சுதந்திரப் போராட்டத்தில் முருகப்பெருமான்

அது சுதந்திரப்போராட்டக் காலம். நாட்டு விடுதலைக்காகத் தலைவர்களும், இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அச்சமயத்தில் நாடகக்; கலைஞர்களும், திரைக் கலைஞர்களும் தங்களுக்குரிய பங்கை ஆங்கிலேய எதிர்ப்பைத் தாங்கள் கற்ற கலைகள் மூலமாக வெளிப்படுத்தி வந்தனர்.
ஒரு சமயம் சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய ‘வள்ளி திருமணம்’ நாடகம் மேடையில் நடந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இறைபக்தியோடும், தேசபக்தியோடும் அந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது முருகன் வேடமிட்ட நடிகர் நாடகத்திற்குரிய புராணப் பாடல்களோடு ஆங்கிலேய எதிர்ப்புப் பாடல்களையும் பாடத் தொடங்கினார். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த போலீஸ் அதிகாரிகள் மேடையிலேயே அவரைக் கைது செய்வதற்கு வந்தார்கள்.
உடனே அவர் சற்றும் தயங்காது, ‘பரமசிவன் மகனைப் பழனி ஆண்டியாகிய முருகப்பெருமானையா கைதுசெய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டவுடன் அதிகாரிகள் தயங்கி நின்றனர். மக்களும் ஆவேசமாக எழுந்து கோபக்குரல் எழுப்பினர். உடனே போலீஸ் அதிகாரிகள் நாடகக் கொட்டைகைக்கு வெளிப்புறம் வந்து காத்திருந்தனர்.
நாடகம் முடிந்து முருகவேடம் போட்ட நடிகர் வந்தார். ‘உன்னைக் கைது செய்கிறோம்’ என்றார்கள் காவலர்கள். ‘எதற்காக’ என்று அவர் கேட்டார். ‘நீ தேசவிரோதப் பாடல்களைப் பாடினாய்’ என்று அவர்கள் சொன்னவுடன், ‘நான் எங்கே பாடினேன், அப்பன் முருகன் அல்லவா பாடினான்’ என்று அவர் கேட்க, அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றார்கள்.
அப்படி ஆங்கிலேயர்களைத் திகைக்க வைத்த நடிகர்தான் விஸ்வநாத தாஸ். இவர் வாழ்ந்த ஊரான மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்றைக்கும் இவருக்கு இவர் நினைவாக இவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றி மேலும் சில விரிவான செய்திகள்…
நம் நாடு சுதந்திரம் பெறத் தங்களை முழுமையாக அர்ப்பணித்தத் தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் அமரகவி தியாகி விஸ்வநாத தாஸ். தன்னுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்துமே நாட்டின் நலனுக்கு என வாழ்ந்தவர். இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரமும், நாடகக் கலைஞரும் ஆவார்.
தியாகி விஸ்வநாத தாஸ் 1886ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் தேதி அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் சிவகாசியில் பிறந்தார். இவரது முன்னோர்கள் மருத்துவத் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வந்தனர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் தாசரிதாஸ். சிறுவயதிலேயே இசை, நாடக, நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டார்.
‘நாடக உலகின் இமயமலை’ என்று சிறப்பிக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் தாசரிதாஸ் என்ற விஸ்வநாதனின் ஆர்வத்தைக் கண்டார். நல்ல குரல் வளம், நடிப்பில் திறமை, வரலாற்று அறிவு ஆகியவற்றைப் பாரட்டினார். அவரின் திறமையை வெளிக்கொண்டு வர நாடகத்தில் அறிமுகப்படுத்தினார் சங்கரதாஸ் சுவாமிகள்.
நடிப்பில் அனைவரையும் கவரும் வண்ணம் பல வித்தியாசமான வேடங்களில், பெண்ணாகவும், ராஜபார்ட்டாகவும் நடித்தார் விஸ்வநாத தாஸ். வேடத்திற்குத் தக்க குரலும், உடல்மொழியும் இயல்பாகவே இருந்தது. இவருக்கென ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது.
1911ஆம் ஆண்டு தூத்துக்குடிக்கு காந்தி வருகை தந்தார். அப்போது நாடக மேடையொன்றில் விஸ்வநாத தாஸ் பாடிய பாடல் மக்களையும் அங்கே இருந்த காந்தியையும் கவர்ந்தது.
‘உன் திறமை நாட்டிற்கு பயன்படட்டும், தாய்நாட்டின் சுதந்திரப் பணியில் உன்னை அர்ப்பணித்துக் கொள்’ என்று காந்தியடிகள் அறிவுறுத்தினார். தன்னுடைய இசைத் தமிழாலும், நாடகத் தமிழாலும் தேச உணர்வை ஊட்டி வந்த விஸ்வநாத தாஸ் மேலும் பணியாற்றத் தொடங்கினார்.
தான் நடிக்கும் ஒவ்வொரு நாடகத்திலும் தேச விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினார் விஸ்வநாத தாஸ். நாடகம் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள் மனதிலும் தன்னுடைய நடிப்பாலும், கம்பீரமான குரல்; வலிமையாலும் தேசபக்தியைப் புகுத்தினார் விஸ்வநாத தாஸ்.
நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்க தீவிரவாதம், மிதவாதம் என இரு வேறு சித்தாத்தங்கள் உருவாகின. இருபெரும் தலைவர்கள் தலைமையில் அணி சேர்ந்தனர். ஆயுதப்படைகளுடன் போராடிய சுபாஷ் சந்திரபோஸின் வீரத்தைப் போற்றும் விதமாக ‘சுபாஷ்’ என்ற பெயரை முதலாவதாகவும், அஹிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிய காந்தியடிகளின் வீட்டில் அழைக்கும் ‘பாபுஜி’ என்ற பெயரில் ‘பாபு’ என்ற பெயரை இரண்டாவதாகவும் இணைத்து ‘ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம்’ என்பதைத் துவக்கினார்.
இந்தச் சங்கத்தின் பின்னணியில் தியாகி விஸ்வநாத தாஸ் தனது உணர்ச்சி மிகுந்த நாடகங்கள் மூலம் மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்த்தார். இந்தியத் தாய்திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்துக் கட்டுக்கோப்பான தொண்டர் படைகளைக் கொண்டு போராடியது இந்தச் சங்கம்.
ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது. அந்நியப் பொருள்களை வாங்காமல் சுதேசிப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மேடைகளில் முழங்கியதைக் கேட்டுத் தான் நடித்த ஒரு நாடகத்தில் ‘அந்நியத் துணிகளை வாங்காதீர் உள்நாட்டுத் துணிகளை வாங்குவீர்…’ எனப் பாடினார்.
விஸ்வநாத தாஸ் அவர்களது பாடல்களால் மக்களுக்கு சுதேச உணர்வு மேலிட்டது. பார்வையாளர் ஒருவர், தான் அணிந்திருந்த அந்நியத் துணியைக் கழற்றி மேடையிலேயே தீ வைத்து எரித்தார். இதனைக் கண்ட விஸ்வநாத தாஸ் தனது கதராடையை அவரிடம் தந்து அணியச் செய்தார்.
‘கதர்கப்பல் தோணுதே’, ‘கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்’ என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள்.
“வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா – நீயும்
அதைக் கோபமின்றிக் கூப்பிடடி பாப்பா
கொக்கென்றால் கொக்கு கொக்கு – அது
நம்மைக்கொல்ல வந்த கொக்கு வர்த்தகம்
செய்ய வந்த கொக்கு – நமது
வாழ்க்கையை கெடுக்கவந்த கொக்கு!
அக்கரைச் சீமைவிட்டுவந்து – இங்கே
கொள்ளை அடிக்குதடி பாப்பா!”
என்ற பாடல் வரிகள் தியாகி விஸ்வநாத தாசை என்றும் நினைவுபடுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலைப் போராட்டங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.
1940ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி, தனது 54ஆவது வயதில், முருகன் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர் நீத்தார். மயில் மீது அமர்ந்த முருகன் வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.