நன்னெறிக் கதைகள்

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையையும், அவர்கள் வாழ்க்கையில் பெறுகிற வெற்றியையும் தீர்மானிப்பது அவர்களின் குழந்தைப்பருவமும், இளமைப்பருவமும்தான் என்று மனோதத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மகிழ்ச்சியும், குதூகலமும் உடையதாகக் குழந்தைப் பருவம் அமைந்திருந்தாலும் அங்கு அச்சமும், அறியாமையும் சூழ்ந்துதான் இருக்கும். அதனால் குழந்தைகளை வீட்டில் வளர்க்கிறபோதும், ஆரம்பப் பள்ளிகளில் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதும் எளிமையான, இனிமையான கதைகள், பாடல்கள், மனங்கவரும் சிறிய நாடகங்கள் இவற்றின்மூலம் நல்ல செய்திகளைக் கற்பித்தால், நிச்சயமாக இத்தகைய குழந்தைகள் சாதனையாளர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக இருந்தவர் மகாத்மா காந்தியாக மாறுவதற்கு அவருடைய தாயாராகிய புத்திலிபாயும் ஒரு காரணம் எனக் காந்தியடிகள் தம் சுயசரிதையில் குறிப்பிடுவார்.
மராட்டிய தேசத்தின் இணையற்ற வீரனாக விளங்கிய வீரசிவாஜிக்கு அவரது தாயான ஜீஜிபாய், குழந்தைப் பருவத்தில் சொல்லிய வீரம் செறிந்த கதைகள் அவரை வெற்றி வீரராக உருவாக்கியது.
நம்நாட்டில் குழந்தைகளுக்குக் கூறுவதற்கான பற்பல கதைகள் உண்டு. அவை, உலகப் புகழ்மிக்க ஈசாப் நீதிக்கதைகள், ஆயிரத்தொரு இரவு அரபுக்கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், நானாஜி கதைகள், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதைராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராசன் கதைகள், முல்லா நஸ்ருதீன் கதைகள், பரமார்த்த குரு கதைகள் போன்றவையே.
இத்தகைய கதைகளைக் குழந்தைகள் பெரும்பாலும் தாயாரிடத்தில், தாத்தா-பாட்டியிடத்தில், வகுப்பு ஆசிரியர்களிடத்தில் கேட்டு மகிழ்வதற்கு விரும்புவார்கள். இக்கதைகள் தருகின்ற செய்திகளைப் புரிந்துகொள்ளுமாறு எளிமையாகச் சொல்லப் பழக வேண்டும். சிலகதைகள் இப்படிச் செய்ய வேண்டும். வாழவேண்டும் என்று கூறுவன. இன்னும் சில கதைகள் இவை தீயவை, இவற்றைச் செய்யக்கூடாது, செய்தவர்கள் அழிந்து போவார்கள் என்பது போன்ற நீதிகளைச் சொல்லுவன. இவற்றில் தெனாலிராமன் கதைகள், முல்லா நஸ்ருதீன் கதைகள், பரமார்த்த குரு கதைகள் போன்றவை நகைச்சுவையோடு நீதிகளைச் சொல்பவை.
பீர்பால் கதைகள், நானாஜி கதைகள், மரியாதைராமன் கதைகள் போன்றவை அறிவுப்பூர்வமான சிந்தனையைத் தருகின்ற கதைகள்.
ஈசாப் நீதிக்கதைகளும், பஞ்சதந்திரக் கதைகளும், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் மூலம் நீதிகளைச் சொல்லும் கதைகள் ஆகும்.
ஆயிரத்தோர் இரவு அரபுக்கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள், மதனகாமராசன் கதைகள் போன்றவை மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய செய்திகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும். குறிப்பாக விக்கிரமாதித்தன் கதைகளில் விக்கிரமாதித்தனுக்கும் – வேதாளத்திற்குமிடையே நடைபெறும் உரையாடல்களில் பல புதிர்க்கதைகள் அமைந்திருக்கும். குழந்தைகளிடத்திலே இத்தகையை கதைகளைச் சொல்லி, இப்புதிர்களுக்கான விடையை யோசிக்கச் செய்து மறுநாள் விடைகளைக் கூறலாம்.
தெனாலிராமன் கதைகள் குழந்தைகளுக்கு மிக விருப்பமானவை. விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயருடைய சபையில் விதூஷகனாக – விகடகவியாகப் புகழ்பெற்று விளங்கியவன், ராமன் என்ற பெயரையும் தெனாலி என்ற தன் பிறந்த ஊரின் பெயரையும் இணைத்துத் தெனாலிராமன் எனப் பெயர் கொண்டவன்.
‘விகடகவி’ என்ற சொல்லே இருபுறமும் இருந்து வாசித்தாலும் ஒரே மாதிரியாக வேடிக்கையாக அமைவது சிறப்பாகும்.
தெனாலிராமன் ஒவ்வொருமுறையும் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்வதும், பிறகு தன் சாதுர்யமான பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் அதிலிருந்து தப்பிவிடுவதும் வழக்கம். அதுபோல, ஒருமுறை தெனாலிராமன் செய்யாத தவறுக்கு, அவனுக்கு மரணதண்டனை கொடுக்குமாறு அரசர் கட்டளையிட்டு ‘உன் கடைசி விருப்பமென்ன? சொல்’ எனக் கேட்டார்.
உடனே தெனாலிராமன், ‘அரசே! நீங்கள் அதை நிச்சயமாக நிறைவேற்றுவதாக எனக்குச் சத்தியம் செய்துதர வேண்டும்’ என்றான். அரசரும், ‘சரி! அப்படியே செய்கிறேன். உன் கடைசி ஆசை என்ன?’ என்றார். உடனே தெனாலிராமன் ‘நான் என் விருப்பப்படி சாக வேண்டும்’ என்றான். ‘சரி! நீ உன் விருப்பப்படி சாகலாம். உன் தலையை வெட்டலாமா? யானையைக் காலில் வைத்து மிதிக்கலாமா? உன்னைத் தூக்கில் போடலாமா? எப்படிச் சாக விரும்புகிறாய்?’ என்றார். உடனே தெனாலிராமன், ‘அரசே! சொன்ன சொல்லை மறக்க வேண்டாம். நான் என் விருப்பப்படி முதுமை வந்து கிழவனாகச் சாக விரும்புகிறேன்’ என்றான். இதைக்கேட்டு திகைத்த அரசர், பிறகு சிரித்துவிட்டு ‘இவனை விடுதலை செய்யுங்கள்’ என்றார்.
விடை கூறமுடியாத கேள்விகளுக்கு, செயல்கள் மூலமாகச் செய்துகாட்டி விடை கூறுவார், அக்பரிடத்திலே அமைச்சராக இருந்த பீர்பால்.
ஒருமுறை பேரரசர் அக்பர், பீர்பாலிடத்திலே, ‘சில மதங்களில் கடவுள் நேரிடையாகப் பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. ஏன் கடவுளே நேரடியாக வர வேண்டும். தன்னுடைய வேலைக்காரர்களை, தூதுவர்களை அனுப்பக்கூடாதா?’ என்று கேட்டாராம். அதற்கு பீர்பால், ‘இதற்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது. சிலநாட்கள் எனக்கு அவகாசம் தரவேண்டும்’, என்று வேண்டினாராம்;. ஒருவாரம் சென்ற பிறகு, ஒருநாள் இரவு பௌர்ணமி நிலவில், கங்கை நதியில் அக்பர் தம் குடும்பத்தாரோடு படகில் செல்ல, தானும் உடன் வருவதாகப் பீர்பாலும் கூறி உடன் சென்றார். ஆற்றின் ஆழமான பகுதியில் படகு செல்லும்போது அக்பரின் மூன்று வயதுப் பேரனை, பீர்பால் தூக்கி கங்கை நதியில் போட்டுவிட்டார். அதைக்கண்டு அரச குடும்பமே அலறித் துடித்தது. நிலவொளியில் இசையை ரசித்துக்கொண்டிருந்த அக்பர், சட்டென நீரில் பாய்ந்து, தன் பேரனைக் காப்பாற்ற, மற்றவர்களும் அவருக்கு உதவி செய்து படகில் ஏற்றினார்கள். படகில் ஏறிய அக்பர் மிகுந்த கோபத்தோடு, ‘முட்டாளே! நீ செய்த காரியத்திற்கு உன்னை இப்போதே வெட்டிக் கொல்ல வேண்டும். இருந்தாலும் நீ என் மதி மந்திரி ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என பீர்பாலை நோக்கிக் கோபமாகக் கேட்டார்.
அதற்கு பீர்பால் பதற்றமேதுமடையாமல், அரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்தபோது, படைத்தளபதியை, என்னை, வீரர்களை நோக்கி, ‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல், நீங்கள் குதித்தது ஏன்?’ என்று கேட்டார். அதற்கு கோபம் குறையாத அக்பர், ‘குழந்தையின் உயிரைக் காப்பது என் கடமையா? அல்லது அரசனாக ஆணையிட்டுக்கொண்டிருப்பது பெருமையா?’ எனப் பதிலுக்குக் கேட்டார். அப்போது பீர்பால், ‘சக்கரவர்த்தி அவர்களே! நீங்கள் அன்றைக்கு என்னிடத்திலே கேட்ட கேள்விக்கு விடை இதுதான். சில மதங்களில் கடவுள், தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும், நீங்களே நீரில் குதித்துக் குழந்தையைக் காக்க நினைத்தது போல, இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான், இதுதான் உண்மை. நான் செய்த பிழையை, தாங்கள் மன்னிக்க வேண்டும்’ என்று அமைதியாகச் சொன்னாராம்.
ஈசாப் நீதிக்கதைகளிலும், பஞ்ச தந்திரக் கதைகளிலும் எளியமுறையில் நீதிகள் சொல்லப்படும்.
வடை சுட்டு விற்றுக்கொண்டிருந்த கிழவியை ஏமாற்றி வடையைத் தூக்கிய திருட்டுக் காக்கை, நரியிடத்தில் ஏமாந்தது. இதில் சொல்லப்படும் நீதி ஏமாற்றித் திருடியவன், ஏமாந்து போவான்.
முல்லா நஸ்ருதீன் ஒருமுறை, தான் போர்க்களத்தில் செய்த வீரசாகசங்களை வேடிக்கையாகச் சொன்னாராம். ‘நான் எதிரிகளை ஓட வைத்தவன்’ என்றபோது, ‘எப்படி? எப்படி?’ என்று எல்லோரும் ஆர்வமாகக் கேட்டனர். ‘அவர்களைக் கண்டவுடன் நான் ஓடினேன். அவர்களும் விரட்டிக் கொண்டு ஓடிவந்தார்கள்’ என்றாராம்.
நல்ல நீதிக்கதைகள், வளரும் குழந்தைகள் மனதில் நல்ல விதைகளாகப் பதியும். அவையே பிற்காலத்தில் அவர்களை உயர்ந்த மனிதர்களாக்க வழிவகுக்கும். நன்னெறிக் கதைகள், வாழ்க்கையின் சிறந்த வழிகாட்டிகள்.