புதிய பார்வை

               பார்வை என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தவிரவும், கண்ணின் பயன்பாடு கல்விக்கான வழி எனவும் காலங்காலமாகக் கூறப்பட்டு வருகின்றது. ஆயினும் பார்வையற்ற மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழமுடியாதா என்றால் முடியும். இன்னும் சொல்வதாக இருந்தால் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன் குறைவாக உள்ளவர்கள் கூட எத்தனையோ சாதனைகள் படைத்திருப்பதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.

               மிகப்பெரிய சாதனைகளைச் செய்த ஹெலன் ஹெல்லர், ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்தபோது மிகக் கொடுமையான விஷஜுரத்தால் தாக்கப்பட்டு பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியாத நிலைக்கு ஆளானார். பெண்குழந்தையாக இருந்தபோதும்; இடைவிடாத முயற்சியின் காரணமாக எழுத்தாளராக, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பவராகப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

               ஒருமுறை திண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு சிறப்புப் பேச்சாளனாக என்னை அழைத்திருந்தார்கள். 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அந்தக் கூட்டத்திற்குப் பங்கேற்க வந்திருந்தனர். கலந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் 10வயதிலிருந்து 15 வயதுக்குட்பட்டவர்கள்.

               மேடைக்குச்  சென்று பேச்சைத் தொடங்கும் முன், வந்திருந்த மாணவ, மாணவியர்களாகிய அவர்களைப் பார்த்து நான் திடுக்கிட்டுப் போனேன். காரணம் அவர்கள் அனைவரும் பார்வையற்றவர்கள்.

  பேச்சைத் தொடங்குவதற்கு முன்பாகச் சற்று யோசித்தேன். ஏனெனில் பார்வையுள்ளவர்களிடத்திலே பேசுகிறபோது பேச்சாளனுடைய அங்க அசைவுகள், முகபாவங்கள் இவற்றின் மூலமாகத் தான் சொல்ல வருகின்ற கருத்தை அதிகச் சிரமமின்றி பார்வையாளர்களுக்குப் புரியவைக்க முடியும். ஆனால் பார்வையற்றவர்களிடத்திலே பேசுகிறபோது குரல் ஒலி ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு ஏற்ற இறக்கங்கள் மூலம், (Modulation) மட்டுமே நாம் சொல்ல வருகிற கருத்தைப் புரியவைக்க வேண்டிய சூழ்நிலை.

               நான் அவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக, சிறிய கேள்வி பதில்கள் மூலமாக அவர்களைப் பேசுமாறும், மகிழுமாறும் செய்து கேள்விக்கு விடை சொல்கிறவர்க்கு சிறிய பரிசுப்பொருட்கள், சாக்லேட் இவற்றைக் கொடுத்து பேச்சில் அவர்களை ஈடுபடச்செய்தேன். ‘பார்வையற்றவர்களாக இருந்தாலும் கல்வியால் சிறந்து விளங்கிய இரண்டு புலவர்களைச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டவுடன் இரண்டு குழந்தைகள் மிக ஆர்வமாக எழுந்து அந்தக்கவி வீரராகவ முதலியார், மாம்பழக் கவிராயர்’ என்று விரைந்து விடை சொன்னார்கள்.

     பிறகு ஒரு கதையின் மூலமாகவும் எனக்கேற்பட்ட அனுபவம் ஒன்றினையும் நான் அவர்களிடத்திலே சொல்லத் தொடங்கினேன்.

               “இந்த உலகில் யார் பார்வையற்றவர்கள்? ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். பொதுமக்கள் நடந்து செல்கின்ற வீதி ஒன்றில் ஒரு குடிகாரன் குடித்துவிட்டு, தான் குடித்த கண்ணாடி பாட்டிலை நடுரோட்டில் போட்டு உடைத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். வீதியெங்கும் கண்ணாடிச் சிதறல்கள், தெரியாமல் மிதித்துவிட்டால் கால்களைக் கிழித்துவிடும்.

               அப்போது அந்த வீதிவழியே பார்வையுள்ள ஓர் ஆன்மீகவாதி வருகிறார். “அடக்கடவுளே! எங்கு பார்த்தாலும் கண்ணாடித் துண்டுகள். இது கடவுளுக்கே அடுக்குமா? கேட்க நாதியில்லையா?” என்று சொல்லிவிட்டு தம் காலில் கண்ணாடி படாமல் ஒதுங்கிச் செல்கிறார்.

               அடுத்து பொதுப்பணி செய்பவர் ஒருவர், ‘ஆஹா! இப்படி கண்ணாடி துகளாகக் கிடந்தால் பொதுமக்கள் கதி என்னவாகும்? அரசாங்கம் என்ன செய்கிறது? நான் உடனடியாக அரசாங்கத்துக்கு மனு எழுதப்போகிறேன்!’ எனக் கூறிவிட்டு அவரும் விலகிப் போகிறார்.

               அப்போது பார்வையற்ற சகோதரர் ஒருவர் தன் கையில் உள்ள குச்சியின் உதவியால் மெதுவாக நடந்து வருகிறார். அந்த இடத்திற்கு வந்தவுடன் அவரது கையில் இருந்த குச்சி, உடைந்த கண்ணாடித்துண்டுகள் மீது பட ‘க்ளன்’ என்று சத்தம் கேட்டது. உடனே அந்தப் பார்வையற்ற சகோதரர், “ஐயோ! கண்ணாடிகள் அல்லவா உடைந்து கிடக்கின்றன. குழந்தைகளும் பெரியவர்களுயும் வந்தால் காலைக்குத்திக் கிழித்துவிடுமே!” என்று சொல்லி, அந்த இடத்தில் தரையில் குனிந்து, தன் கைகளாலே மெல்ல மெல்லத் தடவித் தடவி அந்தக் கண்ணாடித் துகள்களைத் தன்னால் முடிந்தவரை சேகரித்து, அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, மீண்டும் தன் குச்சியை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து செல்கிறார்.

               சொல்லுங்கள் நண்பர்களே! இவர்களில் யாருக்குப் பார்வையில்லை? குடித்துவிட்டுக் கண்ணாடி பாட்டிலை உடைத்த குடிகாரனுக்கு கண்ணிருந்தும் பார்வையில்லை. சமயப் பிரசாரகர், பொதுநலவாதி இவர்களுடைய கண்களில் கண்ணாடிச் சிதறல்கள் பட்டும் அவர்கள் அதை எடுத்துச் சுத்தப்படுத்தவில்லை. அவர்களுக்கும் பார்வையில்லை. ஆனால் பிறவியிலேயே பார்வையில்லாமல் இருந்தும், ஏனை புலன்களால் தொட்டுணர்ந்து கண்ணாடித்துகள்களை கைகளில் எடுத்து, பிறருக்கு நன்மை செய்ய தன்னறிவைப் பயன்படுத்தினாரே, அந்த சகோதரருக்குப் பார்வையில்லாமலிருந்தும் இதனைச் செய்துள்ளார். உண்மையில் பார்வையுடையவர் அவர்தானே! எனப் பேசியபோது, பார்வையில்லாமல் செவியினால் மட்டும் இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அத்தனை குழந்தைகளும் தங்களை மறந்து மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள்.

               நான் மேலும் தொடர்ந்தேன். ஒருமுறை மாலைநேரத்தில், அரங்கத்தில் நடைபெறுகிற இலக்கியக்கூட்டம் ஒன்றுக்கு நான் செல்ல வேண்டியிருந்தது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறியபோது மாலை கழிந்து இருள் வரத்தொடங்கியது. மழையும் மிகக் கடுமையாகப் பெய்துகொண்டிருந்தது. எனக்கோ நான் பேசப்படுகிற அரங்கம் எங்கிருக்கிறது என்று தெரியாது. ஆனால் எந்தப்பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று தெரியும். பேருந்து போய்க்கொண்டிருந்தபோது நான் பேசவேண்டிய இடம் எங்கிருக்கிறது என்பதை, எனக்கு முன்னால் இருந்தவர்கள், என்னோடு இருந்தவர்கள், எனக்குப் பின்னால் இருந்தவர்கள் நின்று கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரிடத்திலும் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருவரும் சரியான விடை சொல்லவில்லை அல்லது தங்களுக்கு அந்த இடம் தெரியுமா தெரியாதா என்பதைக்கூட வெளியே காட்டிக்கொள்ளாமல் தாங்கள் இறங்கவேண்டிய இடத்தை நோக்கி அமர்ந்து விரைந்து கொண்டிருந்தார்கள்.

               அப்போது நான் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னே சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த ஒரு பார்வையற்ற இளைஞர் மெதுவாக எழுந்து என்னிடத்திலே வந்து, ‘நீங்கள் பேச்சாளர் ஞானசம்பந்தன்தானே! என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னவுடன், உடனே அவர் என் கைகளைச் சந்தோஷமாகக் குலுக்கி, ‘உங்களுடைய நகைச்சுவையான பேச்சை நான் வானொலியில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். வாங்க சிரிக்கலாம்’ என்ற உங்களுடைய நகைச்சுவை ஒலிநாடாப் பேச்சையும் கேட்டிருக்கிறேன். உங்களுக்கு இப்போது என்ன உதவி வேண்டும்’ என்று கேட்டார்.

               உடனே நான், இன்ன இடத்திலே இந்த அரங்கத்திலே பேசவேண்டும். அந்த அரங்கம் எங்கே இருக்கிறது என்றுதான் விசாரித்துக்கொண்டிருந்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை என்று கூறினேன். உடனே அவர் ‘எனக்குத் தெரியும், நான் இறங்குகிற இடத்தில் என்னோட நீங்களும் இறங்குங்கள்’ என்றார். பிறகு இருவரும் நல்ல இலக்கியங்களைப் பற்றியும், தான் எழுதியுள்ள புதுக்கவிதைகள் குறித்தும் என்னிடத்திலே பேசிக்கொண்டு வந்தார்.

   நாங்கள் இறங்கவேண்டிய இடம் வந்தது. கீழே இறங்கியபோது கடும் மழை பெய்துகொண்டிருந்தது. அதை உணர்ந்து கொண்ட அந்த நண்பர், தன் கையிலிருந்து ஒரு குடையை எடுத்து என் கையிலே பிடித்துக்கொள்ளச் சொன்னார். பிறகு அதே பையிலிருந்து தான் நடந்து செல்வதற்கு வசதியாக ஒரு அலுமினியக் குச்சியையும் எடுத்துக் கொண்டார்.

          எங்கும் இருட்டு, மழை பெய்து கொண்டிருந்தது. தெரு விளக்குகள்கூட இல்லை. நான் திகைத்து நின்றபோது அவர் சொன்னார். ‘ஐயா! என் தோளைப் பிடித்துக் கொள்ளுங்கள். சாலையில் தண்ணீர் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்பகுதியில் மேடு பள்ளங்கள் எங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியும். நீங்கள் பயப்படாமல் வாருங்கள்’ என்று சொல்லி, குச்சியினால் சாலையில் மெதுவாகத் தட்டிக்கொண்டே அந்தக் கொட்டும் மழையில் அவர் செல்ல, நான் ஒரு கையில் குடையை அவருக்கும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, மறுகையில் அவர் தோளைப் பற்றிக்கொண்டு, அவரைப் பின்தொடர்ந்து நடக்கத் தொங்கினேன்.

       சிறிதுநேரம் நடந்திருப்போம். எந்தத் திசையில் போகிறோம் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. ஓர் கட்டடத்தின் அருகிலே வந்து நின்ற அவர், “ஐயா! நீங்கள் செல்ல வேண்டிய அரங்கம் எதிர்திசையிலே இருக்கிறதா என்று பாருங்கள். அந்தப் பெயர்ப்பலகையில் அரங்கத்தின் பெயர் இருக்கிறதா! பாருங்கள்” என்றார்.

       நான் சற்று உற்றுப் பார்த்தேன். நாங்கள் நின்ற இடத்தின் எதிர்க் கட்டடம்தான் நான் செல்லவேண்டிய அரங்கம். நான் மிகுந்த மகிழ்ச்சியோடு அவர் கைகளைப் பற்றிப் பிடித்து நன்றி தெரிவித்து, ‘நீங்கள் தங்கியிருக்கும் வீடு எங்கே இருக்கிறது?’ என்றேன். ‘இதோ அடுத்த வீடுதான், நீங்கள் மேடைக்குச் செல்லுங்கள். முடிந்தால் சற்றுநேரத்தில் நானும் வருகிறேன்’ என்று சொல்லி என்னிடத்தில் விடைபெற்று மெதுவாக நடந்து சென்றார்.

               இந்த அனுபவத்தை நான் அந்தக் குழந்தைகளிடம் சொல்லி “பார்வையில்லை” என்பதைக் குறைபாடாக ஒருபோதும் கருதாதீர்கள். புதிய திசைகளை நோக்கி எண்ணங்களைச் செலுத்துங்கள். புதிய பார்வை உங்களுக்குக் கிடைக்கும்’ எனச் சொல்லிவிட்டு,

               ‘நீங்கள் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்?’ என்று நான் அவர்களைப் பார்த்துக் கேட்டேன். அவர்களில் உற்சாகமாக எழுந்த ஒரு பெண், “நான் உங்களைப்போல புகழ்மிகுந்த பேச்சாளராக வருவேன்” எனச் சொன்னபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் ஏற்பட்டது.

               புதிய பார்வைகள் புதிய உலகைக் காட்டும், புத்தொளியை மீட்டுத் தரும்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.