உயர்தனிச் செம்மொழி

“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”
என்றும்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்”
எனவும்
பாடுகின்ற பாரதி, தமிழ்மொழி தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம்,
பிரெஞ்ச் எனப் பல மொழிகளையும் கற்றுணர்ந்தவர். இத்தகைய பன்மொழி
அறிவை உடைய பாரதி, தமிழ்மொழியின் பெருமையை உலக மொழிகளுக்கு
ஈடாக, அதற்கும் மேலாகவும் கூறுவதைக் காண்கிறோம்.
உயர்தனிச் செம்மொழி என்ற தமிழ்ச்சொல்லை உலகுக்கு அறிவித்தவர்,
சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் ஆவார். இவர்
நூறாண்டுகளுக்கு முன்பாகவே, தாம் வாழ்ந்த காலத்திலேயே செம்மொழி எனத்
தமிழின் உயர்வினை உலகுக்கு அறிவித்தவர்.
2004ஆம்ஆண்டு நம் இந்திய அரசாங்கம், இந்திய மொழிகளில் ஒன்றாகிய
நம் தமிழ்மொழியைச் செம்மொழியாக அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்;று.
தொல்காப்பியம் தொடங்கி மூவாயிரம் ஆண்டுப் பழைமை உடையது
நம்மொழி. இத்தமிழ்மொழி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு
இன்னல்களுக்கு ஆட்பட்டாலும், கால வெள்ளத்தை எதிர்த்து இந்த விஞ்ஞான
யுகத்திற்கு ஈடுகொடுத்துப் புகழோடு விளங்குவது பெருமைக்குரிய ஒன்றாகும்.
உலகில் பழைமையும், பெருமையும் மிக்க மொழிகளாக அறிஞர்களால்
போற்றப்படுபவை ஆறு(6) மொழிகளாகும். அவை மேற்கத்திய மொழிகளான
கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு (ஏசுநாதர் பேசிய மொழி, இதன் கிளைமொழியாகிய
அராபிக்) போன்றவையும் கிழக்காசிய மொழிகளான தமிழ், சீனம், சமஸ்கிருதம்
ஆகியவையும் ஆகும்.
இவற்றுள் கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரு போன்ற மொழிகள் இன்று பேச்சு
வழக்கில் வழக்கொழிந்த மொழிகளாகும். இந்தியமொழிகளில் சமஸ்கிருதம்
தமிழ்மொழிக்கு இணையான பழமையான மொழி என்றாலும், அம்மொழி
மந்திரமொழியாக (மறைமொழி) உள்ளதேயன்றி சாதாரண மக்கள்வழக்கில் பேச்சு
மொழியாக இல்லை. அப்படி என்றால் உலக அறிஞர்கள் குறிப்பிடும்
ஆறுமொழிகளில் பேச்சு வழக்கிலும்(உலகியல் வழக்கு) எழுத்து வழக்கிலும்
இன்றைக்கும் சிறந்து விளங்கி, உயிரோடு இயங்கும் மொழி நம்
தமிழ்மொழியாகிய செம்மொழியே என அறிகிறோம்.
இத்தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் எத்தனை என்றால்
உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, ஆக மொத்தம் 30. ஏனைய
எழுத்துக்களெல்லாம் இவற்றின் பிரிவுகளே.
“அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப”
என்பது தொல்காப்பியம்.
அடுத்து இம்மொழியின் பழைமை என்று குறிப்பிடும்பொழுது, முதல்
இலக்கணநூலான தொல்காப்பியமே மூவாயிரம் ஆண்டுப் பழைமையுடையது
என்றும், அந்நூலுக்கு முன்பே பல இலக்கியநூல்கள் இருந்ததற்கான சான்றுகள்
அத்தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றன என்றும் குறிப்பிடுகின்றனர்.
தொல்காப்பியர் ‘என்ப’, ‘என்மனார்’ என்னும் சொற்களைப்
பயன்படுத்துவதன் மூலம், தனக்கு முன்பே நூல்களைப் படைத்தவர்கள்
இருந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுவதைக் காணமுடிகிறது.
பழைமையாக மட்டும் இருந்தால் போதுமா? புதுமையாக உங்கள் மொழி
என்ன சாதித்தது என்று கேட்டால் அதற்கும் விடை சொல்லலாம்.
இந்தியமொழிகளில் முதலில் அச்சேறிய மொழி தமிழ்மொழிதான். பதினான்காம்
நூற்றாண்டிற்குப் பிறகு அச்சுக்கலை வளர்ச்சியடையத் தொடங்கியது. கல்லிலும்,
தாமரைப் பட்டயத்திலும், பனைஓலைகளிலும், தோல், துணி போன்றவற்றிலும்
எழுதப்பட்டு வந்த மொழிகள் காகிதங்களில் அச்சேறத் தொடங்கின.
இவ்வகையில் கி.பி.1542இல் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூல்
தமிழ்மொழியில் அச்சிடப்பட்டதாக தமிழ்மொழி அகராதி குறிப்பிடுகிறது. சரி,
இன்றைக்கென்ன இம்மொழி சாதித்திருக்கிறது? என்று கேட்டால் அதற்கும் விடை
சொல்லலாம்.
அறிவியல் வளர்ச்சியில் கணினியின் (கம்ப்யூட்டர்) வருகை ஓர் யுகப்புரட்சி
என்றே கூறலாம். இந்தியமொழிகளில் அதிக வலைத்தளங்களைப் பெற்ற ஒரே
மொழி நம் தமிழ்மொழிதான். குறிப்பாக அயலகத்தில் வாழுகின்ற தமிழர்கள்
மொழியறிவும், கணினியறிவும் உடையவர்களாகத் திகழ்வதால்,
தமிழ்மொழியை வலைதளமெங்கும் பரவச் செய்திருக்கிறார்கள்.
ஒருமொழி செம்மொழியாக வேண்டும் என்றால், அம்மொழி இந்தியா
தவிர்த்து ஏனைய நாடுகளின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இருத்தல் வேண்டும்
என்பது செம்மொழிக்கு அங்கீகாரம் தருபவர்கள் கூறுகின்ற விதி, அதன்படி
பார்க்கையில் நம் தமிழ்மொழி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆகிய நாடுகளில்
ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும், அந்நாட்டுப் பணங்களில் அச்சிடப்பெற்ற
மொழியாகவும் விளங்குவது சிறப்புக்குரிய ஒன்று. இந்தியமொழிகளில் வேறு
எந்த மொழிக்கும் இத்தகைய பெருமைகள், இத்தனை அருமைகள் இல்லை
என்பதை உறுதியிட்டுக் கூறலாம்.
உயர்தனிச் செம்மொழி… உலக அரங்கில் நம் மொழி.