விவேகானந்தரைச் சந்தித்த டெஸ்லா

2003ஆம் ஆண்டு முதல் நான் அமெரிக்காவுக்குச் செல்லுகிறபோதெல்லாம் தமிழ்ச்சங்கங்களில் பேசுவதோடு, அந்த நகரில் வாழ்ந்த மிகச்சிறந்த உலகப்புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்களின், எழுத்தாளர்களின், கவிஞர்களின் அறிவியல் கூடங்களுக்கும், நூலகங்களுக்கும் அப்பெருமக்கள் வாழ்ந்த வீடுகளுக்கும் சென்று பார்த்து வருவது வழக்கம். ஃபிலடெல்பியாவில் புதுக்கவிதையின் பிதாமகர் வால்ட் விட்மனின் வீட்டிற்கும் அவரது சமாதிக்கும் சென்று வந்திருக்கின்றேன். நியூஜெர்சிக்கு அருகில் ‘எடிசன்’ என்ற ஊரில் தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக் கூடத்திற்குப் பலமுறை சென்று வந்திருக்கிறேன்.
அதே நியூஜெர்சி நகரில் ஒருமுறை ஐன்ஸ்டின் வாழ்ந்த வீட்டிற்கும் என்னை அழைத்துச் சென்றார்கள். இப்படி நான் சென்றுவருவதையெல்லாம் பார்த்து மகிழ்ந்த என் நண்பர் திரு. ராஜா இளங்கோவன் அவர்கள், ‘இதே நியூஜெர்ஸியில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான டெஸ்லா அவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றிய அரிய விஷயங்களையெல்லாம் திரு.ராஜா அவர்கள்சொல்லச் சொல்ல அதைக் கேட்டு நான் வியந்து போனேன்.
மின்சார பல்பு பற்றி எடிசன் ஆராய்ந்து கண்டுபிடித்த அதேகாலத்தில் திரு. டெஸ்லா அவர்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்றும், 1893இல் சிகாகோ மாநகரில் விவேகானந்தர் சொற்பொழிவாற்ற வந்திருந்தபோது அந்தக் கூட்டத்திற்கான மின்விளக்கு ஏற்பாடுகளைச் செய்ததோடு, விவேகானந்தரின் சொற்பொழிவையும் கேட்டிருக்கிறார் என்றும் பின்னர் விவேகானந்தரையும் சந்தித்து உரையாடியிருக்கிறார் எனும் அரிய செய்திகளையெல்லாம் என்னிடத்தில் சொன்னார் திரு. ராஜா இளங்கோவன்.
அடுத்தமுறை நான் அமெரிக்கா போகும்போது நிச்சயமாக டெஸ்லா அவர்களுடைய நினைவு இல்லத்துக்குச் சென்று வரவேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துக்கொண்டேன். பின்னர் டெஸ்லா அவர்களைப் பற்றி படித்துப் பார்த்து வியந்து போனேன். இதோ அவரைப் பற்றிய செய்திகளை நீங்களும் படித்துப் பாருங்கள்….
விஞ்ஞான உலகில் பல முக்கிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் மிக முக்கியமானவர் நிக்கோலா டெஸ்லா. இவர் ஒரு கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆவார். இவர் 1856ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10ஆம்தேதி சிமில்ஜான் என்னும் இடத்தில் பிறந்தார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புகளினால் இவர் மிகவும் புகழ்பெற்றார்.
டெஸ்லாவின்; கண்டுபிடிப்புகள் இரண்டாம் தொழிற்புரட்சி உருவாவதற்குக் காரணமாயின என்றால் மிகையில்லை. இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது சமகால வரலாற்றாளர்களால், டெஸ்லா அவர்கள் ‘இயற்பியலின் தந்தை’ என்றும், “இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்” என்றும், “தற்கால மின்னியலின் காப்பாளர்’ என்றும் போற்றப்பட்டார்.
இன்று அமர்ந்த இடத்தில் இருந்தே, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அனைத்து மின்னணு பொருட்களையும் இயக்குகிறோம். அதன் முன்னோடி டெஸ்லாதான். 1898ஆம் ஆண்டு இவ்வுலகிற்கு முதன்முதலாக ரிமோட் மூலம் கருவிகளை இயக்கிக் காட்ட முடியும் என நிரூபித்தார்.
இன்று நாம் பலவிதமான ரோபோட்களை கண்டுபிடித்து வருகிறோமோ அவை எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டவர் டெஸ்லா தான். இவர் கண்டுபிடித்த ரிமோட் கண்ட்ரோல் ரோபோ தான் உலகிலேயே முதல் ரோபோ என கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதனால் இவர் ‘ரோபோக்களின் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார்.
1888இல் டெஸ்லா, எலெக்ட்ரிக் மோட்டார்களைக் கண்டுபிடித்தார். இதனைப் பொருத்திக் கார்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன.
டெஸ்லா அவர்கள் கண்டுபிடித்ததிலேயே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது ரேடியோதான். ஆனால் இத்தாலிய விஞ்ஞானி மார்கோனி, வரலாற்றில் ரேடியோவைக் கண்டுபிடித்தார் என்ற பெயரைத் தட்டிச் சென்று விட்டார். ஆனால் உண்மையில், டெஸ்லாவின் 1901ஆம் ஆண்டுக் கண்டுபிடிப்பை ஆதாரமாக வைத்தே மார்கோனி தனது ரேடியோவை உருவாக்கினார்.
நாம் இப்போது பார்க்கும் நியான் விளக்குகளை ஒத்த நியான் மற்றும் புளோரசன்ட் விளக்குகளை 1893லேயே கண்டுபிடித்தார் டெஸ்லா.
இவ்வுலகமே மெச்சும் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களிடம் ஒரு பத்திரிக்கையாளர் இப்படிக் கேட்டார். ‘இந்த உலகத்திலேயே மிக சிறந்த மேதையாக நீங்கள் இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?’ கொஞ்சமும் யோசனையின்றி ஐன்ஸ்டின், ‘எனக்கு எப்படித் தெரியும்? இது நீங்கள் டெஸ்லாவிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?’ என்றாராம். அதுதான் டெஸ்லாவின் பெருமைக்குச் சான்று.
டெஸ்லாதான் உலகின் சிறந்த மேதை! இப்படிச் சொன்னவர் ஆல்பர்ட்; ஐன்ஸ்டின்.
டெஸ்லாவின் காப்புரிமைக் கண்டுபிடிப்பைப் பயன்படுத்தி, நயாகரா நீர்விழ்ச்சியிலிருந்து உயர் அழுத்த மின்சாரம் தயார் செய்து பல மைல்கள் தூரத்திற்கு அதைக்கொண்டு செல்ல முடிந்தது. அமெரிக்கத் தொழிற்துறை வளர்ச்சியில் இவருக்குப் பெரும் பங்குண்டு.
எக்ஸ்-ரே கதிர், டெஸ்லா சுருள் ஆகியவற்றில் இவர் செய்த கருவிகள் இன்றும் பயன்படுகின்றன.
சுவாமி விவேகானந்தரின் உரையை டெஸ்லா அவர்கள் உட்கார இடம் இல்லாமல் மணிக்கணக்காக நின்றுகொண்டே கேட்டாராம். பின்னர் வேதாந்தக் கொள்கைகளின் முடிவுகள் வியக்கத்தக்க அளவில் பகுத்தறிவுக்கு ஒத்திருப்பதாக சுவாமி விவேகானந்தரிடம் டெஸ்லா அப்போதே கூறியிருக்கிறார். இதன்பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து 1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தொழிலதிபர் ஆஸ்டின் என்பவர் இல்லத்தில் சுவாமி விவேகானந்தரும், டெஸ்லாவும் மீண்டும் சந்தித்தனர்.
மெய்ஞானச்சூரியனாகிய விவேகானந்தரும், விஞ்ஞானச் சூரியனான டெஸ்லாவும் சந்தித்ததே இரு சூரியர்கள் சந்தித்ததைப் போன்றதுதானே! அறிவு ஆன்மிகத்தில் இருந்தாலும், அறிவியலில் இருந்தாலும் சுடர்விடும் என்பதே உண்மை.
டெஸ்லாவின் வரலாற்றை முழுமையாகப் படித்துப் பாருங்கள்.