விளையாட்டால் வெற்றி பெற முடியுமா….?

இருபது வருஷங்களுக்கு முன்பு கபடி விளையாட்டு என்றால் அவ்வளவு இஷ்டம்.
ஆற்றங்கரையோரம் பள்ளி இருந்ததால் ஆற்றில் கபடி விளையாடுவார்கள். நானும் விளையாடியிருக்கிறேன். ஆட்கள் இருந்தால் போதும், இரண்டு அணியாய்ப் பிரிந்து விளையாட்டில் கலக்கி விடலாம். ஓடியாடி, தவ்விக்குதித்து, பாய்ந்து பிடித்து விளையாடும்போது உடம்பே வியர்த்துப் போகும். கபடி அவ்வளவு அருமையான உடற்பயிற்சி.
அப்புறம் கிட்டி என்று விளையாட்டு இருக்கும். பெரிய கம்பு, சின்னக் கம்பு இரண்டை வைத்து விளையாடி, தூள் பரத்தி விடுவார்கள். கிரிக்கெட்டுக்குத் தாய் அதுதான். சில பகுதிகளில் அதை ‘கில்லி’ என்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டுக்குக் கிடைத்த மவுசு அதற்குக் கிடைக்கவில்லை.
அதுமாதிரி ஒவ்வொரு ஊரிலும் சில மரங்களுக்குக் கீழே மண்ணில் பல்லாங்குழி மாதிரிப் பள்ளம் தோண்டி வைத்திருப்பார்கள். கலர் கலரான கோலிக்குண்டுகளை வைத்துக்கொண்டு, குறிபார்த்து அடிப்பதில்தான் எவ்வளவு குஷி. சிலர் அதில் காசு வைத்தும் விளையாடுவார்கள். ஏதாவது காக்கிச் சட்டை கண்டதும் கோலிக்குண்டுகள் மாதிரி சிதறிப் போய் விடுவார்கள்.
மரங்களைப் பார்த்தால் சிலருக்குக் கை அரிக்க ஆரம்பித்துவிடும். அதற்கென்றே ‘வி’ என்ற நம்மூர் அரசியல்வாதிகள் விரலை விரித்துக் காட்டுகிற மாதிரி, விரிந்திருக்கிற மரக்கட்டையில் தடித்த ரப்பரைக் கட்டி, அதன் நடுவில் வாகான கல்லை வைத்து மரத்தில் இருக்கிற ஐட்டங்களுக்குக் குறி வைப்பார்கள். ‘கவட்டை’ என்கிற அந்தச் சின்ன ஐட்டத்தைக் கையில் வைத்திருந்தாலே சிலர் சுதாரிப்பாக ஒதுங்கிப் போய் விடுவார்கள்.
ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்குக் ‘குரங்கு’ மாதிரி தாவுவார்கள். அங்கிருந்து கத்தியபடியே கீழே பொத்தென்று விழும்போது, அவர்களுடைய உற்சாகத்தைப் பார்க்கும்போது, பார்ப்பவர்களுக்கு விளையாடுகிறவர்களுக்கு வால் இல்லாததுதான் ஒரு குறையாகத் தெரியும்.
ஊர்க்கிணற்றில் விளையாடி, ஆற்றில் கிடையாய்க் கிடந்து அந்தக் கிராமத்தின் மொத்தப்பரப்பே அவனுக்குப் பரிச்சயமாயிருக்கும். மற்றவர்களுடன் பேசுவதில் தயக்கமோ, கூச்சமோ இல்லாத மனநிலை அவனுக்கு வந்திருக்கும். படிப்பும் முக்கியம். வளர்கிற ஊரிலிருந்து கிடைக்கிற மற்ற பண்புகளும் முக்கியம். உடல், மூளை இரண்டிற்கும் அங்கே பயிற்சி கிடைக்கிறது. பசி மிகுதியாகி அதிகம் சாப்பிட முடிகிறது. இப்போது அதற்கு நேரெதிர்.
வளர்கிறபோதே விதவிதமான தொலைக்காட்சி சேனல் பார்த்து வளர்கிறது குழந்தை. படிக்கத் துவங்கியதும் ஒரே ட்யூஷன்மயம். குழந்தைகளைத் தெருவுக்கு விளையாட அனுப்ப பெற்றோர்களுக்குத் தயக்கம். விளையாட்டு என்பது இவர்களுக்குத் தொலைக்காட்சி மூலமே அறிமுகமாகிறது.
வீட்டுக்குள் வீடியோ கேம்ஸ் விளையாடுகிறவர்கள், தொலைக்காட்சிகளில் மூளையைத் திணித்துக் கொள்கிறவர்கள் இழந்திருப்பது உடல் உழைப்பை, அதற்கான பயிற்சியை, விளையாட்டைப் பார்க்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அனுபவிப்பதில்லை.
பசியே எடுக்கவில்லை என்று வருத்தப்படும் சில பெற்றோர், குழந்தைகளை இயல்பாக விளையாட அனுமதித்திருக்கிறோமா என்பதை யோசிக்க வேண்டும். மூன்றுவயதிலேயே குழந்தை கண்ணாடி போடவேண்டிய அவசியம் என்ன?
உடற்பயிற்சி இல்லாத இடத்தில், எல்லாத் தொந்தரவுகளும் வந்து உட்கார்ந்து விடுகின்றன.
குழந்தைகள் உலகம், விரிவடைந்திருக்கலாம். ஆனால் வலுவடைந்திருக்கிறதா?
பப்ஜி, ப்ரீ பயர் இவற்றை விளையாடுகின்ற குழந்தைகள் மனதில் வன்முறைதான் வளர்கிறது. மென்மையான குழந்தை உள்ளமும் வலுவான தசைகளும் உடம்பும் இருக்க வேண்டுமென்றால் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தரவேண்டும். விளையாட்டு மைதானங்களே இல்லாத பள்ளிகளைப் பார்க்கிறபோது பயம் ஏற்படுகிறது.
இன்னும் சொல்வதாக இருந்தால் விளையாட்டில் முதன்மை பெற்று மெடலும் சான்றிதழும் வாங்கியிருக்கக்கூடிய மாணவ மாணவியருக்கு மருத்தும், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு இருக்கிறது என்கிற செய்தி சொல்லப்படவேண்டும்.
இந்தியாவில் திரைப்பட நடிகர்களைப்போல அதிகமாக பொருளும் புகழும் பெறுபவர்கள் விளையாட்டு வீரர்கள்தான். ஆரோக்கியமான உடலுக்கும், அமைதியான மனத்திற்கும் விளையாட்டு முக்கியம். அதனால்தான் பாரதி கூட,
ஓடி விளையாடு பாப்பா! – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
எனப் பாடினார்.
எனவே குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். நான் சொல்வதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!