ஆபிரகாம் லிங்கன்

மனித வாழ்க்கையில் பொதுவாக ஒரு கேள்வி எழுவதுண்டு. நாம் வாழும் வாழ்க்கை புகழ் மிகுந்ததா? பொருள்தேடி அலைவதா? வரலாற்றில் இடம் பெறுவதா? வரலாற்றை உருவாக்கிக் காட்டுவதா?’ இந்தக் கேள்விகளில் பொருள் தேடுவதென்பது பெரும்பான்மையான மக்களின் நிலையாகிவிட்டது. ‘தேடிச் சோறு நிதம் தின்று’ எனப் பாரதி இவர்களைத்தான் குறிப்பிடுகிறார். வரலாற்றில் இடம்பெறுவது என்பது கூட புகழ்மிக்கதுதான். ஆனால் வரலாற்றைத் தங்களுக்காக உருவாக்கிக் கொள்பவர்களே Trend Setter என அழைக்கப்படுகிறார்கள். அவ்வாறு வரலாற்றை உருவாக்கிய நாயகர்களில் ஒருவர்தான் அமெரிக்க நாட்டில் கென்டக்கி மாநிலத்தில் 1809ஆம் ஆண்டில் பிறந்த ஆபிரகாம் லிங்கன்.
வாழ்க்கையில் முன்னேறாதவர்கள் சில காரணங்களைச் சொல்வார்கள். நான் செல்வந்தர் வீட்டில் பிறந்திருக்க வேண்டும், ஐந்துவருடம் முந்திப் பிறந்திருந்தால் பெரிய சாதனைகள் செய்திருப்பேன், அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தால் அறிவியல் அறிஞன் ஆகியிருப்பேன் என்று கிடைக்காததை எண்ணி ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்துவிட்டு நாட்டைக் கெடுத்ததுடன் தானுங் கெட்டார்’ எனும் பட்டுக்கோட்டையின் வரிகளுக்கேற்ப வாழ்ந்து வருவார்கள். ஆபிரகாம் லிங்கன் பிறந்த குடும்பமோ ஏழைக்குடும்பம். அவரின் தந்தையாருக்குத் தெரிந்த தொழில்களோ முக்கியமாக மரம்வெட்டுவது, ஓய்வு நேரங்களில் செருப்புத் தைப்பது. நிலையான வாழ்க்கை இல்லை இந்தக் குடும்பத்திற்கு. ஊர் ஓரங்களிலும், காடுகளின் மத்தியிலும் லிங்கனின் இளமைக்காலம் கழிந்தது. நிலையாகப் பள்ளிக்கூடம் சென்றதில்லை. இளம்வயதில் தாய் இறந்துபோனதால், அத்தையிடத்தில் தான் பாடம் படிப்பார் ஆபிரகாம் லிங்கன்.
வறுமையின் காரணமாகப் படிக்க வைக்கவும், புத்தகம் வாங்கிக்கொடுக்கவும் ஆபிரகாம் லிங்கனுக்கு யாருமில்லை. ஆனால் கல்வியின் மீதும், புத்தகங்கள் மீதும் லிங்கனுக்கு அபாரமான ஆர்வமுண்டு.
ஆபிரகாம் லிங்கன் பணத்தை ஒரு பொருட்டாக எப்பொழுதும் கருதவில்லை. தாம் கற்ற கல்வியை பிறர் நலத்திற்காகப் பயன்படுத்தவே முனைந்தார்;. அதற்கான நிகழ்ச்சியொன்று அவர் வாழ்க்கையில் நடந்தது.
அவர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருநாள் ஓர் ஏழை விதவைப் பெண்மணி அவரை வந்து சந்தித்தார். தனது மகன் ஒரு கொலை வழக்கில் சிக்கிக் கொண்டதாகவும், நிரபராதியான அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், அவனுக்காக வாதாட வேண்டுமென்றும் கேட்டார். ஏற்கனவே இந்தச் செய்தியைச் செய்தித்தாளில் படித்திருந்த லிங்கன் அப்பெண்மணியின் வேண்டுகோளை ஏற்று, அந்த நிரபராதிக்காக வாதாடத் தொடங்கினார்.
நீதிமன்றத்தில் கொலையை நேரில் பார்த்த சாட்சியை நீதிபதியின் அனுமதியோடு குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கினார் லிங்கன். ‘நீங்கள்தானே கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சி’ என்று கேட்டார். அந்த சாட்சியாளனும் ‘ஆம்’ என்றான். ‘கொலை நடந்தபோது நேரம் என்ன’ என்று லிங்கன் கேட்க, இரவு மணி 10 என்றான் அந்த சாட்சியாளன். உடனே லிங்கனும் ‘இரவு என்றால் இருளாக இருந்திருக்கும். எந்த வெளிச்சத்தில் கொலையைப் பார்த்தீர்கள். தெருவிளக்கு வெளிச்சத்திலா’ எனக் கேட்டார். அதற்கு அந்த சாட்சியாளன் மிகுந்த ஜாக்கிரதையாக, ‘விளக்கு வெளிச்சத்தில் இல்லை, நிலா வெளிச்சத்தில்தான் பார்த்தேன்’ என்றான். அவனது கூற்றை உறுதி செய்துகொண்ட லிங்கன், நீதிமன்றத்தில் உள்ளோரையும், நீதிபதியையும் பார்த்து, ‘கற்றுணர்ந்த பெரியோர்களே! இதோ இவர் கூறிய நாளுக்குரிய பஞ்சாங்கத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். அந்த நாள் அமாவாசை முடிந்து 7 நாட்களே ஆகியிருக்கும் முன்னிலவு வளர்பிறைக் காலம். முன்னிலாக் காலத்தில் நிலவு ஆகாயத்தில் இரவில் விரைவில் தோன்றி, விரைவில் மறைந்து விடும். அதன்படி பார்த்தால், இவர் கொலையைப் பார்த்த இரவில், நிலவு 9மணிக்கு மறைந்திருக்கும் என்பதை காலக் கணிதமாகிய இந்த நூல் குறிப்பிடுகிறது நிலவு மறைந்த பின் இருளில் இவர் கொலையை மட்டுமில்லை – எதையுமே பார்த்திருக்க முடியாது. எனவே பொய்சாட்சி கூறும் இவரைத் தண்டித்து நிரபராதியை விடுவிக்க வேண்டும் என்று கேட்டார். லிங்கனின் மதிநுட்பத்தாலும், ஆராய்ந்து நோக்கும் அறிவாலும் அந்த ஏழை நிரபராதிக்கு நீதி கிடைத்து, அவன் விடுவிக்கப்பட்டான். அது மட்டுமல்லாமல் இந்த வழக்குக்காக லிங்கன் பணமேதும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கறுப்பின மக்களுக்கே மிகப்பெரிய விடுதலையை வாங்கிக் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். விலங்குகளைப்போலப் பிடித்து வரப்பட்டு அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களை, அந்தக் கொடிய நிலையிலிருந்து மாற்ற மிகுந்த எதிர்ப்புகளுக்குக்கிடையே விடுதலைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான் கொடுமை.
அவமானங்களை ஒரு மனிதனால் எவ்வளவு தூரம் தாங்கிக் கொள்ள முடியும்? அதற்கும் எடுத்துக்காட்டு ஆபிரகாம் லிங்கன்தான். அமெரிக்க ஜனாதிபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டு வாழ்த்துப் பெறுவதற்கு வந்தபோது அவரை வழிமறித்த ஒரு பிரபு குடும்பத்தைச் சேர்;ந்த செல்வந்தர், ‘திருவாளர் லிங்கன் அவர்களே! இதோ நான் காலில் போட்டிருக்கும் இந்தக் காலணிகள் உங்கள் தந்தையார் தைத்தவை தெரியுமா?’ எனக் கேட்டாராம். அதற்கான உட்பொருள் என்னவென்றால், ‘செருப்புத் தைப்பவரின் மகனெல்லாம் ஜனாதிபதியாகிறார்கள்’ என்ற ஏளனக் குறிப்புத்தான்.
அந்தக் கூட்டத்தில் சற்றும் நிதானமிழக்காமல் லிங்கன் அப்படிக் கூறியவரிடத்தில் அருகில் சென்று, ‘மதிப்பிற்குரிய ஐயா! நான் ஜனாதிபதி பதவியேற்றபோது என்னை ஆளாக்கிய என் தந்தையை ஒரு கணம் மறந்துவிட்டேன். அவரை நினைவுபடுத்தியதற்கு நன்றி. இன்னொன்றையும் சொல்கிறேன். இந்தச் செருப்பில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால், மறக்காமல் என்னிடம் கொண்டுவாருங்கள் நான் செப்பம் செய்து தருகிறேன். ஏனென்றால் என் தந்தை, எனக்கு அந்தத் தொழிலையும் கற்றுத் தந்திருக்கிறார்’ என்றாராம் அமைதியாக.
“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”
என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டிய பெருமகனார் ஆபிரகாம் லிங்கன் ஆவார்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”
என்ற வாலியின் பாடலுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் ஆபிரகாம் லிங்கன், புதிய வரலாற்றை உருவாக்கிய வரலாற்று நாயகர்களில் தலைசிறந்தவர் இவர்.