ஹரித்துவாரில் ஞானசம்பந்தன்….

               நூற்றாண்டுகள் கண்ட பழமையும் பெருமையும் மிக்க தமிழ்ச் சங்கம். நான்காம் தமிழ்ச் சங்கம் எனும் பெயரால் அழைக்கப்படும் மதுரைத் தமிழ்ச் சங்கம் (தற்போது செந்தமிழ்க் கல்லூரி). பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் வர்களால் நிறுவப்பெற்ற புகழுடையது. காலஞ்சென்ற என் தந்தையார் புலவர் கு.குருநாதன், 1933ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை பால பண்டிதம், பண்டிதம், புலவர் பட்டங்களை இத்தமிழ்ச் சங்கத்தில் பயின்றுதான் பெற்றுத் தேர்ந்தார்.

               திரு.நாராயண அய்யங்கார், மு. இராகவ அய்யங்கார், இரா. இராகவ அய்யங்கார் போன்ற தமிழ்ச் சான்றோர்களிடத்தில் பாடம் பயின்ற பெருமை தனக்கு உண்டு என அடிக்கடி கூறுவார் என் தந்தையார். தவிரவும், அக்காலத்தில் தேர்வில் வெற்றிபெறுவது மிகக் கடினம் என்பதைச் சொல்லி ஓர் உதாரணமும் எனக்குச் சொன்னார்.

               புலவர் தேர்வில், வெண்பா பாடல் ஒன்றை மாணவர்கள் எழுத வேண்டுமாம்! கற்றுத்தேர்ந்த புலவர்களாலேயே வெண்பா பாடுவதென்பது மிகக் கடுமையான ஒன்று. வெண்பா, புலவர்க்குப் புலி’ என்ற பழமொழி  உண்டு. அந்த வெண்பாவும், மாணவர் விருப்பத்திற்கு ஏற்றபடி எழுத முடியாதாம். வினாத்தாளில், ஒரு சொல்லை முறித்து பாதியாகக் கொடுப்பார்களாம். அந்தச் சொல்லுக்கு ஏற்ற மறுபாதியை ஊகம் செய்து அதற்கேற்ப வெண்பா எழுத வேண்டுமாம்!

உதாரணமாக,

               தனக்குடையான் மாரி தடுத்தான்’

என்பதுதான் பாடலின் கடைசி வரி. இதை வைத்துக்கொண்டு பாடலை முடித்துக்காட்ட வேண்டுமாம்! என் தந்தையார் இப்படி எழுதினாராம்…

               ஆயரிடை வளர்ந்தான் அம்புவியில் பாலருக்கு…’

               (முழுப் பாடல் எனக்கு நினைவில்லை) எனத் தொடங்கி, ‘கோவர்த்…தனக்குடையான் மாரி தடுத்தான்’ என முடித்து, முதல் மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்றாராம்.

               அதாவது, கோவர்த்தனக்குடையான்’ என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், கண்ணபெருமான் தன் சிறு வயதில் ஆயர்பாடியில் வளர்ந்தான், அற்புதங்கள் பல செய்தான். ஒருநாள் இந்திரன் கோபம் கொண்டு விடாமல் பல நாட்கள் தொடர்ந்து மழை பெய்விக்க, கண்ணன் உலக உயிர்களைக் காக்க கோவர்த்தனகிரி’ எனும் மலையைத் தன் கைகளால் தூக்கி, அதனடியில் அனைவரையும் தங்குமாறு செய்தான். மாரியாகிய மழையைத் தடுத்தான் என்பதைத்தான் இந்தக் கோவர்த்தனம்’ என்ற சொல்லை முறித்துத் தனக்குடையான்’ எனக் கேள்வியாகக் கேட்க, ‘கோவர்த்’ என்ற சொல்லைக் கண்டுபிடித்து, அதற்கான கதையையும் வெண்பாவாகப் பிழையின்றி எழுத வேண்டுமாம். இன்றைக்கு இப்படி வினாத்தாள் அமைந்தால் என்னவாகும்?

               நன்மையைக் கடைப்பிடி’ என்று ஒரு ஆசிரியர் மாணவர்களை எழுதச் சொல்ல, ஒரு மாணவன்….

               நம்ம கடைப் பீடி’ என்று எழுதி ஆசிரியரை அதிர வைத்தானாம்!

               தமிழகத்தில் மேலச் சிவபுரி செந்தமிழ்க் கல்லூரி, தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் என இருப்பதைப் போன்று, திருவனந்தபுரத் தமிழ்ச்சங்கம் (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்றவர்களால் உருவாக்கப் பெற்றது), பெங்க;ர், ஐதராபாத், மும்பை, டெல்லி. கொல்கத்தா என இந்தியா முழுமையும் உள்ள தமிழ்ச் சங்கங்களில் நான் சென்று பலமுறை பட்டிமன்றங்களை நிகழ்த்திக் கொடுத்துள்ளேன்.

               ஒருமுறை பட்டிமன்றக் குழுவினரோடும், எனது துணைவியார் மற்றும் மகன், மகள் இவர்களோடும் ஹரித்துவார் சென்றுவந்த அனுபவம் எப்போதும் பசுமையாய் நினைவில் நிற்கும். இமயமலை அடிவாரத்தில் சீறிப் பாய்ந்துவரும் கங்கை நதியில் நீராடுவதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது!

               பனி உருகித் தண்ணீராக, ஆறாக மலைகளில் இருந்து ஓடி வர, படகுகளில் சிறிய கப்பல்களில் மக்கள் பயணம் செய்ய, லட்சுமண ஜுவாலா’ எனும் இடத்தில் இரும்புக் கயிற்றுப்பாலத்தில் நடந்துசென்று கங்கையைக் கடந்த அனுபவம் என்றைக்கும் மறக்க இயலாதது.

               இந்த லட்சுமண ஜுவாலா எனும் இடத்தில்தான், கங்கை நதி தரையைத் தொடுகிறதாம்! இங்கேதான். ‘பகீரதன்’ எனும் அரசன் ஆகாஷ கங்கையாகிய பாகீரதி’யைத் தரைக்குக் கொண்டுவரப் பல்லாண்டு காலம் முயற்சித்தானாம். இதை இப்போதும்கூட, நடக்க முடியாத செயலாக இருந்தால் பகீரத முயற்சி’ என்று கூறுவது வழக்கம்.

               பின்னர், நாங்கள் உணவருந்திய பின் அங்கிருந்த லட்சுமண கோவிலுக்கு எங்களை அழைத்துச்சென்று தரிசனம் செய்து வைத்தபின் எங்களிடம், ‘ஐயா, இந்த இடத்தில்தான் பகீரதன் தவம் செய்தான் என்பது அனைவருக்கும் தெரியும். நமது தமிழ்க்கவி காளமேகப் புலவர் இந்தச் செய்தியைப் பாடியுள்ளார் என்பது தெரியுமா…?’ என்று கேட்டார்.

               ‘தெரியும். குடத்திலே கங்கை அடங்கும்’ எனும் முறிப்படிப் பாட்டுதானே?’ நான் மகிழ்வோடு கேட்க, அத்துறவி மிக மகிழ்ந்து, ‘ஆம் ஐயா, ஆம். ‘குடத்திலே கங்கை அடங்கும் எனப் பாட முடியுமா? என ஒருவர் சவால் விட, நம் காளமேகம் பாடிய பாடல்தான் இது!

               விண்ணுக்கு அடங்காமல் வெற்புக்கு அடங்காமல்

               மண்ணுக்கு அடங்காமல் வந்தாலும் – பெண்ணை

               இடத்திலே வைத்த ஈசனார் சடா(ம)

               குடத்திலே கங்கை அடங்கும்’

என அவர் இசையோடு பாட, நாங்கள்  மெய்மறந்தோம்.

               ‘கேட்டீர்களா? என்ன அற்புதமான பாடல்!’ என்று சொன்ன நான், பகீரதன் தவம் செய்தபோது கங்கை நதியானது, விண்ணுக்கு – ஆகாயத்திற்கு அடங்காமல், வெற்புக்கு – மலையாகிய இமயமலைக்கு அடங்காமல் வந்தாலும், உமாதேவியாகிய பெண்ணை இடப்பாகத்தில் வைத்த சிவபெருமானின் சடா மகுடத்தில் அடங்கிவிட்டதாம்! இந்த இடத்தில் ‘சடா மகுடம்’ எனும் சொல்லில், ‘சடா ம’ எனப் பிரித்து ‘(ம)குடத்திலே கங்கை அடங்கும்’ எனப் பாடிய காளமேகப் புலவரின் தமிழ் அறிவை நாம் போற்றி வணங்குவோம்’ என்றேன்.

               என் மனதிற்குள் என் தந்தையார் பாடிய தனக்குடையான்’ எனும் முறிப்படிப் பாடலும் நினைவிற்கு வந்தது. அவரையும் வணங்கினேன்.

               ‘இப்படி ஒரு பாடலை இப்போது யாராவது பாட முடியுமா?’ என்று நான் கேட்டபோது,

               காசு பணம், துட்டு, மணி, மணி

                கொட புடிச்சு நைட்டுல

                பறக்கப்போறேன் ஹைட்டுல

                தல காலு புரியல, தலகீழா நடக்குறேன்’

என்று ஒருவர் பாடத் துறவி உட்பட எல்லோரும் சிரித்துவிட்டோம்.

               தமிழில் கவிதை பாடுவதென்பது எளிமை, இனிமை என்றாலும் அதை உருவாக்க வலிமையும் தேவை என்பதை தற்காலத்தில் அஜீத்தே ஒத்துக்கொள்வார் என்பதுதான் உண்மை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.