வள்ளுவம் காத்த வள்ளல்… பாண்டித்துரைத்தேவர்

பாலவநத்தம் ஜமீன்தாராக இருந்த பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இராமநாதபுரத்தை ஆண்ட, பாஸ்கர சேதுபதியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். இவர் தந்தையார் இராமநாதபுர சமஸ்தானத்தில் பெரும் பதவியில் இருந்தவர். பாண்டித்துரைத் தேவர் அவர்கள் சிறுவயதாக இருந்தபோதே அவரது தந்தையார் மரணம் அடைந்துவிட்ட காரணத்தால் அங்கிருந்த உறவினர்களால் இவர் வளர்க்கப்பட்டார். தமிழும், ஆங்கிலக் கல்வியும் கற்றுக்கொடுக்க நல்லாசிரியர்கள் இவருக்காக நியமிக்கபட்டனர்.
உரிய வயது வந்ததும் இவருக்குரிய சொத்துக்கள் இவர் பெயருக்கு வந்து சேர்ந்தன. அன்றுமுதல் பாலவநத்தம் ஜமீன்தாராகப் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இயல்பாகவே தமிழ்மொழி மீது பற்றுக்கொண்டவர் என்பதோடு சுயமாகக் கவிபாடும் ஆற்றலும் பெற்றவர். இவர் பாடிய ‘காவடிச் சிந்து’ இவருடைய புகழைக் கூறும்.
ஒருமுறை பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரையில் வந்து தங்கியிருந்தபோது, திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அவருக்குச் சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அச்சந்தேகங்களை நீக்கும் பொருட்டுக் கம்பராமாயண மற்றும் திருக்குறள் புத்தகங்களைக் கொண்டுவருமாறு பணியாளர்களைப் பணித்தார். அப்போது மதுரை மாநகரத்தில் எவர் வீட்டிலும் கம்பராமாயண ஏட்டுச் சுவடிகளோ, திருக்குறள் பிரதிகளோ இல்லை என்பதை அறிந்த பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மிக்க வருத்தம் அடைந்தார். காரணம் அக்காலத்தில் புத்தகங்கள் அதிகம் அச்சிடப்படவில்லை, ஏட்டுச்சுவடிகளும் கிடைக்கவில்லை. தமிழ்மொழிக்கே ‘கதி’ என்று சொல்லத்தகுந்தவர்கள் கம்பரும், திருவள்ளுவரும்தானே. அப்படியிருக்க, இவர்கள் எழுதிய இந்நூல்கள் தமிழுக்குத் தலைநகராம் மதுரையில் கிடைக்கவில்லையே என்பதை அறிந்து இந்நிலை இனிமேல் தொடரக்கூடாது என முடிவெடுத்தாராம் பாண்டித்துரைத் தேவர்.
இதற்காகவே பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினார். இத்தமிழ்ச்சங்கத்தில் தமிழ்க் கல்வி கற்க வரும்; மாணவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இலவசமாகத் தங்குமிடம், கட்டணம் ஏதுமில்லாக் கல்வி என அனைத்தையும் தம் சொந்தச் செலவில் வழங்கி வந்தார் பாண்டித்துரைத்தேவர். (என் தந்தையார் புலவர் கு.குருநாதன் அவர்கள் கிராமத்திலிருந்து படிக்க வந்து இத்தமிழ்ச்சங்கத்தில் பயின்றுதான் பண்டிதர் வித்வான் மற்றும் புலவர் பட்டமும் பெற்றார்.)
இத்தமிழ்ச்சங்கத்தில் உபாத்தியாயர்களாகத் தமிழும், வடமொழியும் கற்ற பெரும் மேதைகளை ஆசிரியப்பணியில் அமர்த்தி உயர்ந்த ஊதியமும் வழங்கினார் பாண்டித்துரைத்தேவர். மு.இராகவையங்கார், ரா.இராகவையங்கார், திருநாராயணஐயங்கார், சோழவந்தானூர் அரசஞ் சண்முகனார் போன்ற தமிழ் மேதைகள் இச்சங்கத்தில் பணியாற்றினர். அரிய நூலகம் ஒன்றையும் தேவர் அவர்கள் உருவாக்கினார். நூல்களை அச்சிடுவதற்குப்; ‘பாண்டியன் அச்சக சாலை’ என்ற அச்சுக்கூடம் ஒன்றையும் நிறுவினார்.
தமிழகத்தில் எவர் நூல் வெளியிட விரும்பினாலும் ஒற்றைக் கடிதம் மூலம் தங்கள் வேண்டுதலை வைத்தால் அந்த நூல் வெளியீட்டிற்கான செலவு முழுவதையும் பாண்டித்துரைத் தேவரே வழங்கினார். இன்றும் அத்தமிழ்ச்சங்கமே ‘செந்தமிழ்க் கல்லூரியாக’ நிறைந்த புகழோடு விளங்கி வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1901ஆம் ஆண்டு இவர் இத்தமிழ்ச்சங்கத்தை தொடங்கியபோது ‘செந்தமிழ்’ என்ற ஒரு மாத இதழையும் தொடங்கினார். இவ்விதழ் 120ஆண்டுகளாக இன்றும் வெளிவந்து கொண்டிருப்பது பெருமைக்குரிய ஒன்று.
ஒருநாள் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் தமிழ்ச்சங்கத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது ஸ்காட் என்கிற ஆங்கில பாதிரியார் கையில் புத்தகக் கட்டுகளோடு சாரட் வண்டியில் வந்து இறங்கினார். அவரை அன்போடு வரவேற்ற தேவர் அவர்கள், ‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டார். உடனே ஸ்காட் பாதிரியார், ‘நான் திருக்குறளை அச்சு வடிவில் நூலாகக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் சில பிரதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டினார்.
திருக்குறள் என்று அவர் சொன்னவுடன் மகிழ்ந்துபோன பாண்டித்துரைத் தேவர் அவர்கள், ‘எங்கே கொடுங்கள்’ என்று ஆர்வமாக வாங்கிப் பார்த்தார். பார்த்தவர் திடுக்கிட்டார். அதற்குள் பாதிரியாரே ஆரம்பித்தார். ‘இதுவரைத் திருக்குறளை அச்சிட்டவர்கள் எல்லாம் எதுகை, மோனை தெரியாமல் அச்சிட்டு இருக்கிறார்கள். நான் எல்லாத் திருக்குறள்களையும் திருத்திப் புதிய பதிப்பாகப் பதிப்பித்திருக்கிறேன். இதோ பாருங்கள்’ என்று காட்ட, அதில் முதல் குறள் இப்படி இருந்தது…
அகர முதல எழுத்தெல்லாம்
முகர முதற்றே உலகு
என்று அவர் காண்பித்தவுடன், தேவர் அவர்கள் திகைத்துப் போனார். அத்தனை குறட்பாக்களும் அப்படி மாற்றி மாற்றி அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்த தேவர் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார். ‘எத்தனை பிரதிகள் அச்சடித்திருக்கிறீர்கள்’ என்று ஸ்காட் பாதிரியாரிடம் கேட்டார். அவர் மகிழ்ச்சியோடு 500 பிரதிகள் என்று சொன்னார். உடனே, ‘அத்தனை பிரதிகளையும் நானே வாங்கிக்கொள்கிறேன்’ என்று அவற்றையெல்லாம் கொண்டுவரச் செய்து அதற்குரிய முழுப்பணத்தையும் கொடுத்துப் பாதிரியாரை வழியனுப்பிவிட்டுத், தமிழ்ச்சங்கத்தின் பின்புறத் தோட்டத்தில் குழி ஒன்றை வெட்டச்செய்து அதில் தவறாக அச்சடிக்கப்பட்ட அத்தனை புத்தகங்களையும் குழியிலிட்டுத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னாராம். தவறான செய்தி தமிழ் கூறும் நல்லுலகில் பரவிவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட அரிய முயற்சி அது. (அதில் தப்பிய ஒரு பிரதி வடிவம் என்னிடத்தில் உள்ளது. எங்கள் கல்லூரியில் பணியாற்றிய அலுவலக நண்பர் அதை எனக்குக் கொடுத்தார்)
பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றிய இன்னும் சில செய்திகளைக் காண்போம்.
பாண்டித்துரைத் தேவர் அவர்களை, மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் புலவர், செந்தமிழ்க்கலாவிநோதர், செந்தமிழ் பரிபாலகர், தமிழ் வளர்த்த வள்ளல், பிரபுசிகாமணி, செந்தமிழ்ச் செம்மல் என்றும் உலகோர் அழைத்தனர்.
தமிழுக்குப் புத்துயிரூட்டவும், தமிழை வளர்க்கவும் தமிழ்ச்சங்கம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். தமிழ்க்கல்லூரிகள் தொடங்குதல், சுவடிகள், நூல்களைத் தொகுத்து வெளியிடுதல், பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழாராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், பாண்டித்துரைத் தேவர் அவர்கள் தலைமையில் மதுரையில் 1901ஆம் ஆண்டு நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது.
ஆறுமுக நாவலரின் உதவியோடு பல அரிய நூல்களை ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சில் பதிப்பித்தார் பாண்டித்துரைத் தேவர். சிங்காரவேலு முதலியார் சேர்த்து வைத்திருந்த கலைக்களஞ்சிய அகராதிக்கான தகவல்களைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிட பொருளுதவியும் செய்தார் பாண்டித்துரைத் தேவர்.
தமிழ்ச்சங்கம் சார்பில் வெளிவந்த செந்தமிழ் இதழில், உ.வே.சா, இராகவையங்கார், அரசஞ் சண்முகனார், இராமசாமிப் புலவர், சபாபதி நாவலர், சுப்பிரமணியக் கவிராயர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் படைப்புகள் வெளிவந்தன.
பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்த உ.வே.சா., பாண்டித்துரைத்தேவரால் பலமுறை சிறப்பிக்கப்பட்டார். மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்களை முதன்முதலில் உ.வே.சா வெளியிடுவதற்குக் காரணமாக இருந்தவர் பாண்டித்துரைத் தேவர். இதுகுறித்து உ.வே.சா., தம் மணிமேகலை நூலின் முதல்பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டித்துரைத்தேவர் அவர்கள் மொழிப்பற்று மட்டும் கொண்டிருக்கவில்லை. நாட்டுப்பற்றும் கொண்டிருந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்துக்காகப் பாடுப்பட்ட ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் திட்டத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்த தேசபக்தர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள். மேலும் தமது நண்பர்களையும் அதில் ஈடுபடும்படிச் செய்தார். நாட்டுக்கும், மொழிக்கும் கைமாறு கருதாது உதவி செய்தவர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள்.
இத்தனை பெருமைகள் கொண்ட செந்தமிழ் வித்தகராம், பைந்தமிழ்க் காவலராம் பாண்டித்துரைத் தேவர் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் எப்போதும் மனதில் வணங்கி நிற்கும்!