இந்தியாவில் விந்தைகள்

உலகில் விந்தையான செய்திகள் பல உண்டு. விந்தை என்றால் ஆச்சரியம், வியப்பு இப்படிப் பல பொருள் உண்டு. எகிப்தியப் பிரமிடுகளையும், சீனப் பெருஞ்சுவரையும் நாம் சென்று பார்க்காவிட்டாலும் புத்தகங்களில், செய்திப் படங்களில் பார்த்து வியக்கிறோம்; மகிழ்கிறோம். இத்தகைய விந்தைகள் இந்தியாவில் இல்லையா? என்றால் எத்தனையோ உண்டு. அதிலும், குறிப்பாகத் தமிழகத்தில் காணப்படுகின்ற விந்தைகளை, கோயில் கலைகளைத் தமிழக மக்கள் மட்டுமல்ல, உலகத்தார் பலரும் அறிந்து கொள்ளவில்லை. காரணம் பழங்காலத்தில் பேரும், புகழும் பெற்று விளங்கிய, அரண்மனைகள் போன்றவை தற்போது அத்தகைய பெருமைகளை இழந்தும், பாழடைந்தும், பராமரிக்க ஆளின்றியும் இருப்பதே காரணம் எனலாம்.
‘திருக்கொடுங்குன்றம்’ – இப்படியொரு பெயரை சமீபகாலத்தில் நாம் கேள்விப்பட்டதுண்டா? கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை பற்றிப் படித்திருக்கிறோம். அது தமிழ்நாட்டில் எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு எத்தனை பேரால் உடனே விடை சொல்ல முடியும்? பாரியின் பறம்பு மலையின் பழைய பெயர்தான் திருக்கொடுங்குன்றம். மதுரையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் கொட்டாம்பட்டி கிராமத்திலிருந்து, சிங்கம்புணரி என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள மலைதான் பாரிக்கோமான் ஆண்ட பறம்பு மலை. மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் பேருந்தில் செல்லும்போதே வலதுபக்கத்தில் நமது கண்ணில் இம்மலை படுவதுண்டு. (தூங்காமல் பயணம் செய்தால்…)
இப்பறம்பு மலைக்கு இப்போதைய பெயர் பிரான்மலை. பாரியின் மலைதான் பிரான்மலையாக மாறியிருக்க வேண்டும். 2000ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களுள் ஒருவன்தான் பறம்பு மலையை ஆண்ட பாரிமன்னன். சேர, சோழ, பாண்டிய அரசர்களான வேந்தர்களைத் தவிர, இத்தகைய குறுநில மன்னர்களும், இனக்குழுத் தலைவர்களும் தங்களுக்குரிய பகுதியை சுதந்திரமாக ஆண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும், இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பல உண்டு. புத்தர் அவதரித்த இடம் புத்தகயா. அந்த இடத்தை உலகுக்கு அறிவித்த மௌரிய அரசனான அசோகச் சக்கரவர்த்தி நாட்டிய ஸ்தூபி; பம்பாய் நகரத்தில் தனித்தீவாக, அது ஒதுங்கிக் கிடக்கும் எலிபெண்டா கேவ்ஸ் போலவே கர்நாடகாவில் மைசூரில் அமைந்துள்ள சிரவணபெலகுலா’ போன்றன குறிப்பிடத்தக்க இடங்களாகும்.
‘பெலகுலா’ என்றால் வெண்மையான ஏரி என்பது பொருள். அந்த இடத்தில் சந்திரகிரி, இந்திரகிரி என்ற பெயரில் இரண்டு குன்றுகள் அமைந்துள்ளன. இந்திரகிரி என்ற குன்றில் அமைந்திருக்கின்ற மிகப் பிரம்மாண்டமான சிலை, 8ஆம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆண்ட ‘பாகுபலி’ என்ற அரசனின் சிலையாகும். இது ‘கோமதேஸ்வரர்’ சிலை என்று அழைக்கப்படுகிறது. நிர்வாணமான இச்சிலை மலையுச்சியில் தெய்வீக அழகோடு காட்சி தருகிறது. 700படிக்கட்டுகள் கொண்ட இக்குன்றில் ஏறி உச்சியில் அமைந்துள்ள 150அடிக்கும் மேற்பட்ட உயரமான இச்சிலையினைக் காணலாம்.
இம்மலைக்கு அருகிலிருக்கிற சந்திரகிரி மலையில் இன்றைக்கும் ஒரு விந்தை காணப்படுவதாகச் சொல்கிறார்கள். இம்மலையிலும் பரதன் என்கின்ற இளவரசனின் சிலை இரண்டு கைகளைக் கூப்பியபடி செதுக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பத்தின் எந்தப் பகுதியைத் தட்டினாலும் மணி ஒலிப்பது போல ஓசை கேட்கும். குறிப்பாக வணங்கிக் கொண்டிருக்கிற கையில் தட்டினால் அழுகுரலில் ஓசை கேட்குமாம்.
இதற்கு ஒரு வரலாற்றுக் கதை சொல்கிறார்கள். சந்திரகிரி மலையில் அமைந்த பாகுபலியும், பரதனும் ஒரு அரசரின் இரு புதல்வர்கள். எல்லா வல்லமையும் உடைய இளவரசனாக பாகுபலி திகழ, அவன்மீது பொறாமை கொண்ட பரதன் தன் உடன்பிறந்தோனாகிய பாகுபலியைக் கொல்லும் பொருட்டு, சக்கரம் போன்ற ஆயுதத்தை ஏந்தி அவனது கழுத்தைக் குறிவைத்து எறிந்தானாம். அக்கொலை முயற்சியிலிருந்து தப்பிய பாகுபலிக்கு சட்டென்று ஒரு ஞானம் ஏற்பட்டதாம். அழிந்து போகின்ற செல்வத்திற்காகத்தானே நம் உடன்பிறந்தவன்கூட நம்மைக் கொல்ல முயன்றான் என்று நினைத்து, அரசைத் துறந்து துறவறம் மேற்கொள்கிறான். (இந்தக் கதையைத்தான் 2015ஆம் ஆண்டு பாகுபலி என்ற படமாக எடுத்தார்கள்) அவனது பெருமையை உணர்ந்த நாட்டு மக்கள் அவனைத் தெய்வமாக வடிவமைத்து வணங்கி வருகிறார்கள்.
தன் அண்ணனைக் கொல்ல முயன்ற பரதனோ, வாழ்நாளெல்லாம் அச்செயல் குறித்து வருந்துவதைக் காண்பிப்பதற்காக இத்தகைய ஓசை தருகின்ற சிற்பத்தை இந்தச் சந்திரகிரி மலையிலே வடித்துள்ளார்களாம். இதற்குப் ‘பரதனின் அழுகுரல்’ எனப் பெயரிட்டுள்ளார்களாம்.
ஆண்டுதோறும் பாகுபலியைப் பாராட்டி எடுக்கின்ற விழாவில், ஹெலிகாப்டர் மூலமாக அபிசேகம் செய்து மலர்களைத் தூவி, மக்கள் வழிபடுகிற காட்சி இன்றைக்கும் விந்தையானதுதான்.
எங்கும் விந்தைகள் நிறைந்த இத்தேசத்தின் அரிய செய்திகளை ஆராய்ந்து அறிந்து கொள்வோம். அனைவருக்கும் அறிவிப்போம்.