எட்டயபுரத்துக் கட்டபொம்மன் பாரதி…

‘எட்டயபுரத்துக் கட்டபொம்மன்’ என்று மகாகவி பாரதியைக் கவிராஜன் கதையில் அவர் வரலாற்றை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து குறிப்பிடுவார்.
சின்னச்சாமி பெற்ற பெரியசாமி என்றும், லட்சுமி பெற்ற சரஸ்வதி என்றும் கவியரங்கங்களில் பாரதியைப் போற்றிப் பாடுவர். மறைந்து நூறு ஆண்டுகள் (1921 – 2021) சென்றபோதும் மறையாத புகழுடைய மகாகவிஞன் பாரதி. இவர் பலமொழிகளைக் கற்ற பன்முகத் தன்மையுடையவர்.
எட்டயபுரத்தில் பிறந்ததால் தமிழ், பாளையங்கோட்டையில் படித்ததால் ஆங்கிலம், காசியில் நான்கு ஆண்டுகள் இருந்ததால் ஹிந்தி, சமஸ்கிருதம், பாண்டிச்சேரியில் (1908 – 1918) பத்து ஆண்டுகள் வாழ்ந்ததால் பிரெஞ்சு மொழி என உள்௵ர் மொழிகள் முதல் உலகமொழிகள் வரை பாரதி பலமொழிகளைக் கற்று அறிந்திருந்தபோதிலும், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று நெஞ்சை நிமிர்த்துப்பாடிய பெருமையை உடையவர் பாரதி.
மதுரையில் ராஜா சேதுபதி பள்ளியில் 1901ஆம் ஆண்டில் நான்கு மாதம் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலம் மதுரைக்கு ஒரு இனிய காலம். அப்போதுதான் அவர் காசியிலிருந்து தன் மனைவியாகிய செல்லம்மா பாரதிக்கு எழுதிய, ‘தனிமை இரக்கம்’ எனும் முதல் கவிதை அச்சானது. இக்கவிதை மதுரையிலிருந்து வெளிவந்த ‘விவேகபாநு’ என்னும் இதழில்தான் என்பது நமக்குக் கிடைத்த பெருமை.
தமிழாசிரியராக இருந்தவர் பின்னர் பத்திரிக்கை ஆசிரியராகச் சென்னை சென்றார். இதழாசிரியராக இருந்ததால் உலகச்செய்திகளை அறிந்துகொண்டார். அவற்றைத் தமிழ்மொழியிலும்; பதிவு செய்தார். பத்திரிக்கை உலகில் முதன்முதலில் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) போடும் வழக்கத்தை உருவாக்கியவர் பாரதி. திருவல்லிக்கேணி கடற்கரையில் வ.உ.சிதம்பரனாரை அழைத்துச்சென்று கண்ணன் அர்ஜுனனுக்குக் கீதாஉபதேசம் செய்ததைப்போல, நாடு அடிமைப்பட்டிருக்கும் நிலையை எடுத்துரைத்தார், வ.உ.சி.யும் உணர்ந்து கொண்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் கப்பலோட்டினார். கப்பலோட்டிய தமிழரானார். பாரதியின் பாடல்கள் ஆங்கில அரசுக்கு எதிராக இருந்ததால், அவரைக் கைதுசெய்ய அரசாங்கம் முயன்றபோது, சுதந்திரப் போராட்டப் போராளிகளுக்குப் புகழிடமாக விளங்கிய பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிசெய்த, புதுச்சேரிக்குப் பயணமானார் பாரதி.
பாரதி, பத்திரிக்கைப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். பெண்களுக்காகவே ‘சக்கரவர்த்தினி’ என்ற இதழையும் தொடங்கினார். அதில் செல்லம்மா பாரதியையும் எழுதவைத்தார். பாரதி வாழ்க்கையின் அரிய நிகழ்வுகளை ‘யதுகிரிஅம்மாள் நினைவுகள்’ என்ற நூலின் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.
1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றி வ.ரா.அவர்கள் எழுதிய பாரதியார் நூலில் படித்துப் பார்க்கவேண்டும். அங்கிருந்த காலத்தில்தான் பாரதி, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற முப்பெரும் இலக்கியங்களைப் படைத்தார். பாரதி மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தார்.
இதேபோல் உலகமொழியாகிய ஆங்கிலமொழியில் பாரதி தேர்ந்த புலமை பெற்றிருந்ததால் ஆங்கிலத்திலேயே கதை, கட்டுரைகள் எழுதும் ஆற்றலையும், ஆங்கில இலக்கிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் திறனையும் பெற்றிருந்தார்.
பாரதியார் ‘The Fox with the Golden Tail’ எனும் ஆங்கிலச் சிறுகதையை எழுதியதோடு, ஆழ்வார்களுடைய பாசுரம், ஆண்டாளின் பாடல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழில் சிலபாடல்கள், இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகிற்கு வழங்கியிருக்கிறார் என்பது அரிய செய்தி.
ரஷ்யாவின் ஜார் மன்னர்களின் வீழ்ச்சியையும், மாஜினி போன்றோரின் வீரத்தையும், உலகக் கவிஞர்களின் புதுக்கவிதைப் பிதாமகராகிய வால்ட் விட்மன் மற்றும் கவிஞர் ஷெல்லி ஆகியோரின் கவிதைகளையும் தமிழுக்குத் தந்தவர் பாரதிதான்.
தமது பாஞ்சாலி சபதத்தில் ‘மாலைநேர வர்ணனைப் பகுதியில்’ புதுக்கவிதைக்கு வித்திட்டவர் பாரதி. பின்னர் வசன கவிதையாகவும் வார்த்தெடுத்ததும் அவரே.
இன்னும் ஓர் அரிய செய்தி, 1912ஆம் ஆண்டு ‘டைட்டானிக்’ எனும் உல்லாசக் கப்பல் பனிப்பாறையில் மோதிக் கடலுக்குள் மூழ்கியபோது, ஐநூறுக்கும் மேற்பட்டோர் அதில் இறந்துபோனார்கள். இச்செய்தியைத் தமிழில் தனது பத்திரிக்கையில் முதன்முதலில் பதிவுசெய்து அஞ்சலியும் செய்திருக்கிறார் பாரதி. பின்னர்; டைட்டானிக் படம் ஹாலிவுட் திரையுலகில் இரண்டுமுறை எடுக்கப்பட்டுப் புகழ்பெற்றதையும் நாம் அறிவோம்.
பாரதி கவிதா மண்டலத்தின் மூலமாகத்தான் பாரதிதாசனைப் போன்ற கவிஞர் பெருமக்கள் பாரதியைப் பின்பற்றி உருவாகத் தொடங்கினர். 1918இல் சென்னை திரும்பிய பாரதி, கடலூரில் கைது செய்யப்பட்டு, சில மாதங்கள் சிறையிலும் இருந்தார். பின்னர் திருவல்லிக்கேணிக்கு வந்து தன்னுடைய இறுதிக்காலம் வரை கவிதைகளுக்காகவே வாழ்ந்து வந்தார். கவிதையாகவும் வாழ்ந்து வந்தார்.
இன்றைக்கும் பாரதியின் புகழ் அவருடைய கனவுகள் போல மெய்ப்பட்டுக்கொண்டிருக்கின்றன ‘வாழ்க நீ எம்மான்’ எனக் காந்தியடிகளைப் பாரதி பாராட்டினார். ‘வாராது போல் வந்த மாமணி’ என்று சிதம்பரனாரைப் பாராட்டினார். நாமும் அவரின் வார்த்தைகளாலேயே அவரைப் பாராட்டுவோம். போற்றுவோம். பாரதி புகழ் வாழ்க!
காலத்தை வென்ற மகாகவி பாரதி தன் பரந்த அறிவால், நுண்ணிய நோக்கால், ஆழ்ந்த சிந்தனையால், எழுத்தால், பேச்சால், நாட்டுக்கு உழைத்த செயல்பாடுகளால், பன்முக ஆளுமையோடு இன்றைய இளைய சமுதாயத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார் என்பது உண்மை.
பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ இன்றைய இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் ஒளிவிளக்கு. பன்முக ஆளுமை கொண்ட பாரதியின் புகழைப் போற்றுவோம். பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் பாரதி,
கம்பனைப்போல்
வள்ளுவனைப்போல்
இளங்கோவைப் போல்
என்றென்றும் வாழ்ந்திருப்பான். இது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.
பாரதியைப் போற்றி வணங்கும்போது அவர் பெயரால் எனக்குத் தரப்பட்ட மகாகவி பாரதியார் விருதினை நான் மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். 2014ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் கையால் அந்த விருதினைப் பெற்றுக்கொண்ட அந்த நினைவு என்றும் என் மனதில் ஒளிவீசிக்கொண்டிருக்கும்.