எம்.கே.ராதா முதல் எம்.ஆர். ராதா வரை…சி.எஸ்.ஜெயராமன்

            தமிழ்த்திரையுலகில் இசைக்கு என ஒரு காலம் இருந்தது. பாடத்தெரிந்தவர்களே நடிகர்களாக, சூப்பர் ஸ்டார்களாகப் புகழ்பெற்று விளங்கினர். அதிலும் குறிப்பாக சாஸ்திரிய சங்கீதம் தெரிந்தவர்களுக்கே முன்னணியில் இடம் கிடைத்தது. திரையில் பாடகர்களே நடிகர்களானார்கள். அதனால் ஆரம்பகாலங்களில் ஒரு திரைப்படத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இடம்பெற்றதாக அந்தக்காலப் பாட்டுப்புத்தகங்கள் கூறுகின்றன.

      இவ்வாறு பாடத்தெரிந்த நடிகராக அறிமுகமாகிக் கதாநாயகனாகப், பின்னர் இசையமைப்பாளராக அதன்பின்னே பின்னணிப்பாடகராக மட்டும் தன்னை நிலைநிறுத்திப் புகழ்பெற்ற ஒருவர் திரு. சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் என்கின்ற சி.எஸ் ஜெயராமன் ஆவார்.

         இவருடைய குரல் தனித்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது (unique voice)  எம்.கே. தியாகராஜ பாகவதர், பி.யூ சின்னப்பாவுக்குப் பிறகுத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த எம்.கே.ராதா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் போன்ற நடிகர்களுக்கு இவர் பாடிய பாடல்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. குறிப்பாக, எம்.கே.ராதா அவர்களுக்குப் ‘பாசவலை’ படத்தில் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றன.

        ‘குட்டி ஆடு தப்பி வந்தா….’ என்ற பாடலும், ‘அன்பினாலே உண்டாகும் இன்ப வலை’ என்ற பாடலும், சி.எஸ்.ஜெயராமனுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. இதேபோல எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் ‘புதுமைப்பித்தன்’ படத்திலும், சிவாஜி அவர்களுக்குப் ‘பாவை விளக்கு’ப் படத்திலும் (வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி, காவியமா நெஞ்சில் ஓவியமா) ஆகிய பாடல்கள் என்றும் மறக்கமுடியாதவை. சம்பூர்ண இராமாயணம் படத்தில் டி.கே. பகவதி அவர்களுக்கு இவர் பாடிய ‘இன்று போய் நாளை வா!’ என்ற பாடலும், ‘சங்கீத சௌபாக்கியமே’ என்னும் இராகமாலிகைப் பாடலும், நம் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

       இவையெல்லாவற்றுக்கும் மேலாகப், படத்தில் அசரீரியாக (ஆள் தோன்றாமல் குரல் மட்டும் ஒலிப்பது) பாடும் பாடல்கள் சி.எஸ்.ஜெயராமனுக்குக் கிடைத்தப் புதையல்கள் எனலாம் (குற்றம் புரிந்தவன்… ரத்தக் கண்ணீர்) இதுதவிர தனிமேடைகளிலும் அவர் சங்கீதக் கச்சேரிகள் செய்து வந்திருக்கிறார்.

எங்கள் ஊர் சோழவந்தானில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் திரு.சி.எஸ.ஜெயராமன் அவர்கள் பாட வந்தபோது, ‘தங்கப்பதுமை’ படத்தில் வந்த ‘வீடற்ற பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்;…’ எனும் பாடலை எங்கள் ஊர் ரசிகர்கள் பலமுறை ஒன்ஸ்மோர் கேட்டு அவருக்குப் பணத்தினாலேயே மாலை போட்டார்கள். புராணப் படங்கள், சரித்திரப் படங்கள், சமூகப் படங்கள் என எல்லாவகைப் படங்களுக்கும் அவருடைய குரல் பொருந்திவந்தது ஒரு அற்புதம் எனலாம். மேலும் அவரைப் பற்றிய சில அரிய செய்திகள்….

     சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் பிரபல திரைப்படப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும் ஆவார். இவர் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி பிறந்தார். இவரது சொந்தஊர் கோயில் நகரமான சிதம்பரம் ஆகும். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர்.

        சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் தி.மு.க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதயி;ன அண்ணனும், மு.க.முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு திரைக்கதை எழுத்தாளராகச் சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.

       இவர் உதயனன் வாசவதத்தா மற்றும் ரத்தக் கண்ணீர் ஆகிய இரண்டு படங்களுக்குத் தனியாக இசையமைத்துள்ளார். மேலும் விஜயகுமாரி, கிருஷ்ண விஜயம் ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிக்கத்தக்கது.

    சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் கிருஷ்ண லீலா, பக்த துருவன், நல்லதங்காள், லீலாவதி, சுலோச்சனா, இழந்த காதல், பூம்பாவை, கிருஷ்ண பக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

      திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப்பாடகராகவே இவர் புகழ்பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் ‘தமிழிசைச் சித்தர்’ என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமின்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.

  இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெறுகின்றன.

        திரையுலகில், பின்னணியிலும் முன்னணியாய் நின்றவர் சி.எஸ். ஜெயராமன்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.