விடுமுறையும்…. சுற்றுலாவும்….

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிக்கூட, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குக் கொண்டாட்டமான காலம் இது. சுற்றுலா போகலாம். முழுப்பரீட்சை லீவை முழுவதும் அனுபவிக்க, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அல்லது அத்தை – மாமா வீட்டுக்குச் சென்று வரலாம். சைக்கிள் பழகலாம், நீச்சல் பழகலாம்… இவையெல்லாம் அந்தக் கால மாணவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இன்றைக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி, படிக்கிற குழந்தைகளுக்குக் கூட இது பொருந்தாது. ஏனென்றால் இப்போதிருக்கிற பெற்றோர்களும், ஆசிரியர்களும்…. ஏன் குழந்தைகளும் கூட விடுமுறையின் இனிமை பற்றிச் சிந்திக்கிறார்களா? தெரியவில்லை!
நகரத்தில் விடுமுறையில் பிள்ளைகளை எங்கே விடுவது எனத் தெரியாமல் ‘பத்து நாட்களில் அறிவாளியாகலாம்’ ‘இருபது நாளில் எல்லோரையும் வெல்லலாம்’ என்று விளம்பரப்படுத்துகின்ற தனியார் அமைப்புகளில் பிள்ளைகளைத் திணித்து, அவர்கள் அறிவாளிகளாகப் போகும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர்கள்.
திட்டமிடுதலும், தயாரித்தலும் எதிர்காலச் சிந்தனையும் தேவைதான். ஆனால் அந்தந்தப் பருவங்களுக்குரிய மகிழ்ச்சியை விட்டு விடலாமா? மீண்டும் கிடைக்குமா அந்தப் பருவம்?
தன்னை மறந்து விளையாடும் குழந்தை, கற்பனைத் திறத்தால் படைப்பாளியாகிறான். சுற்றுப்புற இயற்கையை உணர்ந்த சிறுவன் உலகைக் காக்கும் விஞ்ஞானியாகிறான். நாம் நம்முடைய பிள்ளைகள் அனைவரையுமே, மாதச் சம்பளக்காரர்களாக மாற்றுவதற்கு, மனப்பாடம் செய்யச் சொல்லி, முதல் மதிப்பெண் வாங்கச் செய்து, வேலைக்கும் அனுப்பி வெற்றி பெற்றதாகவும் கருதுகிறோம். இந்த வெற்றியும் அவசியம்தான். ஆனால், இப்போதைய போட்டி உலகில் பிறரைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்திற்கு வரும் பலரிடத்தில் வாழ்நாள் முழுவதும் அதே குணமே நிரம்பி இருக்கிறது.
விடுமுறைக் காலங்களில் சுற்றுலா என்பதும் ஒரு கல்விதான். நகரத்திலிருந்து கிராமத்திற்குச் செல்லும் குழந்தைகள் ரயிலில் பயணிக்கிறபோது எத்தனை மகிழ்ச்சியடைகிறார்கள். வயல் வரப்புகளில் நடந்து போகும்போது, கிணற்றில் மூழ்கிக் குளிக்கும்போது, பழைய-புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது, கூட்டமில்லாத கோயில்களில் அமைதியாய் உட்கார்ந்திருக்கும்போது, தெய்வங்களைப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷங்கள்… ஏதோ ஒரு வகையில் பிற்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கத்தான் செய்கின்றன.
வீட்டு ஊஞ்சலில் காலாட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த மகனைப் பார்த்து அப்பா கேட்டார்.
‘ஏன் காலாட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கே’ – அப்பா,
‘என்ன செய்ய?’ – பையன்,
‘வேலைக்குப் போ’,
‘போயி…’
‘சம்பாதி…’
‘கல்யாணம் பண்ணு’,
கல்யாணம் பண்ணி….?’
‘பிள்ளை குட்டி பெறு’
‘பெத்து…?’
காலாட்டிக்கிட்டு உட்கார்ந்திரு’,
‘அதத்தானே இப்ப செய்றேன்’
என்றான் பையன்.
குழந்தைப் பருவத்து கற்பனைகளும் குதூகலமும்தான் அவர்ளைக் கலைஞர்களாக மாற்றுகின்றன. கலைஞர்களே உலகத்தைப் புதுப்பிக்கிறார்கள். குழந்தை வளர்ப்பும் ஒரு கலைதானே!