூலம் எலிபிடிக்க ஏற்பாடாயிற்று. ஒரு தடவை எலிப்பொறியில் விழுந்த எலியைக் கொல்லப் பயந்து தெருக்கோடி வரை தூக்கிச் சென்று திறந்து விட்டேன். அந்த எலி நன்றி விசுவாசம் மிக்க நாயைப்போல் பல வீடுகளைத் தாண்டி, நான் விரட்ட, விரட்ட எங்கள் வீட்டிற்குள் என்னைவிட வேகமாக நுழைந்து முதற்பரிசு வாங்கியது. நான் மூச்சிறைக்க வந்தபோது எங்கள் வீட்டுப்பூனை பாலுக்கு அழுது கொண்டிருந்தது.

               தினசரி பால் குடிப்பது, தூங்குவது, குண்டு விளையாடுவது என்றே அந்தப் பூனை விளையாட்டுப் பிள்ளையாக இருந்ததே தவிர, எலி பிடிப்பது எங்கள் வேலை என்பது போல இருந்து வந்தது.

               இதற்கிடையில் ஒருநாள் எலிப்பொறியில் விழுந்த எலியை நாங்கள் கொன்றே விடுவது என நினைத்து அதற்கான மரணத்திட்டமும் தீட்டினோம்.

               முடிவில் ஒரு பேரறிஞனின் யோசனைப்படி ‘ஒரு சாக்கை எடுக்க வேண்டியது. அதில் எலிப்பொறியைத் திறந்து அப்படியே போட வேண்டியது, சாக்கின் வாயை இறுக்கி அதை அப்படியே தரையில் துணி துவைப்பதுபோல அடிக்க வேண்டியது. எலி செத்தொழியும்.

               இதேமுறையில் சாக்கில் விழுந்த எலியை நானும் சாக்குடன் நடுத்தெருவில் வைத்த வீர ஆவேசமாக அடிக்கத் தொடங்கியபோது பலரும் கூடிவிட்டார்கள். ‘ஓங்கி அடி’ ‘விடாதே’ ‘திருப்பி அடி’ ‘விடாமல் அடி’ என்று நாலாபுறமும் வீர ஒலிகள் கேட்ட வண்ணம் இருக்க. நானும் சுமார் 20அடிகள் அடித்து ‘ஆவிசோர்ந்த துச்சாதனன் போல’ ஆனேன். பிறகு எலி செத்திருக்கும் என்று சாக்கின் வாயைத் திறந்து பார்த்தால்… ஆச்சரியம்… எலியே இல்லை. அடித்த அடியில் ஆவியாகிப் போய்விட்டதா? எலி சாக்கில் விழுந்ததைக் கண்ணால் பார்த்த சாட்சிகள் பலர் இருக்கிறார்கள். நான் உட்பட…! கடைசியில் மர்மம் விளங்கியது.

               சாக்கில் ஏற்கனவே ஒரு ஓட்டை இருந்திருக்கிறது. எலி சாக்கில் விழுந்ததும் அதன்வழியாக ஓடிவிட்டிருக்கிறது. நானும் மற்றவர்களும் அதைக் கவனிக்காமல் வெறும் சாக்கை இதுதான் ‘சாக்கென்று’ அடி அடியென்று அடித்திருக்கிறோம்.

               இதில் ஒருவர் என்னிடம் வந்து ‘இருந்தாலும் நீ வெறும் சாக்கை அந்த அடி அடித்திருக்க வேண்டாம்’ என ஆறுதல் சொன்னார். எனக்கு வந்த ஆத்திரத்தில் எங்கள் பூனையைத் தேடிச் சென்றேன். அது என் படுக்கையில் படுத்து போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தது.

               இனிச் சுருக்கமாகச் சொல்வதனால், எலியைப் பிடித்துப் பக்குவப்படுத்திப் பாலுடன் கலந்து கொடுத்தால் ஒழிய அது எலி பிடிக்கிற வம்சமாகத் தெரியவில்லை. சிலமாதங்கள் கழித்து அந்தப் பூனை வினோதமான வேலை ஒன்று செய்தது. எங்கேயோ எந்த ஜென்மத்திலேயோ செத்த ஒரு எலியைத் தூக்கி வந்து நடுவீட்டில் வைத்துத் தின்னத் தொடங்கியது. அது அநேகமாக மாரடைப்பால் செத்த எலியாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் போனால் பங்குக்குத்தான் வருகிறோம் என்று அரட்டி உறுமியது. இதுதான் அதற்கு முதல் எலி, அடுத்தடுத்து எலிகளைப் பிடித்து வந்து (செத்ததைத்தான்) தின்றதே தவிர உயிரோடு ஒரு எலியையும் பிடித்ததாக வரலாறே இல்லை.

               இந்த லட்சணத்தில் ஒரு நாள் ஒரு பெரும் பெருச்சாளி ‘ஏதோ’ அலுவல் காரணமாகப் பகலில் எங்கள் வீட்டிற்குள் வர, பூனை அதன் அருகில் யோசனையின்றிச் சென்றது.

               பூனையைவிட ஒரு பங்கு பருமனும் புஜபல பராக்கிரமமும் உடையதாக இருந்த அந்தப் பெருச்சாளி ஒரு சீறு சீறியது.

               அவ்வளவுதான் ‘செத்தோம் பிழைத்தோம்’ என்று பூனை ஓட, எங்கள் தெருவில் மிகப் பலசாலியான ஒருவரை நாங்கள் அழைக்க அவர் ஒரு விறகுக் கட்டையுடன் பெருச்சாளியை நெருங்க எல்லோரும் மூச்சுக்கூட விடாமல் அந்தக் காட்சியைக் கவனித்தோம்.

               ‘மெத்’ என்ற ஒரு அடி. அடித்த வேகத்தில் விறகுக்கட்டை மேலே வர பல அடிகளை வாங்கிய பெருச்சாளி சிரித்துக்கொண்டே முன்னேற அவர் பயந்து சில கண்ணாடிப் பொருள்களையும், பல சட்டி பானைகளையும் உடைத்து எறிய… முடிவு மிகச் சோகம். அவர் அதற்குப் பிறகு அகிம்சைத் தத்துவத்தை மேற்கொண்டார்.

               முடிவாகச் சில செய்திகள்.

               பூனை வளர்ந்து குட்டிபோடும் நிமித்தமாக காணாமல் போய்விட்டது.

               பழைய வீடு இடித்துக் கட்டியாகி விட்டது.

               இப்போதெல்லாம் அவ்வெலிகள் எப்போதாவது வந்து போகும் தூரத்து விருந்தாளிகளாகி விட்டன. இருந்தாலும் அந்த நாட்கள் அந்த நாட்கள் தான்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.