இரு பாவைகள்… ஓர் பார்வை…

பாவை’ என்ற சொல், பழமையை, பெண்களை, பார்வை ஒளியைக் குறிக்கும் சொல்லாகும். பாவை விளக்குகளைக் கோயில் சிற்பங்களில் காண்கிறோம்.

என் கண்ணின் பாவையன்றோ’ என பாரதி பாடல் அமைகிறது. பாவை நோன்பு’ என்பது தமிழகத்தில் பெண்களுக்கேயுரிய பழமையான வழிபாட்டு முறை.

சங்க இலக்கியங்களில், பரிபாடலில் பாவை வழிபாடு’ பற்றிய செய்தி கூறப்படுகிறது.

தைப்பாவை என்று கண்ணதாசன் தை மாதத்தைப் பெண்ணாகப் பாவித்துப் பாடியுள்ளார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகிய 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்க வேண்டிய அவசியத்தை 30 பாடல்களில் பாடி, அதற்குத் திருப்பாவை’ எனப் பெயரிட்டுள்ளார்.

வைணவ மதத்தின் கடவுளான திருமாலை அடைவதற்கு இப்பாவை நோன்பு கன்னியர்க்குப் பயன்படும் என்பது ஆண்டாளின் கருத்து.

இதேபோன்று சைவசமயக் குரவர்களில் ஒருவராகிய மாணிக்கவாசகர் தன்னைப் பெண்ணாகப் பாவித்து, சிவபெருமானை அடைவதற்குப் பெண்கள் பாவை நோன்பு இருக்கவேண்டும் என 20பாடல்கள் பாடி அதற்குத் திருவெம்பாவை’ எனப் பெயரிட்டார். பத்துப் பாடல்கள் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களாகப் பாடி ஆண்டாளைப் போன்றே, 30 பாடல்களில் திருவெம்பாவைப் பாடல்களை மார்கழி மாத நோன்பிற்காகப் பாடியிருக்கிறார்.

பொதுவாக, திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய இரண்டு பாவைகளுக்குமிடையே பல்வகையான ஒற்றுமைகளையும், சில வேற்றுமைகளையும் காண முடிகிறது. இருவரும் சமகாலத்தவராக இல்லையென்றாலும், பாடல் வடிவம், பாடலின் உட்பொருள், பாடுகின்ற முறை என இவற்றுள் காணப்படுகின்ற ஒற்றுமை வியப்புக்குரியது.

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் எட்டெட்டு வரிகளில் அமைந்த பாடல். எடுத்துக்காட்டாக,

               மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்

                நீராடப்போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

                சீர்;மல்கும் ஆயப்பாடி செல்வச்சிறுமீர்காள்

                கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

                ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

                கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

                நாராயணனே! நமக்கே பறை தருவான்

                பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!”

என்பது ஆண்டாளின் முதல் பாடல். இனி மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் முதல் பாடலாவது,

               ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை

                யாம் பாடக் கேட்டோம்

                மாதே வளர்தியோ வன்செவிடோ நின்செவிதான்”

என அமைகிறது. அப்பாடல்களின் கடைசி வரி எம்பாவாய்’ எனும் சொல்லோடு முடியுமாறு பாடப்பட்டுள்ளது.

தான்பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்பதற்கேற்ப ஆண்டாள் தனது ஆறாவது பாடலான ‘புள்ளும் சிலம்பினகாண், புள்ளரையன் கோவிலில்’ எனும் பாடலில் தொடங்கி, எல்லே இளங்கிளியே’ எனும் 15ஆவது பாடல் வரையில் 10 தோழிமாரை வீடுவீடாகச் சென்று எழுப்பி தன்னோடு கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள். இதற்கு முந்திய ஐந்து பாடல்களில் கண்ணனின் பிறப்பு, தாய், தந்தையர், நோன்பிருக்கும் அருமை, மழையின் பெருமை, மழை பெய்யும் அழகு, கண்ணனை வணங்கினால் கிடைக்கும் மாண்பு போன்றவற்றை ஒவ்வொரு பாடலிலும் எடுத்துரைக்கிறார்.

5ஆவது பாடலில், போய பிழையும் புதுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்’ எனக் கண்ணனை வணங்கினால் தீயில் போடப்பட்ட அழுக்குகள் மறைவது போலப் பாவங்கள் மறையும் என்றும் எடுத்துரைக்கிறார்.

திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகர் அதற்குச் சற்று மாறுதலாக, முதல் பாடலிலிருந்தே தோழிமாரை எழுப்பத் தொடங்கி, 10ஆவது பாடல் வரை 10 தோழியரை எழுப்பி, அவர்களை நீராட அழைத்துச் சென்று, பிறகு கோயில் வாசலுக்கு அழைத்துச் செல்கிறார்.

16ஆவது பாடலிலிருந்து ஆண்டாள் தம் திருப்பாவையில், கோவிலின் வாசலின் காவல் செய்கின்ற காவல்காரரான, கண்ணனின் தந்தையாராகிய நந்தகோபனை, தாயாராகிய யசோதையை, கண்ணனின் மனைவியருள் ஒருவராகிய நப்பின்னையை எழுப்பிப் பின்னர் கண்ணபெருமானுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்.

மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடப் 10 பாடல்களைப் பயன்படுத்தி, கோவில் வாசலில் தோழியோடு நின்று போற்றியென்வாழ் முதலாகிய பொருளே எனத் தொடங்கிப் பாடுகிறார்.

இரண்டு பாவைப் பாடல்களிலும் மழை’ பற்றிய பாட்டு அருமையான உருவகப்பாட்டு. ஆண்டாள் தன் 4ஆவது பாடலில் ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்’ எனத் திருமாலின் உருவத்துக்கு மழையை ஒப்பிட்டுப் பாட, மாணிக்கவாசகர் 16ஆவது பாடலில் முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்’ என உமையம்மையின் உருவத்தோடு மழையை உருவகித்துப் பாடுகிறார்.

தோழிமாரை எழுப்பும்போது வைகறைப் பொழுதின் அழகினை, (அதிகாலை) பறவைகளின் ஒலியினை, தடாகத்து மலர்கள் விரிந்திருக்கும் அழகினை, மாடுகள் மேயச் செல்லும் ஆயர்பாடிச் சூழலைப் பாடி கண்ணபெருமானின் லீலைகளை, அவதார மகிமைகளை ஆண்டாள், திருப்பாவையில் பதிவு செய்கிறாள்.

இதுபோன்றே மாணிக்கவாசகரும் விடியற்காலைப் பொழுதினில் அழகினைப் பாடுவதோடு சிவபெருமானின் புகழைப்பாடி, திருமாலும் – பிரம்மனும் அடியும் முடியும் தேடிய செய்திகளைச் சொல்லி, உமையம்மையோடு சேர்ந்திருக்கின்ற சிவபெருமானின் அழகினை, குளத்து மலர்களோடு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.

பின்னர் திருப்பள்ளியெழுச்சியில் கோவிலில் கூடியுள்ள பக்தர்கள் நிலையினையும், குருந்தமரத்தடியில் அமர்ந்து தன்னை ஆட்கொண்ட எம்பெருமான் வீற்றிருந்த திருப்பெருந்துறையாகிய கோவிலின் அழகினையும், பத்துப் பாடல்களில் குறிப்பிட்டு, இறைவனைத் திருப்பள்ளியெழுச்சி செய்கிறார்.

ஆண்டாள் தன் திருப்பாவையின் கடைசிப் பாடல்களில் சமுதாயச் சிந்தனையோடு சில செய்திகளைக் கூறுகிறார். 27ஆவது பாடலாகிய கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!’ என்ற பாடலில், தோழிமார் அத்தனைபேரும் தன்னைச் சார்ந்தவர்களும் புத்தாடை உடுத்தி இனிப்பான சர்க்கரைப் பொங்கலை முழங்கை வழியே, நெய் வழியுமாறு அருந்தி மகிழ வேண்டும்’ என்பதை         

               ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

                மூடநெய் பெய்து முழங்கை வழிவார

                கூடியிருந்து குளிந்தேலோர் எம்பாவாய்”

எனப் பாடுவது மிகச் சிறப்பான ஒரு செய்தியாகும்.

பிறகு நிறைவாக, கண்ணபெருமானே! நீயே எங்களுக்கு வேண்டும். எங்களின் காமங்களைப் போக்கி ஆட்கொள்ள வேண்டும்’ என்பதை,

               இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு

                உற்றோமே யாவோம் உமக்கேயாம் ஆட்செய்வோம்

                மற்றை எம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்”

எனப் பாடுகிறார்.

வேடிக்கையாகக் கூட ஒருவர் கூறினார்,

ஆண்டாள் பாடிய திருப்பாவையின் முதல் பாடலான ‘மார்கழி’ என்பதில் முதல் எழுத்து ‘மா’. இது மாணிக்கவாசகரைக் குறிக்கலாம். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் முதல் பாடலான ‘ஆதியும் அந்தமும்’ என்பதில் முதலெழுத்து ‘ஆ’.இது ஆண்டாளைக் குறிக்கலாம். (இவ்வாறு) மாணிக்கவாசகர் பெயருக்கும், ஆண்டாள் பெயருக்கும் பொருந்தி வருவது ஆச்சரியம்தான்.

இவ்வாறாக ஆண்டாளும், மாணிக்கவாசகரும் தத்தமக்குரிய கடவுளருக்கு ஏற்றபடி அரிய ஓர் இலக்கிய வடிவத்தை தமிழ் மொழிக்குத் தந்திருக்கிறார்கள். சமயப் பூசல்கள் இருந்த காலமாக இருந்தாலும், இப்பாடல் வடிவில் காணப்படுகின்ற ஒற்றுமை குறிக்கத்தக்கது.

 ஜீவாத்மாவாகிய உயிர்கள், பரமாத்மாவைச் சென்று அடைவற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையே இப்பள்ளியெழுச்சிப் பாடல்கள், சாதாரண ஜீவாத்மாக்களாகிய தோழிமார்கள் போன்றோரை, இறையருள் பெற்ற ஆண்டாள், மாணிக்கவாசகர் போன்றவர்கள் விழிக்கச் செய்து பரமாத்மாவை உணரச் செய்வது இதன் அடிப்படைத் தத்துவம் ஆகும். 

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.