வீரத்திற்கும்… ஞானத்திற்குமான நாள்… (மாட்டுப்பொங்கல்… திருவள்ளுவர் தினம்)

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் நாம் இந்த நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றோம். முதலில் மாடுகளுக்கு நன்றி செலுத்தவேண்டிய அவசியம் என்னவென்றால் மனிதர்களோடு குடும்பத்தில் ஒரு நபராக இருப்பது கிராமங்களில் இன்றைக்கும் மாடுகள்தான்.
இந்த மாடுகள், காளைமாடுகளாக இருந்தால், அவை நிலம் உழுக உழவுக்கும், நீர் இறைக்க சாலுக்கும், பயணம் செய்ய வண்டிகளை இழுக்கவும் எனப் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதஇனக்குழு வேளாண்மைச் சமுதாயத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து உடனிருப்பவை.
இதேபோல பசுக்கள், வீட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படை. நாம் பசுக்களுக்கு என்ன கொடுக்கிறோம்? பதிலுக்கு பசுக்கள் நமக்கு என்ன கொடுக்கின்றன? என்பதைச் சற்றே எண்ணிப்பாருங்கள்.
நிலத்தை அறுவடை செய்கிறோம். நெல்மணிகளை நாம் எடுத்துக்கொண்டு கழிவுப்பொருளாகிய வைக்கோலை மாட்டுக்குத் தருகிறோம். நெல்லிலிருந்து உமி, தவிடை நீக்குகிறோம். அந்தக் கழிவுகளை மாட்டுக்குக் கொடுக்கிறோம் நாம் அரிசியை எடுத்துக்கொள்கிறோம். அரிசி கழுவிய கழுநீரையும், சோறுவடித்த வடிநீரையும் மாட்டுக்குக் கொடுத்துவிட்டு உணவை இலையில் பரிமாறி உண்டுவிட்டு அந்த உண்ட இலையை மாட்டுக்குக் கொடுக்கிறோம். நாம் கொடுத்த கழிவுப்பொருள்கள் ஐந்து. வைக்கோல், தவிடு, கழுநீர்;, வடிநீர், இலை.
ஆனால் அவற்றை உண்ட பசுக்களோ பதிலுக்கு நமக்கு ஐந்து அமிர்தங்களைத் தருகின்றன. அவை பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பனவாகும்.
பசுக்களும் மாடுகளும் நன்றி மிகுந்தவை. எங்கள் வீட்டில் நான் சிறுபிள்ளையாக இருந்தபோது மாடு வளர்த்தோம். பல்லாண்டுகாலமாக எங்கள் வீட்டில் அந்த மாடு கன்றோடு இருந்து வந்தது. ஒருநாள் என் தந்தையாருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகி வந்தபோது, பசுமாட்டை விற்றுவிட முடிவுசெய்தோம். மனவருத்தம்தான். இருந்தாலும் வேறு வழிதெரியவில்லை.
எங்கள் தந்தையார் எங்கள் ஊரிலிருந்து பத்துமைல் தொலைவிலிருந்த மாட்டுச் சந்தையில்போய் மாட்டை விற்றுவிட்டு வந்தார். எங்களுக்கெல்லாம் ஒரே கவலை. இரவு முழுவதும் மாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். அதிகாலை விடிவதற்கு முன்பாக, எங்கள் வீட்டுக்கதவை ஏதோ முட்டுகிற சத்தம் கேட்டு ஓடிப்போய் திறந்து பார்த்தால், எங்கள் மாடு கன்றோடு பத்துமைல் தூரம் ஓடி எங்கள் வீட்டைக் கண்டுபிடித்து வந்துவிட்டது.
நாங்கள் அத்தனைபேரும் மாட்டின், கன்றின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டோம். மாட்டை வாங்கியவர் வந்து எங்களை ரெண்டு திட்டு திட்டிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டார். ஆனாலும் எங்களுக்குச் சந்தோஷமே. எந்த ஜி.பி.எஸ;;(GPS)ம் இல்லாமல் எங்கள் மாடு எங்கள் வீடு வந்த சேர்ந்த கதையை நானும் எங்கள் சகோதரிகளும் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
இதைத்தான் கண்ணதாசனும் மாட்டுக்கார வேலன் படத்தில்
‘வளர்த்தவரே உன்னை மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில் கொடுத்து விட்டாலும்
வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம்
வாய் மட்டும் இருந்தால் மொழிபேசும் தெய்வம்
சத்தியம் நீயே தர்மத்தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே..
எனப் பசுமாட்டை புகழ்ந்து எழுதியிருப்பார். இப்பாடலைப் படம் தொடங்கும்போது எம்.ஜி.ஆர் மாடுகளை ஓட்டிக்கொண்டே பாடுவதாகக் காட்டியிருப்பார்கள். மேலே சொன்ன பாட்டுவரிகள் உண்மைதான் என்பதை நாங்கள் எங்கள் வாழ்வில் கண்டு கொண்டிருக்கிறோம்.
இத்தோடு இந்த நாளில்தான் தமிழகத்தின் தெற்குப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீரவிளையாட்டுகள் நடைபெறும். அந்தக்காலத்தில் பெண்குழந்தை பிறந்தால் ஒரு காளைமாட்டையும் சேர்த்து வளர்ப்பார்களாம். பெண் வளர்ந்து பெரியவளான பிறகு அவளைத் திருமணம் செய்ய வருகின்றவன் அந்த மாட்டை அடக்கவேண்டுமாம். அப்படிப்பட்ட வீரர்களையே அக்காலப் பெண்கள் விரும்பிக் கணவனாக ஏற்றிருக்கிறார்கள். ஏனென்றால் வீரயுகக் காலம். ஒரு வலிமைவாய்ந்த ஆண்மகனே குடும்பத்தை மிருகங்களிடமிருந்தும் எதிரிகளிடமிருந்தும் காப்பாற்ற வேண்டிய சூழல் இருந்தது.
மாட்டை அடக்க அஞ்சுகின்ற இளைஞனை மறுஜென்மத்திலும் மணம் செய்ய விரும்பமாட்டாள் வீர தமிழ்ப்பெண் என்பதை கலித்தொகை என்னும் சங்கஇலக்கியம் காட்டுகிறது. அதில் முல்லைக் கலியில் ஒரு பாடல் இப்படி அமைகிறது,
கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாலே ஆயும் மகள்
முல்லைக் கலி
இந்த நாளையே திருவள்ளுவர் தினம் என்று நம்முடைய தமிழ் மூதறிஞர்கள் நிச்சயித்தார்கள். இத்திருவள்ளுவர் தினத்தை எப்படிக் கணக்கிடுவது? என்று யோசித்தபோது, கிரிகோரியன் நாட்காட்டிபடி கி.பி., கி.மு., என்றுதான் இருக்கிறது.
திருவள்ளுவர் கிறிஸ்துவக்கு 31ஆண்டுகள் முன்னே வாழ்;ந்தவர் என்பதாகக் கணக்கிட்டு தமிழ் ஆண்டை திருவள்ளுவர் ஆண்டாக குறிப்பிட்டார்கள். மறைமலை அடிகள், திரு.வி.க, போன்ற நம் தமிழ் அறிஞர்கள் அதாவது ஆங்கில ஆண்டோடு 31ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும். அதன்படி பார்க்கிறபோது இது திருவள்ளுவர் ஆண்டு 2053 என்று நாம் கணக்கிட வேண்டும்.
திருவள்ளுவர் தமிழருக்கு மட்டுமல்லாமல் மனிதஇனத்துக்கே சொன்ன அறநூல்தான் திருக்குறள். எனவே இத்தகைய திருக்குறள் தமிழரின் அடையாளமாக விளங்குவதால் இந்தத் தைத்திருநாளின் இரண்டாம் நாளை திருவள்ளுவரின் தினமாகக் கொண்டாடுகின்றோம்.
தமிழரின் வீரத்திற்கும், ஞானத்திற்கும் சான்றான நாள் இந்நாளே!
அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் தின, திருவள்ளுவர் நல்வாழ்த்துகள்!