குடி… செயல்… வகைகள்…

இதென்ன?… திருக்குறளின் ஒரு அதிகாரம் போல இருக்கிறதே என்று பயப்பட வேண்டாம்.
கிராமங்களைப் பொறுத்தவரையில் ‘குடிகாரர்கள்’ இருக்கிறார்களே அவர்கள் தனி அந்தஸ்து பெற்ற ‘குடிமக்கள்’. அவர்களின் செயல்கள், அற்புதமான தத்துவக் கருத்துக்கள், பிரமாதமான ஆங்கிலம் இவைகளை எல்லாம் நேரில் பார்த்தவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும்.
இப்போது அப்படிப் புகழ்பெற்ற குடிகாரர்களில்… ஒருவரை அவரின் செயல்களைப் பார்த்தே தீருவது நல்லது.
குடிகாரர்களில் பலர் கெட்டவர்களாக இருக்கலாம். சிலர் கோமாளிகளாகவும் காட்சியளிப்பார்கள். ஆனால் பொதுவாக, ஒன்று அதிகம் பேசுவார்கள், அல்லது ஒன்றும் பேசாமல் கோபமாக அலைவார்கள்.
நான் சிறுபையனாக இருந்தபோது எங்கள் தெருவில் ஒருவர் இருந்தார். அந்தத் தெருவில் சிறந்த ‘குடிமகன்’ அவரே.
அப்போதெல்லாம் ஊர் ஓரத் தோப்பில் கள் இறக்கித் தெரியாமல் விற்பார்கள். கள்ளுக்கடை, சாராயக்கடை திறக்கப்படவில்லை. ஒருநாள் ஆற்றங்கரைத் தோப்பில் நாங்கள் விளையாடப்போனபோது அந்தக் காட்சியைப் பார்த்தோம்;.
கலைந்த தலை, சிவந்த கண்கள், ஏற்ற இறக்கமான வேட்டி, ஒரு காலில் செருப்பு நடுரோட்டில் பிள்ளையார் கோவிலுக்கு எதிரில் ‘நடராசர் போஸில்’ நின்றிருந்தார் ‘அந்தக் குடிமகன்’. இரண்டு பக்கமும் நின்றிருந்த லாரிகள், வண்டிகள், ஆட்கள், யாரும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஒருவர் மட்டும் தைரியமாக ‘மாரியப்பா வழி விட்டு நில்லு பஸ் போகணும் பாரு’ என்று பணிவாகக் கேட்டார்.
அதற்கு மாரியப்ப நடராசர் ‘மோகனப் புன்னகை’ புரிந்து ‘மகனே! உனக்கு என்ன வேண்டும்’ என்று அன்பொழுகக் கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒரு பையன் ‘உன் வேட்டி வேண்டும்’ என்று கத்தினான்.
‘அப்படியே ஆகட்டும் இந்தா எடுத்துக் கொள் மகனே!’ என்று சொல்லி மகிழ்வோடு ஆடையைக் கழற்றி கூட்டத்தில் வீசி எறிய, கூட்டம் பயந்து ஓட, அவர் எந்தக் கவலையும் படாமல் பிள்ளையார் அருகில் போனார்.
‘கணேசா! ஏய் கணேசா! நீயும் நானும் ஒண்ணு, உனக்கும் கல்யாணம் ஆகல எனக்கும் ரெண்டு கல்யாணம் ஆச்சு -, நீயும் கள்ளுக்கடை எதித்தாப்பில இருக்க, நானும் இருக்கேன் நீயும் கல்லு, நானும் கள்ளு, எனப் பேச ஆரம்பித்தார். போன கூட்டம் ஒளிந்திருந்து பார்க்க, எறிந்த வேட்டியை யாரோ அவர் மீது எறிய
‘தேங்கிஸ்…. நாட் குட் பை சோ…’
கம்மிங்… ரோடு
என்று ஆங்கிலம் பேசி நடந்தார்.
நான் அவரை முதலில் பார்த்தது அப்போதுதான். ஒருவாரம் கழிந்தது. நல்ல நிலா வெளிச்சம். இரவு 10மணி இருக்கும். குழாயடியில் பலர் சண்டை போட்டுத் தண்ணீர் பிடித்தபடி இருந்தார்கள். நாங்கள் சிலபேர் ஒரு திண்ணையில் உட்கார்ந்திருந்தோம்.
‘சைலன்ஸ் – டப்பா’
என்று ஒரு சத்தம். மாரியப்பனார் குழாயடிக்கு வந்தார். பெண்களில் பலர் பயந்து ஓடினார்கள்.
‘தாய்மார்களே! உங்களுக்கு நைட் வணக்கம்’ குடிக்கத் தண்ணிவேணும் தாய்மார்களே. குடுங்க’
‘மாரியப்பா பேசாமப் போ தண்ணியும் இல்ல ஒண்ணுமில்ல’ ஒரு கிழவி சத்தம் போட்டாள்.
நோ…நோ…நோ…தண்ணிக் குழாய்…. ‘குழாய்த் தண்ணி, ஏய் கிழவி நீ இன்னும் சாகலையா? ரைட்! பாப்பா ஒரு குடம் தண்ணிகுடு’
‘இல்ல எங்கம்மா…வையும்’
“நல்லது பாப்பா உங்க அம்மாவோட அம்மா எனக்கும் அப்பத்தா ஆனா நீ எனக்கு சித்தப்பா மக… நீயே எனக்குத் தண்ணீ இல்லையின்னா யார் தருவா? என்று கேட்டபடி பெண்கள் கூட்டத்தில் நுழைய அவர்கள் பானையைக் தூக்கிக்கொண்டு ஓட அந்தக் கிழவி மண்பானையால் மாரியப்பன் மண்டையில் அடிக்க அது சிதற (பானைதான்) அவர் மேலும் சில பானைகள் மேல் விழுந்து அத்தனையும் உடைக்க… மறுநாள் பஞ்சாயத்துக்கூடி மாரியப்பனுக்கு 50ரூபாய் அபராதம் போட்டார்கள்.
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, இரவுநேரத்தில் வீட்டுவாசலில் என் தந்தையார் சேர் போட்டு அமர்;ந்திருக்க, நான் நின்றபடி பாடங்களை அவரிடம் படித்துக்காட்டுவேன். சிலசமயம் அவர் எனக்கு அறிவுரையும் அடியும் கொடுப்பார். ஒருநாள் புறநானூற்றிலே சோழமன்னனுடைய புகழைக்குறித்து என் தந்தையார் சொல்லிக்கொண்டு இருந்தார். நானும் ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன்.
என் தந்தையார் சொன்னார், ‘புலிபோல வாழவேண்டும், எலிபோல வாழக்கூடாது. புலி பசியோடு இருந்தாலும் தான் வேட்டையாடிய உணவு இடப்பக்கத்தில் விழுந்தால் உண்ணாமல் போகும் ஆனால் எலிகளோ உழவனின் உழைப்பாகிய நெற்கதிர்களைத் திருடிக்கொண்டு போகும். எனவே மனிதர்களே! எலிபோன்றவரை நண்பராக்கிக் கொள்ளாதீர்கள், புலிபோன்ற குணத்தோடு வாழுங்கள்’ என்று அவர் சொல்லிமுடிக்க,
சபாஷ்! என்றொரு குரல் கேட்டது.
நம் மாரியப்பனார்தான். தோள்துண்டை பவ்வியமாக வாயில் வைத்துப் பொத்திக்கொண்டபடி, வணக்கம் வாத்தியாரைய்யா, ‘எலி, புலி, கிளி. ரொம்ப அருமை. தம்பி (என்னைப் பார்த்து) நீ படி, அல்லது எலி பிடி என்று சொல்ல, என் தந்தையார் கோபத்தோடு, ‘மாரியப்பா போய்ட்டு வா’ என்று அதட்ட,
அப்படியே ஆகட்டும் அரசே! என்று சொன்ன மாரியப்பன், அன்றிரவு பொற்கைப் பாண்டியன்போல, அந்தத் தெருவில் இருந்த எல்லோர் வீட்டுக் கதவையும் தட்டி, புலிபோல வாழ், எலிபோல வாழாதே!’ என்று ஊரையே கலவரப்படுத்திவிட்டார் மாரியப்பன்.
அடுத்த சந்திப்பு மாரியப்பனோடு எனக்கு நிகழ்ந்தது ஒரு சாவு வீட்டில், ஊர்ப்பெரியவர் வீட்டில் வயதான கிழவி (99 சாகுறவயசா இது என்று ஒரு 97வயது கிழவி அழுதுகொண்டிருந்தது) ஒன்று இறந்துபோனபோது எல்லோரும் சோகமாக இருப்பதுபோல இருந்தார்கள். வாடிப்பட்டிக் கொட்டுக்காரர்கள் படுபோடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிலர் வெற்றிலையை கிலோக் கணக்கில் போட்டுத் துப்பி எங்கும் சிவப்பு வண்ணக் கோலங்கள் போட்டபடி இருந்தார்கள். கொட்டுக்காரர்களோடு பெண்வேடம் போட்ட ஒருவன் துள்ளித் துள்ளி ஓடி கூட்டத்தை மகிழ்வித்தான்.
திடீரென்று ஒரே விசில் சப்தம். மாரியப்பனார் தெரு முனையில் தோன்றி ஸ்லோமோசனில் ஆடியபடி வந்தார். அவரோடு ஒரே ‘கிளாஸ் தோழர்களும் ஆடி வந்தார்கள். கூட்டம் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது.
மாரியப்பர், சோகமாக இருந்த ஒருவருக்கு ஆறுதல் சொன்னார். ‘மாப்பிள கவலப்படாதே பிறந்தவன் சாகணும், செத்தவன் பிறக்கணும், அதுக்குள்ள கவலைய மறக்கணும். அதுக்குக் குடிக்கணும். இந்தா…குடி என்று ஒரு பாட்டில் பரிசளித்தார்.
பிறகு நாட்டியப் போட்டி ஆரம்பமானது… கொட்டுக்காரர்களோடு வந்த பெண்வேடதாரிக்கும், மாரியப்பனுக்கும் கடும்போட்டி.
இரண்டுபேரும் சுழன்று சுழன்று ஆடி, கூட்டத்தை மயக்க, பெரும்பாலும் எல்லோரும் ஆடத் தொடங்க, அன்றைக்கு ஆடாத ஒரே ஆள்… செத்துப்போன அப்பத்தாக் கிழவிதான். மாரியப்பனார் மயானம் வரை ஆடிக்கொண்டே போனார்.
சிலநாட்களில் பள்ளிக்கூடத்திற்கு வந்து ‘வாத்தியார்களுக்குப் பாடமும் சொல்லிக் கொடுப்பார். அன்றைக்குப் பள்ளியே மகிழ்ச்சியாய் இருக்கும்.
திடீரென அரசாங்கம் மதுவிலக்கை எடுத்து விட்டு கள்ளுக்கடைகளைத் திறந்தது. ஊருக்குள் புதிய சாராயக்கடைகள் ரெண்டு வந்துவிட்டன.
அன்றைக்குக் காலை நாங்கள் தெருவில் பார்த்த காட்சி அற்புதக் காட்சி… கதர்வேட்டி, கதர்ச்சட்டை, நெற்றியில் விபூதி, நடுவில் குங்குமம். ஒழுங்காகச் சீவப்பட்ட தலை. நம் மாரியப்பனார்தான். ஊரே அசந்து பார்த்தது.
‘என்ன… யாரு… மாரியப்பனா?’ கிட்டாவையர் ஆச்சரியத்தோடு கேட்டார்.
‘ஆமா சாமி…. இனி என்ன சாமி நமக்கு மரியாதை இருக்கப்போகுது. கண்;ட கண்ட நாயெல்லாம் குடிச்சுட்டு உளறப்போகுது. நம்ம தகுதி என்ன? அந்தஸ்து என்ன? நாம தனிக்காட்டு ராசாவா இருக்கணும் சாமி. ஒரு பிள்ளையார் கோயில் கட்டப் போறேன் பணங்குடுங்க’ எனக் கேட்டபடி சென்றார் மாரியப்பனார். பிறகு அவரைக் குடிகாரர் என்று அந்தப் பிள்ளையார் கூடச் சொன்னதில்லை. அவர்தான், தான் கட்டிய கோவிலுக்குப் பூசாரி வேறு.
இன்றைக்கும் எங்கள் பழைய வீடு இருக்கும், அந்தத் தெருவுக்குள் போகும்போது மாரியப்பனாரின் 65திருவிளையாடல்களும் என் ஞாபகத்தில் வந்துபோகும். அதெல்லாம் ஒரு காலம்.