விளக்குகளை ஏற்றும் விளக்கு… ராகுல சாங்கிருத்தியாயன்

நான் மேடையில் பேசுகிறபோதெல்லாம் எனக்குப் பிடித்த புத்தகம், என்னைத் தொடர்ந்து பயணிக்கத் தூண்டிய புத்தகம் என்று ஒன்று இருக்குமானால் அது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற புத்தகம்தான் எனக் கூறுவேன். இந்தப் புத்தகத்தை நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் படிக்கத் தொடங்கி இன்றுவரை படித்து வருகிறேன். இதனுடைய ஆசிரியர் கேதார்நாத் பாண்டே என்ற இயற்பெயர் கொண்ட ராகுல சாங்கிருத்தியாயன்.
இவருடைய வாழ்கை வரலாற்று நூலும் இவரின் பயண நூல்களும் என்னை அக்காலத்திலேயே வியக்க வைத்தன. தமிழ்மொழி உள்பட 33மொழிகள் தெரிந்த பன்மொழிக் கலைஞர் இவர். இவருடைய பயணங்கள் மூலமாக இந்திய நாட்டின் இயற்கை வளத்தை மட்டுமல்லாமல் இந்தியப் பண்பாட்டையும் அறிந்துகொள்ளலாம்.
மனிதகுல வரலாற்றைப் பற்றி ஜார்ஜ் தாம்சன் என்பவர் எழுதிய நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆயினும் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலில் மனிதகுல வரலாறு தொடங்கி இந்தியாவில் காந்தியடிகளுக்கும் அம்பேத்காருக்கும் நடந்த பேச்சுவார்த்தைவரை இவர் காலவாரியாகச் சொல்லிக்கொண்டு வருகின்ற அந்த எழுத்து நடையில் ஒரு வசீகரம் உண்டு.
35வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் அய்யம்பாளையம் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் பட்டிமன்றத்தில் நடுவராகப் பேசிக்கொண்டிருந்தேன் (WPA சௌந்திரபாண்டியனார் என்கிற சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்த ஊர் இது). பட்டிமன்றம் முடியப்போகிறபோது நான் ராகுல சாங்கிருத்யனைப் பற்றியும் ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற நூலைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தேன். பிறகு பட்டிமன்றம் முடிந்தபோது இரவு மணி 1.30ஆயிற்று.
நாங்கள் மேடையை விட்டு இறங்கியவுடன் கூட்டத்திலிருந்த ஒருவர் வந்து, ‘ஐயா நான் பல்லாண்டு காலமாகப் பட்டிமன்றங்களையும் இலக்கிய உரைகளையும் கேட்டு வருபவன். ஆனால் இன்றைக்கு உங்கள் பேச்சில்தான் ராகுல சாங்கிருத்யாயனைப் பற்றி நீங்கள் கூறக் கேட்டேன். தயவுசெய்து என் வீட்டிற்கு வந்து பால் மட்டும் அருந்திச்செல்ல வேண்டும்’ என்று அழைத்தார். நான் சற்றே தயங்கியபோது அவரே, ‘ஐயா கவலைப்பட வேண்டாம். எங்கள் வீட்டில் யாரும் உறங்கிவிடவில்லை உங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ என்று கூறி அழைத்துச் சென்றார். அவர் வீட்டு மாடியில் ‘ராகுல் ஸ்டுடியோ’ என்ற பெயர் பலகையைப் பார்த்து நான் வியந்து போனேன்.
அதைக்காட்டிலும் அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் தம் பெண்குழந்தையை ‘நிஷா இங்கே வா!’ என்று அழைத்தது இன்னும் வியப்பாக இருந்தது. அவருடைய பையன் பெயர் ராகுல். அவருடைய பெண்ணின் பெயராகிய நிஷா என்பது ராகுல சாங்கிருத்தியாயன் ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலில் குறிப்பிடும் பெயர். ராகுல சாங்கிருத்தியாயனை அப்படி நேசிக்கிற ஒரு மனிதரை ஒரு குடும்பத்தை அன்றைக்கு அந்தச் சிறிய கிராமத்தில் பார்த்து வியந்து போனேன்.
இப்போதும்கூட என் பேச்சின்ஊடே ராகுல சாங்கிருத்தியாயனின் பெயர் வந்து கொண்டே இருக்கும். அவர் முறையாகக் கல்வி கற்று பட்டம் பெறவில்லை என்பதினால்தான் அவருக்கு இந்திய அரசாங்கம் கல்வித்துறையில் எந்தப் பதவியும் தரவில்லை. ஆனால் ரஷ்ய அரசாங்கம் அவரது பெருமையை உணர்ந்து ரஷ்யமொழியை அறிந்திருந்த அவரைத் தங்கள் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக நியமனம் செய்ததாக நான் படித்திருக்கிறேன்.
2017இல் நான் ரஷ்யா சென்றபோது வால்கா நதியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். ஏற்கனவே இமயமலையில் கங்கை நதியில் நீராடிய அனுபவமும் எனக்கு உண்டு. இவருடைய வரலாற்றைப் படித்துப் பாருங்கள். எத்தனையோ அரிய செய்திகள் நமக்குக் கிடைக்கும்.
ராகுல சாங்கிருத்தியாயன் சென்னைக்கு வந்ததோடு திருமழிசை என்ற வைணவ தலத்திற்கும் வந்திருக்கிறார். பின்னர் அங்கு வைணவ சம்பிரதாயத்தில் கூறப்படும் பஞ்சசமஸ்காரத்தையும் பெற்றுக் கொண்டவர் எனவும் நான் படித்திருக்கிறேன். இவருடைய இறுதிக்காலத்தில் இவரைச் சந்திக்கச் சென்ற இராணுவ வீரரும் எழுத்தாளருமான ராஜு என்பவர் இமயமலை அடிவாரத்தில் ஒரு மருத்துவமனையில் இவரைச் சந்திக்கிறார். அப்போது ராகுல சாங்கிருத்தியாயன் சொன்ன ஒரு வார்த்தை ‘உங்கள் வாழ்க்கையில் வாய்ப்புக் கிடைத்தால் பாலி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். உலகத்தின் பழைய மொழிகளில் அதுவும் ஒன்று’ என்று சொன்னதாக அவர் பதிவு செய்கிறார்.
(இந்தப் பாலிமொழியை அறிந்த சங்ககாலப் படைப்பாளிகளில் ஒருவர் மணிமேகலைக் காப்பியத்தை எழுதிய மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது) மேற்கூறிய பெருமைகளைப் பெற்ற ராகுல சாங்கிருத்தியாயன் குறித்த மேலும் சில செய்திகளைக் காண்போம்…
ராகுல சாங்கிருத்தியாயன் இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர். தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர். பன்மொழிப்புலவர், பல்துறை வித்தகர், புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். திபெத்தில் புத்த துறவியாக மாறித் தன் பெயரை ராகுல சாங்கிருத்யாயன் என மாற்றிக்கொண்டார்.
கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர் கொண்ட இவர் 1893ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி கிழக்கு உத்திரபிரதேசத்தில் உள்ள பண்டஹா எனும் ஊரில் பிறந்தார். ஆரம்பக்கல்வி மட்டுமே பயின்றார். ஆனால் தாமாகவே தமிழ், இந்தி, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம், சிங்களம், பிரெஞ்சு, ரஷ்யா எனப் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். புகைப்படக் கலையிலும் வல்லவராகப் பிரகாசித்தார்.
45ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று, 145 புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழகம் வந்து சைவ, வைணவ நூல்களைக் கற்றார். தத்துவம், பயணம், வரலாறு, மதம், மொழி, இலக்கியம் என்று அனைத்துத் துறைகளிலும் இவரது அறிவு விரிவடைந்தது. இலங்ககை முதல் லண்டன் வரை பயணம் மேற்கொண்டார்.
ரஷ்யாவில் லெனின் கிராட் பல்கலைக்கழகம் இவரை கௌரவப் பேராசிரியராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துக்களை எழுதியதற்காக மூன்றாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார். 1942 ஹஜாரிபாக் சிறையில் இருந்தபோதுதான், புகழ்பெற்ற ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ (1949) மற்றும் ‘பொதுவுடைமைதான் என்ன? (1946) எனும் இரு நூல்களை எழுதினார். அங்கு அதே சிறையிலிருந்த கண.முத்தையா அவர்கள் இந்த இரு நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
பல்வேறு துறைகளில் ஏறக்குறைய 150 புத்தகங்களை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் வலம் வந்த இவர், தனது அனுபவங்களை சமஸ்கிருதத்தில் ஒரு டைரியில் எழுதி வந்தார். இவரது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு இதுதான் அடித்தளம்.
1958ல் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது ‘மத்திய ஆசியாவின் இதிகாசம்’ எனும் இவரது புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளும், மகாபண்டிட் உள்ளிட்ட பட்டங்களையும் பெற்றுள்ளார்.
மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில், இவர் சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜத்தின் தீவிர சீடராக இருந்தார். பின்னர் பௌத்தம் அவரது வாழ்க்கையை மாற்றியது. இலங்கையில் தீட்சை எடுத்துக்கொண்ட பிறகு, அவர் ராகுல் (புத்தரின் மகன்) ஆனார்.
ராகுல்ஜி திபெத்திற்குப் புத்தத் துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொண்டுவந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். இவரைப் பெருமைப்படுத்தும் வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச் சிறப்புப் பிரிவொன்றில் காட்சிபடுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தீபம் பல தீபங்களை ஏற்றத் துணைநிற்பதுபோல, ஒரு கல்வியாளனால் பல கல்வியாளர்களை உருவாக்க முடியும் என்பதற்கு ராகுல்ஜியே சான்று. இவர் விளக்குகளை ஏற்றும் விளக்கு.