மயிலை தந்த மாமேதை…

தமிழக இலக்கிய உலகில் எழுத்தாளர்களும், கவிஞர்களும் அறியப்பட்ட அளவு ஆராய்ச்சியாளர்கள் அறியப்படவில்லை. புனைகதை எழுத்தாளர்களையும், திரைப்படக் கவிஞர்களையும்தான் கற்றவர் முதல் மற்றவர் வரை அறிந்திருந்தனர். தமிழகத்தின் ஆய்வுலகில் தனக்கென ஒரு தடம் பதித்தவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
இவர் சென்னை மயிலாப்பூர் பகுதியில் 1900ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சித்த மருத்துவர். இவருடைய இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி அவர்கள் கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகாவித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார்.
சிலகாலம் கழித்து, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், விடுமுறை நாட்களில் தமிழகமெங்கும் பயணம் செய்து, அறியப்படாத பல செய்திகளைத் தன் எழுத்தின் மூலமாகப் பதிவு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், பழந்தமிழ் கற்கோயில்கள் என இவரது ஆராய்ச்சி விரிவடைந்து கொண்டே சென்றது.
இவர் கல்வெட்டுகளை அறிந்து கொள்வதற்காகவே தென்னிந்திய எழுத்துமுறைகள் யாவற்றையும் கற்றுத்தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறைக் கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார்.
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் தமிழ்ப்பணியின் பெருமையை அறிந்திருந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவரைப்பற்றி,
“தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”
எனப் பாராட்டிப் பாடியுள்ளார்.
ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி ‘யாப்பருங்கல விருத்தி’ என்னும் நூலைப் படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக்காட்டுகளாக இயம்பிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாகக் கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மறைந்துபோன, பேணிக்காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப்பார்த்து, மனம் கலங்கினார் சீனி.வேங்கடசாமி, ‘அடடா! எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்? என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார்.
இத்தகைய நூல்களின் பெயர்களைத் தொகுத்து வெளியிட நினைத்து, அதனைச் செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி. ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர், ‘களப்பிரர் காலத் தமிழகம்’ என்னும் ஆய்வு நூலையும் வெளியிட்டுப் பெருமை பெற்றார்.
இவை தவிர, ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன்முதலில் அழகுக்கலைகள் பற்றித் தமிழில் எழுதி பெருமை பெற்றவர். ‘கொங்கு நாட்டு வரலாறு’, ‘துளுவ நாட்டு வரலாறு’, ‘சேரன் செங்குட்டுவன்’, ‘மகேந்திர வர்மன்’, ‘நரசிம்ம வர்மன்’, ‘மூன்றாம் நந்தி வர்மன்’ முதலிய நூல்கள் அறிஞர் சீனி.வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள்.
இவரது ஆய்வுகள் குறித்தக் கட்டுரைகளை நான் பலமுறை படித்து வியந்திருக்கிறேன். சான்றாகச், சென்னையில் ஓடுகின்ற கூவம் என்பது ஆறின் பெயர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, இவரோ, அது அந்நதி உருவாகி வருகின்ற ஊரின்பெயர் என்று விரிவாக எடுத்துரைப்பதோடு, அவ்வூர் ஒரு காலத்தில் பௌத்த மடாலயங்கள் நிறைந்த ஊராக திகழ்ந்திருக்கிறது என்ற செய்தியையும் கூறி, அங்கு சிதைந்த நிலையிலிருந்த புத்தர் சிலைதான் தற்போது கன்னிமாரா அருங்காட்சியகத்தில் இருக்கிறது என்ற குறிப்பையும் தருகிறார்.
இதுமட்டுமல்லாமல் பாண்டிய மன்னர்களின் கொடியில் காணப்படுகின்ற மீன் சின்னத்தில் இருப்பவை, ஒன்றா? இரண்டா? எனக் கேள்வி கேட்டு அதற்கும் தக்க விடையைத் தருகிறார். இவரது கட்டுரைகளைப் படிக்கும்போது, காலயந்திரத்தில் ஏறிப் பயணப்படுவதைப்போல, ஒரு அனுபவம் ஏற்படும்.
அறியப்படாத தமிழகம் பற்றியும், பண்பாட்டு அசைவுகள் குறித்தும் எழுதிய மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தன் வாழ்நாளில் ஒருமுறை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைச் சந்தித்துப் பேசியதை என்னிடம் மகிழ்வோடு கூறியிருக்கிறார். என்னைப் பொறுத்தமட்டில் தொ.ப.அவர்களின் ஆய்வுநடை, மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுடைய எழுத்து நடையை ஒத்திருக்கும் என்பது என் எண்ணம்.
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் பல்துறைப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், திருமணமே செய்துகொள்ளாது தன் தமிழ்ப்பணியைத் தொடர்ந்திருக்கிறார் என்பது ஒரு அரிய செய்தி. இவரது ‘தமிழர் வாணிபம்’ என்ற நூல் இன்றைக்கும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
2000ஆம் ஆண்டு தமிழக அரசு மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.
தமிழர்களின் தொன்மையான வரலாற்றைக் காலக்கண்ணாடி வழியாக நமக்குக் காட்டிய பெருமை மயிலை சீனி.வேங்கடசாமி போன்றவர்களையே சாரும். இவர் களப்பணியாளராகவும் தன் ஆய்வினை மேற்கொண்டததால்தான் பல்வகையான ஆதாரங்களோடு நூல்களை இவரால் எழுத முடிந்தது.
மயிலை சீனி.வேங்கடசாமி தமிழ் இலக்கிய வரலாற்றின் பழமையை அதன் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஓர் ஒப்பற்ற கள ஆய்வாளர்.