கிராமத்து இராத்திரிகள்

நான் சொல்லப்போவது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. எங்க அப்பாவுக்கு கிராமத்திற்கு மாற்றலாகி, அந்தப் பெரிய தெருவிற்கு அப்போதுதான் குடி வந்திருந்தோம்.
தெருப்பையன்கள் எல்லோரும் என்னை ஒரு வினோதப் பொருளாகப் பார்த்தார்கள். பக்கத்திலேயே பள்ளிக்கூடம். நான் முதன்முதலாக அப்பள்ளிக்கூடம் போனபோது மீசை தாடி, நீண்ட முடியோடு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். யாரோ சாமியார் என்று நினைத்தேன். அவர்தான் தலைமை ஆசிரியர். என்னைப் பார்த்ததும்….
“ஏண்டா நேத்து வர்லே? மண்டிக்கால் போடு” சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார்.
எனக்குப் பயத்தில் தொண்டை அடைத்தது. முழங்கால் போட்டேன்.
‘இவன் இன்னிக்குத்தான் சார் சேர்ந்திருக்கான்’ ஒருவன் கத்தினான்.
‘ஹும் சரி உட்காரு’ அதற்குள் வகுப்பில் வகுப்புக் கலவரம் ஆரம்பமாயிற்று ஒரு பையனைப் பல பேர் பிடித்து அடித்தார்கள். ஒருவன் காதை மற்றவன் ரேடியோத் திருகுவதைப்போல திருகினான்.
நான் ஆசிரியரைப் பார்த்தேன். இத்தனை கலவரத்திலும் அவர் மோன நிலை கலையாமல் இருந்தார். திடீரென்று ஒருவன் வாசலில்போய் மண்ணை அள்ளி வகுப்புக்குள் எறிந்தான். அது அவர் மேலும் பட்டது. எல்லோரும் பேயாகக் கத்தினார்கள். படாரென்று ஆசிரியர் எழுந்தார். பளீர் பளீர், தடால், சுளீர் என எல்லோரையும் அடித்தார். எனக்கு முதுகில் ஒரு அறை எங்கும் அமைதி நிலவியது. மணி அடித்தது. எல்லோரும் ஆசிரியரைத் தள்ளிக்கொண்டு வெளியே ஓடினார்கள்.
நான் வீட்டிற்கு வந்தேன். ஒருவாரம் ஆயிற்று. எனக்கு கிராமத்தில் எல்லாம் விளங்கி விட்டது. தெருப்பிள்ளைகளோடு ஓடி ரயில் பார்த்தேன். ‘நவ்வாப்’ பழம் பொறுக்கப்போய் நாய் விரட்ட ஓடி வந்தேன். எருமைமாட்டின் மீது ஏறி அது அப்படியே கண்மாய்க்கரை வழியே நடந்து தண்ணீரில் இறங்கும்போது அதோடு சேர்ந்து குளித்தேன். செக்கச் சிவப்பாய்க் கத்தாளப் பழம் சாப்பிட்டேன். எல்லாம் சரி, இராத்திரி ஆனால்தான் பயம் வந்தது. காரணம் பேய்…
நகரத்துப் பேய் போல் அவ்வளவு நாகரீகம், ஆச்சாரம் கிடையாது கிராமத்துப் பேய்களுக்கு,
நகரத்துப் பேய்களைச் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.
வெள்ளை வெளேரென்று சேலை உடுத்தித் தலையை விரித்துப்போட்டு வரும் பேய், பெரும்பாலும் பாட்டுப் பாடும் அவ்வளவுதான். ஆனால் கிராமத்துப் பேய்… சொன்னால் தான் உங்களுக்குப் புரியும்.
எங்கள் வீட்டு வாசலில் அந்தத் தெரு பெண்களெல்லாம் சேர்ந்து இரவில் வந்து உட்காருவார்கள். (அப்போது டி.வி, சன் டிவி, கேபிள் டிவி, மெட்ரோசேனல், ஸ்டார் டிவி போன்ற நவீன வம்பளப்பிகள், தீமைகள் கிடையாது)
நாங்கள் விளையாடிவிட்டு அங்கு வந்து உட்காருவோம். பெண்களின் மாநாடு அந்நேரம்தான் தொடங்கும். கதை ஆரம்பமாகும். பெரும்பாலும் பேய்க்கதை தான். (சிலநேரங்களில் மட்டும் ஓடிப்போனவள் கதை, அது ‘ஏ’ கதை என்பதால் சின்னப் பிள்ளைகளை விரட்டி விடுவார்கள். நாங்கள் ஒளிந்திருந்து கேட்போம்). நாண்டுக்கிட்டு செத்தவன் (தூக்குப் போட்டு), ரயில்ல அடிபட்டுச் செத்து, பேயாய் அலையும் வேலம்மா, அரளிக்காய் அரைத்துக் குடித்துச் செத்த அரசானி இவர்களின் வீர வரலாறுகள் விலாவாரியாகச் சொல்லப்படும். இதிலெல்லாம் கெட்டிக்காரி முனியம்மாதான். நாங்கள் அவளைப் “பேய்” முனியம்மா என்று கூப்பிடுவோம்.
அன்றைக்கு அமாவாசை. இந்தப் பேய்களுக்கு எப்படித்தான் நாள் நட்சத்திரம் எல்லாம் தெரியுமோ?
எங்கள் வீட்டு வாசலில் சபை கூடியது. தெரு விளக்குகள் அமாவாசையானதால் எரியவில்லை. சிலநேரம் பகலில் மட்டும் எரியும்.
‘சின்னப்பிள்ளைங்க ஓடிருங்க, பிள்ளையத் திங்கிற ராக்காட்சி பத்திச் சொல்லப் போறேன்’, முனியம்மா முன் அறிவிப்புச் செய்தாள்.
நாங்கள் ‘முடியாது முடியாது’ என்று கத்தினோம். காரணம் இருட்டுக்குள் வீட்டிற்குப் போகப் பயம். மற்ற பையன்களின் அம்மாக்கள் இன்னும் வராமல் அவர்களும் தனியே போக முடியாது.
‘யம்மா… ராத்திரி ரெண்டு மணி இருக்கும். இதேமாதிரி அமாவாசைதான். எனக்குத் தூக்கம் வல்ல’ எந்திரிச்சு பாக்குத் தேடினேன், சுண்ணாம்பு இல்ல, அப்ப ஒரு சத்தம் கேட்டுச்சு’ அவள் நிறுத்தினாள். அது அவள் வழக்கம்.
நாங்கள் மூச்சுக் காற்றைக் கூட விடாமல் நடுங்கியபடி உட்கார்ந்திருந்தோம்.
‘கதவைத் தொறக்கப் பயம், சன்னல் வழியாப் பாத்தா தலைய விரிச்சுப் போட்டு நடுரோட்டுல ஆடுறா… யாரு’
யாரும் பேசவில்லை. ‘இருளாயிதானே’
தவிடன் மகள் கேட்டாள்.
‘அவ இல்லடி. அவுக அக்கா சொக்கநாத புரத்தா’ அவள் சொல்லி முடித்து விட்டுத் தூ’ என்று எச்சி துப்பினாள்.
‘ஆனா அவ எப்படியும் இன்னிக்கு வருவான்னு நெனக்கிறேன்… ஏன்னா… இன்னிக்கு வெள்ளிக்கிழமை’. அப்போது ஒருநாய் சோகமாய் ஊளை இட்டது. சபை ஒரு வழியாக நிசப்தமாய்க் கலைந்தது. அன்றைக்கு எங்களுக்கு சிவராத்திரிதான்.
பேய்க்கதைக்கேட்ட அன்றைக்கு… இரவு மணி எத்தனை என்று தெரியவில்லை. தப்பைக் கதவை யாரோ தள்ளும் சப்தம் கேட்டது. எனக்குப் பயத்தில் அழுகை வந்தது. என் தாயார் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிட்டார்கள். ‘ஓ’ என்று பெரிய சத்தம். எல்லோரும் குழப்பமாக எழுந்து ஆளுக்கு ஒரு பக்கம் ஓடி, மிதித்து, அதற்குள் யாரோ கதவைத் திறக்க…
‘சனியங்களா?’ 10மணிக்குள் என்ன தூக்கம் என்று கத்தியபடி ஒரு உருவம் உள்ளே வர.
நாங்க ‘பேய்… இருளாயி….’ என்று உச்சஸ்தாயில் உளர எங்களுக்கு இருட்டிலேயே வசமாக அறை விழுந்தது. பிறகுதான் தெரிந்தது அது எங்கள் அப்பா என்று.
சிலநாட்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். அவரைப் பார்த்தாலே எங்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் தெரியவில்லை.
‘பிள்ளைங்களா… நல்லாப் படிக்கணும். பெரியவங்களை மதிக்கணும். நகத்தைக் கடிக்கக் கூடாது, கால் மேல கால் போட்டு காலாட்டக் கூடாது’, என்றபடி தினசரி எங்களைப் போட்டுப் படுத்தி வந்தார்.
‘முக்கியமா யாருக்கும் பயப்படக் கூடாது’ என்பது அவரது பொன்மொழி.
‘பாம்புக்கு’ என்றான் தம்பி.
‘அதைக் கையில புடிச்சு ஒரு சுத்து சுத்தி தரையில அடிச்சுக் கொல்லணும். நான் ஒரு தடவை பாம்பைக் கையில புடிச்சு கட்டிப் பொரண்டு சண்டை போட்டவன் தெரியுமா?’
சரி ‘பேய்க்கு’ – இது நான்
‘ஹா…ஹா…ஹா என்று பேய் மாதிரிச் சிரித்த அவர், ‘அப்பிடி ஒண்ணு உலகத்தில கிடையாது. எங்கிட்ட எந்தப் பேயாவது வரச் சொல்லுப் பாப்போம்’ என்று சவால் விட்டார்.
நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். இன்றைக்கு இவருக்குப் பேயைக் காட்டுவது என்று. 11மணிக்கு எல்லோரும் திண்ணையில் படுத்தோம்.
அவர் நடுவில். அந்தப் பக்கம் ரெண்டு பேர். இந்தப் பக்கம் நான். அடுத்து தம்பி. அவரைத் தவிர யாரும் தூங்கவில்லை.
குறட்டை சத்தம் கேட்டது. இப்போது நான் மெதுவாக எழுந்து அவர் கால் பக்கம் தலைவைத்துப் படுத்துப் போர்வையால் போர்த்திக்கொண்டேன். பிறகு மெதுவாக அவர் உள்ளங்காலைச் சுரண்ட ஆரம்பித்தேன்…
‘படா’ரென்று எழுந்தார். நான் போர்வைக்குள் போனேன், இருட்டில் நான்கு புறமும் பார்த்தார். பிறகு படுத்துக்கொண்டார்.
இப்போது மறுபடியும் கால் சுரண்டல். அவர் திடுக்கிட்டு எழுந்தார். பயத்தோடு வெளியே பார்த்தார். எங்களுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை.
அவர் எழுந்தபோது ஒருவன் அவர் போர்வையைப் பிடித்து இழுக்கத் துள்ளிக் குதித்து எழுந்தவர் தடாலென்று எங்களைத் தாண்டி உள்ளே ஓடினார். ஓடியவர்தான் திரும்ப வரவே இல்லை.
காலையில் நாங்கள் எழுந்தபோது அவர் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.
‘என்ன உடனே கிளம்பிட்டிங்க’ என்று அப்பா கேட்டபோது…
‘ஒண்ணுமில்ல’ கிராமத்தில வேலை இருக்கு அதோட… என்று சொல்லி வந்தவர் எங்களைப் பார்த்தார்.
‘ஏண்டா’ ராத்திரி ஏன் அப்பிடி பயந்து… உளறுனீங்க, கனாக் கண்டிங்களா? ஒரு அரட்டுப் போட்டேன் அப்பிடியே பயந்து தூங்கிட்டானுக’ என்று அப்பாவிடம் சொன்னார்.
நாங்கள் பதில் சொல்லும் முன் ‘வரட்டுமா’ எனப் போய்விட்டார். பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை. ஆனால் நடுராத்திரியில் இருட்டில் அவர் முழித்த முழியும், எழுந்து ஓடிய ஓட்டமும், காலையில் அவர் கிளம்பிய வேகமும், போகிறபோது எங்களை அரட்டிய விதமும் இன்றைக்கும் மறக்க முடியவில்லை. மறக்…க…முடியவில்லை.
சிலவருடங்கள் சென்றபின் எங்களுக்கு அந்தப் பேய்ப் பயம் கொஞ்சம் போயிருந்தது. அதைப் பற்றி தைரியமாகப் பேசினோம் வாதிட்டோம், ஆராய்ந்தோம். முடிவாகப் பேயைக் கட்டாயம் பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம்.
பேய் எங்கெல்லாம் இருக்கும் என ஆராய்ந்தோம். முருங்கை மரம், இடிந்த வீடு, பாழடைந்த கிணறு, இரயில்வேப் பாலம், சுடுகாடு இதெல்லாம் போய்ப் பார்ப்பது என முடிவெடுத்தோம். முடிவெடுத்தபோது இருந்த பலபேர் அடுத்த நாளில் இருந்து எங்களோடு பேசாமல் போனார்கள்.
ஒருநாள் இரவு வழக்கம்போல் வைகை ஆற்றிற்குச் சென்றோம். நிலவு வராத இரவு. வைகையைப் பல பகுதிகளாய்ப் பிரித்திருந்தார்கள் ஊர்க்காரர்கள்.
வைகையின் இறங்கு கரையில் இடுகாடு…அடுத்து மணல் பரப்பு… அடுத்து தண்ணீர்…. அடுத்து மறுகரையில் சுடுகாடு அதனைத் தாண்டி முழுமையும் தென்னந்தோப்பு.
நாங்கள் போய் மணலில் உட்கார்ந்தோம். மறுகரையில் ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. எங்கள் பேச்சு எங்கெல்லாமோ சுற்றி வந்து முடிவில் எரியும் பிணத்திடம் போய் ஒரு கொள்ளிக்குச்சியை எடுத்து வர வேண்டும் என்று முடிவாயிற்று. யார் போவது? 20ரூபாய் பந்தயம்…
‘சரி நான் போறேன்’… என்று நானே முடிவு செய்தேன். எல்லோரும் அதனை ஆரவாரமாக வரவேற்று கைதட்டி உற்சாகப் படுத்தினார்கள்.
‘ரெண்டுல ஒண்ணு பாரு… விடாதே… நட…ஓடு’ என்று உற்சாகமாக என்னை வழியனுப்ப நான் எழுந்தேன். நடந்து தண்ணீருக்குள் இறங்கினேன். பாதி தூரம் சென்று திரும்பிப் பார்த்தால்…. நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் ஒரு பயலையும் காணோம். எல்லோரும் ஓடிவிட்டார்கள். எனக்குத் திடீரென்று பயம் வந்தது. திரும்பி விடலாமா? யாராவது ஒளிந்திருந்துப் பார்த்தால்…சரி போவோம்.
தண்ணீரைத் தாண்டி சுடுகாட்டை நெருங்கிவிட்டேன். நெருப்பு எரிவது தெரிந்தது. எங்கும் நிசப்தம். கரை ஏறினேன். எரியும் நெருப்புக்கு அருகே ஒரு உருவம். நான் பயத்தால் செத்தே போனேன். இருந்தாலும் ஒரு அசட்டுத் தைரியம். தொடர்ந்து போனேன். அந்த உருவம் திடீரென்று பாட ஆரம்பித்தது. ஓடலாமா? என்று நினைத்த நான் நின்றேன். அந்தக் குரல் எனக்குப் பழக்கமான குரல்தான். அது ஒரு பைத்தியம்.
‘ஏய் இங்கே என்ன செய்யிற?’ என்று அதனை பயத்தோடு அதட்டினேன்.
‘வாடா மகனே!… நான் நேத்து செத்துப் போனதால இங்க வந்துட்டேன்’ என்றது அந்தப் பைத்தியம். அதோடு ‘ஆமா…நீயும் செத்திட்டியா’ என்று அன்பாகக் கேட்டது. எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. பிறகு அந்த நெருப்பில் ஒரு எரியும் குச்சியை எடுத்துக்கொண்டு ‘ஒலிம்பிக் ஜோதி’ போல அதை ஏந்திக்கொண்டு தோப்பிற்குள் ஓடிப்போனது.
நான் மெதுவாகத் திரும்பி எதிர்கரைக்கு வந்தால், ஒரு இருபது பேர் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். நான் பயத்தால் உறைந்தேன்.
‘ஆமா’ அந்தக் கொள்ளியோடு தோப்புக்குள்ள ஓடுனது யாரு?
‘நீ பேயப் பாத்தியா?’
‘அவனுக்குக் கால் தரையில இருக்காண்ணு பாருடா’
எனப் பல குரல்கள். நான் ஒருவரோடும் பேசவில்லை, பேசாமல் வந்தேன். அதிலிருந்து நண்பர்கள் கூட்டத்தில் எனக்குத் தனி மரியாதை. அதைப் ‘பேய் மரியாதை’ என்று கூடச் சொல்லலாம்.
இப்போதும் குழந்தைகள் பேய்க்கதைகளை டி.வி.யில் பார்த்துப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு, மின்சார வெளிச்சத்தில் பேசுகிறார்கள். இரவு 8மணிக்கே உறங்கப் போகிறார்கள். அவர்கள் கனவில் பேய் வந்தால்தான் உண்டு.
இனி காஞ்சனா பேய்கள் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம். அதுவரை பேய் வருகிறேன்… சாரி போய் வருகிறேன்…