கிராமியப் பொருளாதாரம் நாட்டின் எதிர்காலம் – ஜே.சி. குமரப்பா

இந்தியப் பொருளாதாரம் கிராமங்களைச் சார்ந்ததே என்பது அறிஞர்களின் கருத்து. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களிடத்தில் ஒரு ஆங்கிலேயர், ‘வாட் இஸ் யுவர் கல்ச்சர்?’ என்று கேட்டபோது, அவர் சட்டென்று, ‘அக்ரிகல்ச்சர் இஸ் அவர் கல்ச்சர்’ என்று பெருமையோடு கூறினாராம்.
காந்தியடிகளின், கிராமப்பொருளாதாரக் கொள்கைகளின் தளபதி என்று அழைக்கப்பட்டவர் திரு.ஜே.சி. குமரப்பா அவர்கள். அவர் தமிழகத்திலே பிறந்து அமெரிக்காவிலே பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தபோதும், இந்திய மண்ணையும், சுற்றுப்புறச் சூழலையும், மனிதர்களையும் பெரிதும் நேசித்தார். இன்னும் சொல்லப்போனால் அவர் அன்றே இரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும், இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் குரல் எழுப்பினார்.
வளம்மிகுந்த நம் மண்ணுக்கு இயற்கை உரங்களே தாய்ப்பால் போல வலிமை தரும் என்றார். அதை வலியுறுத்தும் விதமாக, ஒருமுறை பார்லிமெண்டுக்கு மாட்டுவண்டியில் வந்தாராம் ஜே.சி. குமரப்பா. அப்போது அவரைப் பார்த்துச் சிரித்த அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் சிரித்துக்கொண்டே ‘நிலங்களை டிராக்டர்கள் கொண்டு உழுக வேண்டாம் மாடுகளே போதும் என்று கூறுகிறீர்களே, ஏன்?’ என்று கேட்டார்களாம்.
அதற்குக் குமரப்பா அவர்கள், ‘டிராக்டர்கள் சாணம் போடாதே’ என்றாராம். அதுமட்டுமல்லாமல் அந்தக்காலத்தில் 65ரூபாய் இருந்தால், கிராமத்து மண்ணையும், இயற்கைப் பொருள்களையும் வைத்து ஒரு வீட்டைக் கட்டிவிட முடியும் என்று சொல்லியதோடு, அதைச் செய்தும் காட்டினார். இன்றைக்கும்கூட, மதுரை காந்தி மியூசியத்தில் ஜே.சி.குமரப்பா குடில் என்று அவர் நினைவாக ஓர் அரங்கத்திற்கு பெயரிடப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தகைய பெருமகனார் குறித்த மேலும் சில விரிவான செய்திகள்…
கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என சொன்னவர் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளைத் தந்தவர் ஜே.சி.குமரப்பா அவர்கள். ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா என்னும் முழுப்பெயர் கொண்ட ஜே.சி. குமரப்பா காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக்கொடுத்தவர். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழரான இவர், பட்டயக் கணக்கராக விளங்கினார். பின்னர் நிர்வாக மேலாண்மை, பொருளியல் ஆகிய துறைகளிலும் தகைமைகள் பெற்றார்.
1892ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை சென்னையிலும், உயர்கல்வியை இலண்டனிலும் பயின்று, சிலகாலம் அங்கேயே பணியாற்றினார். பின்னர் அமெரிக்கக் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படிப்பதற்காகச் சேர்ந்தார். அப்போது, ‘இந்தியா ஏன் வறுமைப்பட்டது?’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
பிறகு இந்தியாவின் நிலைகுறித்து ஆய்வுசெய்த குமரப்பா அவர்கள், 1927ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். தான் மேற்கொண்ட ஆய்வுகுறித்துக் காந்தியிடம் உரையாடினார். காந்தியின் வேண்டுகோளின் பேரில், குஜராத் கிராமங்களின் பொருளாதாரம் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ‘யங் இந்தியா’ பத்திரிக்கையின் ஆசிரியராகக் குமரப்பாவை நியமித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வந்தார் குமரப்பா. இதன் காரணமாக அவர் சிறைக்கும் சென்றார். கிராமங்கள் தொடர்பாக காந்தியடிகள் கண்ட கனவிற்கு நிகராக, கிராமியப் பொருளாதாரத்தை முழுமையாக நம்பியவர் குமரப்பா. கிராமங்களில் இருக்கும் தொழில்களும், கிராமங்களில் விளையும் பொருட்களும், முழுமையாகக் கிராமங்களுக்கே பயன்பட வேண்டும் என்றார். இதன்மூலம் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறும் என்பதே அவரது கொள்கை.
உணவுக்கான பயிர் விளையவேண்டிய இடத்தில், பணப்பயிர்கள் விளைவதையும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் புகையிலை விளைவதையும் அவர் எதிர்த்தார். இயற்கை வளங்களை அழித்துவிட்டு, அதன்மீது நடைபெறும் பெருந்தொழில்களை அவர் எதிர்த்தார்.
இயற்கையை எதிர்த்து நடக்கும் தொழில்கள், நீண்ட நாட்களாக நடக்க முடியாது எனவும், இயற்கையோடு இணைந்த தொழில்களே பலநூறு ஆண்டுகள் தொடரும் என்றும் கூறினார். ஆனால் தற்போது நாம் அந்தக் கட்டத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.
ஜே.சி.குமரப்பா அவர்கள் தனது பொருளாதாரக் கொள்கைகளை ஒட்டுண்ணிப் பொருளாதாரம், சூறையாடும் பொருளாதாரம், கூட்டிணக்க பொருளாதாரம், பொருளாதாரம், முனைவுப் பொருளாதாரம் என ஐந்து வகையாகப் பிரித்தார். இவற்றில் சேவைப் பொருளாதாரம் என்பதனை நோக்கியே இந்தியா இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்தியாவில் பசுமைப் புரட்சி துவங்கியபோது, இயற்கை உரங்களுக்குப் பதில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை அவர் கண்டித்தார்.
‘ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முன்பு, அங்கே இருக்கும் ஏழைகளின் விலா எலும்புகளை எண்ணுவேன். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு, அதே ஏழைகளின் விலா எலும்புகளில் ஏதேனும் சதைப்பற்று காணப்படுகிறதா எனப் பார்ப்பேன். அப்படிக் காணப்பட்டால் அந்தத் திட்டம் வெற்றி எனக் கருதுவேன்’ என்றார் குமரப்பா.
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி ஜே.சி.குமரப்பாவின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி நிகேதன் ஆசிரமத்தில் குமரப்பா கிராமிய தன்னாட்சி நிறுவனம் துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் மகளிர் மற்றும் இளையோருக்குப் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மண்ணை நேசித்த மாமனிதர்! ஜே.சி.குமரப்பா