நான்கு தலைமுறைக் கவிஞர்…
கவிஞர் வாலி அவர்கள் புகழ்மிக்க திரைப்படப் பாடலாசிரியர். இவர்
கவிஞராக மட்டுமல்லாமல் திரைப்பட வசனகர்த்தாவாகவும், நடிகராகவும்
புதுக்கவிதையில் காவியங்களைப் படைப்பவராகவும் (அவதார புருஷன்,
கிருஷ்ணவிஜயம், பாண்டவர் பூமி) திகழ்ந்தார். இவர் 1931ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் 29ஆம்தேதி திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பிறந்தார். இவரின்
இயற்பெயர் டி.எஸ். ரங்கராஜன்.
ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய
‘நினைவு நாடாக்கள்’ என்ற தொடரும், ‘புதிய பார்வை’ இதழில் ‘நானும் இந்த
நூற்றாண்டும்’ என்ற தொடரும் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
கவிஞர் வாலி அவர்கள் 15,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை
எழுதியுள்ளார். இவைதவிர, ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே
உனை மறவேன்’ எனும் இவரது தொடக்கக் காலப்பாடல் இவரது முருகபக்தியை
உலகத்திற்கு அறிவித்தது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோரை அடுத்து அதிகப் பாடல்களை
எழுதியவர் இவரே.இத்தகைய பெருமைமிகுந்த கவிஞரைப் பாராட்டுகிற வாய்ப்பு எனக்கும்
கிடைத்தது. திருச்சியில் இவருக்கு நடைபெற்ற மாபெரும் பாராட்டுக் கூட்டத்தில்
நான் பேசும்போது இளங்கோவடிகளையும், வாலி அவர்களையும் ஒப்பிட்டுப்
பேசினேன்.
பாண்டியமன்னன் நீதி தவறி இறந்தபோது, அவன் மனைவியாகிய
கோப்பெருந்தேவியும் உடன் உயிர் துறந்தாள். இந்நிகழ்வை இளங்கோவடிகள்
‘தன்னுயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல்’ எனக் குறிப்பிடுவார். இந்த
வரிகளுக்கேற்ப நம் கவிஞர் ஐயா வாலி அவர்களும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
நடித்த ‘பணம் படைத்தவன்’ என்ற படத்தில் ‘தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர்
இல்லை, என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்’ என்று எழுதியுள்ளார் என்று
நான் விவரித்துப் பேசியபோது, கூட்டத்தில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. வாலி
அவர்கள் மிகுந்த மகிழ்வோடு எழுந்து என்னை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்தார்.
என்னால் மறக்க இயலாத நிகழ்வு அது.
திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையில்,
பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்றுக்
கொண்டவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா
அவர்கள்.மேலும் கவிஞர் வாலி அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை
எழுதியுள்ளார்.
இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை, திரைப்படப் பாடல்கள் என அனைத்துத்
துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினார். இவரின் புதுக்கவிதையைப் பற்றி ஒரு
சான்று, பாண்டவர் பூமியில் (மகாபாரதம்) கோபக்கார துருவாச முனியைக்
குறிப்பிடும்போது ‘நாக்கு நுனியில் வேதம்; மூக்கு நுனியில் கோபம்’ இவரே
துருவாசர்.
இவருக்குப் புகழ்தந்த பாடல்கள், நான் ஆணையிட்டால் அது
நடந்துவிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், மாதவிப் பொன்மயிலாள்
தோகை விரித்தால், மல்லிகை என் மன்னன் மயங்கும், எங்கிருந்தோ ஆசைகள்,
சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஒன்னநெனச்சேன் பாட்டு படிச்சேன் எனச்
சொல்லிக்கொண்டே போகலாம்.
கவிஞர் வாலி அவர்களுக்கு 2007ஆம் ஆண்டு இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’
விருது வழங்கப்பட்டது.
வாலி தன் கவிதைகளால் என்றும் வாழ்வார்.