முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைச் சந்திக்கிற அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபோது அவர் ஒருமுறை  சொற்பொழிவு ஆற்றுவதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்தார். அவருடைய முதிர்ந்த பருவமும், அப்போதும்கூட அவர் பேருந்தில் பயணம்செய்த அந்தத் தன்மையும், உணவு உண்ணும்போது அவர் எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கைகளும் எங்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தின.

மதியஉணவு உண்ண அனைவரும் அமர்ந்திருந்தபோது அவர் எந்த உணவையும் ஏற்றுக்கொள்ளாமல் சாதத்தை மட்டும் இலையில் வைக்கச் சொன்னார். பின்னர் தன்னுடைய கைப்பெட்டியிலிருந்து பருப்புப்பொடி, சிறிய நல்லெண்ணெய் பாட்டில், மாங்காய் ஊறுகாய் இவற்றை எடுத்து மேஜையில் வைத்துக்கொண்டார். அந்தச் சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு எண்ணெய்விட்டுப் பிசைந்து சாப்பிட்டுவிட்டு, மோர் வாங்கி ஊறுகாயோடு உணவை முடித்துக்கொண்டார். அவர் உணவை உண்ட அழகும், முறையும் என் கண்முண்னே என்றும் இருக்கின்றன.

பிறகு மேடைக்குச் செல்லும்முன்னர் மாணவ, மாணவிகளையெல்லாம் அழைத்து, ‘எங்கே என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்? வாய்பேசமுடியாத ஒருவன், தண்ணீர் வேண்டுமென்று நம்மிடம் எப்படிக் கேட்பான்?’ என்று கேட்டார். உடனே எல்லோரும் சைகை மூலமாகக் கைகளைத் தண்ணீர் குடிப்பதுபோல வாயருகே கொண்டுபோய்க் காட்டினார்கள். ‘சாப்பாடு வேண்டுமென்று எப்படிக் கேட்பார்?’ உடனே எல்லோரும் உண்பதுபோல கைகளால் சைகை செய்தார்கள். ‘சரி பார்வையில்லாத ஒருவன் கத்தரிக்கோல் வேண்டுமென்று எப்படிக் கேட்பான்?’ என்று அவர் கேட்டவுடன், எல்லோரும் இரண்டு விரல்களை வைத்துக்கொண்டு கத்தரிக்கோல் போல் செய்து காட்டினார்கள். உடனே கி.ஆ.பெ.வி. அவர்கள் அவன் பார்வையில்லாதவன்தானே? கத்தரிக்கோல் கொடுங்கள் என்று கேட்டமாட்டானா அவன்’ என்று அவர் சாதுர்யமாகக் கேட்டவுடன் எல்லோரும் கைதட்டி சிரித்து விட்டோம். முதுமை என்பதே அவரை அணுகவில்லை என்பதை அவருடைய குதூகலமான உணர்வுகள் வெளிப்படுத்தின. தமிழகத்தில் அதிகமான சீர்திருத்தக் கல்யாணங்களைத் தமிழர் மரபு முறைப்படி செய்து வைத்தவர் அவரே. மேலும் அவரைப் பற்றி சில அரிய செய்திகள்..

கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர். சிறந்த தமிழ்  உணர்வாளர். நீதிக்கட்சி உறுப்பினராகப் பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும், தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.

தமிழ்க் காதலாய் வாழ்வைத் தொடங்கித் தமிழ்க் காவலராய் வாழ்வை நிறைவு செய்தவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் உள்வாங்கிப், பேசியும், எழுதியும், இயங்கியும் காத்து நின்றதால் அவரை முத்தமிழ்க் காவலர்’ என்று திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் 1957இல் விருது தந்து பாராட்டியது.

சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேரமுடியும் என்ற விதி இருந்த காலமுண்டு. ஒடுக்கப்பட்ட எளிய சாதி மக்களால் மருத்துவப்படிப்பில் இதனால் சேரமுடியவில்லை. நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம் இந்தப் பிரச்சனையை அன்றைய முதல்வர் பனகல் அரசரிடம் கொண்டுசென்றார். அதன்பிறகே, ‘சமஸ்கிருதம் தேவை’ என்ற விதி நீதிக்கட்சியால் நீக்கப்பட்டது. எளிய மக்கள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய காரணமான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பெயர் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு வைக்கப்பட்டது.

  மருதமுத்துக் கோனார் என்பவரிடம் 1904இல் திண்ணைப் பள்ளியில் தமிழும் கணிதமும் படித்தார். அரசஞ் சண்முகனாரின் கல்வி குறித்த உரை இவரின் கல்விக் கண்ணைத் திறந்தது. ந.மு.வேங்கடசாமி நாட்டாரிடம் முறைப்படி ‘தமிழ் கேட்டார்’.  சைவ அறிஞரான வாலையானந்த சுவாமிகளிடம் சைவ சித்தாந்தம் கற்றார். அவரோடு இணைந்து சைவசமயச் சொற்பொழிவாற்றினார்.

தமிழும் சைவமும் கி.ஆ.பெ.விசுவநாத்தை மறைமலையடிகளிடமும், திரு.வி.க.விடமும் அனுப்பியது. இதன் நீட்சியே பின்னாட்களில் நீதிக்கட்சியில் அவரைச் செயல்படவைத்தது.

‘தமிழ்க்காவல்’ என்பதை அவர் இலக்கியங்களின் பழமை, செழுமை தூய்மைகளளைக் காப்பாற்றுவது என்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. விரிந்து கிடக்கும் தமிழர்களின் வாழ்வியலை, அனுபவச்சாறை வரும் தலைமுறைக்கு எளிமையாக்கித் தருவதையும் காவல்பணியாகவே கருதிச் செயல்பட்டார். அதனால்தான் எழுத்துக்கு நிகராகவும், அதைவிடவும் அதிகமாக எளியமக்களை நோக்கிப் பேசினார் என்று ஐயாவின் தமிழ்ப்பணியை ஆய்வு செய்த மகன் வழிப்பேரன் பேரா.கோ.வீரமணி கூறியிருக்கிறார்.

வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த ஒட்டப்பிடாரத்தில் 05.02.1921ஆம் ஆண்டு கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் முதல் மேடை பேச்சு அமைந்தது. ‘அன்பு’ என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது அவருடன் மேடையில் வ.உ.சியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கியம், இசை, நாடகம், அரசியல், சமூகம், சீர்திருத்தம், கல்வி, வாணிகம், தொழிலாளர் மேன்மை மற்றும் ஆராய்ச்சி, மேடை, வானொலி என்று 12துறைகளில் பலநூறு பேச்சுக்களை கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பேசியுள்ளதாக ந. சுப்புரெட்டியார் கூறியுள்ளார். பண்டிதத் தமிழுக்கும், பாமரத் தமிழுக்கும் இடையே உயிர்ப்புள்ள தமிழை மேடைகளில் அவர் உலவவிட்டார்.

தமிழ் மருத்துவம் எப்போது தோன்றியது என்று யாராவது கேட்டால், செடி, கொடிகள் மண்ணில் முளைத்தபோது தோன்றிவிட்டது என்பார் கி.ஆ.பெ.விசுவநாதம். ஒரு மனிதனுக்கு வரும் நோய்கள், அங்குள்ள இயற்கை சூழல் மாறுபடுவதால் வருகின்றன. அதற்கு மருந்தும் அதே மண்ணிலிருந்து கிடைப்பதுதான் இயல்பானது என்பது அவரது கோட்பாடு. அதைத்தான் நாம் சித்த மருத்துவம் என்கிறோம்.

‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்பது அவரின் புகழ்மிக்க வாக்கியம். இதற்கும் அவர் திருக்குறளையே வழிகாட்டியாக முன்வைக்கிறார். ‘மருந்து’  என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மருந்தைப்பற்றி பேசாமல் உணவைப் பற்றியே பேசுவதை நுட்பமாக நமக்குப் புரியவைக்கிறார். மிளகு, பூண்டு, சீரகம், மஞ்சள் இப்படி இலகுவாக கைக்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே நடக்கும் மருத்துவத்தைக் ‘கை வைத்தியம்’ என்ற நம் கிராமத்து பெருசுகளையும் அவர்களின் மருந்தையும், வேரை மறந்த தமிழர்களுக்கு அவர்தான் நினைவூட்டினார். இப்படித் தமிழ் மருத்துவத்தைக் காப்பாற்றிய காவலரும் கி.ஆ.பெ.வி. அவர்கள்தான்.

இத்தகைய பெருமையுடைய கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களுக்கு 1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் சித்த மருத்துவ சிகாமணி’ விருது வழங்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் வள்ளுவ வேல்’ என்னும் விருது வழங்கியது.

2000ஆம் ஆண்டிலிருந்து கி.ஆ.பெ.விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நினைவாக ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது.

முத்தமிழ்க் காவலர் அவர்களின் பணி, நித்தமும் நினைக்கத்தக்கது.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.