சின்னக்கண்ணன்….பாலமுரளி கிருஷ்ணா…

இசைஉலகில் பெரும் புகழ்பெற்ற திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் திரையுலகிலும், தன் பாடல்களால் சாதனை புரிந்திருக்கிறார். திருவிளையாடல் படத்தில் திரு.டி.எஸ்.பாலையா அவர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து ‘ஒரு நாள் போதுமா’ என்ற பாடலை ராகமாலிகையில் மிகச்சிறப்பாகப் பாடியிருப்பார்.
இதேபோல, இயக்குநர் ஸ்ரீதரின் ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே’ என்ற பாடலும், ‘சாது மிரண்டால்’ படத்தில் ‘அருள்வாயே’ என்ற பாடலும், கே.பாலச்சந்தரின் ‘நூல் வேலி’ படத்தில் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’ என்ற பாடலும் என்றும் மறக்க முடியாதவை.
இளையராஜா இசையில், ‘கவிக்குயில்’ படத்தில் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடல் மூலம் பெரும்புகழைப் பெற்றவர் இவர். இதுதவிர, சுவாமி ஐயப்பன், பக்த பிரகலாதா போன்ற படங்களில் நாரதராகவும் வேடமேற்று நடித்திருப்பார். சுவாமி ஐயப்பன் படத்தில் ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா’ என்று இவர் பாடிய பாடல் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாய் அமைந்தது.
இத்தகைய இசைவேந்தராகிய திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்களை நான் முதன்முதலில் சந்தித்தது என்னுடைய பதினைந்தாம் வயதில்தான். நான் பிறந்த ஊராகிய சோழவந்தானுக்கு ஒரு திருமண நிகழ்வில் பாடுவதற்காக வந்திருந்தார் திரு. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். அப்போது திருவிளையாடல் படம் வந்து வெகுசிறப்பாக ஓடிக்கொண்டிருந்த காலம். ஆனால் அவர் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்தத் திருமணவீட்டின் திண்ணையில் அமைதியாக அமர்ந்திருந்தார். நான் சென்று அவருக்கு வணக்கம் சொன்னேன். அவர் மகிழ்ச்சியோடு எனக்கு வணக்கம் சொன்னார். பிறகு மூன்று மணிநேரம் அவரது இசைவெள்ளம் எங்கள் ஊரையே மகிழ்வித்தது. இத்தகைய பெருமைமிகுந்த மேதையின் கைகளில் விருது பெறும் வாய்ய்பினையும் பிற்காலத்தில் நான் பெற்றேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருமுறை சென்னையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ரெயின் டிராப்ஸ் (Rain drops)’ அறக்கட்டளையின் மூலமாகச் சாதனையாளர்களுக்கு விருது கொடுப்பதற்காக என்னையும் அழைத்திருந்தார்கள். அன்றைக்குத் திரைஇசைப் பாடகி திருமதி. வாணி ஜெயராம் அவர்களும் விருது பெற்றார். நானும் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்களை வணங்கி அவரது திருக்கரங்களில் அந்தப் பரிசினைப் பெற்றுக்கொண்டேன்.
அந்த மேடையில் அவர் பேசும்போது, தான் ஆறு வயதில் பாடத்தொடங்கியதாகவும், எண்பது ஆண்டுகாலம் இசைத்துறையில் இருப்பதாகவும் அவர் கூறியபோது, எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். என் இனிய நண்பர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களிடத்தில் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்களைப் பற்றி நான் பேசத்தொடங்கியதும் அரைமணி நேரத்திற்கும் மேலாக அவரைப் பற்றிப் பாராட்டி, அவரது பல்வகைத் திறமைகளையும் மகிழ்வோடு எடுத்துக் கூறினார் திரு. கமல் அவர்கள்.
இத்தயை பெருமைமிகுந்த மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா அவர்கள், 1930ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் தேதி இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் வடகிழக்கு பகுதியிலுள்ள கிழக்குகோதாவரி மாவட்டத்தில், சங்கரக்குப்பம் என்ற ஊரில் பிறந்தார்.
ஸ்ரீபருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலுவின் வழிகாட்டுதலில், இளம்வயதிலேயே கர்நாடக இசையில் தேர்ச்சிபெற்று விளங்கிய முரளிகிருஷ்ணா அவர்கள், தன்னுடைய எட்டு வயதில்; “தியாகராஜ ஆராதனா” என்ற முழுநீள இசை நிகழ்ச்சியை விஜயவாடாவில் முதன் முதலில் மேடையில் அரங்கேற்றினார். இவ்வளவு சிறுவயதில் முரளிகிருஷ்ணாவின் மனம்மயக்கும் இசையில் நெகிழ்ந்துபோன ஹரிகதை மேதை “முதுநுரி சூர்யநாராயண மூர்த்தி பாகவதர்” கிருஷ்ணாவின் பெயருக்கு முன்னால் “பால” என்ற சொல்லை இணைத்தார். அன்றுவரை ‘முரளி கிருஷ்ணா’ என அழைக்கப்பட்ட அவர், பிறகு ‘பாலமுரளி கிருஷ்ணா’ என அழைக்கப்பட்டார்.
தன்னுடைய இளம் வயதிலேயே இசைப்பணியைத் தொடங்கிய பாலமுரளி கிருஷ்ணா, பதினைந்து வயதில் கர்நாடக இசையின் ராகங்களில் ‘ச-ரி-க-ம-ப-த-நி’ என்ற ஏழு சுரங்களையும் கொண்ட மேளகர்த்தா இராகத்தில் 72 கீர்த்தனைகளைத் தொகுத்து வழங்கினார். வர்ணங்கள், கீர்த்தனைகள், ஜாவளிகள், தில்லானாக்கள் என்று 400க்கும் மேற்பட்ட உருப்படிகளைத் தமிழ், தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உருவாக்கியுள்ளார். தாய்மொழி தெலுங்கு என்றாலும், அவர் தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, பஞ்சாபி, வங்கம் எனப் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தப் ‘பன்முக மேதையாகத்’ திகழ்ந்தார். கர்நாடக இசைப்பாடகராகப் புகழ்பெற்று விளங்கிய அவர், பிறகு கஞ்சிரா, மிருதங்கம், வயோலா, மற்றும் வயலின் போன்றவற்றை வாசிக்கவும் தொடங்கினார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, மத்திய கிழக்கு ஆசியா மற்றும் பலநாடுகளில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். புகழ்பெற்ற பீம்ஷன் ஜோஷி, ஹரிபிரசாத் சௌராஷியா, கிஷாரி மற்றும் அமோம்கர் போன்றோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சங்கீதத்தைச் சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள், தெலுங்கு, தமிழ், கன்னடா, மற்றும் மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும், மற்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் உள்ளார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார். 2005இல் பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர் மத்தியிலும் இந்திய இசையைக் கொண்டு சென்ற சங்கீத மாமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இசைப்பணிகள் மகத்தானவையே!