இராமச்சந்திரன் என்றாலே வெற்றிதான் (டி.ஆர்.இராமச்சந்திரன்)

தமிழ்த்திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி, பின்னர் காமெடியன் வேடம், குணச்சித்திர வேடம் எனப் பலவேடங்களில் ஜொலித்தவர் டி.ஆர்.இராமச்சந்திரன். ‘சபாபதி’ படத்தில் காமெடி கலந்த கதாநாயகனாக இவர் அறிமுகமாகிப் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகக் கதாநாயகனை அப்படியே கண்முன் கொண்டுவந்து திரையில் நிறுத்தினார் டி.ஆர்.இராமச்சந்திரன்.

இதேபோல் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த பிற்காலத்தில் லேடி சூப்பர்ஸ்டாராகவும் மிகச்சிறந்த பரதநாட்டியக் கலைஞராகவும் விளங்கிய வைஜெயந்தி மாலாவுடன் இவர் ‘வாழ்க்கை’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படமும் பெருவெற்றியைப் பெற்றது.

வழக்கமாகக் கதாநாயகனின் தோழனாக ஒரு காமெடி நடிகர் வருவார். ஆனால் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற படத்தில் டி.ஆர்.இராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க அவருக்குக் காமெடி நண்பனாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார் என்பது ஆச்சர்யமான செய்தி. பலபடங்களில் கதாநாயகனாக நடித்த இவர், தனக்கு ஏற்ற நகைச்சுவைக் கதைகளைத் தயாரித்து வெற்றியும் பெற்றார்.

எழுத்தாளர் தேவன் அவர்களின் ‘கோமதியின் காதலன்’ இவரது தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். அதன்பின்னர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், செவாலியே சிவாஜி கணேசனும், காதல் மன்னன் ஜெமினி கணேசனும் தமிழ்த்திரையுலகின் மூவேந்தர்களாக வலம்வர, இந்த மூவரோடும் இணைந்து காமெடி நடிகனாக நடித்த பெருமை டி.ஆர்.இராமச்சந்திரனுக்கே உண்டு.

பாக்தாத் திருடன், தங்கமலை இரகசியம் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருடனும் சிவாஜியுடனும் ஒரே நேரத்தில் நடித்தார் டி.ஆர்.இராமச்சந்திரன். பின்னர் நடிகை அஞ்சலிதேவி தயாரித்த ‘அடுத்த வீட்டுப்பெண்’ படத்தில் டி.ஆர்.இராமச்சந்திரன் கதாநாயகனாகவும், கே.ஏ.தங்கவேலு துணைக்கதாநாயகனாகவும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்து இரசிகர்களைச் சிரிக்க வைத்தனர். (கண்களும் கவி பாடுதே… பாடல் ஒன்றே சாட்சி).

பின்னர்க் கதாநாயகி, கதாநாயகன்களுக்கு அப்பாவாக நடிக்கத் தொடங்கினார். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவியின் தந்தையாக இவர்தான் வருவார். படிக்காத மேதை, வண்ணக்கிளி போன்ற படங்களில் காமெடியனாக வந்த இவர், இருவர் உள்ளம் படத்தில்; வில்லன் பாத்திரத்தையும் ஏற்றிருப்பார். இவருடைய அப்பாவித் தோற்றமும், உருண்டு திரண்ட கண்களும் இவருக்குப் பெரும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பெற்றுத்தந்தன. ‘சாது மிரண்டால்’ படத்தில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக ஏறத்தாழக் கதாநாயகனாக நடித்து அந்தப்படம் சிறப்பாக ஓடுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவரே.

ஒருமுறை என் இனிய நண்பர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் தயாரித்த ‘ராஜபார்வை’ படம் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் ஒரு அரிய செய்தியைச் சொன்னார். அந்தப் படத்தில் கதாநாயகியான மாதவிக்குத் தாத்தாவாகப் புகழ்பெற்ற இயக்குரும் பிரசாந்த் ஸ்டுடியோவின் அதிபருமான எல்.வி.பிரசாத் நடித்திருப்பார். ஆனால் அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்காக டி.ஆர்.இராமச்சந்திரன் அவர்களையே தான் தேர்வு செய்ததாகவும், இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு வந்த டி.ஆர்.இராமச்சந்திரன், ‘இந்தக்கால சினிமா எனக்கு ஒத்துவராது’ என்று சொன்னதாகவும், கமல் ஆச்சர்யத்தோடு சொன்னார். திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் இயக்கிய ‘தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை’ போன்ற படங்களிலும் எத்தனையோ பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும், நம் டி.ஆர்.இராமச்சந்திரன் தனித்துத் தன் நடிப்புத் திறமையைக் காட்டியிருப்பார்.

இத்தனை பெருமைமிகுந்த நடிகராகத், தயாரிப்பாளராக வெற்றிபெற்ற டி.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் குறித்த மேலும் சில செய்திகள்….

டி.ஆர்.இராமச்சந்திரன் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். கிட்டத்தட்ட 150திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பிற முக்கிய வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்துள்ளார். எந்த வேடத்தில் நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே இவரின் நடிப்புப் பெரும்பாலும் அமைந்திருந்தது.

        டி.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் கரூர் மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி பிறந்தார். இராமச்சந்திரனுக்கு சிறுவயதில் படிப்பில் ஈடுபாடு இல்லை. குடும்பநண்பர் இராகவேந்திரராவ் என்பவரின் நாடக அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது. தந்தையின் அனுமதியுடன், 1936ஆம் ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’ என்ற நாடகக் கம்பெனி கொல்லத்தில் முகாமிட்டிருந்தபோது அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

1940ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள். செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி எனக் கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர் இவரே. ஒருவிதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சித் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டது. காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள்தான்.

இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சகநடிகரான எஸ்.வி.வெங்கட்ராமன் (மீரா படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில் நாடகக் கம்பெனி தொடங்கியபோது, டி.ஆர்.இராமச்சந்திரனை அழைத்துக்கொண்டு பெங்க௵ரில் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரைச் சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனம் ‘நந்தகுமார்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். காரைக்குடியில் வெங்கட்ராமன் குழு திறமையைக் கண்டார் மெய்யப்பச் செட்டியர். அதிலும் தனித்துத் திறமையைக் காட்டிய இராமச்சந்திரனைச் செட்டியாருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. டி.ஆர்.இராமச்சந்திரன், டி.ஆர் மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். 1938இல் வெளிவந்த இப்படம் வெற்றி பெற்றது. அதன்பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்த அவருக்கு ‘வாயாடி’ என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்தநேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல மனமகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்த மெய்யப்பச்  செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதி’யை அதேபெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த இராமச்சந்திரனை நாயகனாக்கினார் மெய்யப்பச் செட்டியார்.

1941இல் வெளியான சபாபதி படம் வெற்றி பெற்றதை அடுத்து டி.ஆர்.இராமச்சந்திரனின் புகழும் பரவியது. படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்தவராக இருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர்.இராமச்சந்திரன்.

டி.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் 1954ஆம் ஆண்டில் சொந்த படக்கம்பெனி தொடங்கி ‘பொன்வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். இப்படத்தில் டி.ஆர்.இராமச்சந்திரன் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்தார். இத்திரைப்படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.

திரையுலகில் இளம்வயதில் நடிகராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, முதிய வயதுவரை தனக்கேற்றப் பாத்திரங்களைத் தேர்வு செய்து அதில் வெற்றியும் பெற்று விருதுகளையும் பெற்றவர் டி.ஆர்.இராமச்சந்திரன்.

               தமிழ்த்திரையுலகில் தனிப் புகழ்பெற்றவர் எம்.ஜி.இராமச்சந்திரன், வில்லன் நடிகராகப் புகழ்பெற்றவர் டி.கே.இராமச்சந்திரன், இவர்களோடு காமெடி நடிகராகக் கலக்கியவர் டி.ஆர்.இராமச்சந்திரன்.

இவ்வாறு இராமச்சந்திரன்களால் தமிழ்த்திரையுலகம் ஒரு காலத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.