தமிழகக் காண்டேகர்… கா.ஸ்ரீ.ஸ்ரீ

நான் பள்ளியில் படிக்கிற காலங்களிலும் (சோழவந்தான் – முள்ளிப்பள்ளம் அரசுப் பள்ளி) பின்னர் கல்லூரிக் காலங்களிலும் மொழிபெயர்ப்பு நூல்களை விரும்பிப் படிப்பேன். அவ்வாறு நான் படித்த இந்தியமொழி நாவல்களுள் மராத்திய எழுத்தாளரான காண்டேகர் அவர்களுடைய நாவல்களை நான் மட்டுமில்லை, அந்தக்காலத்தில் தமிழக வாசகர்களே மிக விரும்பிப் படித்தார்கள். அப்படி அனைவரையும் படிக்க வைத்த பெருமை காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசன் அவர்களையே சாரும். ஆம் இவர்தான் கா.ஸ்ரீ.ஸ்ரீ. இவர் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிருந்தாவன் என்ற ஊரில் 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார்.

தமிழ்நாட்டில் சென்னையில் இவர் வாழ்ந்தபோது, காந்தியடிகள் அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வருகை தந்தாராம். அப்போது தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுகின்ற உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் காந்திஜி அவர்களுக்குத் தமிழில் வரவேற்புரை எழுதி வாசிக்க, அதை ஹிந்தியில் மொழிபெயர்த்து வாசித்த பெருமை கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்களுக்குத்தான் கிடைத்தது. அதன்மூலம் உ.வே.சா, கி.வா.. போன்ற ஜாம்பவான்களின் அறிமுகமும் கிடைத்தது.

இவரது எழுத்துத் திறமையை அறிந்துகொண்ட கலைமகள் இதழின் ஆசிரியரான கி.வா.ஜகந்நாதன் அவர்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்களையும் தம் ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டார். அப்போது கா.ஸ்ரீ.ஸ்ரீ.எழுதிய முதல் சிறுகதைதான் மழையிடையே மின்னல்’. தொடர்ந்து கலைமகளில் மராத்திய எழுத்தாளரான காண்டேகரின் சிறுகதைகளையும், நாவல்களையும் கலைமகளுக்காக மொழிபெயர்க்கத் தொடங்கினார்(1940).

இவருடைய ஆற்றலை அறிந்துகொண்ட காண்டேகர் அவர்கள் தம் படைப்புகளைத் தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீயைத் தவிர, வேறு யாருக்கும் மொழிபெயர்க்கும் உரிமையைத் தரவில்லை. அந்த வாய்ப்பை இறுகப்பற்றிக்கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்கள் காண்டேகரின் வெறும் கோவில்’ ‘சுகம் எங்கே’ ‘கருகிய மொட்டு’ ‘எரி நட்சத்திரம்’ ‘இரு துருவங்கள்’ ‘கிரௌஞ்ச வதம்’ போன்ற படைப்புகளைக் கலைமகளிலும், மஞ்சரியிலும் மொழிபெயர்க்கத் தொடங்கினார். தமிழக மக்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயைத், தமிழகக் காண்டேகர்’ என்றே அன்புடன் அழைத்தனர்.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பேரறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றவர்களும் இவருடைய தமிழ்நடையால் ஈர்க்கப்பட்டனர். காண்டேகரே ஒருமுறை, ‘மராத்தியில் நான் பெற்ற புகழைவிடத் தமிழில் என் இலக்கியத்தை மொழிபெயர்த்துக் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெற்றபுகழ்தான் அதிகம். அதற்கு அவர் தகுதியானவரும்கூட’ என்று மனமுவந்து  பாராட்டியிருக்கிறார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்லர், சிறந்த படைப்பாளியும்கூட. காந்தம்’, ‘காற்றாடி’ போன்ற நாவல்களும், நீலமாளிகை’, ‘அன்னபூரணி’ போன்ற சிறுகதைத் தொகுதிகளும் இதற்குச் சான்று.

மராத்தியிலிருந்து தமிழுக்கு மட்டுமல்லாது தமிழிலிருந்த சிறந்த படைப்புகளைப் பிறமொழிகளுக்கும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்தார். பாரதியாரின் புகழ்பெற்ற தராசு’க் கட்டுரையை ஹிந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான்.

இந்தியச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் மாதவய்யா, புதுமைப்பித்தன், கல்கி, பி.எஸ்.ராமையா, கு.ப.ரா., சிதம்பர சுப்பிரமணியன் வரையிலான தேர்ந்தெடுத்த பன்னிரெண்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. இவர் எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதை ஒன்றையும் மராத்தியில் மொழிபெயர்த்திருக்கிறார். சுதர்ஸனம்’ மாதஇதழில் இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

1991இல் கா.ஸ்ரீ.ஸ்ரீ. காண்டேகர் எழுதிய யயாதி’ என்ற படைப்பைத் தமிழில்  மொழிபெயர்த்ததற்காகச் சாகித்ய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதினைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காண்டேகரின் சொந்தஊரான மகாராஷ்டிராவில் நாசிக் நகரத்தில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.அவர்கள் 1999ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் தேதி தனது 86ஆவது வயதில் காலமானார்.

மொழிபெயர்ப்பு உலகில் ஓர் கலங்கரை விளக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.