மர்மப்பெண்…அகதா கிறிஸ்டி…

உலகஇலக்கியங்களில் புராணம், இதிகாசம், வரலாறு, சமூகம் என எத்தனையோ பிரிவுகளில் இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தாலும், மர்மக்கதைகளுக்கு என்று தனியான இடம் ஒன்று உண்டு. தமிழ் இலக்கிய உலகில் உரைநடையும், சிறுகதையும், புதினங்களும் (நாவல்) தோன்றியபிறகு, மர்மக்கதைகளும் தோன்ற ஆரம்பித்தன.
பொதுவான மர்மக்கதைகளாகவும், புலன்விசாரணைகளோடு கூடிய மர்மக்கதைகளாகவும் எழுதிய பெருமக்களான வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், கே.ரெங்கராஜு, மேதாவி போன்றவர்கள் இத்தகைய கதைகளுக்கானத் தொடக்கக்காலப் பிதாமகர்கள் என அழைக்கப்பட்டனர்.
இவர்களைத் தொடர்ந்தே பிற்காலத்தில் ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், ரங்கராஜன் என்கின்ற சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன் என்கின்ற புஷ்பா தங்கதுரை, பி. துரைசாமி என்ற பி.டி.சாமி என இவர்களைக் குறிப்பிடலாம்.
இதேபாணியில் எழுதுகின்ற எழுத்தாளர்களாக இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்துகொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கின்ற மர்மக்கதை மன்னர்களான ராஜேஷ்;குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.
ஆனால் மர்மக்கதை எழுதுவதில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டினார்களா என்று தெரியவில்;லை. தமிழில் முதல் பெண் எழுத்தாளரான வை.மு.கோதைநாயகி அம்மாள் எத்தனையோ சமூக, தேசிய விடுதலைக் கதைகளுக்கு நடுவே சில மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார் என அறிகிறோம். ஆனாலும்கூட, அவரைத் தொடர்ந்து இன்றுவரை இந்தத்துறையில் மர்மக்கதை எழுதுகின்ற பெண்எழுத்தாளர்களை நாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
ஆங்கில இலக்கிய உலகில் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் சில பெண் எழுத்தாளர்கள் இருந்தாலும்கூட, மர்மக்கதை என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் அகதா கிறிஸ்டி என்ற பெண்மணிதான். இவருடைய கதைகளில் வருகின்ற மர்மங்கள் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு.
ஒரு கொலைவழக்கில்கூட, ஒரு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஒரு நர்ஸ், அகதா கிறிஸ்டியினுடைய நாவலில் வருகின்ற ஒரு செய்தியை மேற்கோள்காட்டி கொலைநடந்த விபரத்தை விளக்கினார் என்ற செய்தியை அக்காலப் பத்திரிக்கைகள் வெளியிட்டனர்.
இத்தகைய பெருமைமிகுந்த அகதா கிறிஸ்டியினுடைய வரலாற்றைச் சற்றே பார்ப்போம்…
அகதா கிறிஸ்டி உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். ஆங்கில நாவல் ஆசிரியை. அகதா கிறிஸ்டி மர்மக் கொலைகள் பற்றிப் புதினம் எழுதியவர். இவர் 1890ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி, இங்கிலாந்தின் டெவன் என்ற பகுதியில் டார்க்கி என்னும் கடலோர நகரில் பிறந்தார்.
அகதா கிறிஸ்டி தன் முதல் மணமுறிவுக்குப் பின், தொல்பொருள் துறை அறிஞரான மாக்ஸ் மல்லோவனை மணந்தார். அவருடன் சிரியா, இராக் முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்தார். அந்த இடங்களைக் களங்களாகப் பயன்படுத்தி மர்மக்கதைகளைப் படைத்தார்.
தம்முடைய முப்பதாவது வயதில் முதல் கதையை அச்சிட்டார். ‘ஸ்டைல்ஸில் மர்மத் தொடர்பு’ என்ற அந்தக் கதையில்தான் ஹெர்குல் பாய்ரோ அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பிரெஞ்சுமொழி பேசும் பெல்ஜியம் பகுதியில் பிறந்த கதாப்பாத்திரம்.
இவர் உருவாக்கிய கதாபாத்திரங்களான மிஸ் மாப்பிள் (Miss Marple), ஹெர்குல் பாய்ரோ (Hercule Poirot) எப்போதும் தொலைக்காட்சிகளில் வலம் வந்து கொண்டு இருப்பர். இவருடைய ‘மவுஸ் ட்ராப்’ கதையோ இலண்டனில் தொடர்ந்து மேடையில் காட்சி தந்து வருகிறது. ஆயினும் இவருடைய 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்மநாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராக இவர் கருதப்படுகிறார்.
அகதா கிறிஸ்டியின் மேடைநாடகமான ‘த மௌஸ் ட்ராப்’ (The Mousetrap) என்ற நாடகம் 1952ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25இல் முதலில் திரையிடப்பட்டது. அது இன்றும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20,000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டுச் சாதனை படைத்துள்ளது. இவர் இந்த நாடகத்திற்காகப் பல விருதுகளைப் பெற்றார். இவரை பிரிட்டிஷ் அரசு சீமாட்டியாக (DAME)அறிவித்தது.
துப்பறியும் நாவல் எழுதியவர்களில் மிகவும் புகழ்பெற்றவர் இவர்தான். உலகிலுள்ள பலமொழிகளில் அவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு இலட்சக்கணக்கில் இன்றும் விற்றுக்கொண்டு இருக்கிறது.
இவர் துப்பறியும் புதினங்கள்/நாவல்களில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார். ஒரு கொலை நடந்த பின்னர், அது தொடர்பான துப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிவிப்பார். கதை படிப்பவரோ, தொலைக்காட்சியில் பார்ப்பவரோ யார் குற்றவாளி என்ற புதிரை விடுவிக்கத் துடியாய்த் துடிப்பார்கள். ஒரு குடும்பத்தில் உள்ள பலரும் அந்தத் தொலைக்காட்சிக் கதையைப் பார்த்தார்களானால் இவன்தான் குற்றவாளி, இல்லை இல்லை அவன்தான் குற்றவாளி என்று வாதாடத் துவங்கி விடுவர்.
அதுமட்டுமல்ல, கதையில் திடீர்; திருப்பங்களும் வரும். அவையெல்லாம் அறிவுக்கு விருந்து படைக்கும் திருப்பங்கள்.
அகதா கிறிஸ்டி அவர்கள் மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்னும் புனைப்பெயரில் ஆறு காதல் கதைகளையும் எழுதியுள்ளார். மொத்தத்தில் இவர் 66 துப்பறியும் கதைகளையும், 14சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
அகதா கிறிஸ்டியின் புத்தகங்கள் பிபிசி ரேடியோ, வீடியோ கேம் தொடர் மற்றும் கிராஃபிக் நாவல்களுக்காகவும் தழுவி எடுக்கப்பட்டுள்ளன.
பெண்களின் புன்னகையை மர்மப் புன்னகை என்றும், அவள் மர்மப்பெண் என்றும் கதாசிரியர்கள் வர்ணிப்பார்கள். உண்மையில் உலகஅளவில் மர்மப்பெண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அகதா கிறிஸ்டியே.