சங்க ஜனனி… சாரதா தேவி அம்மையார்

ஒருமுறை ஒருவர், குருநாதருடைய மனைவியாகிய குருபத்தினியைப் பார்த்து, ‘தாயே! ஆற்றில் பெருவெள்ளம் வரும்போது பெரியபெரிய மரங்கள், யானைகள், குதிரைகள், வீடுகள் என அனைத்துப் பொருட்களையும் இழுத்து வருகின்றது. ஆனால் அதே ஆற்றில் வாழும் சிறு மீன் அத்தனை வேகம் கொண்ட அந்தத் தண்ணீரையும் எதிர்த்து செல்கிறதே, எப்படி?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டாராம்.

அதற்கு அந்த அம்மையாரும் புன்னகையோடு, ‘மகனே! ஆற்றுநீரில் அடித்துக்கொண்டு வரப்படும் மரங்கள், யானை, குதிரை போன்றவற்றைத் தூக்கிக் கரையில் விட்டாலும் அவை பிழைத்துக்கொள்ளும். ஆனால் மீன்கள் கரைக்கு வந்தால் சற்று நேரத்தில் துடிதுடித்து மாய்ந்து போகும். ஆறுதான் தனக்கு உயிர், வாழ்க்கை என்று அந்த மீன்கள் ஆற்றை நம்புகின்றன. தன்னையே உயிராக நம்பியிருக்கின்ற மீன்களைச் செல்லப்பிள்ளைகளாகக் கருதி, எதிர்ஏறிச் செல்ல ஆறு அனுமதிக்கிறது. இதைப்போலத்தான் இறைவனே கதியென்று இருப்பவர்களை இறைவன் எங்கும் ஏற்றிவிடுவான், உயர்த்திக்காட்டுவான், அவர்களின் உயர்வுக்குக் காரணமாவான்’ என்று சொன்னாராம் அந்த அம்மையார். அப்படிச் சொன்னவர்தான் குருதேவர் என்றழைக்கப்படுகின்ற இராமகிருஷ்பரமஹம்சரின் துணைவியாராகிய ஸ்ரீசாரதா தேவி அம்மையார்.

குருதேவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் பிரதம சீடர்களில் ஒருவராகிய விவேகானந்தர் தமிழகத்துக்கு வந்திருந்தபோது, இராமநாதபுரம் மன்னராகிய பாஸ்கர சேதுபதி விவேகானந்தரை அமெரிக்காவில் 1893இல் நடைபெற்ற உலக சர்வ சமய மாநாட்டிற்குச் செல்லுமாறு வேண்டி அதற்கானப் பொருளுதவியும் செய்தபோது, ‘கடல்தாண்டிச் செல்லலாமா?’ என்று அன்னை சாரதா தேவியிடத்திலே கடிதம் எழுதிக் கேட்கிறார் விவேகானந்தர்.

அதற்கு அந்த அம்மையாரும், ‘நரேன், நீ நிச்சயமாக அங்கு செல்ல வேண்டும். நம் குருநாதர் இருந்தால் இதைத்தான் விரும்புவார். நீ சென்று வா, ஞானசூரியனாக வெற்றியோடு திரும்புவாய். இந்துமதத்தின் பெருமையை உலகறியும், உன்னால் இந்தியாவின் பெருமை எங்கும் பரவும்’ என்று வாழ்த்தி அனுப்பினாராம்.

இத்தகைய பெருமையுடைய சாரதா தேவி அம்மையாரைப் பற்றி மேலும் சில செய்திகள்….

இராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அன்னை சாரதா தேவி. அவரின் மனைவியாக மட்டுமல்லாமல் அவரது முதல் சீடராகவும் இருந்தார். பின்னால் வந்து சேர்ந்த சீடர்களுக்கு எல்லாம் நல்ல தாயாகவும் அவர் விளங்கினார்.

அன்னை சாரதா தேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி பிறந்தார். இவர் பள்ளிக்கூடம் சென்று படித்தத்தில்லை.

வீட்டில்  தெய்வீகச் சூழல் நிலவியதால், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும், ஆன்மிகத்தையும் கற்றார். ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பின்னாளில் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

ஒருமுறை ஜெயராம்பாடியில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, அப்பா பத்திரப்படுத்தி வைத்திருந்த தானியங்களை எடுத்துச் சமைத்து, ஏழைகளுக்குப் பரிமாறி, பசியாற்றினார்.

அக்கால வழக்கப்படி ஸ்ரீஇராமகிருஷ்ணருக்கு அன்னை சாரதாதேவியை பால்ய விவாகம் செய்து வைத்தனர். ஆன்மிகத்தேடலில் மூழ்கிய பரமஹம்சரைப் புரிந்துகொள்ளாத கிராமத்து மக்கள், ‘பாவம் இந்த அப்பாவி சிறுமியை, மனநிலை சரியில்லாதவருக்கு கட்டிவைத்து விட்டார்களே’ என்று பரிதாபட்டு, அச்சமடைந்தனர்.

நேரில் சென்று கணவரைப் பார்த்தபிறகு, அவர்கள் கூறியது உண்மையல்ல என்று தெளிந்தார் சாரதா தேவி. தமது கணவரின் ஆன்மிக வாழ்விற்குத் துணையாக அவருக்கும், அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் சமைப்பது, அவரது வழிகாட்டுதலில் ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுவது என்று ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தார்.

கணவர் இறைவடிவம் என்பதை உணர்ந்து, அவரையே குருவாக ஏற்றார். தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். அன்னை சாரதாதேவியை உலக நாயகியான அம்பிகையாகப் போற்றி பூஜித்தார் பரமஹம்சர்.

அன்னை சாரதா தேவி பெண் கல்வியை ஊக்குவித்தார். நிவேதிதையின் மறைவுக்குப் பின்னரும் அவர் ஆரம்பித்த பெண்கள் பள்ளி தொடர்ந்து நடைபெறக் காரணமாக இருந்தார்.

அன்னை சாரதா தேவி ஒருமுறை கயாவுக்குச் சென்றவர் அங்குள்ள மடங்களில் துறவிகளுக்கு இருந்த வசதிகளையும், இராமகிருஷ்ணரின் சீடர்கள் சிரமப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து வருந்தினார். ‘என் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை, தங்குவதற்கு இடம் வேண்டும். அவர்கள் அலைந்து திரிவதைக் காண சகிக்கவில்லை’ என்று பரமஹம்சரிடம் மானசீகமாகப் பிரார்த்தித்தார். இதுதான் இராமகிருஷ்ண இயக்கம் தோன்றுவதற்கான அஸ்திவாரம்.

ஸ்ரீஇராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், அன்னையின் அருளாசியுடன் கங்கைக் கரையில் உள்ள பேலூரில் இராமகிருஷ்ணமடம் 1898இல் தொடங்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவியை ‘சங்க ஜனனி’ என்று குறிப்பிடுவார்.

 ‘உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே. உன் குறைகளையே பார். உலகத்திலுள்ள அனைவரையும் உனதாக்கிக் கொள். யாருமே அந்நியர் அல்லர். உலகம் முழுவதும் உனது உறவே!’ –மரணப்படுக்கையில் இருந்தபோது கடைசியாக அன்னை சாரதாதேவி அவர்கள் உலகிற்கு அளித்த வார்த்தைகள்தான் அவை.  

 அன்னை சாரதா தேவி அருளரசியாக ஆன்மிக உலகில் எப்போதும் நினைக்கப்படுவார்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.