தந்தையும் மகனும்

               இந்தக் காலக்குடும்பச் சூழலில் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் நிறைந்த கூட்டுக்குடும்பங்களை நாம் காண்பது அரிதாக இருக்கிறது.

               பெரும்பாலும் தாத்தா, பாட்டி போன்ற முதியவர்களிடத்தில் அடுத்த தலைமுறையினர் பேசுவதை, பழகுவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர். அப்பா மகனிடம், அம்மா மகளிடம் நேரிடையாகப் பேசுவதைக் காட்டிலும், தொலைபேசி மற்றும் செல்போனில் இருந்துதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

               ஒரு வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்:-

தந்தை:             உன்னைத் தவமிருந்து பெத்தேன்டா?

மகன்:               உங்களை யாரு பெறச் சொன்னா? நாங்க என்ன அப்ளிகேசனா     போட்டோம்?

தந்தை:             சரி. அந்தக் கடையில் போயி வெத்தலை வாங்கிட்டு வா.

மகன்:              அந்தக் கடையில் வெத்தலை இல்லேன்னா

தந்தை:             அடுத்த கடையில வாங்கிட்டு வா

மகன்:             அங்கேயும் இல்லைன்னா…

தந்தை:             (கோபத்தோடு) பேசாம வந்திரு…

மகன்:               (எரிச்சலோடு) அதற்குப் போகாட்டி என்ன…?

               இத்தகைய நிலைகளில் புராணங்களில், வரலாற்றில், இலக்கியங்களில் காணப்படுகின்ற தந்தைக்கும், மகனுக்குமான உறவின் அருமையைச் சிந்திக்கவும், பிறர்க்குச் சொல்லவும் தேவை ஏற்படுகிறது.

             ஒரு தமிழறிஞர், ஒரு கூட்டத்தில் பேசும்போது, “பெற்ற தந்தைமார்களை மூன்று வகையாகப் பிரித்துக் காணலாம் எனக் குறிப்பிட்டார். வயதான காலத்தில் தன்னைக் காப்பாற்ற, ஆதரவு தர ஒரு மகன் வேண்டும் என நினைப்பவர் ஒரு தந்தை.

               தான் தேடிவைத்த செல்வங்கள் அனைத்திற்கும் ஓர் ஆண் வாரிசு வேண்டும், அதற்கொரு மகன் வேண்டும் என நினைப்பவர் மற்றொரு தந்தை.

               மூன்றாமவரோ, தன் முன்னோர்கள் செய்துவந்த, தான் செய்து வருகின்ற நற்செயல்கள் அனைத்தும் வாழையடி வாழையாகத் தொடர வேண்டும். அதற்கு ஒரு மகன் வேண்டும் என நினைப்பவர். இந்த மூன்றுபேரில் முதல் இரண்டு தந்தையர்கள் தங்கள் சுயநலத்திற்காக, மகனைப், பிள்ளையை எதிர்பார்ப்பவர்கள். ஆனால் மூன்றாம்வகை தந்தையோ, பொதுநலம் கருதுகிறார். அத்தகைய தந்தையும், அவர் விரும்பும் மகனும் கிடைத்தால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது” என எடுத்துக் கூறினார்.

               திருவள்ளுவர் தந்தைக்கொரு கடமை சொல்லுகிறார். தான் பெற்ற மக்களைக் கல்வி எனும் தகுதியால் உயர்;த்தி, உயர்ந்த சபைகளில் அவர்களுக்கு முதன்மையான இடம் பெற்றுத் தரவேண்டும் என்பதை,

               தந்தை மகற்கு ஆற்றும் நன்றி

அவையத்து முந்தியிருப்பச் செயல்”

என்கிறார்.

இதேபோல, மகனுக்கும் ஒரு கடமை உண்டென்று குறிப்பிடும் வள்ளுவர், “புகழும் பெருமையும் மிக்க மக்களைப் பெறுவதற்கு இவர்களுடைய தாய், தந்தையர் எத்தகைய தவங்களைச் செய்தார்களோ?” என ஊரார் பாராட்டுமாறு பிள்ளைகள் நடந்துகொள்ள வேண்டுமென்பதை,

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

  என்நோற்றான் கொல்எனும் சொல்”

எனும் குறளில் குறிப்பிடுகிறார்..

சில தந்தைமார்கள் தங்களுடைய பிள்ளைகள் அடிமுட்டாளாக இருப்பதாக அடிக்கடி வருத்தப்படுவதுண்டு. அதற்கு மரபு வழியாக அவர்களும் ஒரு காரணமென்பதை மறந்து போகிறார்கள்.

அறிவும் ஆற்றலும் மிகுதியுள்ள தந்தைக்கு, அதற்கு இணையான மகன் தோன்றுவான் என்று நாலடியார் என்ற நூல் குறிப்பிடுகிறது.

நல்ல நிலத்தில் நெல் விதைத்தால் நெல்லே விளைவது போல, அறிவும் ஆற்றலும் மிகுந்த தந்தைக்கு, அதே அறிவாற்றலோடு மகன் பிறப்பான் என்பதை,

“செந்நெல்லாலாகிய செழுமுனை மற்று மச்

                 செந்நெல்லே ஆகி விளைதலால் – அந்நெல்

  வயல்நிறை காக்கும் வளவயல் ஊர

  மகன் அறிவு தந்தை அறிவு”

என்று நாலடியார் கூறுகிறது.

தந்தைக்காக, மகன் தன் வாழ்வைத் தியாகம் செய்த கதைகளைப் புராணங்களில் காண்கிறோம். யயாதி என்னும் அரசனின் மகன்களில் ஒருவனாகிய பூரிசுவர்சு என்பவன் தன் இளமைப்பருவத்தைத் தன் தந்தைக்காக விட்டுக்கொடுத்துத், தந்தையின் கிழப்பருவத்தைத் தான் ஏற்றுக்கொள்வதைப் பாரதக் கதையில் காண்கிறோம்.

இதேபோன்று, சந்தனு எனும் அரசனுக்கும் கங்கைக்கும் மகனாகப் பிறந்த தேவவிரதன் எனப் பெயர் கொண்ட இளவரசன், தன் தந்தையின் சுகத்திற்காக அரசாளும் உரிமையை விட்டுக்கொடுத்ததோடு, தன் வாரிசுகளாலும் பிற்காலத்தில் குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, வாழ்நாள் எல்லாம் திருமணம் செய்துகொள்ளாத பிரம்மச்சாரியாக வாழ்ந்து, ‘பீஷ்ம’ (நிலையானவன்) எனும் பட்டத்தைப் பெற்றதையும் காண்கிறோம். இப்பீஷ்மரே மகாபாரதத்தில் ஆதிபருவம் தொடங்கி, மகாபாரத யுத்தம் முடிந்த பிறகும் பூமியில் வாழ்ந்தவராக இன்றைக்கும் பூவுலக மக்களால் நினைக்கப்படுபவராக இருக்கின்றார்.

பிற்காலச் சோழர் வரலாற்றில் தஞ்சைப் பெரிய கோயிலைத் தரணிக்குத் தந்த இராஜஇராஜ சோழனும், கங்கையாற்றின் கரை வரை படையெடுத்துச் சென்று, புலிக்கொடியை எங்கும் பறக்கச் செய்த கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிய இராசேந்திர சோழனும் புகழ்மிக்க தந்தைக்கும், மகனுக்கும் ஓர் எடுத்துக்காட்டு.

எந்த நிலையிலும் ஒரு தந்தை தான் பெற்ற மகனைத் தன் நிலையிலும் உயர்வாக, உயர்த்தவே விரும்புவார். தன்னைப் பாதித்த துயரங்களும், அவமானங்களும் தன் மகனைப் பாதிக்காமல் பாதுகாக்க நினைப்பார் தந்தை.

மதுரையில், பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகின்ற புகழ்மிக்க திருவிழா, அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா. திருமாலிருஞ்சோலை எனப்படுகின்ற அழகர் கோயிலிலிருந்து, பெருமாள் கள்ளழகராக வந்து சித்ரா பௌர்ணமியன்று வைகையாற்றில் இறங்குவார்.

இலட்சக்கணக்கான மக்கள் கிராமப்புறங்களில் இருந்தும், பல்வேறு நகரங்களிலிருந்தும் வந்து வைகையாற்றில் இறங்கும் அழகரைக் கண்டு மகிழ்வார்கள். இக்கூட்டத்தில் தாம்கண்ட ஒரு காட்சியினை நெகிழ்வாக எடுத்துரைத்தார் ஒரு பெரியவர்.

கிராமத்திலிருந்து வருகிற ஒரு சிறிய குடும்பம். ஒரு கணவன், மனைவி, நான்கு வயதுப் பிள்ளை தோளில். இவர்கள் கூட்டத்துக்கு நடுவிலே இருந்து இறைவனை வணங்குகிறார்கள். அப்போது நான்கு வயதுப் பையனைத் தன் தோள்பட்டையின் இருபுறமும் அமரவைத்து வணங்கச் செய்கிறார் அத்தந்தை. எதற்காக, அவர் தோள்மீது தம் மகனைத் தூக்கி வைத்திருக்கிறார் என்று யோசித்தேன். கூட்டத்தில் மகன் தொலைந்து போய்விடுவான் என்றா? அப்படியும் இருக்கலாம். ஆனால் அத்தந்தையின் முகத்தில் ஒரு உறுதி தெரிந்தது. தன்னுடைய உயரம் ஐந்தரையடி, தன் மகனுடைய உயரம் மூன்றடி. தான் காணாத உயரத்தைத் தன் மகன், தன் தோள் மீதிருந்து காணவேண்டும் எனத் தந்தை நினைத்திருக்கலாம். தனக்குக் கிடைக்காத கல்வியும், வசதியும் தன் பிள்ளைக்குக் கிடைக்கவேண்டும் என்பதற்காக அத்தந்தை தன் பிள்ளையைத் தூக்கி நிறுத்தியிருக்கலாம் எனக் கூறினார் அப்பெரியவர்.

குடும்ப உறவுகளில் ஒப்புயர்வற்ற, தோழமைப் பண்பு கொண்டது தந்தைக்கும் மகனுக்குமான உறவேயாகும்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.