புத்தாண்டு வாழ்த்துகள்… மார்கழியின் பெருமை

‘மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன்’ என்பது பகவத்கீதையில் கண்ணபெருமான் சொன்ன வார்த்தை.
‘காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்’
என்று சொன்ன கவியரசு கண்ணதாசனும்,
‘மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை’
என்று மார்கழி மாதத்தைப் பாராட்டுகின்றார்.
அப்படி என்ன அந்த மார்கழியின் சிறப்பு என்று யோசித்துப் பார்த்தேன். இந்த மார்கழி மாதத்தில்தான் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவப் பெருமக்களுக்குரிய ‘திருஆதிரை’த் திருநாள் வருகிறது.
திருமாலை மட்டும் போற்றி வணங்கும் வைணவ அடியார்களுக்குரிய ‘வைகுண்ட ஏகாதசி’த் திருநாளும் இம்மாதத்தில்தான் வருகிறது. (2021ஆம் ஆண்டு கார்த்திகையிலையே வந்துவிட்டது, திருவரங்கத்தில் மட்டும்)
கிறித்தவ மதத்தினருக்குரிய ‘கிறிஸ்துமஸ்’ திருநாளும் இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது.
உலகத்தில் உள்ள அத்துனை மனிதர்களும் கொண்டாடும் ஆங்கிலப் புத்தாண்டு, இம்மார்கழி மாதத்தின் நடுவிலேதான் வருகிறது.
இனி அறிவியல் முறையில் ஆராய்ந்து பார்த்தால், ‘ஓசோன்’ படலக் காற்று பூமியைச் சுற்றிப் பாதுகாப்புக் கவசமாக, சூரிய ஒளியின் புறஊதா கதிர்களிடமிருந்து பூமியை, இதில் வாழும் உயிர்களைக் காத்து வருகிறது என்னும் அறிவியல் கூற்றுப்படி, அந்த ஓசோன் என்னும் தூய ஆக்சிஜன் (O3) எனும் உயிர்க்காற்று சுழன்றடித்துத், தமிழகத்தை நோக்கித் தவழ்ந்து வரும் காலம் இந்த மார்கழியின் அதிகாலைப்பொழுதில்தானாம்!
அதனால்தான் தேவர்கள் துயில் எழும் காலமாகவும், இறைவனைத் துயில் எழுப்பும் காலமாகவும் (திருப்பள்ளி எழுச்சி) கொண்டு, வீட்டில் உள்ள பெண்கள் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே திறந்தவெளியில் கோலமிடச் செல்ல வேண்டும். ஆண்கள், ஊர் வீதிகளில் ‘திருப்பாவை’ ‘திருவெம்பாவை’ப் பாடல்களைப் பாடிக்கொண்டு உலா வருதல் வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனரோ என எண்ணத் தோன்றுகிறது.
நட்சத்திரங்களில் ‘திரு’ எனும் அடையோடு குறிப்பிடப்படும் நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை, மற்றது திருவோணம்.
இந்த ஆதிரைத் திருநாளில்தான் சிதம்பரத்தில் திருநடனம் புரியும் சிவபெருமானைக் காணச் செல்லவேண்டும் என்று, ஒடுக்கப்பட்ட இனத்திலே பிறந்த ‘திருநாளைப் போவார்’ என்று அழைக்கப்பட்ட ‘நந்தனார்’ விரும்பினாராம். ஆனால் அவரது ‘ஆண்டே’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட அவரது எஜமானர், ‘நாளை போ’, ‘நாளை போ’ என்று ஒவ்வொரு நாளும் சொல்ல இவரும், ‘நாளை தில்லை செல்வேன்’ என்று நாள்தோறும் சொல்லி வந்ததால், ‘திருநாளைப் போவார்’ என்று அழைக்கப்பட்டாராம்!
மாயவரம் என்று அழைக்கப்படுகின்ற மயிலாடுதுறையில் 19ஆம் நூற்றாண்டில் பிறந்த சிறந்த இசைத்தமிழ் அறிஞரான ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ மேற்சொன்ன நந்தனாரின் வரலாற்றை, ‘நந்தனார் சரித்திர கீர்த்தனை’ என்ற பெயரில் அரிய நூலாகப் படைத்துள்ளார் என்பது குறிக்கத்தக்கது. இந்த நந்தனார், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். சேக்கிழார், பெரிய புராணத்தில் நந்தனார் கதையைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சொன்ன திருத்தொண்டர் தொகையிலிருந்து எடுத்துச்சொல்ல, அதே கதையை கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனை வடிவில் பாட, பிற்காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ‘கிந்தனார்’ என்று அற்புதமான வில்லுப் பாட்டாகவும், கதாகாலட்ேஷபமாகவும் (நல்ல தம்பி படத்தில்) நடித்துக்காட்ட, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ‘புதிய நந்தன்’ என நாடக வடிவமாக்கித் தர, ‘காலந்தோறும் நந்தன் கதை’ என்று ஒருவர் மிகச்சிறந்த ஆய்வு நூலையும் தந்துள்ளார்.
இந்தத் திருஆதிரை நாளின் சிறப்பை, தில்லையாகிய சிதம்பரத்தில் கண்டு மகிழ இன்றைக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவதைக் காண்கின்றோம்.
இராமநாதபுரம் செல்லும் வழியில் ‘உத்திரகோச மங்கை’ என்னும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள பச்சை மரகத நடராசப் பெருமானின் திருநடனத் திருமேனி, காண்போரைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் அற்புதத் திருமேனி! குஞ்சிதபாதம் என்னும் ‘தூக்கிய திருவடி’யாகச் சிவபெருமானின் அருமையான திருநடனக் காட்சியை நாம் காண வேண்டுமானால், இந்தத் திருஆதிரைத் திருநாளில்தான் அங்கு செல்ல வேண்டும். ஏனென்றால், மற்றைய நாட்களில் இந்த மரகத நடராசத் திருமேனியைச் சந்தனக்காப்பினால் அலங்கரித்திருப்பார்கள்.
இவ்வாறாக எல்லா மதத்தினருக்கும் உரிய எல்லா விழாநாட்களும் மார்கழியில் வருவது ஒரு தனிச் சிறப்பாகும். இதோ மார்கழியில் 2022ஆம் ஆண்டு புத்தாண்டாகப் பிறந்து விட்டது. பசியின்றிப், பகையின்றிப், பிணியின்றி உலகமக்கள் நல்வாழ்வு வாழ இறையருள் துணை நிற்கட்டும். எடுத்தகாரியம் யாவினும் வெற்றி! என்ற இன்சொல் எங்கும் ஒலிக்கட்டும்!
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.