உலகமொழிகளை அறிவோம் மொழிபெயர்ப்புகள் மூலமாக…

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”
என மகாகவி பாரதியார் பாடியதுபோல் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, வங்கமொழி, குஜராத்தி போன்றவற்றிலுள்ள இலக்கியங்களையும், உலகமொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யமொழி, ஜெர்மன், ஜப்பான், சீனம், உருது போன்றவற்றில் உள்ள இலக்கியங்களையும் தமிழ்மொழியில் மொழிபெயர்த்தும், தமிழ்மொழியில் இருக்கின்ற சிறப்புடைய இலக்கியங்களை மேற்சொன்ன மொழிகளில் மொழிபெயர்த்தும் வழங்கினால் பரந்த இலக்கிய உலகின் விரிந்த செய்திகள் எங்கும் பரவும்.
தமிழ்நாட்டில் தமிழோடு பிறமொழி கற்ற பாரதி, வ.வே.சு ஐயர், சிதம்பரம் பிள்ளை, கவிமணி போன்றோரும் பிற தமிழ் இலக்கிய ஆசிரியர்களும் உலகமொழிகளிலிருந்து, செய்திகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்துள்ளனர்.
பாரதி – ஷெல்லி, வால்ட்விட்மன் போன்றோருடைய கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். வ.வே.சு. ஐயர், ச.து.சு யோகியார், சுத்தானந்த பாரதி போன்றோரும், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலிருந்து கதை கட்டுரை போன்றவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் இராமாயணம், மகாபாரதம். வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்தை 12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டில் வாழ்ந்த கம்பன், தமிழ்மொழிக்கேற்ப கம்பராமாயணமாகப் படைத்துள்ளார். அதுபோலவே வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்தை, வில்லிபுத்தூரார் 16ஆம் நூற்றாண்டில் வில்லிபாரதமாகப் படைத்துள்ளார்.
வடமொழியிலும். ஹிந்தியிலும் எழுதப்பட்ட பகவத்கீதையின் செய்திகளைத் தமிழில் பாரதியாரும், இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த சித்பவானந்தரும், சின்மயானந்தரும் மற்றும் பலரும் மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்துள்ளனர்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு ‘உரைநடை’ என்னும் புதியவடிவம் தமிழுக்கு வந்தது. நாவல் (புதினம்), சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை போன்றவை மேற்கத்தியத் தாக்கத்திற்கு ஏற்பப் படைக்கப்பட்டன.
ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய், தஸ்தாவஸ்கி, ஆன்டன் செகாவ், சிங்கிஸ் ஐத் மாத்தவ், காரல் மார்க்ஸ், லெனின், மாக்ஸிம் கார்க்கி போன்றோருடைய படைப்புகள் இந்திய சோவியத் யூனியன் கழகத்தில் சார்பில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்மொழியில் வெளியிடப்பெற்றன. இதில் பேராசிரியர் தர்மராஜனுக்குப் பெரும் பங்கு உண்டு.
பிரெஞ்சு எழுத்தாளர்களான அலெக்ஸாண்டர் டூமாஸ், ஜுல்ஸ் வெர்ன், விக்டர் ஹியூகோ போன்றோரின் படைப்புகள் தமிழ்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு வந்தன.
புகழ்மிக்க ஆங்கில எழுத்தாளர்களான வில்லியம் ேஷக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா, சார்லஸ்டிக்கன்ஸ், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோருடைய படைப்புகள் தமிழ்மொழியில் பரவலாக எளிமையாக மொழி பெயர்க்கப்பட்டன. இவைதவிர அமெரிக்க எழுத்தாளர்களான ஏனஸ்ட் ஹெமிங்வே… போன்றோரது நாவல்களும், தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று வந்துள்ளன.
சீனமொழியிலுள்ள கதைகள், கவிதைகள், யுவான் – சுவாங் போன்றவருடைய பயணக் குறிப்புகள், சீன நாட்டுப்புறக்கவிதைகள், கதைகள் போன்றவற்றைத் தமிழில் த.சேனாதிபதி, த.குமாரசாமி சகோதரர்கள் மொழிபெயர்த்துள்ளனர்.
கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை, சுத்தானந்த பாரதியார் போன்றோர் உருதுமொழியில் எழுதப்பட்ட உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். புத்தரின் வரலாற்றை ‘ஆசிய ஜோதி’ என்ற தலைப்பில் கவிமணி ஒரு குறுங்காவியமாகவேப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுக்கு வந்த கிறித்தவ அறிஞர்களான கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஃசுகி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப், கால்டுவெல், ரேனிஸ் பாதிரியார் போன்றோர் தமிழ்மொழியின் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களான திருக்குறள், நாலடியார், திருவாசகம் போன்றவற்றை இலத்தீன், ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்துத், தமிழின் தொன்மையை உலகோர் அறியச் செய்தனர்.
இவர்களைப்போலவே இலங்கைத் தமிழறிஞர்களான யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர், கா.கைலாசபதி, க.சிவத்தம்பி மற்றும் இன்றைக்கு உலகமெங்குமுள்ள ஈழத்தமிழர்கள் தமிழ்மொழியின் பழந்தமிழ் இலக்கியங்களைச், சிறந்த தற்காலப் படைப்புகளை, வலைதளங்கள் மூலம் உலகெங்கும் மொழிபெயர்த்துத் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கின்றனர்.
தமிழ் தவிர, பிற இந்திய மொழிகளிலும், உலகமொழிகளிலும் எழுதப்படுகின்ற இலக்கியங்களைப் பயிலும்போது அந்நாட்டின் பூகோள அமைப்பு, வரலாறு, மக்களின் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, தெய்வ வழிபாடு போன்றவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு பிறமொழிக் கதையையும், கவிதையையும் வாசிக்கும்பொழுதும் உலகத்தின் மற்றொரு பக்கத்தை நாம் உட்கார்ந்த இடத்திலேயே படித்து உணர்ந்துகொள்ள முடிகிறது. பொருட்களை ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்வதால் வாணிபம் செழிக்கும், புதிய உணவுகளை உண்டு மகிழ்வோம். அதுபோல,
நம் மொழிச் சொற்களைப் பிறருக்குத் தந்தும், பிறமொழிச் சொற்களை நாம் அறிந்தும் வாழ்ந்தால் உலகம் நம் உள்ளங்கைக்குள்தான். பலமொழி கற்போம்; நம் செம்மொழியைப் பிறருக்குக் கற்பிப்போம்.
இன்றைய அறிவியல் நமக்கு வழங்கியுள்ள மிகச்சிறந்த கொடைகள் எவை தெரியுமா? கூகுள், யூ-ட்யூப் விக்கிபீடியா, வாட்ஸ்அப் போன்றவை உலகில் எந்த மூலையில் எந்த நூல் வெளியிடப்பட்டாலும் அதனை நாம் அறிந்து கொள்ளவும்; புரிந்து கொள்ளவும் வழிவகை செய்யும் வகையில் அமைந்திருப்பது ஒரு சிறப்பு. இதோ இந்தக் கட்டுரையைக் கூட வலைதளத்தின் மூலம் அனைவரையும் நம்மால் வாசிக்கவைக்க முடிகிறது என்றால், தற்காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வசதிகள்மூலம் உலக இலக்கியங்களை நாம் அறிந்து கொள்ளவும் நம் பழந்தமிழ் இலக்கியங்களை உலகோர் அறிந்துகொள்ளவும் செய்வது எளிது.
உலகமொழிகளைக் கற்போம்; மொழிபெயர்ப்புகள் மூலமாக உலகத்தை அறிவோம்.