மைசூரின் புலி… திப்பு சுல்தான்…

இந்தியாவின் மக்கள் ஜனாதிபதியாக விளங்கிய மேதகு அப்துல்கலாம் அவர்கள் விஞ்ஞானியாக, அறிவியல் மேதையாக உலகத்தாரால் போற்றப்பட்டவர். அவர் ஒருமுறை அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்திலுள்ள நாசா விண்வெளி நிலையத்திற்குப் பயிற்சிக்காகச் சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பிரம்மாண்டமான ஓவியம் அவர் கவனத்தை ஈர்த்தது. வெள்ளைக்காரர்களோடு கருப்பு மனிதர்கள் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தப் போர்க்களத்தின் பின்னணியில் ஏவுகணைகள் பறப்பதாக அந்த ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டு வியந்த கலாம் அவர்கள் அந்த ஓவியத்திலிருந்த போர்க்களச் செய்தியைப் படித்துப் பார்த்தார். ஆம், நம் திப்பு சுல்தான் ஆங்கிலேயரோடு சண்டையிட்ட போர்க்களக் காட்சிதான் அது. அப்போதே ஏவுகணை விஞ்ஞானத்தை திப்பு சுல்தான் பயன்படுத்தியிருப்பதை ஆங்கிலேயர்கள் ஓவியமாகத் தீட்டியிருந்தார்கள். அந்த ஓவியம்தான் அங்கே வைக்கப்பட்டிருந்தது. அறிவியல் வளர்ச்சியின் முன்னோடியாகத் திப்பு சுல்தான் விளங்கியதை கலாம் அவர்கள் தன்னுடைய ‘அக்கினிச் சிறகுகள்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதேபோல, திப்பு சுல்தான் அரண்மனையில் ஒரு அரிய பொம்மை இருந்தது. அந்தப் பொம்மைக்குச் சாவி கொடுத்தால், அது இயங்கும். அது என்ன பொம்மை தெரியுமா? புலி ஒன்று வெள்ளைக்காரச் சிப்பாயை அடித்து வீழ்த்துகின்ற காட்சி. இதில் புலியாக விளங்கியவர் ‘மைசூரின் புலி’ என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தான்தான். இந்த அரிய பொம்மை அழிக்கப்பட்டுவிட்டதா? ஆங்கிலேயருடைய அருங்காட்சியகத்தில் இருக்கிறதா?’ என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. வீரத்தின் அடையாளம் தீரன் திப்பு சுல்தான்.

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் திப்பு சுல்தான். தொடக்க காலத்தில் ஆங்கிலேயருக்குச் சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன் திப்பு சுல்தான்.

இளம் வயதிலேயே திறமைவாய்ந்த போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.

‘மைசூரின் புலி’ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் 1750ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ‘தேவனஹள்ளி’ என்ற இடத்தில் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய திப்பு சுல்தான், இளம் வயதிலேயே தன்னுடைய தந்தையான ஹைதர் அலியுடன் பல போர்க்களம் கண்டார். இதனால் தன்னுடைய பதினாறு வயதிலேயே யுத்தத் தந்திரங்கள், ராஜதந்திரங்கள் என அனைத்திலும் தேர்ச்சிபெற்று, சிறந்த படைத்தளபதியாக வளர்ந்தார்.

1776 ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதிகோட்டையைக் கைப்பற்றிய திப்பு சுல்தான், பிறகு 1780இல் நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலப்படைகளுக்கு எதிராகத் தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார். பின்னர், 1782இல் தன்னுடைய தந்தை ஹைதரலியின் மரணத்திற்குப் பிறகு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் தன்னுடைய 32ஆவது வயதில் ‘சுல்தானாக’ அரியனை ஏறினார். மைசூரின் மன்னராகப் பொறுப்பேற்ற திப்பு சுல்தான் அவர்கள், ‘புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைத்’ தன்னுடைய சின்னமாகப் பயன்படுத்தினார்.

1789ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் மராட்டியப் பேரரசும், ஐதராபாத் நிஜாமும் பிரிட்டிஷ் படைத்தளபதி கார்ன் வாலிசுடன் இணைந்து திப்பு சுல்தானுக்கு எதிராகப் போர்தொடுத்தனர். ஆனால், சற்றும் கலங்காத திப்பு சுல்தான் எதிரிகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டார். 1792ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இந்தப்  போரில் திப்பு சுல்தான் தோல்வியடைந்தார். இறுதியில் சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி பல பகுதிகள் பிரிட்டிஷ், ஐதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

‘போரில் திப்பு சுல்தானை வீழ்த்தமுடியாது’ என அறிந்த பிரிட்டிஷ்காரர்கள், சூழ்ச்சி செய்து திப்புவின் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் விலைபேசி, லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, திப்பு சுல்தானை அழிக்கத் திட்டம் தீட்டினர். இந்த சூழ்ச்சிக்கு இடையில் 1799ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், திப்பு சுல்தான் தீரமுடனும், துணிச்சலுடனும் போர்புரிந்தாலும், எதிரிகளின் நயவஞ்சகத்தால் குண்டடி பட்டார் திப்பு சுல்தான். ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானிடம் ‘தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று பலமுறை கூறியபோதும், ‘முடியாது’ என மறுத்துக், கர்ஜனையோடு ‘ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப்போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்’ என முழங்கியபடியே 1799ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி வீரமரணம் அடைந்தார்.

திப்பு சுல்தான் ஆட்சியில் பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்தார். முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு சுல்தான் இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைபிடித்தார். மக்களுக்குக் கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாகச் சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதிச் சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

பிரிட்டிஷ் இராணுவத்தின் தேசிய இராணுவ அருங்காட்சியகத்தில் பிரிட்டிஷ் இராணுவம் இதுவரை சந்தித்ததிலேயே அவர்களின் மிகப்பெரிய பலம் வாய்ந்த எதிரியாகத் திப்பு சுல்தானையே மதிப்பிட்டுள்ளனர்.

இப்படியாக இந்திய மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராகத் தனது முதல் குரலை அழுத்தமாக வரலாற்றில் பதிவு செய்து சென்ற, இந்தியாவின் முக்கிய தேசிய வீரராகவும், மைசூர் மாகாணத்தின் மன்னராகவும் திப்பு சுல்தான் பார்க்கப்படுகிறார்.

ஆங்கிலேயரை நடுநடுங்க வைத்ததோடு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வீர வரலாற்றையும் படைத்தவர் திப்பு சுல்தான் என்றால் அது மிகையாகாது.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.