விவேகானந்தர்

2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான ‘Fetna’ (Federation of Tamil Association of North America) சார்பில் நியூஜெர்சிக்கு அருகில் நடைபெற்ற தமிழ்ச்சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நியூயார்க், வாஷிங்டன், ஃபுளோரிடா, அட்லாண்டா போன்ற அமெரிக்க மாகாணங்களில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கங்களில், பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கலந்துரையாடல் ஆகியவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது சிகாகோ நகரில் நம்முடைய விவேகானந்தர் அவர்கள் 1863ஆம் ஆண்டு சர்வசமய மாநாட்டில் பங்கேற்ற சொற்பொழிவு குறித்து நான் பேசினேன். அச்சமயம் அங்கு வந்திருந்த தமிழ் அறிஞர் ஒருவர், சிகாகோவில் விவேகானந்தர் வந்து பேசிய இடத்திற்கு வெளியில் ஒரு கல்வெட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுச் சொன்னார்.

அந்தக் கல்வெட்டில் விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ‘A light from the East’ “கிழக்கிலிருந்து வந்த ஒளி” எனக் குறிப்பதாகப் பெருமிதத்தோடு கூறினார். உண்மைதான். இந்தியாவில் வங்காளத்தில் உள்ள கல்கத்தாவில் பிறந்தவர் விவேகானந்தர். இவரது இயற்பெயர் நரேந்திரன். சிறுவயதிலேயே கடவுள் பக்தியும், உறுதியான சிந்தனையும், எவரிடத்திலும் கேள்வி கேட்கின்ற ஆர்வமும் உடையவராகத் திகழ்ந்தார். செல்வச் செழிப்புள்ள இவரது குடும்பம், இவரது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு வறுமையில் வாடத் தொடங்கியது. கல்லூரிப் படிக்கும்போது மிகுந்த வறுமைக்கு இடையிலே படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் கடவுளைத் தேடுகின்ற ஆன்மீகத் தேடல் அவரது உள்ளத்தில் குறையாமல் இருந்தது.

தாம் சந்திக்கின்ற சான்றோர்கள், ஆன்மிகப் பெரியோர்கள் அத்தனை பேரிடத்தும் மறக்காமல் ஒரு கேள்வியைக் கேட்பார் நரேந்திரன். ‘ஐயா, நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா? எனக்கு நேரில் காட்ட முடியுமா?’ இவரது இந்தக் கேள்விக்குப் பயந்தே பலர் இவரைச் சந்திக்க அச்சப்பட்டனர். ஒருமுறை இரவீந்திரநாத் தாகூர் அவர்களுடைய தந்தையாரைச் சந்தித்த இவர், அவரிடத்திலே தன் வழக்கமான கேள்வியைக் கேட்டார். ஆன்மஞானியாக விளங்கிய அவர் இக்கேள்வியால் திடுக்கிட்டு உடனடியாக விடைசொல்ல முடியாமல், ‘நீ எதிர்காலத்தில் உயர்ந்த ஞானியாக வருவாய்’ என்றார். உடனே விவேகானந்தர், ‘எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. நான் கேட்ட கேள்விக்கு உங்களிடத்தில் விடையில்லை’ என்று விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

சிலநாட்கள் கழித்து, பிற்காலத்தில் தனக்கு குருவாகவும், தன் புகழுக்கும் உயர்வுக்கும் காரணமாக விளங்கப் போகிற இராமகிருஷ்பரமஹம்சரைச் சந்தித்தார். இவரைப் பார்த்தவுடன் அவர் வெகுநாள் பழகியவர்போல ‘வா அப்பா! உன்னை முன்னரே எதிர்பார்த்தேன். இவ்வளவு காலதாமதமாக வருகிறாயே!’ என்றார். அவரது வரவேற்பால் ஆச்சரியப்பட்ட விவேகானந்தர், ‘ஐயா நீங்கள் கடவுளை நேரில் கண்டதுண்டா? எனக்குக் காட்ட முடியுமா? என ஆர்வமாய்க் கேட்டார். உடனே இராமகிருஷ்ண பரமஹம்சர், ‘நிச்சயமாக! நான் பார்த்திருக்கிறேன். வா, உனக்குக் காட்டுகிறேன்’ என்று கூறி, விவேகானந்தரைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு, தாம் வணங்கி வழிபட்ட காளி கோயிலுக்குள் சென்று அம்பிகை விக்கிரகத்தைக் காட்டினார். விவேகானந்தருக்குப் பெருத்த ஏமாற்றமானது.

‘இவருக்கு மனக்கோளாறு இருக்க வேண்டும். இனி நாம் இவரைச் சந்தித்துப் பயனில்லை’ என்று விலகிச் செல்கிறார். பின்னர் சில காலங்கள் சென்றபின் தயங்கித் தயங்கி இராமகிருஷ்ணரிடத்தில் வந்து, அவரையறிந்து, அவர் மூலமாக விவேகானந்தர் ஞானத்தைப் பெற்றதாக அறிகிறோம்.

விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக இந்தியா முழுவதும் நடந்து புதிய அனுபவங்களை ஏற்படுத்திக்கொண்டார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் கடலலைகளுக்கு நடுவே இருந்த கற்பாறையில் அமர்ந்து மனதை ஒருமைப்படுத்தினார். வடநாட்டில் ஒரு குறுநில மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கத் தம் பெயரை விவேகானந்தர்’ என வைத்துக்கொண்டார்.

பல்வேறு சிறப்புகள் அவருடைய வாழ்நாளில் அவரை வந்தடைந்தன. ஆனாலும் சக மனிதனை மதிக்கின்ற, அவன் துன்பத்தைப் போக்குகின்ற ஞானமே உயர்ந்த ஆன்மீகம் என உணர்ந்தார். பிறர்க்கும் உணர்த்தினார். தன் வாழ்நாளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பல்வேறு கடிதங்களாக கட்டுரைகளாக எழுதினார். அவை ஞானதீபம்’ என்ற பெயரில் தற்போது புத்தகவடிவில் வந்துள்ளன.

அதில் ஓர் அரிய செய்தி, இவர் இளைஞராக இருந்தபோது வறுமையும், மனக்குழப்பமும் இவரைச் சூழ்ந்து துன்புறுத்தின. ஒருநாள் இரவு, இவரின் நண்பர்கள் இவரது மனக்குழப்பத்தை நீக்க எண்ணி ஓர் இசைக் கச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். கல்கத்தாவில் இரவு நேரங்களில் கஜல்’ என்கின்ற இசைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும். பெண்களும், ஆண்களும் அமர்ந்து பாட, அதற்கேற்ப சில பெண்கள் அபிநயத்தோடு ஆடுவார்கள். எந்த இடத்திற்குச் செல்கிறோம்? எனத் தெரியாத விவேகானந்தர் நண்பர்களோடு சென்று அதுபோன்ற விடுதி ஒன்றில் சற்றுநேரம் அமர்ந்திருந்தார். அந்தச் சூழல் பிடிக்காததால் சட்டென்று எழுந்து பாடிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி (இப்பாடல்கள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப அப்போதைக்கு அப்போதே இயற்றிப் பாடப்படுபவை) தம் பாடல் வரிகளிலேயே விவேகானந்தரை நோக்கிக் கேள்விக் கணை தொடுத்தாள். ‘நில்! எங்கே செல்கிறாய்? பிறப்பில் உயர்வு தாழ்வு ஏது?

மண்ணுக்குள்ளிருந்து எடுக்கப்படுகின்ற இரும்புத் தாதுவில் ஒரு பகுதி கோயில் மணியாகச் செய்யப்படுகிறது. மற்றொரு பகுதி கசாப்புக் கடையில் ஆடு வெட்டும் கொலைக் கருவியாகச் செய்யப்படுகிறது. இதில் இரும்பின்மீது ஏது குற்றம்? நீ கோயில் மணியாக இருக்கலாம். நான் கொலைக் கருவியாக மாறிப் போனதற்கு யார் காரணம்?’ எனப் பாடினாள்.

இதைக்கேட்ட விவேகானந்தர் திடுக்கிட்டு நின்றுவிட்டார். பிற்காலத்தில நண்பர்களுக்குக் கடிதம் எழுதும்போது இதனைக் குறிப்பிட்டு, ‘எத்தகைய ஞானம் பொருந்திய வார்த்தைகளை அந்தப்பெண் எவ்வளவு எளிமையாக எடுத்துரைத்தாள்!’ என வியக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற ஞானிகள் பலர் இந்தியாவில் தோன்றினர். அவர்களில் இந்தியாவின் புகழை உலகுக்கு அறிவித்தவர் ஞானசூரியனாகிய விவேகானந்தரே!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.