கிராமப் பேருந்து

               சான்றோர்களே! நீங்கள் அனைவரும் டவுன் பஸ்ஸைப் பார்த்து, அதில் பிரயாணம் செய்து சுகப்பட்டிருப்பீர்கள். ஆதலால் அதுபற்றி, அதன் உருவம் பற்றி அதிகமாக இங்கு பேசப்படவில்லை. முதன்முதலில் இந்தியாவில் இரயிலைப் பார்த்தவர்கள் பலர் இப்போது இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். பஸ்ஸைக் கண்டவர்கள் இருக்கிறார்கள். நான் எங்கள் ஊருக்கு முதன்முதலில் வந்த டவுன் பஸ்ஸையும், பிறகு அது கிராமிய பஸ் ஆனதையும் சொல்லப்போகிறேன். அதுதவிர டவுன் பஸ்ஸில் செய்யும் பிரயாணம் நாளுக்கு நாள் வசதிக் குறைவில் அடைந்து வரும் முன்னேற்றத்தையும் நாம் காணப்போகிறோம்.

               முதலில் 1.முதல் டவுன் பஸ் அனுபவம், 2. டவுன் பஸ்களில் ஏறும் முறைகள், 3. உட்கார இடம் பிடிக்கும் முறை, 4. பஸ்ஸில் தூக்கமும், அதன் பயனும், 5. பல முக்கியத் தலங்களில் டவுன் பஸ்ஸின் அற்புதங்கள் ஆகியவை பற்றி இங்கு பார்த்துக்கொள்ளலாம். பயணச்சீட்டு (டிக்கெட்) வாங்காமல் பிரயாணம் செய்வது பற்றிய செய்திகள் இக்கட்டுரையின் இரண்டாம் பாகமாக வெளிவரும்.

முதல் டவுன் பஸ் அனுபவம்:-

               ஒருதடவை மதுரைக்கு எதற்கோ வந்தபோது அன்றைக்குத்தான் எங்ள் ஊருக்கு முதல் டவுன் பஸ் வரப்போவதாகச் சொல்ல நாங்களும் அதில் ஏறிப்போக ஆனந்தமாக நின்றோம். எல்லோரும் அதுபற்றிப் பேசினார்கள். அது சக்கரத்தில் ஓடப்போவதாகவும், ஒரு டிரைவரே போதுமென்றும், குறைந்த கட்டணம் என்றும் பேசிக்கொண்டு எங்கள் ஊரில் பாதிப்பேர் அங்கே இருந்தார்கள்.

               திடீரென்று பெரும் ஆரவாரம். ஒரு பஸ் வந்தது. அது நான் நினைத்ததுபோல் இல்லை. மிகச் சாதாரணமாகத் திருவிழாப் பிச்சைக்காரனைப்போல பல இடங்களில் ‘அங்கஹீனமாக’ இருந்தது. S.R.W. என்று அதற்குப் பெயர். சீனிவாசா ரோடுவேஸ்’ என்ற பாடபேதமும் இருந்தது. ஒருபக்க வாசல், எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு கிழக் கண்டக்டர், வாங்க வாங்க 50பைசா தான். அந்த பஸ்ல 60பைசா, 10பைசா இருந்தா டீ குடிக்கலாம் (ஐயோ, அது அந்தக் காலம்) உடனே எல்லோரும் பாய்ந்தார்கள். கண்டக்டரைக் காணவில்லை. பாய்ந்து, ஏறி, மிதித்து, மிதிபட்டு, கீழே விழுந்து எப்படியோ எல்லோரும் ஏறிவிட்டோம். டிரைவரைக் காணோம். பிறகு அவர் தரையில் இருந்து ஒரு ஓட்டை வழியாக மேலே வந்தார்.

               சுற்றிப் பார்த்துவிட்டு, ‘கட்டை எடுப்பா, கட்டை எடுப்பா’, என்றார். சிலர் சட்டையைக் கழற்றினார்கள். ‘கீழே கட்டை எடுப்பா’ யாருக்கும் புரியவில்லை. அந்தக் கிழக் கண்டக்டர் எப்படியோ இறங்கிப் போய் நான்கு டயரையும் சுற்றிப் போட்டிருந்த பல மரக்கட்டைகளை எடுத்து வந்து வண்டிக்குள் போட்டார். வண்டி கிளம்பியவுடன் ‘சல்’ என்று ஒரு தும்மல் போட்டது.

               ‘நேத்துக் கடுமையான மழையில் நனைஞ்சது, அதான்’ என்றார் டிரைவர் பாசத்தோடு. பிறகு கிடு கிடு என்று ஆட்டம் ‘பூமி அதிர்ச்சி உண்டாச்சு’ என்பது போல, எல்லோரும் கையில் அகப்பட்டதைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். டிரைவர்கூட ஸ்டியரிங்கைப் பிடித்த்திருந்ததால் ஆடவில்லை. பஸ் பல இடங்களில் குதித்தும், கும்மாளமிட்டும், உறுமியும், தள்ளாடியும், சிலஇடங்களில் நாங்கள் கீழே இறங்கித் தள்ளியும், கிறு கிறு என்று சுற்றியும் ஊர் வந்து சேர்ந்தது. மொத்தத்தில் நாங்கள் பிரயாணம் செய்ததைக் காட்டிலும் தள்ளிக்கொண்டு வந்ததே அதிக தூரம் இருக்கும். கண்டக்டரும், டிரைவரும் மட்டும் இறங்காமல் வந்தார்கள். அவர்களுக்குத் ‘தள்ளாத’ வயது என்று காரணம் சொன்னார்கள். இப்படியாக ஊர் வந்து சேர்ந்து நாங்கள் பெருமையோடு வீடு போய்ச் சேர்ந்தோம்.

               அடுத்த நாள் முதல் ‘டவுன் பஸ்ஸில கட்டணம் குறைவு’ எனும் செய்தியை மட்டும் பரப்பினோம். இப்போது எல்லாமே ‘பாண்டியன்’ ராஜ்யம்தான். S.R.W. இப்போது எங்கேயோ தெரியவில்லை. இருந்தாலும் நாங்களே எங்கள் ஊருக்கு வந்த முதல் டவுன் பஸ் பிரயாணிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறோம்.

டவுன் பஸ்ஸில் ஏறும் முறைகள்:-

               ஒரு மணி நேரத்திற்கு ஒரு டவுன் பஸ் மிக மோசமான பஸ். ஆனால் ஏறும் முறை… அதில் தான் சாகஸமே இருக்கிறது. ஒரு முகூர்த்த நாள் ரெண்டு நாள் – ரெண்டு பஸ் வரவேயில்லை. கூட்டம் பெருகி நின்றது. சிலர் நற நறவென்று பற்களைக் கடித்தபடி நின்றார்கள். பல் இல்லாத பெரிசுகள் யாரையோ திட்டிக்கொண்டு போனார்கள்.

               நானும் திகைத்து நின்றபோது பஸ் வந்தது. சுமார் இருநூறு பேர் ‘பசிகொண்ட வேங்கை போல’ அதன்மீது பாய்ந்தார்கள். ‘ஏய்…ஆ…ஊ…’ என்ற சத்தம். யாரும் உள்ளே ஏறவில்லை. யாரும் இறங்கவும் முடியவில்லை. கீழே இறங்கியவர்கள் ‘மீண்டும் வருக’ என்பதற்கேற்ப உள்ளே தள்ளப்பட்டார்கள். ஏறியவர்கள் அங்கிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள்.

               ஒருவன் கடுமுயற்சி செய்து ‘உடுக்கை இழந்தவனாக’ உள்ளே போனான். அவனை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. பிறகு அவன் திடீரென்று மான உணர்வு வந்தவனாக வீறுகொண்டு தன் வேட்டியைத் தானே துச்சாதனனைப் போல சுலபமாக உள்ளே போனார்கள். ஒருவர் ஒரு செருப்பைக் கையிலெடுத்துப் பல பேர் தலையிலும் தலா இரண்டு அடி அடித்துப் பின் மற்றொரு செருப்பைத் தேடக்குனிந்தார். அவரைப் பாலமாக்கிச் சிலபேர் ஏறி நடந்து போனார்கள். நான் யார், எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. ‘முன்னே கடிவாளம் மூன்றுபேர்  தொட்டிழுக்குப் பின்னே இருந்திரண்டு பேர் தள்ள ‘தெனாலி ராமன் குதிரையைப் போல நான் தூக்கிச் செல்லப்பட்டேன். உள்ளே பஸ்ஸில் எனக்குக் கால் பரவவில்லை. ஆனந்தத்தால் அல்ல, யாரோ புண்ணியவான்கள் என்னைத் தூக்கிக்கொண்டு இருந்தார்கள். எவ்வளவு கெஞ்சியும் கீழே இறக்கிவிடவில்லை. இன்னும் பலபேர் உள்ளே வந்தார்கள். வந்துகொண்டே இருந்தார்கள். பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. இந்தப் பஸ் ஏறுவதில் ‘முயற்சி உடையவர்தான் இகழ்ச்சியோடு அடைவர்’ என்று நாம் ஒன்றும் செய்யாமல் கூட்டத்தோடு சார்ந்திருந்தாலே போதும் தூக்கிச் செல்லப்படுவோம் அல்லது உள்ளே தூக்கி எறியப்படுவோம். இதைத் தவிர பாய்ந்து ஏறுதல், இடித்து ஏறுதல், கிள்ளி ஏறுதல், யாரையும் ஏறிவிடாமல் தடுத்தல், பிடித்து இழுத்தல், பூட்ஸ் காலால் எப்படியும் சிலபேரையாவது மிதித்தல் எனப் பலவழிகளில் பஸ்ஸில் ஏறலாம். குறிப்பாக வேட்டி கட்டிப் பஸ் ஏறுவது சாலச் சிறந்தது அன்று.

இடம் பிடிக்கும் முறை:-

               எம்.எல்.ஏ. சீட் வாங்குவது, மெடிக்கல் சீட் கிடைப்பது, என்ஜினியரிங் கல்லூரியில் இடம் பிடிப்பது இதெல்லாம் சும்மா, மிகச் சாதாரணம். டவுன் பஸ்ஸில் ஏறியவுடன் இடம் கிடைக்க வேண்டும், அதுவே ஊழ்வினையின் நற்பயன்.

               ஒரு தடவை எல்லோரும் இடம் போடுகிறார்களே என்று நானும் ஒரு புத்தகத்தை வெளியே இருந்து உள்ளே போட்டேன். யாரோ ஒருவன் எனக்கு முன்னாலேயே அதை எடுத்துக்கொண்டு போக, நான் இடமும் இல்லாமல் புத்தகமும் இல்லாமல் இருந்ததுண்டு. ஆகவே இடம்பிடிப்பது அவரவரின் விதிப்படியும், சமயோஜிதப்படியும் நடப்பதாகும். சிலசமயம் கண்ணுக்கெட்டிய அதிர்ஷ்டம் கைக்கு எட்டாது. ஓடும் பஸ்ஸில் ஒருவர் வேகமாக எழுந்தார். அந்த இடத்திற்கு நால்வர் பாய்ந்தோம். அவர் எச்சில் துப்பிவிட்டு அதே இடத்தில் அமர்ந்தார். இதுபோலும் சில நேரம் நிகழ்வதுண்டு.

தூக்கமும் அதன் பயனும்:-

               இப்படிப்பட்ட கூட்டமான பஸ்களில் கூடச் சிலர் தூங்கிக்கொண்டு வருவார்கள். (இடம் பிடிப்பதே அதற்குத்தான்) தொங்கிக்கொண்டும் தூங்கிக்கொண்டும் வருபவர்கள் உண்டு. சிலர் நம் தோள்மீது உரிமையாகச் சாய்ந்து அவர்கள் தலையில் உள்ள பயங்கரமான வேப்பெண்ணெய் நம் கன்னத்தில் படுமாறும், தலையில் மோதிக்கொண்டும் கொஞ்சியபடி உறங்குவார்கள். சிலர் நம் தோள்மீது அன்பாக எச்சில் வடிப்பதும் உண்டு. அது வெற்றிலைச் சிவப்பாகவும் நாம் வெள்ளைச் சட்டைகளாகவும் தான் பெரும்பாலும் இருப்போம். சிலர் கனவில் ஏதாவது சாப்பிடவும் செய்வார்கள். சட்டைக் காலரைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பல முக்கியத்தலங்களில் டவுன் பஸ்ஸில் அற்புத நிலை:-

               டவுன் பஸ்கள், கிராமியங்களாக மாறும் இடமும் அவற்றில் பயணம் செய்ய விரும்பும் அறிஞர்கள் உடனே கீழ்க்கண்ட இடங்களுக்கு விரையவும்

               உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டு, செக்கானூரணி, பல்கலைக்கழக பஸ் கிளம்புமிடம்,

இதோ ஒரு பஸ் வருகிறது எல்லோரும் எல்லாப் பக்கமும் ஏறுவார்கள். சன்னல் வழி, டிரைவர் சீட் வழி, கண்ணாடி வழி, எத்தனையோ வழி, அடுத்து அவர்கள் கூடை, விளக்குமாறு, குழந்தை, பலகாரப் பொட்டலம், பருத்தி மூட்டை, சிலநேரங்களில் ஆட்டுக்குட்டி, கோழி இவைகளோடு ஏறுவார்கள். நான் பார்த்த செய்தி ஒன்று. ஒரு பெண் இரண்டு ஐஸ் வாங்கினாள். பஸ் வரவே ஒரு துணிப்பையில் போட்டாள். பஸ் ஏறினாள். பேசாமல் உட்கார்ந்தாள். பிறகுதான் தெரிந்தது அவள் ஊருக்கு ஐஸ் வாங்கிப் போகிறாள் என்று. ஒருவன் ஆட்டுக்குட்டி குழை கொடுத்தான். அது தின்றுவிட்டு அங்கேயே எல்லாமும் செய்தது. கண்டக்டர் அன்பாக அதனைத் தடவிக் கொடுத்துக்கொண்டு டிக்கெட் கொடுத்தபடி போனார். சிலநேரங்களில் சிலர் குடித்துவிட்டு டிரைவர் சீட்டை விட்டு இறங்காமல் அடம் பிடிப்பார்கள். டிரைவர் அவர்களை ஒரு கையாலும் ஸ்டேரிங்கை மறுகையாலும் தாய்போல அணைத்து ஓட்டுவார்.

               இப்படி அனேகம்… அன்றாட வாழ்வில் நடக்கும் வினோதங்களில் நாம் போய் வருவதை ஆச்சரியமான ஒன்றுதான். நான் சொன்னது ஆயிரத்தில் ஒரு பகுதி. விரிப்பின் வேதாந்தமாகக் கொள்ளலாம்.

               இவையெல்லாம் நாற்பது வருசங்களுக்கு முன்பு. இப்போது டவுன் பஸ்களே சொகுசுப் பேருந்துகளாக மாறிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.