ரஷ்ய எழுத்தாளர்…சிங்கிஸ் ஐத்மாத்தவ்

நான் கல்லூரியில் படிக்கிறகாலத்தில் மொழிபெயர்ப்பு நாவல்கள் அதிகம் படிப்பேன். குறிப்பாக, இந்திய மொழிபெயர்ப்பாளர்களான த.குமாரசாமி, ப.சேனாதிபதி மற்றும் க.ஸ்ரீ.ஸ்ரீ, மாயாவி, நாடோடி போன்றோர் மொழிபெயர்த்த வங்க மொழியில் வெளிவந்த இலக்கியங்கள், மராட்டிய நாவல்கள், சிறுகதைகள் இவற்றைப் படிக்கிறபோது, புதுமையான பெயர்கள், புதுப்புது இடங்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களின் உணவு, உடை பழக்கவழக்கங்கள் போன்றவற்றை இந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மூலமாக அறிந்து கொள்வேன்.
அக்காலத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் (NCBH) ரஷ்ய நூல்கள் அதிகம் கிடைக்கும். ரஷ்ய எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், தஸ்தாவஸ்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், ஆன்டன் செகாவ் ஆகியோரது படைப்புகள் மிக உயரிய பதிப்பாகவும், வழவழப்பான தாள்களில் அச்சிடப்பட்டும் அதற்கேற்ற ஓவியங்களோடும் குறைந்த விலையில் கிடைக்கும். சோவியத் நாடு, சோவியத் ரஷ்யா போன்ற பத்திரிக்கைகளும் ‘கூரியர்’ போன்ற இதழ்களும் அப்போது அங்கே கிடைக்கும். இந்நூல்களில் குறிப்பாக லியோ டால்ஸ்டாயின், ‘புத்துயிர்ப்பு’ என்னும் நாவல் என்னை மிக ஈர்த்தது.
இந்த வரிசையில்தான் நான் சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்களின் ‘முதல் ஆசிரியன்’ என்ற சிறு நூலைப் படித்தேன். அந்த நூல் என் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டதுபோல அமைந்திருந்தது. அந்தக் காலத்தில் வெறும் ஐந்து ரூபாய்க்கு அந்தப் புத்தகம் கிடைக்கும். நான் யாருக்காவது புத்தகம் கொடுக்கவேண்டும் என்று விரும்பினால் முதல் ஆசிரியனைத்தான் கொடுப்பேன். பிறகு இந்நூலாசிரியர் எழுதிய ‘குல்சாரி’ என்ற நாவலும், ‘அன்னை வயல்’ என்ற நாவலும் என்னை மிகவும் ஈர்த்தன.
நான் கல்லூரிப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, கல்லூரியினுடைய கவின் கலைக்கழகம், இலக்கிய மன்றம், இவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர் பணியைச் செய்கிற வாய்ப்புகளும் கிடைத்தன. அப்போதெல்லாம் கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை, பேச்சுப்போட்டி எங்கள் கல்லூரியில் நடக்கிற புலவர் விழா போட்டி இவற்றில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு நூல்களைத்தான் பரிசாகத் தருவோம். நான் வெற்றிபெற்ற மாணவர்களையெல்லாம் புத்தகக் கடைக்கு வரவழைத்து, ‘இன்ன தொகைக்குள் உங்களுக்கு விருப்பமான புத்தகங்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு, எல்லோருக்கும் எனது செலவில்; சிங்கிஸ் ஐத்மாத்தவினுடைய ‘முதல் ஆசிரியன்’ புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுப்பேன்.
சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் வசிக்கும் என் இனிய நண்பர் தொழிலதிபர் சிறந்த கல்வியாளர் திரு.விஜயகுமார் அவர்கள் என்னையும், பல்குரல் வித்தகர் திரு.படவா கோபி அவர்களையும் ரஷ்யாவுக்கு அழைத்திருந்தார். அப்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாட்களும், மாஸ்கோவில் இரண்டு நாட்களுமாக ரஷ்யாவின் பல இடங்களை நாங்கள் சுற்றிப்பார்த்தோம். நான் இளம்வயதிலிருந்து ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருந்ததினால் அங்கிருந்த வீதிகள், சதுக்கங்கள், அரண்மனைகள், வால்கா நதி போன்றவையெல்லாம் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவை போலத் தோன்றிற்று.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் பெயர் கூட தஸ்தாவஸ்கி என்பதுதான். கொட்டுகிற பனியில் ரஷ்ய இரயில்களில் பயணப்பட்டபோது எனக்கு முதல் ஆசிரியன் சிறுகதையின் ஊடே பயணிப்பதுபோல் இருந்தது. ஜார் மன்னர்களின் கோடைகால, வசந்தகால அரண்மனைகளைச் சுற்றிப்பார்த்தபோது ரஷ்யக் கவிஞர் திரு. பைரன் அவர்கள் படித்த பள்ளி, அவர் உலாவிய தோட்டங்கள் இவற்றையெல்லாம் பார்க்கிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்களின் கதைகளில் வருகிற கிராமத்தையும், லியோ டால்ஸ்டாயின் விவசாயப் பண்ணையையும் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன் ஆனால் அதற்கான நேரம் அப்போது கிடைக்கவில்லை. லெனின் சதுக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். இப்போது சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும், முதல் ஆசிரியனை படித்துப் பார்த்துவிட்டு எனது ஜி.ஞானசம்பந்தன் என்கிற யூ-ட்யூப் சேனலில் அதனைப் பதிவு செய்தேன். விருப்பமுள்ளவர்கள் அதனைப் பார்த்து மகிழலாம்.
தமிழகத்தில் புதுமை பித்தன், கு.அழகிரி சாமி, ஜெயகாந்தன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ரஷ்ய இலக்கியங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். என்னைக் கவர்ந்த ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் பற்றி நான் அறிந்த மேலும் சில செய்திகளைக் கீழே தருகிறேன்…
சிங்கிஸ் ஐத்மாத்தவ் (12டிசம்பர்1928 – 10ஜுன் 2008) ரஷ்ய மற்றும் கிர்கிஸ் ஆகிய இரண்டு மொழிகளிலும் சிறந்த எழுத்தாளர். கிர்கிஸ்தான் இலக்கியத்தில் நன்கு அறியப்பட்ட நபர் ஆவார். இவரின் குறிப்பிடத்தக்க புதினங்கள், முதல் ஆசிரியர், குல்சாரி, ஜமீலா, சிகப்பு துண்டு அணிந்த என் சிறிய லின்டன் மரம், வெள்ளைக் கப்பல், அன்னை வயல் ஆகும். இவரின் பல புதினங்கள் உலகின் ஐம்பதுக்கும் மிகுதியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல புதினங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இவரின் ‘அன்னை வயல்’ என்ற குறுநாவல் தமிழில் பூ.சோமசுந்தரத்தால் மொழிபெயர்க்கப்பட்டு 1966இல் முதல் பதிப்பாகவும், 1985இல் இரண்டாம் பதிப்பாகவும் ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் ‘முதல் ஆசிரியன்’ கற்பவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் முதல் ஆசிரியன்தான்.