ஆட்சியில் பொன்விழா கண்டவர்… ஃபிடல் காஸ்ட்ரோ

கியூபப் புரட்சியின் தந்தையும், பொதுவுடைமைப் புரட்சியாளரும், பொதுவுடைமை அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49ஆண்டுகள் கியூபாவை ஆண்டவர். உலகத்தில் நீண்ட காலத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோ மட்டுமே.
ஃபிடல் காஸ்ட்ரோ, 1940களில் ஹவானா பல்கலைக்கழகத்தில் படித்தபோது அரசியலில் ஈடுபடத் தொடங்கியதுடன் தனது பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொண்டார்.
பல்கலைக்கழக மாணவரான ஃபிடல் காஸ்ட்ரோ 1946இல் அப்போதைய கியூபா அதிபர் ராமோன் கராவ் சான் மார்ட்டின் அரசின் ஊழலுக்கு எதிராக நிகழ்த்திய உரை அப்போது மிகவும் பிரபலமானது.
கல்லூரியில் பயிலும்போதே கம்யூனிச கட்சிகளில் சேர்ந்தார். போராட்டங்களும் செய்தார். பேச்சுத்திறமையால் ஃபிடல் காஸ்ட்ரோ மக்களைக் கவர்ந்தார். ‘கியூபாவுக்குச் சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்துக்கும் அது கிடையாது’ என அறிவித்தார். 1952இல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா, கியூபாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்னும் இதழை துவங்கிய காஸ்ட்ரோ, அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தவும், புரட்சிக்கு மக்களை அணிதிரட்டவும் செய்து கொண்டிருந்தார்.
அதிபர் கார்லஸ் ப்ரியோவின் அரசுக்கு எதிராக இராணுவப் புரட்சி மூலம் 1952இல் கியூபா அதிபரானார் ஜெனரல் ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா. அவரது இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிராக 1953ஆம் வருடம் ஜுலை மாதம் மான்கடாவில் இருந்த ஆயுதக்கிடங்கைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட காஸ்ட்ரோ உள்ளிட்ட ஏராளமானோர் கைதாகினர்.
காஸ்ட்ரோவுக்கு 15ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு 19மாதங்களுக்குப் பிறகு 1955ஆம் ஆண்டு மே மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
அதே ஆண்டு மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ, அங்கு தனது வருங்கால சகபோராளி மற்றும் நண்பரான எர்னஸ்டோ ‘சே’ குவேராவைச் சந்திக்கிறார்.
கியூபப் புரட்சி 1959ஆம் ஆண்டு ஜனவரியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மனுவேல் உருசியா லியோ கியூபாவின்அதிபரானார். அவரது அரசில் ஜோஸ் மிரோ கார்தோனா பிரதமரானார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் ஆறு வாரங்களில் பதவி விலகியதால், காஸ்ட்ரோ 1959ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் பொறுப்பேற்றார்.
அதன்பின் பிரதமராக இருந்த காஸ்ட்ரோ, அதிபர் பதவியேற்றார். அப்பதவியில் பிப்ரவரி 2008வரை காஸ்ட்ரோ நீடித்தார்.
கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும். மேலும் கியூபாவின் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர்.
தன்நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த, அரசை அகற்றியவுடன், முதல் பணியாய், ஓர் எழுத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்து, அதன் தாரகமந்திரமாக பின்வரும் வாக்கியங்களைக் கூறினார்…
தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்
என்பதே ஆகும்.
சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும், மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர். கடப்பாறையை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டார்கள். ஒரே ஆண்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் 30லிருந்து 98.2ஆக உயர்ந்தது. மாணவர்களிடமாகட்டும், முதியவர்களாகட்டும் , கட்டணமாக ஒரு பைசாகூட ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசாங்கம் வசூலிக்காமல் அனைவருக்கும் இலவசக் கல்வியை அளித்தது.
ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு கன்பூசியஸ் அமைதி விருது 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
உலகிலேயே அதிக ஆண்டுகள் ஒரு நாட்டு அரசின் தலைவராக பதவி வகித்தவர்களில் ஒருவரான காஸ்ட்ரோ 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தனது 90ஆம் வயதில் காலமானார்.