ஹாலிவுட்டின் கனவு இயக்குநர்… ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

நான் கல்லூரியில் படிக்கிற காலத்தில் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலத் திரைப்படங்கள் மதுரையில் திரையிடப்படும்போதெல்லாம் மறக்காமல் சென்று பார்த்துவிடுவேன். (ரீகல் தியேட்டர், பரமேஸ்வரி தியேட்டர்) டென் கமாண்மெண்ட்ஸ் (The Ten Commandments) மெக்கனாஸ் கோல்டு (Mackenna’s Gold), கிளியோபட்ரா (Cleopatra) போன்ற படங்களையும், ஜேம்ஸ்பாண்ட் படங்களையும், லாரல், ஹார்டி சார்ளி சாப்ளின் போன்ற நகைச்சுவையாளர்களின் படங்களையும் விடாமல் தொடர்ந்து பார்த்து வருவேன். மதுரையில் ஜேம்ஸ்பாண்ட் நடிகரான ஷான் கானரிக்கு (Sean Connery) ரசிகர் மன்றமே உண்டு.
இப்படிப்பட்ட படங்களைப் பார்த்துவிட்டுக் கடைசி இரயிலில் ஊருக்குச் சென்று அதைப் பலநாட்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. இத்தனைக்கும் அந்தப் படங்களெல்லாம் ஆங்கிலமொழியில் பேசினாலும், எனக்கு மொழி புரியாவிட்டாலும் நான் அதை புரிந்துகொள்வேன். மற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.
இப்படி இருந்தபோதுதான் மதுரை சினிப்பிரியாவில் 70mm திரையரங்கில் திரையிடப்பட்ட படம் close Encounters of third kind என்னும் படம் மதுரையே ஒரு மிரட்டு மிரட்டியது, உலகத்தையும்தான். அதிலும் அந்தப் படத்தின் கடைசிக்காட்சியில் பறக்கும் தட்டு பிரம்மாண்டமாகப் பூமியில் இறங்கும்போது இரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுவார்கள். அப்போதுதான் எனக்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அறிமுகமானார்.
பின்னர் அவருடைய படங்களைத் தொடந்து பார்க்க ஆரம்பித்தேன். E.T.(the Extra Terrestrial)என்ற படம் அயல்கிரகத்து மனிதர்களைப் (ஏலியன்ஸ்) பற்றிய படம். அந்தப் படத்தில் அயல்கிரகத்திலிருந்து தப்பி வந்த ஒரு குழந்தை நம் உலகத்துக் குழந்தைகளோடு பழகுவதும், படம் முடியும்போது பிரிந்து செல்லும் அந்தக் குழந்தையைக் கண்டு அத்தனைபேரும் கலங்குவதும் இன்றைக்கும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. தொடர்ந்து இவருடைய படங்களில் என்னைப் பலமுறை பார்க்கவைத்த படம் டைரர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க் (Raiders of the Lost Ark) இதேபோல் இவருடைய வீரசாகசப் படங்களான இண்டியானா ஜோன்ஸ் (Indiana Jones) போன்ற படங்களில் வீரதீர சாகசக் கதாநாயகனாக ஹாரிசன் போர்ட் (Harrison Ford) என்ற நடிகர் வருவார். அலட்டிக்கொள்ளாத அவருடைய நடிப்பு இன்றைக்கும் எனக்கு வியப்பைத் தரும்.
மீண்டும் ஸ்பீல்பெர்க் எடுத்த மற்றொரு படம் உலகத்தையே மிரளவைத்தது அந்தப்படம்தான். ஜுராசிக் பார்க் (Jurassic Park) இந்த ஜுராசிக் பார்க் படம் பல பாகங்களாக வந்தாலும் முதல் படத்திற்கு ஈடு இணையில்லை. அதேநேரத்தில் உலகெங்கும் வசூலை வாரிக்குவிக்கும் வியாபாரப் படங்கள் மட்டும்தான் ஸ்பீல்பெர்க் எடுப்பார் என்றுநினைக்க வேண்டாம்.
இவர் கறுப்பு வெள்ளையில் எடுத்து நான்கு மணிநேரம் ஓடி ஆஸ்கார் அவார்டுகளை அதிகம் பெற்ற படம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (Schindler’s list) என்ற படம் (இந்தியன் படத்தில்கூட திரு.கமல் அவர்கள் இந்தப் படத்தின் பெயரைக் குறிப்பிடுவார்). கிராமத்திலிருந்து வந்து, ஸ்பீல்பெர்க் படங்களை மதுரையிலும் சென்னையிலும் பார்த்து வந்த நான் 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா செல்லுகிறபோதெல்லாம் அங்கிருக்கின்ற பிரம்மாண்டமான ஐ – மேக்ஸ் திரையரங்குகளில் அவருடைய புதிய படங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன், மகிழ்ந்திருக்கிறேன்.
அறிவியல் தொடர்பாக அவருடைய சில படங்கள் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள்போல அவ்வளவு அருமையாக இருக்கும். என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு செய்தி எதுவென்றால், அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து ‘கனவு வாரியம்’ என்ற படத்தைத் தயாரித்துத் தானே கதாநாயகனாக நடித்து அந்தப் படத்தை இயக்கினார் இயக்குநர் திரு.அருண் சிதம்பரம் அவர்கள். இதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இந்தப் படத்தில் நானும் நடித்திருப்பேன்.
கதாநாயகன் வாழ்க்கையில் முன்னேறக் கல்வி முக்கியம் என்பதை அவருக்கு அறிவுறுத்துவேன். கனவு வாரியம் என்ற அப்படம் பல நாட்டின் விருதுகளைப் பெற்றது. அந்தப் படம் குறிப்பாக அமெரிக்க நாட்டின் பிளாட்டினம் ரெமி விருதினைப் பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதற்கு முந்தைய ஆண்டு அந்த விருதினைப் பெற்றவர் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் என்னுடைய கனவு நாயகர் ஸ்பீல்பெர்க்தான். அந்த ஆண்டு நான் அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது அந்த விருதினைப் பெற வந்த இயக்குநர் அருண் சிதம்பரம் அவர்களுக்கும், எனக்கும் ஒரே மேடையில் பாராட்டுக் கிடைத்தது. இப்பாராட்டு நிகழ்ச்சி அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் நடைபெற்றது. இப்போதும்கூட ஸ்பீல்பெர்க்கின் அடுத்த படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஒருவேளை அந்தப் படத்தை நான் அமெரிக்காவில் சென்று பார்த்தாலும் பார்ப்பேன். ஸ்பீல்பெர்க் பற்றி இன்னும் சில செய்திகள்…
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அவர்கள் 1946ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் பிறந்தார். இவருடைய அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர். அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார் இவர். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதிற்காக ஆறுமுறை பரிந்துரைக்கப்பட்ட இவர் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (Schindler’s list) மற்றும் சேவிங் பிரைவேட் ரியான் (Saving Private Ryan)ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கானச் சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வொர்க்ஸ் எஸ்கேஜியினைத் (Dreamworks SKG) தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்தார். மேலும் திரைப்படமல்லாது பல தொலைக்காட்சித் தொடர்களையும், நிகழ்பட ஆட்டங்களின் திரைக்கதைகளையும் தயாரித்து இயக்கவும் செய்தவர் இவர்.
ஹாலிவுட்டின் பிதாமகன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அவர் தொடங்கி வைத்த ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘ஜுராசிக் பார்க்’ உள்ளிட்ட படத்தொடர்கள் இன்றும் ரீபூட் செய்யப்பட்டு வசூலை வாரிக் குவிக்கின்றன. ‘மென் இன் பிளாக்’, ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ என இவர் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்து மெருகேற்றிய படத்தொடர்களும் நிறைய உண்டு. இப்படி ஹாலிவுட்டில் கவனம் ஈர்த்த பெரும்பாலான சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ஸ்பீல்பெர்க்கின் பங்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வகையிலிருந்தே தீரும் எனலாம்.
அதே சமயம் இயக்குநராக சயின்ஸ் ஃபிக்ஷன் என்ற எல்லைக்குள் மட்டும் நிற்காமல் அனிமேஷன், பயோகிராஃபி, போர் குறித்த படங்கள், கோர்ட்; ரூம் டிராமாக்கள், சர்வதேச அரசியலைப் பேசும் படங்கள், எமோஷனல் கதைகள் என அனைத்துக் களங்களிலும் சாதனைப் புரிந்திருக்கிறார்.
வெற்றி பெற்றவர்களை நாம் பின் தொடர்ந்தால், வெற்றிகளும் நம்மைப் பின் தொடரும். இது நான் என் வாழ்க்கையில் அறிந்த உண்மை.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு ஒரு சல்யூட்..