அல்லவை போக்கி, நல்லவை ஏற்போம்… போகிப்பண்டிகை

“பழையன கழிதலும் புதியன புகுதலும்

  வழுவல கால வகையினானே”

  • நன்னூல் – பவணந்தி முனிவர்.

தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி, பங்குனி வரையில் பனிரெண்டு மாதங்களை ஆறுபருவங்களாக நம்முடைய முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர். இதற்குப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டுள்ளனர். இதேபோல, ஒருநாளின் பொழுதுகளை ஆறுபகுதிகளாகப் பிரித்து அதனைச் ‘சிறுபொழுது’ எனவும் வகுத்துள்ளனர்.

பெரும்பொழுது எனப் பார்க்கும்பொழுது:-

சித்திரை வைகாசி                  –              இளவேனில்

ஆனி ஆடி                                     –              முதுவேனில்

ஆவணி புரட்டாசி                   –              கார்காலம்

ஐப்பசி கார்த்திகை                    –            கூதிர்காலம்

மார்கழி தை                                  –            முன்பனிக்காலம்

மாசி பங்குனி                               –            பின் பனிக்காலம்

எனப் பனிரெண்டு மாதங்களும் ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சூரியனுடைய பயணத்திற்கேற்ப காலங்களைக் கணக்கிட்டுள்ளனர் நம் முன்னோர்கள். இதற்கு வடமொழியில் தட்சிணாயனம், உத்தராயணம் எனப் பெயர். அதாவது சூரியன் கிழக்கிலிருந்து தெற்கே பயணிக்கும் காலத்தை தட்சிணாயனம் என்றும், பின்னர் வடக்கே பயணிக்கும் காலத்தை உத்தராயணம் என்றும் பிரித்துள்ளனர்.

               ஆவணி தொடங்கி மார்கழி வரை தட்சிணாயன காலம். மார்கழியினுடைய கடைசி நாள் முடிந்தபிறகு தை முதல் தேதியாகிய மகரசங்கராந்தியில் சூரியனின் பயணம் வடக்கு நோக்கித் தொடங்குகிறது. தை தொடங்கி ஆடிக் கடைசிவரை உத்தராயண காலம் என்கிறோம்.

               இத்தகைய மார்கழி மாதத்தின் கடைசிநாளே போகித்திருநாளாகும் இதை இந்தியா முழுவதும் கொண்டாடுகின்றோம்.

               ‘போக்குதல்’ என்ற சொல்லுக்கு ஏற்பப், பழைய பொருள்களையெல்லாம் நீக்கிவிட்டு, வீட்டையும் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தப்படுத்தித் தைப்பொங்கலுக்குத் தயாராகும் தினமே ‘போகி’ என்று சொல்லலாம். இத்திருநாளில் அழுக்குகளை நெருப்பிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். பஞ்சபூதங்களில் நெருப்பு ஒன்றுதான் மாசடையாதது. அழுக்குகளை அழிக்கக்கூடியது. அதனால்தான் ஆண்டாள் தன்னுடைய ஐந்தாவது திருப்பாவைப் பாசுரத்தில்,

               போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

               தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்”.

எனப் பாடுவார்.

               இவ்வாறு நாம் அழுக்குகளை அழிக்கும்போது தற்காலத்தில் ஒன்றை மிகக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அது என்னவென்றால்;, இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளில் ஒன்று நெகிலி (பிளாஸ்டிக்). இது எவ்வளவு தூரத்திற்குப் பயன்படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கு அழிக்க முடியாத தன்மையுடையதாகவும், அழித்தால் அதன்மூலம் தீமை வருவதாகவும் பல்லாயிரம் ஆண்டுகளானாலும் மக்கும்தன்மை இதற்கு இல்லாததாலும் இதனை நாம் தீயிட்டுப் பொசுக்கலாகாது. ஏனென்றால் அதிலிருந்து எழுகின்ற புகை உலகஉயிர்களின் சுவாசத்திற்குக் கேடு தரும்.

               எனவே போகிப் பண்டிகையின்போது பழைய அழுக்குகளை நீக்கலாம், சுத்தப்படுத்தலாம், நீரில் அலசலாம். புதியவற்றை ஏற்றுக்கொள்ளலாம். கிராமங்களில் வீடுதோறும், வீடுகளிலுள்ள பாய், ஜமுக்காளம் போன்றவற்றை நீர்நிலைகளுக்கு எடுத்துச்சென்று சுத்தம் செய்து வருவார்கள்.

            இந்தப் போகித் திருநாளன்று பழைய பொருள்களை நெருப்பிலிட்டு, நீரிலிட்டு அழிப்பதுபோல, நமக்குள் தீயசிந்தனைகள் இருக்குமானால் அதனையும் மாற்றிக்கொள்வதற்கான உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

     போகிப் பண்டிகையின்போது போளி, வடை, பாயாசம், மொச்சை, சிறுதானியங்கள் போன்றவற்றை இறைவனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம். ஏனெனில் சிறுதானியங்கள்யாவும் இப்பனிக்காலத்தில்தான் விளையும். இப்பண்டிகை ‘இடை குளிர்காலப் பண்டிகை’ என்று அழைக்கப்படுகிறது.

போகி – தீயனப் போக்கி, அல்லன விலக்கி, நல்லன கொள்ளுதல்.

               அனைவருக்கும் போகித் திருநாள் வாழ்த்துகள்!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.