தைப்பொங்கல்…தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

தைபிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம்…
என்பது ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற திரைப்படத்தில் வருகின்ற பாடல். உலகெங்கும் அறுவடைத்திருநாள் என்பது மிக்க மகிழ்வோடும், நன்றியோடும் கொண்டாடப்படுகின்ற திருவிழா. அவ்வகையில் ஆடிப்பட்டம் தேடி விதைத்த நம்நாட்டு உழவர் பெருமக்கள் முதல்போக நெல்லை அறுவடை செய்தபின்பு, இரண்டாம்போக நெல்லை அறுவடை செய்கின்ற காலம் முன்பனிக்காலமான தை மாதமாகும்.
இவ்வாறு அறுவடை செய்த நெல் ஆண்டு முழுவதற்குமான உணவுப்பொருளாக நெற்களஞ்சியத்தில் நிறைந்திருக்கும். அறுவடை செய்யும்போது கிடைக்கின்ற வைக்கோல்கள், வைக்கோல்போர்களாக உழவர்களின் உடன் உழைக்கும் தோழர்களான மாடுகளுக்கு உணவாக எங்கும் நிறைந்திருக்கும்.
“அடி காட்டுக்கு நடு மாட்டுக்கு நுனி வீட்டுக்கு” என்பார் இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார். விளைந்த நெற்பயிரின் அறுவடை செய்தபின் இருக்கும் அடிப்பாகம் உரமாக வயலுக்கும், நடுப்பகுதி வைக்கோல், மாடுகளுக்கும், நுனிப்பகுதியிலுள்ள கதிர்களாகிய நெல்மணிகள் மனிதர்களுக்கும் பயன்படும். இப்படி அறுவடை செய்த புதுநெல்லை அரிசியாக்கிப் புதுப்பானையிலிட்டுப் பொங்கல்வைத்துக் கொண்டாடுகின்ற தினம்தான் தைப்பொங்கல் தினம்.
இது நன்றித் திருநாளும் ஆகும். நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களின் உதவியோடுதான் வேளாண்மை செய்யமுடியும். எனவே அறுவடைசெய்து அதை முதல் உணவாக ஏற்கும்போது ஐம்பூதங்களுக்கும் நன்றி செலுத்துவது நம்முடைய மரபு.
ஒரேநேரத்தில் ஒரே செயலில் ஐம்பூதங்களுக்கும் நன்றி செலுத்த முடியுமா? நிச்சயமாக முடியும். எளிமையாக முடியும். நம்முடைய முன்னோர்கள் அதற்கு வழிவகுத்திருக்கிறார்கள். அது என்ன? அதுதான் தைப்பொங்கல். அன்றைக்கு வீட்டு வாசலில் பொங்கலிடுதல்.
வாசலில் சாணம் தெளித்துக் கோலமிட்டு நிலத்தில் (நிலம்) அடுப்பு வைத்து அடுப்பில் நெருப்பு (நெருப்பு)வைத்து, நெருப்பு மேல் பானை வைத்து நீருற்றி (நீர்) இதில் அரிசியும், வெல்லமும், பாலும் கலந்து காற்றின் உதவியோடு (காற்று) நெருப்பை எரியவிட்டுப் பொங்கல் பொங்கிவரும்போது குலவையிட்டு ஆகாயத்திலிருக்கிற சூரியனை (ஆகாயம்) வணங்கி வழிபடும்போது ஐம்பூதங்களையும் ஒரேநேரத்தில் வணங்க முடிகிறது. ஐம்பூதங்களுக்கும் ஒரேசமயத்தில் நன்றியும் செலுத்த முடிகிறது. இந்த நல் வாய்ப்பை நம்முன்னோர்கள் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
தைப்பொங்கல் வருவதற்கு முன்பாக வீடுகளை வெள்ளையடித்து மாடுகளைக் குளிப்பாட்டி, பொங்கல் அன்றைக்குப் புத்தாடை கட்டி, கூடியிருந்து பொங்கலில் ஊற்றப்பட்டிருக்கிற நெய் கைகளில் வழிய, உறவுகளோடு உண்ணும்போதும், கரும்பைக் கடித்துச் சுவைக்கிறபோதும், கிடைக்கிற இன்பத்திற்கு ஈடேது இணையேது.
எங்கள் தந்தையார் தைப்பொங்கலின்போது அனைவரையும் தரையில் அமரச்செய்து உணவு படைக்கச் சொல்லுவார். அப்போது அவர் சொல்லும் ஒரு வார்த்தை இப்போதும் எப்போதும் என் நினைவில் நிற்கும்.
‘தம்பி! இந்த வீடு என் உழைப்பில் கிடைத்த பணத்தில் வாங்கியது. இதோ நமக்கு முன்னே போடப்பட்டிருக்கும் வாழைஇலை நம் தோட்டத்தில் விளைந்தது. மேலே பரிமாறப்பட்ட காய்கறிகளும் தோட்டத்தில் விளைந்தவைதான். இலையில் போடப்படுகின்ற அரிசிச்சோறு நம் நிலத்தில் விளைந்தது. இதில் ஊற்றப்படுகின்ற நெய்யும் தயிரும் மோரும் நாம் வளர்க்கின்ற மாடு கொடுத்தது. உன் தாய் சமைத்துத் தர, நாம் எல்லோரும் அவர்களுக்கு உதவ, இதோ அனைவரும் மகிழ்வோடு அமர்ந்து சாப்பிடுகிறோம். நாம் எந்தப்பொருளையும் கடையில் வாங்கவில்லை தம்பி!’ என்று அவர் சொல்வது, கிராம விவசாயப் பொருளாதாரத்தினுடைய தன்மையை நமக்கு உணர்த்தும்.
இந்தக்காலத்தில் எங்கள் வீட்டில் நான் என் பிள்ளைகளோடும் பேரன் பேத்திகளோடும் என் மனைவி உணவு பரிமாற, உணவருந்துகிறேன். ஆனால் ஒரே ஒரு வேறுபாடு. அன்று எங்களிடத்திலே நிலம் இருந்தது. அதில் நெல் விளைந்தது. வீட்டில் மாடு இருந்தது, மாட்டிலிருந்து பால் கிடைத்தது. இன்றும் எல்லாம் கடையில் வாங்கிக்கொள்கிறோம்.
அத்தோடு அன்று வானொலியில் நான் பேசியதைக் கேட்டுக்கொண்டு உணவருந்தியது ஒரு காலம். தற்போது தொலைக்காட்சிப் பட்டிமன்றத்தில் நான் நடுவராக இருந்து பேசுவதைப் பார்த்துக்கொண்டே அனைவரும் உண்பது தற்காலம். இன்றைய பட்டிமன்ற தலைப்புகூட,
இனிவரும் காலத்தை வழிநடத்தப்போவது
வயல்வெளிகளா? வலைதளங்களா?
நான் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறேன் என்பதை நீங்களும் பொங்கல் விழாவை கொண்டாடிக்கொண்டே பார்த்து மகிழுங்கள். விடை சின்னத்திரையில்.
பொங்கலோ பொங்கல்! அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!