விரல் நுனியில் உலகம்….

               மனிதகுல வரலாற்றில் மொழி எவ்வளவு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறதோ அதுபோல, எழுத்தும் அத்தகைய பெருமையுடையதாகவே விளங்குகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனிமொழி இருப்பதுபோல, எழுத்தும் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. பண்டைய காலத்தில் எழுத்துக்கள் களிமண் பலகைகளிலும், மரப்பலகைகளிலும் எழுதப்பட்டும் செதுக்கப்பட்டும் வந்தன. பின்னர் கல்வெட்டுகளாய், தாமிரப்பட்டயங்களாய், முடிவில் பனைஓலைகளிலும் எழுத்துக்கள் எழுதப்பட்டு வந்தன.

               பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அச்சுக்கலை தோன்றியபிறகு, எழுத்து, எளிமையாயிற்று. ஓலைகளிலும், தாள்களிலும், எழுத்தாணி மற்றும் மயிலிறகால் எழுதிக்கொண்டிருந்தவர்கள் அச்சுவடிவம் வந்தபிறகு, எழுத்துக்களை அச்சிடத் தொடங்கினார்கள். நூல்கள் வெளிவரத்தொடங்கின. இந்தவளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது தட்டச்சு இயந்திரம்.

தட்டச்சு இயந்திரத்தில் உள்ள எழுத்துக்களை நாம் விரல்களில் அழுத்தும்போது அவை தாள்களில் பதிவாகத் தொடங்கின. அதிலும் கார்பன் காப்பி என்ற முறைவந்த பிறகு, ஒரேநேரத்தில் பல பிரதிகளை எடுக்க முடிந்தது.

முதலில் ஆங்கிலத்திலும், ஜெர்மனியிலும் இருந்த தட்டச்சு இயந்திரங்கள் பின்னர் உலகெங்கிலும்; அந்தந்த நாட்டுக்குரிய மொழிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டன. தமிழில் தட்டச்சு இயந்திரம் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் ஆட்சி செய்தது எனலாம். அதிலும் குறிப்பாக அரசு அலுவலகங்களில் தட்டச்சு இயந்திரங்களின் பயன்பாடு மிகத்தேவையாக இருந்தது.

தட்டச்சுப் பயிற்சியில் லோயர் மற்றும் ஹையர் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்பட்டது. அதிலும் உயர்கல்வியை கற்கமுடியாத ஆண்கள், தட்டச்சுப் பயின்றிருந்தால் வேலை வாய்ப்பு நெருங்கி வந்தது. பெண்கள் கல்வி கற்கத் தொடங்கியபிறகு, அவர்களுக்கே உரிய பணியாக தட்டச்சு இயந்திரங்கள் உதவின.

அரசு அலுவலகங்கள் தவிர. நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல்துறை, பத்திரிக்கை துறை இவற்றில் எல்லாம் தட்டச்சு பயின்றோரே பெரும் பொறுப்பு வகித்தனர். தற்காலத்திலும் தட்டச்சு இயந்திரங்கள் இருந்தாலும் கணினியின் வருகைக்குப் பிறகு, கீ-போர்டுகளாக மாற்றம் பெறத் தொடங்கின.

எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் ஒரு பேட்டியில், ‘ஒரே நேரத்தில் பல பத்திரிக்கைகளில் உங்களுடைய தொடர்கள் வருகின்றனவே! எப்படி அவ்வளவு விரைவாக உங்களால் எழுத முடிகிறது?’ என்று கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் ‘நான் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோதே கல்லூரிக் காலங்களிலேயே டைப் செய்ய கற்றுக்கொண்டிருந்தேன். அதனால் கணினியில் தட்டச்சு செய்வது எனக்குச் சுலபமாக இருக்கிறது, ஆதலால் நான் எழுதுவதை நிறுத்திவிட்டுக், கணினியில் தட்டச்சு செய்யத்தொடங்குவதால் என்னால் விரைவாக வேலைகளைச் செய்து முடிக்க முடிகிறது’ என்றார்.

நான் அவரோடு பழகிய காலத்தில் பலமுறை அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். இரண்டுமணிநேரம் மூன்றுமணிநேரம் கூட நாங்கள் பேசிக்கொண்டிருப்போம். அப்போது ஒருநாள் நான் அவரிடத்தில் கேட்டேன். ‘கணிப்பொறியின் கீ-போர்டில் ஆங்கிலம், தமிழ் இரண்டில் எந்தமொழி சரியாக பொருந்திவரும்’ என்று நான் கேட்டவுடன், அறிவியல் அறிஞரான அவர், சற்று யோசித்துப் பார்த்துவிட்டு, ‘தமிழ்மொழிக்கு அந்த சிறப்பு உண்டு’ என்றார். நான் உடனே, ‘அது எப்படி?’ என்று கேட்டேன். அவரும் ‘தமிழில் உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து மொத்தம் எத்தனை?’ என்றார். நான் உடனே, ‘உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18’ என்றேன். ‘ஆம், இந்த 30 எழுத்துக்களும் கணிப்பொறியின் கீ-போர்டில் அடிப்பதற்கு வசதியாகப் பொருந்திவரும்’ என்றார். நானும் விடாமல் ‘அப்படிப்பார்த்தால் ஆங்கில எழுத்துக்கள் 26தானே, அது தமிழைக் காட்டிலும் குறைவுதானே’ என்று கேட்டவுடன், அவர் மென்மையாகச் சிரித்துக்கொண்டே, ‘இல்லை, ஆங்கில எழுத்துக்களில் ஸ்மால் லெட்டர், (Small letter), கேபிடல் லெட்டர் (Capital Letter) என்ற வேறுபாடு உண்டு. ஆக அவை மொத்தம் 52 எழுத்துக்கள். அவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால், நாம் அந்த ஷிப்ட்டைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் தமிழில் பெரிய ‘அ’னா சின்ன ‘அ’னா என்ற ஒன்று இல்லை’ என்றார். அவரது பதிலால் நான் வியந்தும் மகிழ்ந்தும் போனேன்.

இன்றைக்குக் கணிப்பொறியிலும், கையடக்க அலைபேசியிலும் (செல்போன்) கீ-போர்டு பட்டன்கள் வந்துவிட்டன. எனவே நாம் குறுஞ்செய்தி தொடங்கி, கவிதை, கட்டுரை, நாவல் வரை அந்த கீ-போர்டில் அடித்து வருகிறோம். சிலர் அதில் பத்திரிக்கையே நடத்துகிறார்கள். இத்தகைய பயன்மிகுந்த தட்டச்சு உருவான வரலாற்றையும் சற்றே பார்ப்போம்…

தட்டச்சுக்கருவி என்பது, பொறிமுறை (mechanical) மின்பொறிமுறை (electromechanical) அல்லது மின்னணுவியல் (electronic) கருவியாகும். இதிலுள்ள எழுத்துக்களுக்குரிய விசைகளை அழுத்தும்போது அக்கருவியில் பொருத்தப்படுகின்ற காகிதத்தின்மீது எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.

20ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்தியிலும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது.  1980களை அடுத்து கணினிகளும், அவற்றில் பயன்படுத்தக்கூடிய சொல்தொகுப்பிகளும்  அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவியினால் அச்சுப்பொறித்தல் செல்வாக்கிழந்தது. எனினும் இன்னும் பல வளர்ந்து வரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது.

பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுக் கருவிகளையே பயன்படுத்த ரஷ்யா 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் முடிவெடுத்தது.

எந்த ஒரு சாதனமும் தனிப்பட்ட ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதன்று. முதலில் ஒருவரால் அறிமுகப்படுத்தப்படும். பின்பு பலரின் முயற்சியால் தக்க வடிவம் கொடுக்கப்படும். மேலும் அதனை மேம்படுத்திப் பல புதிய வசதிகளைச் சேர்ப்பர். தட்டச்சு இயந்திரமும் இப்படித்தான் வளர்ச்சியடைந்துள்ளது.

தட்டச்சு இயந்திரம் கண்டுபிடிக்க மூலஆதாரமாக இருந்தது கூடன்பர்க் வடிவமைத்த அச்சு இயந்திரமாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி மில் என்பவர் முதன்முதலில் கி.பி.1714ஆம் ஆண்டில் தட்டச்சு இயந்திரம் போன்ற ஒரு சாதனத்தை வடிவமைத்தார். பின்பு அதற்கானக் காப்புரிமையையும் பெற்றார். அதற்குப் பிறகு அதனை மேம்படுத்த எவ்வித முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை. அதன்பின் பலரது முயற்சிக்குப் பின், தட்டச்சு இயந்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் எல் ேஷால்ஸ், என்பவரால் 1867ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரே தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

1877ஆம் ஆண்டில், ேஷால்ஸ் டைப்ரைட்டரின் உரிமைகளை ஆயுத உற்பத்தியாளரான ரெமிங்டனுக்கு விற்றார். தட்டச்சுப்பொறியை உருவாக்கிய வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். ரெமிங்டன் பொறியாளர்கள் பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்துக்களை அச்சிடும் திறனைச் சேர்த்தனர் (அசல் பதிப்பில் பெரிய எழுத்துக்கள் மட்டுமே எழுதப்பட்டன). இதைச்செய்ய, ஷிப்ட்கீ (ஷிப்ட்) சேர்க்கப்பட்டது.

               தமிழ் தட்டச்சுப் பொறியையும் தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவர் ஆர்.முத்தையா அவர்கள் என்று விக்கிபீடியா குறிப்பிடுகின்றது. இவர் 1886ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி யாழ்ப்பாணத்திலுள்ள கண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது.

               தட்டச்சில் அழுத்தம் கொடுத்து விரல்கள் நொந்தது ஒருகாலம். தொடுதிரை மூலம் எதையும் சாதிப்பது இந்தக் காலம்.

ஒருகாலத்தில் எழுத்தாணி, இன்றைய உலகத்தின் அச்சாணி.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.