சூரியகிரகணம்… அறிவியலிலும், ஆன்மீகத்திலும்

கிரகணம் (Eclipse) என்பது வானில் நிகழும் ஓர் அரிய நிகழ்வாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட நாளில், நேரத்தில், சந்திரன் வரும்போது அதனுடைய நிழல் சூரியனை மறைக்கின்றது. இதையே கிரகணம் என்கிறோம். சந்திரன் தன்னுடைய பயணச்சுற்றில் சூரியனுக்கும் பூமிக்குமான நேர்கோட்டிலிருந்து விலகும்போது அதன் நிழலும் விலகுகிறது. அப்போது கிரகணம் விட்டுவிடுவதாக நாம் சொல்லுகிறோம்.
இன்னும் விளக்கமாகச் சொல்வதாக இருந்தால்
சூரியன் === சந்திரன் === பூமி
இதுவே சூரிய கிரகணம் ஆகும்.
இந்த முழு சூரிய கிரகணத்தின்போது சூரியனுக்கு நடுவில் சந்திரனின் நிழல் விழுந்து ஒரு வளையம் போல காட்சி அளிக்கும். இந்தியாவில் கிரகணம் என்பது சாதாரண கிரக நிகழ்வாகப் பார்க்கப்படாமல் அந்த நேரத்தில் பல சாஸ்திர சம்பிரதாயங்களும் பின்பற்றப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் மூன்று சூரிய கிரகணங்கள் நிகழ்வது வழக்கம்.
அதுபோல இந்த ஆண்டு 2021, டிசம்பர் மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை அன்று நிகழக்கூடிய சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.07மணி வரை நீடிக்கும். அதாவது 4மணி நேரம் 8நிமிடங்கள் நீள்கிறது இந்த கிரகண நிகழ்வு.
இந்தச் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் தென்அமெரிக்கா, அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தெரியும்.
இனி அறிவியல் ரீதியாகக் கூறப்படுகின்ற சூரியகிரகணம் புராண காலங்களிலும் எவ்வாறு அக்கால மக்களால் அறியப்பட்டது என்பதைச் சற்றே காண்போம். மகாபாரதக் கதையில் 18நாட்கள் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் நடந்தது என்பதை யாவரும் அறிந்திருக்கிறோம். இதில் 13ஆம் நாள் போரில் அர்ஜுனனின் மகனாகிய அபிமன்யுவைச் சக்கரவியூகத்திற்குள் சுற்றிவளைத்து அவனோடு கௌரவர்கள் அனைவரும் போரிடுகின்றனர். அபிமன்யு தனிஒருவனாக அவர்களை எதிர்க்கிறான். சக்கரவியூகத்திற்குள் உள்ளே செல்லும் வழியை அறிந்த அபிமன்யுவால் வெளியேறமுடியவில்லை. அப்போது சிந்து தேசாதிபதியாகிய சயத்ரதன், அபிமன்யுவைக் கொன்றுவிடுகிறான். இதனை அறிந்த பாண்டவர்கள் கலங்கிப்போகிறார்கள். அர்ஜுனனும் வருந்தியிருந்தாலும் தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற சயத்ரதனை, ‘நாளை மாலை சூரியன் மறைவதற்கு முன்பாகக் கொன்று வீழ்த்துவேன் அல்லது தற்கொலை செய்துகொண்டு மடிவேன்’ என வஞ்சினம் உரைக்கிறான். (வஞ்சினம் என்பது போர்க்களத்தில் தான் இன்னது செய்வேன் அல்லது இப்படி ஆவேன் என்று வீரசபதம் கூறுவது)
இதனைத் தெரிந்துகொண்ட துரியோதனன் 14ஆம் நாள் யுத்தத்தில் சயத்ரதன், அர்ஜுனன் கண்ணில் படாதவாறு கிணறுபோன்ற பள்ளத்தை வெட்டி அதற்குள் அவனை மறைத்து வைக்கிறான். 14ஆம் நாள் யுத்தம் தொடங்குகிறது. அர்ஜுனன், கண்ணனிடத்தில் ‘இன்று நான் போட்ட சபதம் உன்னருளால் நிறைவேற வேண்டும்’ என்று வேண்டிவிட்டு, சயத்ரதனைத் தேடத் தொடங்குகிறான்.
யுத்தத்தில் எதிர்த்து வந்த அனைவரையும் வீழ்த்துகிறான் அர்ஜுனன். ஆனால் சயத்ரதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேரம் சென்று கொண்டிருக்கிறது. மாலைநேரம் வந்தது. சூரியன் மறையப்போகிறான். திடீரென்று இருள் சூழ்ந்தது. ‘சூரியன் மறைந்துவிட்டான்’ என்று கௌரவர்கள் ஆரவாரம் செய்ய, அந்த சத்தத்தைக் கேட்டுப், பள்ளத்துக்குள் இருந்த சயத்ரதன் மேலே வந்து பார்க்கக், கண்ணபெருமான் அர்ஜுனனிடத்தில், ‘அதோ, சயத்ரதன் தலை தெரிகிறது. நீ போடு பாணத்தை’ என்கிறார்.
‘சூரியன் மறைந்துவிட்டானே’ என்று அர்ஜுனன் தயங்க, நான் சொல்லுகிறேன் நீ போடு பாணத்தை’ என்று மீண்டும் அர்ஜுனனை வலியுறுத்திய கண்ணபெருமான், ‘அர்ஜுனா! சயத்ரதன் தலை கீழே விழக்கூடாது. அதை நீ அம்புகளால் தள்ளிக்கொண்டே சென்று சந்தியாவந்தனம் (மாலைநேர வணக்கம்) செய்து கொண்டிருக்கின்ற அவனுடைய தந்தையின் கைகளில் விழுமாறு செய், விரைந்து போடு பாணத்தை’ என்று கட்டளையிட்டார்.
அர்ஜுனனும் தயங்காது அந்தச் செயலைச் செய்து முடித்தான். சயத்ரதனின் தலை அர்ஜுனனின் பாணத்தால் பந்தாடப்பட்டு, வெகுதூரத்தில் ஆற்றங்கரையில் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்த அவன் தந்தையின் கைகளில் சென்று விழ, அதை அவன் பயத்தோடு கையிலிருந்து கீழே தள்ளிவிட, அவன் தந்தையின் தலையும் வெடித்துச் சிதறியது.
இதற்குள் கௌரவர்கள், ‘இது அநீதி! என்று ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினார்கள். சூரியன் மறைந்துவிட்டான். அர்ஜுனன் போட்ட சபதத்தில் தோற்றுவிட்டான்;’ என்று கூற, கிருஷ்ணபரமாத்மா புன்னகையோடு, ‘சூரியன் இன்னும் மறையவில்லை’ என்று சொல்லித், தன் கைகளை உயர்த்த, சூரியனை மறைத்திருந்த அவரது விஷ்ணுசக்கரம் சுழன்றுகொண்டே வந்து அவர் கைகளில் நின்றது. சூரியன் மேற்கு திசையில் மறையப்போவதற்கு முன், பிரகாசித்தான். அதைப் பார்த்து அனைவரும் ஆரவாரம் செய்தனர். கண்ணபிரானைப் புகழ்ந்து வணங்கினர்.
இந்தச் செய்தியின்படி பார்க்கும்போது, ஆகாயத்தில் சூரியன் சற்றுநேரம் மறைக்கப்பட்டுப் பின்பு வெளிவந்த நிகழ்வு கண்ணபெருமானின் கைகளில் இருந்த சக்கராயுதத்தால் என்று புராணம் கூறுகிறது. இதே செய்தியை நாம் அறிவியல்படி பார்த்தோம் என்றால், அன்றைக்குச் சூரியகிரகணம் இருப்பதை மற்றவர்களுக்கு முன்னால் கண்ணபெருமான் அறிந்திருக்கலாம் என நாம் அறிந்து கொள்ளலாம்.
தற்காலத்தில் இதைப்பற்றிக் கூறுவதாக இருந்தால், மெல்கிப்சன் (Mel Gibson) என்ற ஹாலிவுட் கதாநாயகர் தயாரித்த ‘அபோகலிப்ேடா’ (Apocalypto) படத்தில் கதாநாயகனின் தலையை வெட்டப்போகும்போது சூரியன் மறைவதைப் பார்த்து அனைவரும் பயந்துபோய், அவனை வெட்டாமல் தப்பவிடும் காட்சியை நாம் அப்படத்தில் பார்க்கிறோம். அது சூரியகிரகணம்தான் என்பது அந்தக் காட்டு மனிதர்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். இவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்ற சூரியகிரகணம்தான் இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வருகிறது என்பதை நாம் அறிகிறோம்.
ஆன்மீகமாக இருந்தாலும், அறிவியலாக இருந்தாலும், திரைப்படமாக இருந்தாலும் இவற்றையெல்லாம் நம்பமுடிந்தாலும், முடியாவிட்டாலும் சூரியகிரகணம் நிகழப்போவது உண்மைதான். அதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். ஆனால் பாதுகாப்புக் கருதி வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம். சூரியகிரகணத்தைப் பாதுகாப்போடு எதிர்கொள்வோம்.