வை.மு.கோதைநாயகி அம்மாள்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் ஒருமுறை பேசுவதற்கு நான் சென்றிருந்தேன். பாரதியாரைப் பற்றி நான் பேசிக்கொண்டு வரும்போது அவர் பெண்களுக்காக நடத்திய சக்கரவர்த்தினி’ எனும் பத்திரிக்கையைக் குறித்துப் பேசினேன். அப்பத்திரிக்கையில் பாரதியின் துணைவியாராகிய திருமதி.செல்லம்மா பாரதி அவர்கள் எழுதிய பாபநாசம்’ பயணக்கட்டுரைக் குறித்தும் எடுத்துரைத்தேன்.

பின்னர் ‘இதே தெருவில் வசித்து வந்த வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களைப் பற்றி நான் உங்களுக்குச் சில செய்திகளை தெரிவிக்கிறேன்’ என்று சொல்லி, அவரைப் பற்றிக் கூறினேன். ‘இளம் வயதிலேயே திருமணமாகி வந்த வை.மு.கோதைநாயகி எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார். அவருக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தது அவரது மாமியார்தான் என்பது உலகோர் அறியவேண்டிய செய்தி’.  வை.மு. கோதைநாயகி அம்மையார் எழுதிய துப்பறியும் கதைகள் குறித்தும்;, அவர் நடத்தி வந்த ஜகன் மோகினி’ என்ற பத்திரிக்கையைப் பற்றியும்; பேசினேன்.

‘தேசப்பற்று மிகுந்த அவர் காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்று நம் நாட்டுக்காகப் போராடிச் சிறைத் தண்டனையும் பெற்றிருக்கிறார்’ என்று நான் பேசிமுடித்தவுடன் பலரும் வந்து என்னைப் பாராட்டினார்கள். அப்படிப் பாராட்டியவர்களில் ஒருவர், சற்று உயரமான மனிதராக இருந்தார். அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு ‘நீங்கள் இதுவரை பேசிய வை.மு.கோதைநாயகி அம்மாளுடைய பேரன்தான் நான், வைத்தமாநிதி முடும்பை குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் வை.மு.கோ. சகோதரர்கள். எங்கள் குடும்பமே இலக்கியம் சார்ந்து இயங்குவதற்குக் காரணம் எங்கள் பாட்டியான வை.மு.கோதைநாயகி அம்மாள்தான் என்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது’ என்று கண்களில் நீர் மல்கச் சொன்னார் அவர். அப்போது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவில்லை. இப்போது வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களைப் பற்றி வரலாற்றின் சில பகுதிகளை நான் படித்ததிலிருந்து எடுத்துச் சொல்கிறேன் கேளுங்கள்…

வை.மு.கோதைநாயகி (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர் ஆவார். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். இவர் 1901ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 1ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் நீர்வ௵ர் என்னும் கிராமத்தில் பிறந்தார்.

வை.மு.கோதைநாயகி அவர்கள் மேடைப்பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போரடியவர், இசைக்கலைஞர் எனப் பல பரிமாணங்களில் தன்னை நிறுவிக்  கொண்டார்.இவரை சமகால எழுத்தாளர்கள், நாவல்ராணி, கதாமோகினி, ஏக அரசி’ என்று போற்றினர். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் தனி ஆளாய் ஜகன்மோகினி’ எனும் இதழை நடத்தியவர்.

கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப்படிக்கவும் தெரியாது. ஆனால் அவர் வீட்டில் எப்போதும், திருவாய்மொழி, பாசுரங்கள் பாடிக்கொண்டிருப்பார். இதனால் அவருக்குத் தமிழ்நடை சரளமாக வரத்தொடங்கியது. மேலும் குழந்தைகளும், பெரியவர்களும் ரசிக்கும் வகையில் கதை சொல்லும் திறன் பெற்றிருந்தார்.

சமூக மறுமலர்ச்சிக்கும், பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஏதாவது  செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அவருடைய கற்பனை வளமும் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அவருக்கு ஓரளவு மட்டுமே எழுதத்தெரிந்ததால், இவர் கூறியதை அவரது தோழி பட்டம்மாள் எழுத, ‘இந்திர மோகனா’ என்ற நாடகத்தை உருவாக்கினார். அவரது கணவர் அந்த நாடக நூற்பிரதிகளை அப்போது புகழ்பெற்ற நாடகாசிரியரான பம்மல் சம்பந்த முதலியார் மற்றும் துப்பறியும் கதைகளை எழுதி வந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோரிடம் காண்பிக்க அவர்களும் வை.மு.வுக்கு பாராட்டும் உற்சாகமும் தெரிவித்தனர். இந்த நாடகத்தை நோபில் அச்சகத்தார் மூலம் வெளியிட்டார். இந்நாடகத்தை இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா உள்ளிட்ட அக்கால இதழ்கள் பாராட்டி எழுதின.

கோதைநாயகி நாடகம் எழுதுவதிலும், இயக்குவதிலும் வல்லவர். அவருடைய சமூக நாடகங்கள் பலமுறை மேடை ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில்; அருணோதயம், வத்சகுமார், தயாநிதி என்ற நாடகங்கள் பலரது பாராட்டைப் பெற்றவை. முதன்முதலாக வைதேகி’ என்ற நாவலை எழுதினார். இவ்வாறு கோதைநாயகி இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்தார். மேலும் இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்கள் ஆகியவை அவரின் இதர படைப்புகளாகும்.

அப்போது வெளிவராமல் நின்று போயிருந்த ஜகன்மோகினி’ என்ற இதழை 1925இல் வாங்கி அதைத் தொடர்ந்து நடத்தினார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் அந்த இதழில் வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் எழுதிய நாவல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற கோதைநாயகியின் பெயர் அப்போதைய பிரபலங்களில் ஒன்றாக மாறியது. பலமுக்கிய பிரமுகர்களோடு நட்பு கிடைத்தது. இராஜாஜி தான் பேசும் கூட்டங்கள் எல்லாவற்றிலும் இவரைப் பேசச் சொல்வாராம். இதனால் ஒருமுறை காந்தியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்ட அது முதல் தன்னை விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபடுத்திக் கொண்டார். அரசுக்கெதிரான போராட்டம் காரணமாக ஆறுமாதம் வேலூரில் சிறைத் தண்டனையும் அனுபவித்தார். சிறையில் சோதனையின் கொடுமை’ என்ற நாவலை எழுதினார்.

வை.மு.கோதைநாயகி அவர்கள் எழுதிய 115 நாவல்களில் பெரும்பாலானவை துப்பறியும் வகையைச் சார்ந்தவை என்றாலும் அவற்றிலும் பெண்ணடிமை, பெண் கல்வி, வரதட்சிணை ஒழிப்பு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு போன்ற நல்ல பல கருத்துக்களைச் சொல்லி உள்ளார்.

கோதைநாயகி அவர்கள் எழுதிய சில கீர்த்தனைகள் இசை மார்க்கம்’ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. ராஜ்மோகன், தியாகக் கொடி, அனாதைப் பெண், தயாநிதி ஆகிய இவரது நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. பத்மினி அவர்கள் நடித்த சித்தி’ படத்தின் கதையும் இவருடையதுதான். இப்படம் ஆறுவிருதுகளைப் பெற்றது. அதில் சிறந்த கதையாசிரியர் விருதை, கோதைநாயகிப் பெற்றார்.

1948இல் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக மகாத்மாஜி சேவா சங்கம் என்ற அமைப்பை நிறுவி சமூக சேவையும் செய்து வந்தார். 

நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்துலகில் சாதித்த முதல் பெண் எழுத்தாளர் மட்டுமல்லாமல், துப்பறியும் கதைகளை எழுதிய முதல் பெண்மணியும் வை.மு.கோதைநாயகிதான் என்பதை எண்ணிப்பார்க்கும்போது இப்போதும் வியப்பு ஏற்படுகிறது. இந்த அம்மையாரின் சகோதரர்களான வை.மு.சடகோபராமானுச்சாரியார், வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்  ஆகியோர் வில்லிபாரதத்திற்கும், இராமாயணத்திற்கும், திருக்குறளுக்கும் சிறப்பான விளக்க உரைகளை எழுதியிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் உ.வே.சாமிநாதய்யர்; சென்னையில் இருந்தபோது அவரது பதிப்புப் பணியில் உடனிருந்தவர்கள் இவர்கள்தான் என்பதை உ.வே.சா அவர்களே மகிழ்வோடு தன்னுடைய நூல்களில் பதிவு செய்திருக்கிறார்.

வாழ்க வை.மு.கோ குடும்பத்தாரின் புகழ்!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.